என்னைத் தந்தேன் வேரோடு 13 (6)

“ம், கொண்டு வர சொல்லுங்க” மறக்காமல் தன் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டாள். ஆனாலும் மனதிற்குள் அவனைப் போல் ஒரு குழந்தை என அவன் குரலால் கேட்டது இன்ப அலை கிளப்பி காதலும் தாய்மையுமாய் அருவிகள் செய்தது.

சே, இவன் எத்தனை எளிதாய் என் வெறுப்பு விருப்புகளை நிறம் மாற்றுகிறான்?

ரவில் அவர்கள் வீட்டை அடைந்தபோது, தூங்கி இருந்த தன் மனைவியை அவள் விழிக்காத வண்ணம் கைகளில் அள்ளிச்சென்று படுக்கையில் மெல்ல கிடத்தினான் கவின்.

அவள் நீண்ட கூந்தலில் சூடியிருந்த கட்டி மல்லிகை முகத்தில் வந்து சரிய, முழுமதியும், கார்முகிலும், ஊடோடும் வெண் மின்னலுமாய்,  துயிலும் போதும் தூக்கம் பறிக்கும்  சுகவர்த்தினியாய் அவள்.

ஏகாந்த போர்களம் கொண்டவன் அகத்தின் புறம்,

குனிந்து அவள் கன்னத்தில் காதல் முத்திரை களமிறக்கினான்.

தூக்கத்தில் நடப்பது புரியாமல்  துயிலுக்கு ஏற்பட்ட சிறு தொந்தரவாய் அதை உணர்ந்தவள் சற்றே முகம் சுழிக்க, கர்வம் கொய்த பருவ நிலா பால் நிலா பதம் கொண்டு மழலை  பருவத்தில் மங்கை முகம் இப்பொழுது,

தாய்மை உணர்வு தலைவன் நினைவில்.

தகப்பனாய் ஒரு முத்தம் பெண்ணவளின் பிள்ளை நெற்றியில்,

தலையணைக்குள் இன்னும் சுகமாய் புதைந்தாள் அவள்.

“குல்ஸ் குட்டிப் பாப்பா, என்னமா பிடிவாதம் பிடிக்கிற நீ, தனக்கு ஃபர்ஸ்ட் பேபி  பெண் குழந்தை வேணும்னு எங்கம்மா ரொம்ப ப்ரேயர் பண்ணாங்களாம்,கடவுள் அந்த ஜெபத்தை அவங்களுக்குள்ளருந்த எனக்கு நிறைவேத்திட்டார் போல, என் முதல் குழந்தை எப்பவும் நீதான்”

தூங்கும் தன் மனைவியை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

மனதில் அந்த எரிபொருள் தொழிற்சாலை நிலவரம் ஞாபகம் வந்தது. அது இவளுக்கு தெரிந்தால் தாங்குமா இவள் மென் உள்ளம்?

ப்ரச்சனை முடியும் வரையும் இவளுக்கு தெரியாமல் இருப்பதே நலம். அதன் பின்பு நிச்சயமாக சொல்லி வைக்க வேண்டும்.

ஓடிக் கொண்டிருந்த அவன் எண்ண நதியில் தாயின் பிம்பம்.

அம்மாவிற்கும் இவளுக்கும் தான் எத்தனை வேறுபாடு? எதையும் தாங்குவதோடு தாண்டி வரவும் திடமுள்ளவர் அம்மா. எஃகு மங்கை. இவனைப் போல,

இவள் தேனிற்கு இருக்கும் திடம் கூட இல்லாத பட்டுப் பால் நதி. இளகும் தன்மையில் மங்கையிவள் திரவ நிலை.

ஆனாலும் இவளிடம் இவன் விழுந்து புதைந்து போன காரணம் என்ன?

கடும் திடப் பொருள் மென் திரவத்தில் தானே மூழ்கும்,

விடை புரிய சின்னதாய் சிரித்துக் கொண்டான்.

இவனுக்கு வரப்போகும் வாரிசு யார் போலிருக்கும்? திட நிலை அல்லது திரவ நிலை? அல்லது வியனும் இவன் தந்தையும் போன்று விவரிக்க முடியாத வாயு நிலை இதயத்தோடா?

அம்மாவிடம் கேட்கவேண்டும்.

இத்தனை மணிக்கு அம்மா தூங்கி இருப்பார். நாளை முதல் வேலை அம்மாவை அழைப்பதுதான், முடிவு செய்தவன் இரவு தூங்க ஆயத்தமாகி படுக்க வந்தான்.

ப்பொழுதுதான் ஞாபகம் வந்தது காரிலிருந்து மற்ற பொருட்களை உள்ளே எடுத்தே வரவில்லை என்று.

வரவேற்பறைக்கு இறங்கி வந்தால் அங்கிருந்த நடு மேசையில் இருந்தது வேரியின் மெடிகல் ஃபைலும், கைப்பையும், இவனது மொபைலும்.

வேலையாட்களீல் யாராவது ஒருவர் எடுத்து வந்து உள்ளே வைத்திருப்பார்களாக இருக்கும்.

அதே நேரம் வேரியின் கைப்பையிலிருந்து அலைபேசி சிணுங்குவது காதில் விழுந்தது அவனுக்கு.

‘இத்தனை மணிக்கு யாராயிருக்கும என்ற நினைவில் எடுத்துப் பார்த்தால் வியனின் எண்ணிலிருந்து அழைப்பு,

வியன் இவனை அழைக்காமல் வேரிக்கு ஏன் அழைக்கிறான்? சட்டென விஷயம் புரிந்தது. அழைப்பது மிர்னா.

வியனிடமிருந்து இவனுக்கு அழைப்பு இல்லை என்ற வகையில் ப்ரச்சனை மிக பெரிதான ஒன்றாக இருக்காது, பெரும்பாலும் பெண் மன சம்பந்தப்பட்டதாக இருக்கும், அதனால் அக்கா தங்கைக்கு அழைக்கிறாள்.

அதற்குள் அழைப்பு முடிய, சில முறை அதே எண்ணிலிருந்து வந்த அழைப்புகள் தவறவிட்ட அழைப்புகளாய் பதிவாகி இருப்பதைப் பார்த்தான்.

நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற அளவிற்கு விஷயம் சிறிதானதாக இல்லாததாகவும் இருக்கலாம். இத்தனை முறை இந்த நேரத்தில் தன்னிடம் பேசாத தங்கையை அழைத்திருக்கிறாளே?

தூங்கும் வேரி விழித்து சூழல் புரிந்து தான் பேசாதிருக்கும் மிர்னாவின் மனம் புரிந்து பேசுவது என்றால்…?

தன் தாயை அழைத்தான் கவின்.

அடுத்த பக்கம்

Advertisements