என்னைத் தந்தேன் வேரோடு 14(2)

இப்படி ஆள் ஆளுக்கு இந்த இடத்தை வைத்து குட்டையை குழப்புவதற்கு ஒரு முடிவாக இந்த இடத்தை பேசாமல் கவின் பேரில் இவள் எழுதிவைத்துவிட்டாள் என்ன? அதுதான் சரியான முடிவு.

ஆனால் இப்படி இவள் நிம்மதி போக வேண்டும் என்று சதி செய்வது யாராக இருக்கும்?

‘நேர்ல மட்டும் கிடைக்கட்டும், அப்புறம் இருக்கு உன்ன’ முதலில் கோபமாக யோசிக்க ஆரம்பித்தவள் பின்பு நிதானமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

யாரா இருக்கும்? என்ன காரணமா இருக்கும்?

அதற்குள் “வேரி டால் நீ இன்னும் வாக்கிங் கிளம்பலையா? ரெடியாகு” என்றபடி அங்கு நீலா வர விஷயம் அப்பொழுதுக்கு மறந்து போனது.

ரவில் கவின் அருகில் படுத்திருந்தவள் மனதில் மீண்டும் இந்த யாராக இருக்கும் ஞாபகம்.

அவன் புறமாக திரும்பி படுத்தவளை கைக்குள் சுருட்டினான் கவின். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். காதலும் கனிவும் கம்பீரமுமாய் ஆணின அழகின் இலக்கணமாய், சட்டென அவளுக்கு தோன்றியது,

அந்த லூசு ஒரு பொண்ணு, கவினை காதலிச்சு இருக்குமா இருக்கும், வியனை காதலிச்சு இருந்தால் மிர்னாவுக்கு அனுப்பியிருப்பா, வியனை பழி வாங்கணும்கிறதெல்லாம் அவள அடையாளம் கண்டு பிடிக்காம இருக்கிறதுக்கான பில்டப்,

ஏனோ அடுத்த நிமிடம் அந்த மெயில் காரியின் மீதிருந்த கோபம் காணாமல் போனது.

பாவம் கவினை விரும்பிவிட்டு அவன் தனக்கில்லை என உணரும்போது அவளுக்கு எப்படி வலித்திருக்கும்? இழக்கபட தக்கவனா கவின்?? அவன் நிரந்தரமாக தனக்கு வேண்டும் என இவள் மனம் தவித்த காலமும் உண்டுதானே,

“கவிப்பா கல்யாணத்துக்கு முன்ன உங்கள யாராவது ஒரு பொண்ணு லவ் பண்ணி இருக்காங்களா?” ஆக இப்படியாய் துவங்கியது இவளது பேச்சு.

அவள் முகத்தைப் பார்த்தான் கவின்.

“அடுத்த ப்ரச்சனைக்கு அடிபோடுறியான்னு நினைக்கிறீங்களாப்பா ,பாருங்க நீங்க யாரையாவது லவ் பண்ணீங்களான்னு நான் கேட்க கூட இல்ல,

ஏன்னா உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும், அம்மா பார்த்த பொண்ணதான் கல்யாணம் பண்ணுவேன்னு தவமிருந்த தங்க பையன்”

இப்போது கூடுதலாக அவன் முகத்தில் சிரிப்பும் சேர்ந்திருந்தாலும் இன்னும் மௌனம்.

“போங்கப்பா, நீங்க என்னை உங்க ஃப்ரெண்டா நினைக்க மாட்டேன்றீங்க” இவள் சிணுங்க,

“ஒன்னா ரெண்டா, அது ஒரு லிஸ்ட்டே இருக்குது” கண்சிமிட்டினான் அவன்.

“ஆனா அத சொல்லி முடிக்கிற வரைக்கும் நீ விழிச்சிருப்பியா, இல்ல சொல்லி முடிச்சபிறகு தூங்காம உட்கார்ந்து இருப்பியாங்கிறதுதான்…”

“பார்த்தீங்களா, பார்தீங்களா, நீங்க என்ன நம்பல ,உங்கள யாரவது லவ் பண்ணாங்கன்னு தெரிஞ்சா, அதுக்கு நான் ஏன்பா அப்செட் ஆக போறேன்,”

“முத முதல்ல என்னை லவ் பண்ண ஆரம்பிச்ச பொண்ணு, திருமதி நீலா மனோகர்” அவன் சொல்ல துவங்க சட்டென அவனுக்கு ஒரு அடி வைத்தாள் மனைவி,

“போடி, நீ கேட்டன்னு பதில் சொன்னா அடிக்கிற”

“பிறகு உங்க அம்மாவ சொல்றீங்க”

“ஆமா என்னை பார்த்தவுடனே எங்கம்மாவுக்கு பிடிச்சுட்டதாம், நான் எங்க அம்மா வீட்டு சாயல் வேற, எப்பவும் வியனைவிட ஒரு 1 % அதிகமா எங்கம்மாவுக்கு என்னை தான் பிடிக்கும்”

சீண்டலாக அவன் சொல்லச் சொல்ல முறைப்பாக அவனை பார்க்க தொடங்கியவள் அவன் பேச்சை கேட்க கேட்க அதை தக்க வைக்க முடியாமல் சிரித்தாள்.

“இப்படிதான் அங்க வியனும் சொல்லிகிட்டு இருப்பார்”

“ஹி ஹி அது எங்க அம்மாவோட சாமர்த்தியம், தன் குழந்தைகள ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்கிறது”

உண்மைதான் வேரியின் மனம் சொன்னது,

“ஹேய் ,இது டாபிகை டைவர்ட் பண்ற முயற்சி, அடுத்து பாட்டி பால்காரின்னு லிஸ்ட் சொல்ல கூடாது”

“நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் அதுதான் உண்மை நான் பிறந்தப்ப என் ரெண்டு பாட்டியும், என் அப்பாவோட பாட்டி அதாவது என் பூட்டியும் ஹாஸ்பிட்டல் வந்துட்டாங்களாம்,

அம்மா அப்பா ரெண்டு பேரும் ஒத்த பிள்ளை அவங்கவங்க வீட்டுக்கு, அதனால ரெண்டு பக்கத்துக்கும் நான் தான் முதல் பேரன்,

சோ மூனு பாட்டிமாருக்கும் நான் படு ஸ்பெஷல், கணக்குப் பார்த்துக்கோ, இதுவரைக்கும் என்னை லவ் பண்ண பொண்ணுங்க 4 பேரை பத்தி சொல்லிருக்கேன்”

“ஐயோ, என்ன ஒரு லவ் லிஸ்ட், நல்ல வேளை இன்னும் சித்தி அத்தைனு லிஸ்ட் சொல்ல வழி இல்லை, ஆனா மொத்தத்துல நீங்க என்னை உங்க ஃப்ரெண்டா நினைக்கல”

அவன் பிடியை மீறி திரும்பி படுக்க முயன்றாள்.

அடுத்த பக்கம்