என்னைத் தந்தேன் வேரோடு 17(2)

“ஹோட்டல்க்கு டாக்ஸில கிளம்புறேன்டா, உங்களுக்குள்ள பேச நிறைய இருக்கும்” கவின் விடை பெற்றான்.

“நீ ஏன் அண்ணன், நான் ஏன் தம்பின்னு தெளிவா புரியுதுடா” ஈ என்றபடி வியன்.

“போடா போ போ, வேரி சொன்னா, இதுக்கு மேல நான் மிர்னு கூட தங்குறேன்னு சொன்னா உங்க தம்பி சண்டைக்கு வருவார்னு”

“ஹி, ஹி, அண்ணி எப்பவுமே என்னை கரெக்டா புரிஞ்சிப்பாங்க, அவங்க படு இன்டெலிஜென்ட் யு நோ”

“சீக்கிரமா அங்க ஹோட்டல் வந்து சேருங்க, குவார்ட்டஸ்  வெகேட் செய்துட்டு நாங்களும் அங்க தான் இருப்போம், சீ யு”

வியன் காரை செலுத்த அவன் அருகில் மிர்னா.

ஒரு கார் பயணத்தில் ஆரம்பித்த இவர்களது உறவு,

அவனே உணர்வாய்

அத்தனையும் நினைவாய்

ஒலியற்ற அலையாய்

மௌனமே மொழியாய்

காதலே நிலையாய்

மனம் மண்வாசனையாய்,

“இந்த நேரத்துக்காக 327 நாள் 18 மணி நேரம், 42 நிமிஷம் ,அண்ட் ஃப்யூ செகண்ட்ஸ் வெயிட் செய்திருக்கிறேன் MH, தயவு செய்து என்னையும் கண்டுபீங்களாம்” மௌனம் கலைத்தான் வியன்.

“உங்களை மட்டும்தான் நினச்சுகிட்டு இருக்கேன் வினு”

அப்பொழுதுதான் அவள் கவனம் தன் கண் கண்ட காட்சிக்கு சென்றது. கடலின் நீர் பரப்பிற்கு வெகு அருகில் இவர்களது வாகனம்.

காட்சி விரிந்த தொலைவெங்கும் நீல நீர் பரப்பும், அருகில் தெரியும் சிறுகுன்றும்,

ஆட்கள் யாருமில்லாத கடற்கரைப் பகுதியில் இவர்கள்.

இவளது வினுவில் அவன் இதழ்களில் காதல் புன்னகையாகிறது.

அருகிலிருப்பவள் கரம் தேடியது அவன் கண்கள். அவன் அணிவித்திருந்த நிச்சய மோதிரம் சுமந்திருந்த அவள் கை அவள் மடிக்குள் பத்திரமாய்,

முன்பொரு நாள் அவன் அவள் கை பிடிக்க ஆசைப்பட்ட அக் கார்பயணம் மனதில், அப்பொழுது இயல்பாய் அவன் அருகில் நீண்டிருந்த விரல்கள் இன்று அவளுக்குள் அடங்கி இருக்கும் நிலை ஏன்?

தான் காதல் சொன்ன தருணமும் அதற்கு அவளது பதிலும், ஞாபகம் வருகிறது வியனுக்கு,

இவன் தன் காதலை சொன்னான், அவள் திருமணத்திற்கு தானே சம்மதம்  சொன்னாள், அவளது காதலைப் பற்றி சிறு குறிப்பு கூட இல்லையே,ஏன்?

மிர்னாவின் மனதிற்குள் அதற்கான காரணம் அவ்வப்போது அலையாடிக் கொண்டு இருக்கிறதுதான்.

அதுவும் “இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்ளவு இருக்குது” என்று அவன் இவளிடம் பரபோஸ் செய்த பின்பு சொல்லிவிட்டு கண்சிமிட்டிய நேரத்திலிருந்து,

மனதளவில் ஒலிம்பிக் ஃபைனல்ஸ் அவளுக்கு பல வகையில் மிக பெரிய விஷயமாகிவிட்டது, அவளது கனவு லட்சியம், அதற்காக அவள் சந்தித்த போராட்டங்களின் பலனை அறுக்கும் நாள்,

வியன் பட்ட துன்பங்களுக்கான பலன், இவர்கள் காதல் காத்திருந்ததற்கான பொருள், இத்தனை கொலை முயற்சிகள், அதற்கு காரணம் என அப்பொழுதுதான் தெரியவந்த மின்மினி மிஹிர் உறவு பிரளயம், அதன் காரணம் தானோ என்று மனதிற்குள் துடிக்கும் இவள் உயிர், இப்படி எல்லாம் அவளை அலைகடல் துரும்பாக்க,

அந்நேரம் வியன் ப்ரபோஸ் செய்தது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தாலும், உடனடி திருமணம் என்றதும் அதனோடு சேர்ந்து அவன் எதிர்பார்க்கும் உறவு நிலையும் புரிய மனதிற்குள் ஒரு ஏமாற்ற உணர்வு.

அவன் மீது உயிர்க் காதல்தான், மனம் குறுக்கி காத்திருப்பது கடும் தவமாய்த்தான், ஆனாலும்…

அவன் தான் அவளுக்கு என்று எப்பொழுதோ தெரிந்துவிட்டாலும்,இன்றுவரை இருவரும் இரும்புதிரையிட்டு மனதை இழுத்து நிறுத்தியிருக்க,

நட்பு என்ற அளவிற்கு கூட மனம்விட்டு பேசிப் பழகாதிருக்க, திடுமென ஒரே நாளில் திருமணம் என்ற பெயரில் கணவன் மனைவியாய் காமமாகி கலக்க முடியுமா? அதுவும் இந்த அலைகடல் துரும்பு மன நிலையில்,

எப்பொழுதும் இவள் மனம் பற்றி யோசிக்கும் இவளுக்குரியவன் இன்று இதை யோசிக்காது போனானே, ஏமாற்றமாய் இருந்தது. எத்தனை உயர் காதலென்றால் கடைசியில் இதற்காகதான் எல்லாமா?

புலம்பும் மனம் மறுவிதமாயும் யோசிக்கிறது,

மின்னிக்காய், மிஹிருக்காய், உடனிருக்கும் அத்தனை பேருக்குமாய் யோசித்த இவள் எப்பொழுதும் இவள் பற்றி யோசிக்கும் தன்னவனுக்காய் யோசிக்க மாட்டாளாமா? இத்தனை காலம் காத்திருந்தவனின் நியாயமான ஆசை,

அவன் இஷ்டத்திற்கு இவள் குறுக்கே நிற்க போவதில்லை,முடிவு செய்துகொண்டாலும் மனதிற்குள் ஒரு ஏமாற்ற உணர்வு,

காதலால் கனிய வேண்டிய உள்ளம்  கடமையின் கட்டாயத்திற்கு கனிந்துவர மறுக்கிறது,

மிர்னா பார்த்திருக்க குன்றின் பின் ஒழிய துவங்கிய சூரியனின் தூதுக் கரங்கள் சில நிமிடங்களில் வெண்மணற் பரப்பை தங்க பரப்பலாக்கி, நீல நீர் நிலையை திரவ தங்கமாக்கியது,

இரண்டெட்டு நகர்ந்து, இத்தனைப் பெரிய பரப்பை, இத்தனை எளிதாய் நிறம் மாற்றிவிட்டானே இந்த ஆதவன்,

இதுவரை இருக்கும் நிலையைவிட திருமணத்திற்குள் வியன் உரிமை வகை வேறுநிலை.

இடம்பெயர்ந்த ஆதவனாய் இவள் மனதை தன்னிறத்திற்கு தகவமைத்துவிடுவான்,

இன்று போல் உரிமையின்றி விலகியே இருந்தால் எதில் மாறும் மனோநிலை?

“மினு, உனக்கு ,எதாவது, நம்ம மேரேஜை கொஞ்சம் தள்ளிவச்சுப்பமா?”  இவளின் ஆரவாரமின்மையை உணர்ந்து கேட்டான் அவன்.

“நீங்க வேற,  எவ்ளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளவு சீக்கிரம் வைங்க” இதற்குள் மனம் மாறி இருந்தவள் தெரிவிக்க,

வியன் முகத்தில் இப்பொழுது ஆதவன் உதயம்.

“எவ்வளவு சீகிரம்னாலும் ஓகேவா?”

‘துள்ளி வந்தது ஒரு “ம்”

“நாளைக்கு ஈவினிங்?.”

அவனை திரும்பிப் பார்த்தாள்.

அவன் முகத்தில் குறும்பில்லை.

“அரேஞ்ச்மென்ட்ஸுக்கெல்லாம் கொஞ்சமாவது டைம் வேணுமே”

“கரெக்ட், கொஞ்சம் டைம் வேணும், நீ கொஞ்ச நேரம் கூட வரணும்”

அடுத்த பக்கம்