அதுவும் என் வைஃப் வேற இங்க வந்திருக்கிறதா கேள்விபட்டேன், அவ காதுல விழுந்தா அவ்ளவுதான்” சத்தம் உயர்த்தாமல் கடுமையாக சீறினான் கவின்.
அடி வேரறுந்தது வேரிக்கு.
அடுத்து எப்படி உணர வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை.
தன் வாய் பொத்தி தன் சத்தம் தனக்கே கேட்டுவிடக் கூடாது என்றபடி எத்தனை நேரம் அவள் அங்கு நின்றாளோ,
கவின் அறையை விட்டு வெளியேறிவிட்டான் என்பது உறுதியானவுடன் கதவை திறந்து வெளியே சென்றவள் காரையும் டிரைவரையும் பார்க்க கூட இல்லை.
நடந்து மெயின் கேட்டை தாண்டி வெளியே வந்தவள் சற்று தொலைவில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்று ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் தன் மெயில் ஐடியை ஓபன் செய்தாள்.
அந்த மெயிலுக்குப் பின் வேறு மெயில்கள் எதுவும் அப்போதைக்கு வரவில்லை என்பதாலும், அதை செய்தது ஒஃபிலியா என்று நினைத்திருந்ததாலும் அக்கடிதத்தை மறந்திருந்தாள் வேரி.
அதோடு Fb பக்கம் செல்வதையும் நிறுத்தி இருந்தாள்.
இப்பொழுது Fbயில் வந்து கிடந்தன செய்திகள் .
“எனக்கு இந்த விஷயம் உன் கல்யாணதுக்கு பிறகுதான் தெரியும் பைத்தியம், அதோட அதுக்கு பிறகுதான வியன் என்னை தூக்கி எறிஞ்சிட்டு உன் அக்கா மிர்னா லூசை கூட்டிகிட்டு சுத்றான், அவன் சுய ரூபமே அதிலதான் எனக்கு புரிஞ்சிது“
என்றது ஒரு செய்தி.
அடுத்த செய்தியில் இவள் இடம் எது, கவினின் இடத்தின் எல்லை எது, அவனது தொழிற்சாலை இவளது எல்லைக்குள் எவ்வளவாய் வந்திருக்கிறது என, ஃபோட்டோ வரைபடங்களுடன் விளக்கம்.
எது எப்படியாய் இருந்தால் என்ன இவள்தான் இடத்தை எழுதிக் கொடுத்தாயிற்றே,
அடுத்த செய்தியில் மிர்னாவை எங்கு எப்படி கொலை செய்ய முயன்றார்கள், அந்த ஒவ்வொரு நிகழ்விலும் வியன் குடும்பத்தார் யார் எப்படி அதை செய்ய முனைந்தார்கள் என்ற விளக்கம்.
கயிறு அறுந்த நிகழ்வில் வியன்தான் மலை மீது இருந்து கயிறை வெட்டினான் என்று விளக்கியது அது.
விஷம் கொடுத்த நிகழ்வில் சாட்சியே தேவையில்லை அந்த பழரசத்தை மிர்னாவிற்கு கொடுத்ததே வியன் தான்.
படகிலிருந்து தள்ளிவிட்ட நிகழ்வில் மிர்னா அருகில் நின்றது வியன். ஆனால் பின்னிருந்து தள்ளியது திருமதி நீலா மனோகர். அப்பொழுது அவர் கலோனிலிருந்தார் என்பது மிர்னாவிற்கே தெரியும் என்றது அது.
இத்தனை சாட்சிகளை கொடுத்தபின்பும் நீ நம்பவில்லை என்றால் உன்னைவிட பெரும் பைத்தியம் யாருமில்லை என்று முடிந்தது செய்திகள்.
“நீ என்ன சாட்சி சொல்வது அதான் கட்டியவனே சொல்லிவிட்டானே” உடைந்து போனாள் வேரி,
“நான் பைத்தியம்தான், என் அம்மா அத்தனை சொல்லியும் இந்த கவினையும் அவன் குடும்பத்தையும் நான் எத்தனையா நம்பினேனே, எல்லாம் இந்த காதலால வந்த நாசம்,
நான்தான் நொண்டியே, என்னை பெத்த அம்மாவுக்கே என்னை பிடிக்காதே, பேர் கூட வைக்காம தூக்கி போட்டுட்டு போனாங்களே, அப்புறமும் இந்த கவின் எவனோ ஒருத்தன் என்னை விரும்புறான், காதலிக்கிறான், அன்பா இருக்கான்னு நான் நம்பினேனே, நான் பைத்தியம் தான்”
வாய்விட்டு அழுதாள் வேரி. பின்பு எதற்கும் இருக்கட்டுமென்று கலோன் சென்றுவிட்ட ஒஃபிலியாவை அலைபேசியில் அழைத்தாள்.
“ஹாய் அண்ணி, குட்டி பாப்பா உங்கள எப்படி வச்சுருக்காங்க? வாமிட்லாம் வரவைக்காம நல்லா பார்த்துகிறாங்களாமே அம்மாவ, மிர்னு சொன்னா” சமீப காலமாக இவளை அண்ணி என்று அழைத்துப் பழகி இருந்தாள் ஒஃபிலியா.
“ம், கொஞ்சம் அவசரமா ஒரு விஷயம் வேணும், எனக்கு அந்த, எதாவது மெயில் அனுப்பி இருக்கீங்களா நீங்க?”
“இல்லையே அண்ணி, நான் எதுவும் அனுப்பலையே, என்ன விஷயம்?”.
“ஓ, நீங்க இல்லையா, ஓ கே, தேங்க்ஸ், அப்புறமா பேசுறேன், பை”
அடுத்து வேரி அழைத்தது மிர்னாவிற்கு.
“நீலாம்மா கலோன் வந்திருந்தாங்களா?”
எடுத்தவுடன் இவள் கேட்க “என்னாச்சு வேரி?” என சாதாரணமாக கேட்டாள் மிர்னா. கோபம் பொத்துக் கொண்டு வந்தது இளையவளுக்கு.
“பதில் சொல்லு லூசு, கேட்கிறேன்ல”
“ஆமாம், அதுக்கு ஏன் இவ்வளவு கோபபடுற?”
வேரி இணைப்பை துண்டித்திருந்தாள்.
அப்படியானல் மெயிலில் வந்திருக்கும் அனைத்தும் தீர விசாரித்து கண்டு பிடிக்கப்பட்ட உண்மை. வேறு யாருக்கு இவளது பெயர் வெரோனிக்கா என விசாரிக்காமல் தெரிய முடியும்? இவளுக்கு தெரியாத நீலாவின் கலோன் விஜயம் இந்த மெயில் கார நபருக்கு தெரிந்ததெப்படி?