என்னைத் தந்தேன் வேரோடு 13 (5)

ருத்துவ விஜயம் முழுமை பெற்ற நேரம் மணி இரவு 9.45 என்றது.

இந்த சாலை வழியே இவர்கள் வீட்டை அடைய இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும். வேரிக்கு பசி வந்து வெகு நேரமாகிறது. வீடு செல்லும் வரை அவள் சாப்பிட்ட ஆப்பிள் தாங்காது. அதோடு அவள் வழி பயணத்திலேயே தூங்கிவிடுவாள்.

“வேரிமா இங்கயே சாப்பிட்டுட்டு போய்டுவோமே, வீட்டுக்கு போறதுக்குள்ள தூங்கிடுவ, அதுக்கு பிறகு எழுப்பினாலும் ஒழுங்கா சாப்பிட மாட்ட, அதோட சாப்ட்ட உடனே தூங்க வேண்டாம்னு டாக்டர் சொன்னாங்கல்ல”

வேரிமா என்ற பதமே வேரிக்கு கவின் முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டான் என்று தெரிவிக்கிறது.

எப்பொழுதும் அவன் பிடிவாதங்களில் இவள் நன்மை ஒளிந்து இருக்கும்தான், ஆனால் இது, அவள் குழந்தைக்கு நல்லதாக தெரியவில்லையே

“ப்ளீஸ் கவின்  இதுல மட்டும் என்னை கம்பல் பண்ணாதீங்க, வீட்டுக்கு போய்டலாம்பா”

அவள் முகத்தைப் பார்த்தவன் காரை அம்பாசமுத்திரம் சாலையில் அவர்களது வீடு நோக்கி செலுத்தினான்,

தூங்கி விழ ஆரம்பித்தாள் வேரி.

அடுத்த சில நிமிடங்களில் அவர்களது கார் நிற்பது போல் உணர்வு.

முயன்று விழித்துப் பார்த்தால் கார் திருநெல்வேலியின் மிக ப்ரபல ஹோட்டலின் முன் நின்று கொண்டிருந்தது. திருப்பி கொண்டு வந்திருக்கிறான்.

“ப்ளீஸ் கவின், தூங்கணும் ,நான் வரல”

“இதத்தான் சொன்னேன், இப்பவே எழுந்துக்க மாட்டேன்ற, வீட்ல போய் சாப்டாமதான் தூங்குவ, சரியா வராது, எதுனாலும் இங்க கொஞ்சமா சாப்டு”

“ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிருக்கேன்ல, குழந்தைக்கு நல்லதுக்கு இல்ல, நான் வரமாட்டேன்”

“எனக்கு பசிக்குது, நான் சாப்பிட போறேன், வர்றியா இல்லையா?”

அவ்ளவுதான் மௌனமாக அவன் பின் இறங்கிச் சென்றாள் வேரி.

ஏசி அறையில் இவர்கள் உட்கார ஹோட்டல் மேனேஜர் ஓடி வந்தார்.

“வாங்க சார், வாங்க மேடம்”

“ஸ்டீம்டு ரைஸ், மில்க், இந்த டைம் கிடைக்குமா?”

கவினின் கேள்வியிலேயே வேரிக்கு அவன் என்ன செய்கிறான் என புரிந்துபோக,

மற்றவர் முன் தன் கணவனை முறைக்க மனமின்றி அமைதியாக அமர்ந்திருந்தாள். விருதுநகரில் பாட்டி வீட்டில் வளர்ந்த வேரிக்கு இரவு பால் சாதம் சாப்பிடும் பழக்கம் உண்டு.

“சார், மெனு பாருங்க சார், வேற நிறைய நல்ல…“

“இல்ல, இது போதும்”

ணவு வரும் வரையும் கவின் அவள் மீதிருந்து பார்வையை எடுக்கவில்லை.

அவன் பார்வையில் இவள் கரையாமல் இருப்பது எப்படியாம்?

அவன் சொல்வதுதான் சரியோ, நான்தான் மொட்டை பிடிவாதம் பிடிகிறேனோ!! பாலும் சாதமும், இதை சாப்பிடுவதில் என்ன ப்ரசனை வர கூடும்? ஒருவேளை நான் சாப்பிடாம தூங்கிட்டா பாப்பாவுக்குதான் நல்லதுக்கு இல்ல,

உணவு வரவும்

“பாரு, இது இப்ப பாயில்…”

அவன் சொல்ல தொடங்கும் முன் தன் முன்னிருந்த தட்டில் அதை பரிமாறியவள்

“நீங்க வேற எதாவது உருப்படியா வாங்கி சாப்பிடுங்க“ என்று முகத்தை தூக்கி வைத்தபடி சொல்லி விட்டு சாப்பிடத் தொடங்கினாள்.

“ம், அதை அப்புறம் பார்ப்போம்”

அவளோடு இணைந்து அதை சாப்பிட்டான் கவின்.

இவள் தரையில் படுத்தால் உடன் தரைக்கு வருபவன் வேறு என்ன செய்வானாம்?

அவன் மீது ஆசையும், அவன் பிடிவாதத்தின் மீது கோபமுமாய் வந்தது பெண்ணிவளுக்கு.

“ஹாட் வாட்டர்ல கொஞ்சம் ஹார்லிக்ஸ் போட்டு குடிக்கிறியா?”

பலமாக முறைத்தாள் வேரி. பக்கத்தில் ஒருவரும் இல்லையே முறைக்கலாம் தப்பில்லை.

ஆனால் பாவையின் உள்ளேயே பகலவன் பார்வை பட்ட பனி நதியாய்  வெம்மையும் தண்மையுமாய் ஒரு உருக்கம். காதல் நதி ப்ராவகம் ஆரவாரம்.

“எங்கம்மால்லாம் நான் வயித்ல இருந்தப்ப ஹார்லிக்ஸ்தான் குடிச்சாங்களாம், உனக்கும் என்னை  மாதிரியே படு ஸ்மார்ட்டா ஒரு பாப்பா வேணும்னா நீயும் ஹார்லிக்ஸ் குடி”

இரு புருவங்களையும் ஏற்றி இறக்கி கிண்டலும் கேலியுமாக எதோ விளம்பரம் போல் அவன் சொல்ல,

அடுத்த பக்கம்

Advertisements