என்னைத் தந்தேன் வேரோடு 14(8)

மனசுக்குள்ள உட்கார்ந்திருக்கது பத்தாதுன்னு, நான் நினைக்கிறதெல்லாம் ஒட்டு கேட்கிறதே உனக்கு வேலையாபோச்சு சாக்லேட். பையா,

“ம்” ஆமோதித்தவள் தான் நினைத்ததை சொன்னாள்.

அன்பும் பாராட்டும் புன்னகையாக வெளிப்பட்டது அவன் முகத்தில்.

“ஃபினான்ஸ் மாதிரி இதையும் இப்போதைக்கு என் பொறுப்புல விட்டுடு மிர்னு, .இப்போதைக்கு உனக்கு இந்த டென்ஷன் வேண்டாம், அப்புறம் முழு வாழ்க்கையும் இருக்குதே அப்ப இதை ஹேண்டில் பண்ணலாம், பை த வே நான் அப்பப்ப உன் பேரண்ட்ஸ்ட்ட பேசிட்டு தான் இருக்கேன், அவங்க நல்லா இருக்காங்க, நீ ஃபீல் பண்ணிக்க வேண்டாம்”

“வாட்?”

முழுவதும் அதிந்து போனாள் மிர்னா.

“இது எப்ப இருந்து? என் பேரண்ட்ஸ் இன்னும் பெருசா ஒரு கேஸ் கோர்ட்னு ஒரு சீனும் போடாம அமைதியா இருக்காங்களேன்னு ரொம்ப தடவை யோசிச்சிருக்கேன், நீங்கதான் அவங்க வாய மூடின மந்திரவாதியா?”

“நீ என் அம்மா கூட சேர்ந்துக்கிறப்ப நான் உன் வீட்ல சேர்ந்துக்க கூடாதாமா?”

ஆங், இவன் என் கேட்டரிங் கதையை கண்டு பிடிச்சுட்டானா? இல்ல அம்மா சொன்ன மாதிரி எல்லாம் தெரிஞ்ச மாதிரி சீன் போடுறானா?

“அது”

“நீ இன்னைக்கு ஃபங்ஷன்ல பாதி நேரம் எங்க அம்மா கூட தான் இருந்திருக்க, நான் கவனிக்கலைனு நினைக்காத”

ஹப்பா வாயவிட்டு நான் மாட்டிகிடல,எப்படி பார்த்தாலும் நீ புத்திசாலி எம் எம்.

“அது, உங்கள எப்படி தம்ப் கன்ட்ரோல்ல வச்சிகிறதுங்கிறத பத்தி டிஸ்கஸ் செய்துகிட்டு இருந்தோம், உங்க அம்மா ரொம்ப நல்லவங்க, டீடெய்லா சொல்லி தந்தாங்க” குறும்படங்கிய அப்பாவிக் குரலில் இவள் சொல்ல,

இவள் முகத்தை முறுவலுடன் பார்த்திருந்தவன் வாய்விட்டு சிரித்தான்.

சிந்திய சிரிப்பை செவ்வரி ஓடிய விழிகளால் சிதறாமல் சேமித்தாள் தன்னுள்ளே.

அடுத்து மிர்னா வியன் மற்றும் மிஹிகிருடன்  சென்றது லண்டனுக்கு. அங்கு நடந்த உலகளாவிய போட்டியில் அடுத்த உலக சாதனையுடன் தங்கம் வென்றவள் ப்ரேசில் தலை நகரம் ரியோடி ஜெனிரோவிற்கு பறந்தாள்.

அந்த படகு சம்பவத்திற்கு பிறகு எந்த விபத்தோ விபரீதமோ நடக்கவில்லை என்பதாலும் லண்டன் பயணத்திலும் பாதுகாப்பு ப்ரச்சனை எழவே இல்லை என்பதாலும், அதோடு அது பெரும் வெற்றி பயணமாக அமைந்ததாலும் ரியோ கிளம்பிச் சென்றபோது இவர்கள் அனைவரும் படு மகிழ்ச்சியுடனே சென்றனர்.

அம்மட்டும் வந்தது சுகராகம்.

வேரிக்கு இது ஐந்தாம் மாதம். மசக்கையும் மிக குறைந்துவிட்டது. நீலா மனோகர் தம்பதியருக்கு ஒலிம்பிக்கில் இளைய மருமகள் பங்கேற்பதை காண ஆவல்.

அதோடு அது முடியவும் உடனடியாக வியன் மிர்னா திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பது அவர்களது எண்ணம்.

காதல் திருமணத்தைவிட நிச்சயிக்க பட்ட திருமணத்தை அதிகமாக விரும்பும் மக்கள் அவர்கள்.

திருமணத்திற்கு முந்தைய ஒழுக்கம் அதன் பின் தம்பதிகளுக்குள் ஒருவர் மீது ஒருவருக்கான நம்பிக்கையை பலப்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நம்பிக்கை உடையவர்கள்.

கவின் பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணம் தான் தனக்கு என்று சொல்லிக்கொண்டிருந்தவன் வேரியின் மீது கண்டதும் காதல் என்று சொன்ன போதும்  அதை உடனடியாக செயல் படுத்தியும் விட்டதில் அவர்களுக்கு முழு திருப்தியே.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து “நான்லாம் லவ் மேரேஜ் தான் செய்வேன், என் வைஃப் ஐ நான் தான் செலக்ட் செய்வேன்” என்று சொல்லிக்கொண்டிருந்த வியன்,

கவின் சொன்னவுடன் மறு வார்த்தை பேசாமல்,

நிச்சயிக்கபட்ட திருமணத்தைப் போல் மிர்னாவை திருமணம் செய்ய முடிவெடுத்ததில் இவர்களுக்கு பரம திருப்தி என்றாலும், அதை உடனடியாக செயலாக்காமல் இழுத்தடிப்பதில் அவர்களுக்கு சற்று தவிப்புதான்.

ஆக ரியோவிற்கு கிளம்பிவிட்டனர்.

மேலும் மூத்த மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை தர வேண்டும் என்பதும் அவர்கள் எண்ணம்.

இப்படியாக அவர்கள் கிளம்பிச் செல்ல, வேரிக்கு மீண்டும் ஆரம்பித்தது துன்பம்.

உடல் மிகவும் படுத்தாமல் இருந்தாலும் இயந்திரங்கள் ஏற்படுத்தும் ஒருவித அதிர்விலேயே அலுவலகத்தில் இருக்க வேண்டி இருப்பதால், அதை தவிர்க்க அவள் வீட்டில் தனித்திருக்க நேரிட்டது.

அடுத்த பக்கம்