என்னைத் தந்தேன் வேரோடு 13 (8)

ஆனால் எந்த மனிதரையும் தன் சுயலாபத்தை முன்னிட்டு அசட்டை செய்வது அவன் சுபாவமே கிடையாதே,

அதுவும் குழந்தையை கண்டுகொள்ளாமல் விடுவதாவது?அந்த ஆசிரம குழந்தைகளிடம் இவன் பழகும் விதம் என்ன? அதிலும் ஷர்மிலியை தாங்கும் முறை என்ன?

இவள் விஷயங்களை சரியாகத்தான் புரிந்து கொள்கிறாளா?

இவள் மீதுள்ள மோகத்தினாலா அவன் தன் குழந்தையை அசட்டை செய்கிறான்? நம்பவே முடியவில்லையே,

இது அவன் உணர்ந்து செய்வதாய் இல்லாமல் இருக்கலாம், அவனை அறியாமல் அவனது  ஏமாற்றம் இப்படி வெளிப்படுகிறது போலும், நாள் பட சரியாகிவிடும்.

அன்பு மனித உருகொண்டால் கவினாகத்தான் பிறக்கும், அப்படிப்பட்டவன் தன் சொந்த குழந்தையை கொண்டாடாமல் போவானோ?

தெய்வமே பிறப்பது பெண்ணாக இருக்கட்டும், பெண் வாரிசு இல்லாத வீட்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தை என்ற வகையில் அனைவரும் என் மகளை ஆசையாய் சேர்த்துக் கொள்வார்களே,

என்னைப்போல் தவிர்க்கப்பட்ட தள்ளிவைக்கப்பட்ட நிலை என் குழந்தைக்கு வரகூடாது.

நாட்கள் நர்ந்தன. கர்ப கால மசக்கை வேரிக்கும் வந்தது. பூமி இடைவிடாது சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பதில் இவளுக்கு நம்பிக்கை இன்றி போய்விட கூடாது என்பது போல் எல்லா நேரமும் சுற்றியது தலை.

அதுவும் ஏனோ மாலை நேரங்களில் பூமி சாய்ந்தபடி வேறு சுற்றியது. உள்சென்ற அத்தனை உணவும் திரவமும் உடனுக்குடன் திரும்பி வந்தன.

சிக்கன் ஃபிஷ் என்ற வார்த்தைகளே வயிற்றில் உள்ளதை வெளிநடப்பு செய்யவைக்க போதுமானதாக இருந்தது.

எழும்ப முடியாமல் கிடந்தாள் அவள்.

கணவனின் அத்தனை கரிசனையையும் தாண்டி உள்ளுக்குள் அவன் மீது கோபம் வளர்ந்து கொண்டு போனது.

ஒன்று அவளது அம்மாவுடன் சேர அனுமதிக்க வேண்டும், இல்லை அவனது அம்மாவையாவது வர வைத்திருக்க வேண்டும்,

நானே பார்க்கிறேன் என்று விழுந்து விழுந்து கவனித்தாலும் அவன் செய்யும் எதாவது இவளது நிலையை சரி செய்கிறதாமா?

இதில் பாதிநேரம் இவளை வீட்டில் வேலைக்காரர்களிடம் விட்டு வேலைக்கு வேறு செல்கிறான், வேண்டாத பிள்ளைதானே அதனால்தான் வேலைக்காரியிடம் விடுகிறான் போலும், இப்படியாய் இருந்தது அவள் குமுறல்.

ஏனோ யார் வந்து என்ன செய்தாலும் மசக்கையை தான்தான் அனுபவித்து ஆகவேண்டும் என்பது அவளுக்கு தோன்றவே இல்லை.

ஆனால் மனதில் இத்தனை குமுறல் அவன் மீது இருந்தாலும், அவனிடம் அதை அவள் சொல்லவே இல்லை.

காரணம் அவன் அருகில் இருக்கும் தருணங்களில் இப்படி கோப உணர்வுகள் எதுவும் அவள் மனதில் தோன்றுவது கூட இல்லை. தனிமையில் இருக்கும் போதுதான் தாறுமாறாய் நினைவுகள்.

உண்மையில் கூடுமான வரை வேரியுடன்தான் இருந்தான் கவின்.

ஆனால் அந்த எரிபொருள் தொழிற்சாலை விஷயம் சம்பந்தமாக அவன் வெளியே செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. அந்த நேரங்களில் அவளுடன் இருக்கவென ஒரு நர்ஸை நியமித்து இருந்தான்

கருவுற்ற நேரம் பெண் மனம் சதுப்பு நிலம். கையாளுவதில் கவனம் வேண்டும். இதை எத்தனைதான் உணர்ந்து கவின் நடந்து கொண்டாலும் அவளின் தனிமையிடம் அவனின் அன்பும் அக்கறையும் தோற்றுகொண்டுதான் இருந்தன தொடர்ந்து.

வியனின் பிறந்தநாளை எந்த வால்த்தனமும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று நினைத்திருந்தாள் மிர்னா. காரணம் இல்லாமல் இல்லை.

தாவணி போட்டு ரிபண்டன்ஸ் பார்ட்டி இவள் கொடுத்த நாள் அவனிடம் வாங்கி கட்டிய பிறகு நிகழ்ந்த நிகழ்ச்சியின் பின்விளைவு இந்த வால்சுருட்டல்.

அன்று அவன் கொடுத்த கொடையில் அமைதியாய் தன் அறைக்கு சென்றவள் உடை மாற்றும் எண்ணம் கூட இல்லாமல் தன் கட்டிலின் குறுக்காக குப்புற விழப் போனாள்.

ப்ச்,உனக்கு பொண்ணு மாதிரி நடந்துக்கவே தெரியலை, அதான் எல்லாம் ப்ராப்ளமாகுது, இனி கொஞ்சமாவது திருந்த வழியப் பாரு

என தன்னை தானே சொல்லிக்கொண்டு மெதுவாக படுத்தாள்.

காலையிலிருந்து செய்த பயிற்சிகள், மாலை வந்ததும் ஓய்வின்றி சமைத்து வீட்டை அலங்கரித்து என தொடர் வேலைகளின் காரணமாக படுத்த சில நிமிடங்களில் தூக்கம் வந்தது.

ஏதோ தோன்ற அறை வாசலைப் பார்த்தால் வியன் நின்றுகொண்டிருந்தான் இவளைப் பார்த்தபடி,

அடுத்த பக்கம்

Advertisements