Forum

திகட்டாதே தேனன்பே க...
 
Notifications
Clear all

திகட்டாதே தேனன்பே கதை திரி  

  RSS
Chithra V
(@chithra-v)
Eminent Member

திகட்டாதே தேனன்பே 1

 

சென்னை விமான நிலையம் நேரம் காலம் பார்க்காமல் பயணிகளின் வரவால் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காலை எட்டு மணிக்கு புறப்பட தயாராக இருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு செல்வதற்கான விமானத்தில் பயணிக்க, ஏழு மணி பதினைந்து நிமிடத்திற்கே விமான நிலையத்தை அடைந்த யாஷ் நெஹ்ராவும் ரித்து என்கிற ரிதுபர்னா நெஹ்ராவும் விமான நிலையத்தின் விதிமுறைகள் அனைத்தையும் சரியாக செய்து முடித்து தங்களுக்கான விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதி சீட்டை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

மூன்று இருக்கைகள் இணைந்து இருந்த இடத்தில் நடு இருக்கையை விடுத்து ஆளுக்கொரு நுனி இருக்கையில் அமர்ந்தவர்கள் வெவ்வேறு திசையில் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, இரண்டு நாள் முன்பு தான் இருவருக்கும் திருமணம் ஆகியிருக்க, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இருவரும் செல்வது தங்களின் தேனிலவுக்கான பயணத்திற்கு என்றால், யாராலும் நம்ப முடியாது தான்,

எந்த இலக்குமில்லாமல் எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்த யாஷின் கண்களுக்கு இரண்டு அல்லது மூன்று வயதுடைய கொழு கொழுவென்று குண்டாக ஒரு பெண் குழந்தை அங்குமிங்கும் ஒரு பந்தை வைத்துக் கொண்டு ஓடி திரிந்து விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த குழந்தையை பார்க்கவும், அவனுக்கு வேறொரு நபரின் ஞாபகம் வர, உதட்டில் புன்னகையோடு அந்த குழந்தையை பார்த்திருந்தான். அதேநேரம் ரித்து வேறொரு பக்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஓரப்பார்வையால் காலர் வைத்த டிஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்டில் அழகாய் அமர்ந்திருந்த கணவனை பார்த்தப்படி இருந்தவள், அவன் உதட்டில் உதிர்த்த புன்னகையை கண்டு அவன் பார்வை சென்ற திசையைப் பார்க்க, அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பார்க்கவும், "யார் அது?" என்ற கேள்விப் பிறந்தாலும், துருதுருவென இருந்த குழந்தையை அவளுக்கும் பிடித்திருந்தது.

அதற்குள் அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த பந்து இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் வந்து விழவும், அந்த பந்தை எடுக்க அவர்கள் அருகில் அந்த குழந்தை வந்தது.

ஏற்கனவே அந்த குழந்தையிடம் அதன் பெற்றோர்கள் இந்தியில் பேசியதை யாஷ் கவனித்திருந்ததால், அருகில் வந்த குழந்தையிடம், "துமாரா நாம் கியா ஹே?" என்று அதன் பெயரைக் கேட்க,

"சோட்டீ," என்று தன்னை அழைக்கும் செல்லப் பெயரை அது மழலை மாறாமல் சொல்ல, அந்த குழந்தையின் பெயர் யாஷ்க்கு இன்னும் வியப்பை கூட்டியது.

"க்யூட் நாம் ஹே," என்று அதன் கன்னத்தை பிடித்துக் கிள்ளியவன்,

"எனக்கும் இதே போல ஒரு சோட்டீய தெரியும், உன்னைப் போலவே க்யூட்," என்று இந்தியிலேயே அதனிடம் சொல்லியவனுக்கு, இப்போது அந்த சோட்டீ எப்படி இருப்பாள்? எங்கே இருப்பாள்? என்ன செய்துக் கொண்டிருப்பாள்? என்று நினைவுகள் அந்த சோட்டியிடம் செல்ல, அதற்குள் அந்த குழந்தை பந்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டது.

இத்தனை நேரம் யாஷையே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்த ரித்துவோ, அவன் குழந்தையிடம் பேசியதை கேட்டு மகிழ்ந்து, அவன் அருகில் அமர வேண்டுமென்று தோன்றவே, எழுந்து அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர, அதை கவனித்தவன்,

"இப்போது ஏன் பக்கத்தில் வந்து உட்காருகிறாள்?" என்று நினைக்கும்போதே, அவள் அருகில் வேறொரு பெண் வந்து அமரவும்,

"ஓ அவங்களுக்கு இடம் கொடுக்க உட்கார்ந்தாளா?" என்று நினைத்துக் கொண்டவன், மீண்டும் இலக்கில்லாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்தப்படி இருந்தான்.

பார்வை இலக்கில்லாமல் சென்றாலும், அவன் சிந்தனையெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அவர்களின் திருமணத்தையும் அது குறித்த விஷயங்களை பற்றியும் இருந்தது.

முதலில் அவனுக்கு இப்போது திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை,  தந்தை சொன்னதற்காக மட்டுமே திருமணத்திற்கு அவன் ஒத்துக் கொள்ள, அதில் என்னவெல்லாம் நடந்துவிட்டது.

இதுவரை நடந்தது போதாது என்று இன்னும் என்ன நடக்க காத்திருக்கிறதோ? எது நடந்தாலும் அதனால் தான் பாதிக்கப்பட்டாலும் தன் தந்தை பாதிக்கப்படக்கூடாது என்று நினைத்தவன், திரும்பி ரித்துவை பார்க்க, அவளும் அப்போது அவனை தான் பார்த்திருந்தாள்.

நெற்றி வகிட்டில் கொஞ்சம் பெரியதாகவே இழுத்து குங்குமமிட்டிருக்க, நெற்றியில் சிறியதாக ஒரு பொட்டு, மூக்கின் இடது பக்கமாய் ஒரு சிறிய வெள்ளை கல் மூக்குத்தி, இவையெல்லாம் அவள் முகத்தை அலங்கரித்திருக்க, இளஞ்சிவப்பான அவள் தேகத்தில் லேசான முகப்பூச்சு இன்னும் கூடுதல் சிவப்பை அவளுக்கு கொடுக்க, அதை உற்றுப் பார்த்தவனுக்கு அதில் கலங்கமில்லாமல் அப்பாவித்தனம் தான் தெரிந்தது.

அவள் முகத்தையே பார்க்கிறோம் என்பதை உணர்ந்து திரும்பிக் கொண்டவனுக்கோ, "பார்க்க அப்பாவி போல் இருக்கும் அவள் இவனை திருமணம் செய்துக் கொண்டது எதனால்? என்று மட்டும் புரியவில்லை. முகத்தைப் பார்த்தால் தவறாக தோன்றவில்லை. ஆனால் இவன் மணக்கவிருந்த முக்தாவிற்கு பதில் முகத்தை மூடி இவள் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறாளே? அதன் காரணம் என்னவாக இருக்கும்?

அவன் ஒன்றும் கோடியில் என்ன? லட்சத்தில் புரள்பவன் கூட கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவனது தற்போதைய நிலைமை செய்துக் கொண்டிருந்த வேலையை இழந்துவிட்டு, தந்தையின் சேமிப்பில் இருந்த பணத்தில் திருமணம் செய்துக் கொண்டு, நண்பனது ஏற்பாட்டால் இந்த தேனிலவு பயணத்திற்கு வந்திருக்கிறான். இப்படிப்பட்டவனை அவள் முகத்தை மூடி  திருட்டுத்தனமாக திருமணம் செய்துக் கொள்ள என்ன அவசியம் உள்ளது? 

முக்தாவை திருமணம் செய்துக் கொள்ளாமல் தப்பித்ததற்கு மகிழ்ச்சியடைய முடியாமல், இப்படி யாரென்றே தெரியாத இவளை திருமணம் செய்துக் கொண்டது மனதில் குழப்பத்தையே விளைவிக்க, மீண்டும் அவள் முகத்தை திரும்பி பார்த்தான்.

அவன் திரும்பவும் அவளும் அவனை திரும்பிப் பார்த்தவள், என்ன? என்று கண் ஜாடையிலேயே அவனிடம் கேட்க, அவனும் ஒன்றுமில்லையென்று அவனை அறியாமலேயே தலையாட்டினான்.

அந்நேரம் அவன் தந்தை கிஷன் நெஹ்ராவிடமிருந்து அவனது அலைபேசிக்கு அழைப்பு வர, அதை ஏற்றவன், "போலோ பப்பா," என்று இந்தியில் பேச ஆரம்பித்தான்.

"யாஷ் எப்போ ஃப்ளைட் கிளம்புது. நேரத்துக்கு அங்க போயிட்டீங்கல்ல," என்ற அவர் கேள்விக்கு,

"அதான் சீக்கிரம் சீக்கிரம்னு தூங்க கூட விடாம கிளப்பி விட்டிங்களே பப்பா, ரொம்ப சீக்கிரமாகவே வந்து இங்க காத்திருக்கோம், 8 மணிக்கு தான் ஃப்ளைட் கிளம்பும்," என்று அவன் குறைபோல் கூறினான்.

"அவசர அவசரமா போய் ஃப்ளைட்டை மிஸ் செஞ்சுட்டா என்ன செய்றது? இப்போ எந்த டென்ஷனும் இல்லாம ஹாயா தான இருக்க,"

"ம்ம் அப்படியே ஃப்ளைட்டை மிஸ் செய்தா தான் என்ன? ஹனிமூன் ப்ளான் கேன்சல் ஆகும் அவ்வளவு தானே?" என்று அவன் சர்வ சாதாரணமாக கேட்க, ரித்து அவனது பேச்சை கவனித்துக் கொண்டுதானிருந்தாள்.

"போதும் போதும் திரும்ப அதே பல்லவியை பாட ஆரம்பிக்காத, போறது ஹனீமுன் என்பதை ஞாபகம் வச்சிக்கோ, திரும்ப திரும்ப உனக்கு அட்வைஸ் செய்துக்கிட்டு இருக்க முடியாது. புரிஞ்சுதா? சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க,  கொஞ்சம் ரித்துக்கிட்ட ஃபோனை கொடு," என்று அவர் சொன்னதும், 

அவளிடம் அவன் அலைபேசியை கொடுத்து, "பப்பா தான்," என்று சொல்லவும்,

"ம்ம் நீங்க பேசறதிலேயே தெரியுது," என்று சொல்லி, அவனிடமிருந்து அலைபேசியை  வாங்கி அவளும், "போலோ பப்பா," என்று அவனை போலவே கிஷனை அழைத்து பேசினாள்.

"மனுஷன் அதில் தானே விழுந்தார். மாமனார் சப்போர்ட் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கு இவளுக்கு, அந்த தைரியம் தான், ஹனிமூன் வேண்டாம்னு சொன்னாலும் கேட்காம கிளம்பி வரா," என்று மனதிற்குள் புலம்பினாலும், கண்களோ அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.

தலைமுடியை வாரி பின்னலிடாமல் அப்படியே விரித்தப்படி விட்டிருக்க, காதை தாண்டி வந்த முடியை அவ்வப்பொழுது ஒதுக்கிவிட்டுக் கொண்டதை போல, இப்போதும் செய்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். அப்படி முடியை ஒதுக்கிக் கொண்டிருந்த போதெல்லாம் மருதாணியால் சிவந்திருந்த கைகளில்  முழுக்க அணிந்திருந்த வளையல்கள் சத்தமிட்டுக் கொண்டே இருந்தன, கூடவே அவள் அணிந்திருந்த பெரிய தோடு அவள் பேசுவதற்கு ஏற்றது போல் அழகாக நடனமாடிக் கொண்டிருந்தது. 

இதில் அவள் அணிந்திருந்த பைஜாமா குர்தாவோடு போட்டிருந்த துப்பட்டாவை வேறு சரி செய்தப்படி இருந்தாள். அப்படி சரி செய்யும்போது அவள் அணிந்திருந்த கருப்பு மணியால் ஆன தாலி கண்ணுக்கு தெரியவும், இதுவரை அவள் யாரோ? ஆனால் இந்த தாலியை அவள் கழுத்தில் இவன் அணிந்த நொடியிலிருந்து அவள் அவனவள் என்ற உரிமையை அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.

"அவன் டென்ஷன் ஆனா நீ வருத்தப்படாத ரித்து, அமைதியா போயிடு. அப்புறம் அவனும் நார்மல்க்கு வந்துடுவான்." என்று கிஷன் அந்த பக்கம் அலைபேசியில் அவளிடம் இந்தியில் சொல்லிக் கொண்டிருக்க,

அதற்கு அவள் அவனை திரும்பிப் பார்க்க, வேகமாக அவளை பார்க்காதது போல் அவன் பார்வையை திருப்பிக் கொண்டான். அவன் இதுவரை தன்னை தான் பார்த்திருந்தான் என்பதை உணர்ந்த ரித்துவோ, முகத்தில் தோன்றிய புன்னகையோடு, "டீக்கே பப்பா, அவரை பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு, நீங்க சொன்னது போல நடந்துக்கிறேன்." என்று அவளும் இந்தியிலேயே அவருக்கு பதில் சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள்.

அவள் பேசியதை கவனித்துக் கொண்டிருந்தவன், உடனே அவள்புறம் திரும்பி, "நீ என்னை பார்த்துக்கப் போறீயா? அந்தமான்ல இருக்க அந்த ஏழு நாளில் நான் உன்னைப் படுத்துற பாடுல, சென்னை வந்து இறங்கியதும், நேரா எங்க சங்காத்தமே வேண்டாம்னு ஓடப் போற பாரு," என்று சொல்லவும்,

"ம்ம் பார்க்கத் தானே போறோம்," என்று வீம்புக்கு அவனிடம் சொல்லியவள், பின் அந்தப்பக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டாள். ஆனால் அவன் பேசியதில் அவள் முகம் வாடிவிட்டதை அவனால் நன்றாகவே உணர முடிந்தது. 

அதை ஏனோ அவனால் தாங்கிக் கொள்ள முடியாமல், "அவளோடு ஹனிமூன் செல்ல முடிவெடுத்தப்பின் இப்படி கோபமாக பேசியிருக்கக் கூடாதோ?" என்று நினைத்து, பின் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, "ம்ம் நான் ரெஸ்ட் ரூம் போகப் போறேன், நீயும் போறதா இருந்தா போயிட்டு வா, கொஞ்ச நேரத்தில் ஃப்ளைட்ல ஏற வேண்டியிருக்கும் என்று அவன் சொல்ல,

"வேண்டாம், நான் இங்கேயே உட்கார்ந்திருக்கேன்." என்ற அவளது பதிலுக்கு, அவன் ஒன்றும் சொல்லாமலேயே எழுந்துப் போக, அவன் சென்ற திசையை பார்த்தப்படி அவள் அமர்ந்திருந்தாள். அந்நேரம் அவள் பார்வை ஒருவர் மீது நிலைக்க, அவரை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது.

ஒருவேளை இவளது குடும்பத்திற்கு தெரிந்தவர்களாக இருந்தால்? இவளை அடையாளம் கண்டுக் கொண்டால்? யாஷோடு இவளுக்கு திருமணம் முடிந்திருந்தாலும் இன்னும் இவர்களின் வாழ்க்கை ஆரம்பிக்கவே இல்லையே, அதனால் இப்போதைக்கு இவள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள் யார் கண்ணிலும் இவள் பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அதனால் துப்பட்டாவை எடுத்து தலையில் போட்டு யாருக்கும் தெரியாதது போல் அவள் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

யாஷ் திரும்பி வந்த போது அவள் தலையில் துப்பட்டாவை போட்டுக் கொண்டு, ஒரு கையால் முகத்தை மறைத்தது போல் அவள் இருக்கவும், "ஹே என்னாச்சு? எதுக்கு முகத்தை மூடியிருக்க?" என்றுக் கேட்க,

"அது குளிருது, அதனால் தான்,” என்று அவள் பதில் கூறினாள்.

இத்தனை நேரம் இல்லாமல் இப்போது குளிருகிறது என்று அவள் சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை. அவளை சந்தேக பார்வை பார்த்தப்படி, “நீ சொல்வதை என்னோட பப்பா நம்பலாம், ஆனா நம்ப மாட்டேன்.  திடீர்னு முகத்தை மறைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கன்னா, நீ ஏதோ தப்பு செஞ்சுட்டு தானே ஓடி வந்திருக்க, அதனால தான் இங்க யாருக்காவது உன்னை அடையாளம் தெரிஞ்சுடுச்சுன்னா என்னாகறதுன்னு பயப்பட்ற அப்படித்தானே?” என்று கேட்டான்.

“தப்பு செய்தா தான் பயந்து முகத்தை மூடிக்கணும்னு இல்ல, ஏதாவது பிரச்சனையோ ஆபத்தோ நம்மளை துரத்துச்சுன்னா, அதுக்கு கூட பயந்து முகத்தை மூடலாம்,” என்று அவள் பதில் கூறினாள்.

“இவளுக்கு என்ன பிரச்சனை அல்லது ஆபத்து இருக்க முடியும்? என்று யோசித்தவனுக்கு அவளை நினைத்து கவலை சூழ்ந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "ம்ம் உன்னோட பிரச்சனையில் ஓடி ஒளிய நாங்க தானா கிடைச்சோம், அதுவும் கல்யாணத்தை ஆயுதமா எடுத்திருக்க, உன்னோட பிரச்சனையில் எங்களை மாட்டிவிடப் பார்க்கிறீயா? உன்னால எங்களுக்கும் ஆபத்து உண்டாகணுமா?" என்று கேட்டான்.

அதில் இன்னும் அவளது முகம் வாடி, "அந்த அளவுக்கு நான் கல் நெஞ்சம் கொண்டவ இல்லை. அப்படி பிரச்சனை என்னை நெருங்குச்சுன்னா, அதில் வர ஆபத்தை நான் மட்டுமே சந்திக்கிறேன் போதுமா?" என்று வருத்தத்தோடு அவள் சொன்ன போது, விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வரவும், 

"அனொன்ஸ் செய்துட்டாங்க, வாங்க போகலாம்," என்று அவனிடம் சொல்லியப்படியே, துப்பட்டாவை தலையிலிருந்து எடுத்து சரியாக போட்டுக் கொண்டு கைப்பையை மாட்டியவள் முன்னே செல்ல,

"டேய் இதுவரை என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம், இப்போ உன்னை நம்பி தான் அவ இத்தனை தூரம் வரா, அவளை மனசு கஷ்டப்படுத்துவது போல பேசலாமா? அறிவே இல்லடா உனக்கு?" என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கோ, அவளின் வருத்தமான முகத்தை பார்த்தால் உடனே மனம்  இலகிவிடுகிறதே எதனால்? என்பது மட்டும் புரியவில்லை.

தேனன்பு தித்திக்கும்..

கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

கருத்து திரி

 

Quote
Posted : 14/02/2020 11:22 am
Sudhar liked
Chithra V
(@chithra-v)
Eminent Member

திகட்டாதே தேனன்பே 2

 

விமானத்தில் ஏறியதும் இருவரும் அவர்களுக்குரிய இடத்தில் அமர்ந்தனர். அங்கேயும் மூன்று இருக்கைகள் ஒன்றாக இணைந்தது போல் தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட்டம் குறைவாக இருந்ததால், இவர்களோடு இணைந்த இருக்கையை வேறு யாருக்கும் ஒதுக்கவில்லை என்பதால் இருவர் மட்டுமே அமர்ந்தனர்.

ரித்துவை ஜன்னல் புறமாக இருந்த இருக்கையில் அமர சொல்லிவிட்டு, அவள் அமர்ந்ததும், நடு இருக்கையை விடுத்து நுனி இருக்கையில் அமரலாமா? என்று யோசித்த யாஷ், பார்ப்பவர்களுக்கு கேலிப் பொருளாக இந்த காட்சி இருக்கக் கூடாது என்று தோன்றியதால், அவளுக்கு அருகிலேயே அமர்ந்துக் கொண்டான்.

அதன்பின் விமானம் புறப்படுவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை விமானத்தில் பணிபுரியும் பெண் சொல்லிக் கொடுத்ததையும், விமான ஓட்டுனர் சொல்லிய குறிப்புகளையும் அவன் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். காரணம் அவனுக்கு அதுதான் விமானத்தில் செல்லும் முதல் பயணம், இந்தியா முழுக்க ரயில், பேருந்து, கார் இப்படி தான் பயணித்திருக்கிறான். வெளிநாடு சென்ற அனுபவமும் இல்லை. அதனால் விதிமுறைகளை அவன் கவனமாக கேட்டுக் கொண்டிருக்க ரித்துவோ காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்க தயாரானாள். 

அனைத்தும் முடிந்து சீட் பெல்ட் அணிய சொல்லி அறிவிப்பு வர, எல்லாம் கவனமாக கேட்டும் சீட் பெல்ட் அணிய அவன் தடுமாறினான். அருகில் மனைவியும் இப்படி திணருகிறாளா? அவளுக்கும் இது முதல் பயணமா? என்ற கேள்வியோடு ரித்துவை நோட்டம் விட, அவளோ சர்வ சாதாரணமாக சீட் பெல்ட்டை மாட்டியவள், அவன் தன்னை பார்ப்பதை கவனித்து அவனுக்கும் அவளே மாட்டிவிட,

"உன்கிட்ட கேட்டேனா? எனக்கு மாட்டிக்க தெரியாதா? என்னமோ எனக்கு தெரியாதது போல மாட்டி விட்ற?" என்று அவளிடம் கோபம் கொண்டான்.

"இல்ல உங்களுக்கு மாட்ட தெரியாம தான் நான் எப்படி மாட்றேன்னு பார்த்தீங்களோன்னு மாட்டினேன்." என்று அவள் தயக்கத்தோடு சொல்ல,

"அதெல்லாம் எனக்கு மாட்ட தெரியும், உனக்கு தெரியுமான்னு தான் பார்த்தேன்." என்று தனக்கு தெரியும் என்பது போல் அவளிடம் காட்டிக் கொண்டவன்,

"ஆமாம் நீ ஏற்கனவே ஃப்ளைட்ல போயிருக்கியா?" என்றுக் கேட்டான்.

"ம்ம் நிறைய முறை போயிருக்கேன். நான் ஸ்கூல் வரைக்கும் தான் இங்க படிச்சிருக்கேன். அதுக்குப்பிறகு ஆஸ்திரேலியால தான் படிச்சேன்." என்று அவன் பேச்சுக் கொடுக்கவும் அவளே ஆர்வமாக அவனக்கு பதில் கூறினாள்.

அதைக்கேட்டுக் கொண்டிருந்தவனோ, 'வெளிநாடெல்லாம் போய் படிச்சிருக்கா, மணீஷ் சொன்னது போல பெரிய வசதியான வீட்டு பெண்ணாக தான் இருப்பாளோ?' என்று மனதில் நினைத்தவன்,

"இப்படி எத்தனை ரகசியம் தான் நீ வச்சிருக்க, உன்னைப்பத்தி எப்போ தான் முழுசா சொல்லப் போற," என்று கடுப்போடு கேட்டான்.

அப்போதுதான் தான் உளறியதை உணர்ந்தவள், "ம்ம் நேரம் வரும்போது கண்டிப்பா சொல்லுவேன்." என்று பொறுமையாக பதில் கூற,

"கல்யாணமாகி இப்போ ஹனிமூனுக்கும் கிளம்பிட்டோம், ஆனா உன்னைப்பத்தி எதுவும் சொல்ல மாட்டல்ல, பார்க்கிறேன் எத்தனை நாள் இப்படி இருக்கேன்னு, நல்ல இளிச்சவாயன்னு என்னோட நெத்தியில் எழுதி ஒட்டிருக்கு போல, அதான் என்னை இப்படி படுத்துற," என்று கோபம் கொண்டான்.

அவன் கோபம் அவளை பாதிக்கிறது என்பது போல் அவள் முகம் வாடிப் போக, "க்கூம் இப்படி ஆனா ஊனா முகத்தை சுருக்கிக்க," என்று அதற்கும் கோபம் கொண்டவன், 

"சரி அதான் நீ நிறைய முறை ஃப்ளைட்ல போயிருக்கல்ல, எனக்கு இதுதான் ஃபர்ஸ்ட் டைம், ஃப்ளைட் கீழே இருந்து மேல பறக்கறத பார்க்கணும், அதனால என்னை ஜன்னல்பக்கம் விடு," என்றான்.

"இங்க இருந்து பார்த்தாலே அது தெரியும் யாஷ்," என்று அவள் சொல்ல,

"எனக்கு அதை வீடியோ எடுக்கணும், அதுக்கு தான் சொல்றேன். இங்க வா," என்று சொல்லி சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு எழுந்திருக்க, அவளும் எழுந்தாள்.

அனைவரும் சீட் பெட் அணிந்தார்களா? இருக்கையெல்லாம் சரியான முறையில் இருக்கிறதா? என்று அப்போது தான் சரிப்பார்த்துவிட்டு சென்ற விமான பணிப்பெண்ணோ, விமானம் கிளம்ப தயாரான நேரத்தில் இருவரும் எழுந்ததை பார்த்து பதட்டத்தோடு அவர்கள் அருகில் வந்து என்னவென்று கேட்க,

"சும்மா இடம் மாத்தி உட்கார தான்," என்று யாஷ் கூறவும்,

"சீக்கிரம் உட்காருங்க, ஃப்ளைட் கிளம்ப போகுது." என்று அந்தப் பெண் ஆங்கிலத்தில் கூறிவிட்டுச் சென்றாள்.

தனது சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டவள், "போட்டு விடவா?" என்று அவனிடம் கேட்க,

ஏற்கனவே அவள் போடும்போது பார்த்ததால், "நான்தான் சொன்னேனே எனக்கு போட தெரியும்னு, நானே போட்டுப்பேன்." என்று சொல்லி சீட் பெல்ட்டை அவனே மாட்டிக் கொண்டான்.

விமானம் கிளம்பியதிலிருந்து அது மேலே ஏறியதையும், மேல ஏற ஏற கீழிருக்கும் பகுதி சிறியதாக தெரிந்தது வரை பார்த்துக் கொண்டே வந்தவன், பின் மேக கூட்டங்கள் தெரியவும் அதையும் சிறிது நேரம் ரசித்துவிட்டு, அதன்பின் சரியாக இருக்கையில் அமர்ந்தவன், மனைவியை திரும்பிப் பார்க்க அவளோ காதில் பாட்டுக் கேட்டப்படி கண்மூடி இருக்கையில் சாய்ந்திருந்தாள்.

'ஒருவேளை தூங்கிட்டாளோ?' என்று நினைத்து அவள் முகத்தை சிறிது நேரம் பார்த்திருந்தவன், பின் அவளை ரசிக்க ஆரம்பித்துவிட்டான். அவளைப் பற்றிய குழப்பங்கள் ஆயிரம் இருந்தாலும் இன்று இவள் தன் மனைவி என்ற நினைப்பே ஏதோ இனிப்பாக இருந்தது.

விதிப்படித்தான் அனைத்தும் நடக்கும் என்பதில் எப்போதும் அவனுக்கு நம்பிக்கையே இருந்ததில்லை. ஆனால் இப்போது நடப்பதை பார்த்தால்  நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை முக்தா தான் அவனது மனைவியாக வரப் போகிறாள் என்ற நிலை மாறி, இன்று அவனது மனைவியாக தேனிலவுக்கு இவள் உடன்வருவதை விதி என்று சொல்லாமல், வேறு என்னவென்று சொல்வதாம்?

ஒருவேளை முக்தா அவனது மனைவியாகியிருந்தால், இப்போது மனதில் பரவியிருக்கும் இதம் அப்போது இருந்திருக்குமா? இப்போது யோசித்தாலும் அப்படி இல்லை என்று தான் தோன்றுகிறது. இதற்கும் முக்தா அவனக்கு அத்தைப் பெண். சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தவள், ஆனாலும் அவளுடன் திருமணத்தை மனம் விரும்பவில்லை. அதற்கு சில மனதிற்கு ஒப்பாத அனுபவங்கள் காரணம் என்றாலும், ஏனோ முக்தாவை தன் மனைவியாக வைத்து பார்க்க முடியாததும் ஒரு காரணம்.

யாஷ் நான்கு வயது சிறுவனாக இருக்கும்போதே அவனது அன்னை இறந்துவிட, அவனை விட இரண்டு வயது பெரியவன் மணிஷ் இருக்க, இரண்டும் ஆண் பிள்ளைகள் தானே, எப்படியும் அவர்கள் வளர்ந்துவிடுவார்கள். அதனால் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்று கிஷனிடம் உறவுக்காரர்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும், அதை அவர் ஒரேடியாக மறுத்தவர், மத்திய அரசு வேலை என்பதால், மனைவியின் ஞாபகத்திலிருந்து வெளிவர ஒரு மாற்றம் தேவைப்படவே வேலையில் மாற்றம் வாங்கிக் கொண்டு இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே சகோதரர்கள் இருவரும் சென்னையில் தான் இருந்தார்கள் என்பதால் நன்கு தமிழ் எழுத, படிக்க, பேச என்று கற்றுக் கொண்டனர். பள்ளியில் நண்பர்களோடு பேசி பேசி வீட்டிலும் தமிழில் தான் சகோதரர்கள் இருவரும் பேசிக் கொள்வர். கிஷனும் இங்கு வந்து ஓரளவிற்கு தமிழ் கற்றுக் கொண்டு கொச்சையாக தமிழ் பேசுவார். ஆனால் வீட்டில் இந்தியில் பேச, தந்தையிடம் மட்டுமே இருவரும் இந்தியில் பேசுவார்கள்.

ஒரு தாய் எப்படி இருந்து பிள்ளைகளை கவனித்துக் கொள்வாரோ, அதேபோல் கிஷனும் தன் இருப் பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டார். சமைப்பதிலிருந்து வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவரே செய்துவிடுவார். தாயில்லாத பிள்ளைகள் என்ற குறையே தெரியாமல் இரு பிள்ளைகளையும் வளர்த்தார். 

அதனாலேயே மகன்கள் இருவருக்கும் தந்தை மீது அளவுக்கடந்த பாசம் உண்டு. அதிலும் யாஷ் கிஷனுக்கு செல்லப்பிள்ளை. மணீஷ் அமைதியான குணம் கொண்டவன், ஆனால் யாஷ் மிகவும் கலகலப்பானவன், அதேசமயம் பொறுப்பானவன், அடுத்தவர் மீது மிகவும் அக்கறையானவன்.

மத்திய அரசு வேலை, நல்ல ஊதியம், அதனால் எந்தவித குறையும் இல்லாமல் கிஷன் பிள்ளைகளை நன்றாகவே வளர்த்தார். அதனால் யாஷ் கல்லூரி படிப்பை முடிக்கும்வரை எந்தவித கவலையுமில்லாமல்  வளர்ந்தான். படித்து முடித்ததும் நல்ல வேலையும் கிடைக்க எல்லாம் நல்லவிதமாக தான் சென்றுக் கொண்டிருந்தது. அதன்பின் மணீஷ் திருமணம் தான் குடும்பத்தில் சங்கடங்களையும் கொடுத்தது.

மணீஷிற்கு அவனுடைய அத்தை பெண் சோனாவின் மீது அளவுக்கடந்த காதல். கிஷன் சென்னைக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே அவரின் இரு தங்கைகளும் அவர்களின் குடும்பத்தோடு சென்னைக்கே வந்துவிட்டனர். அதன்மூலம் அடிக்கடி சோனாவை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்க அவன் அவள் மேல் காதலை வளர்த்துக் கொண்டான்.

ஆனால் சோனாவிற்கு மணீஷ் மீது அப்படி ஒரு எண்ணமே இல்லை. அதுமட்டுமல்லாமல் அவள் வேறொருவனை காதலித்துக் கொண்டிருந்தாள். அந்த விஷயம் தெரிந்து மணீஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட, யாஷ் தான் அந்தநேரம் அவனை கண்டு காப்பாற்றினான்.

சோனா வேறொருவனை காதலிப்பதால் அவளை மறக்க முயற்சி செய்ய சொல்லி கிஷனும் யாஷும் மணீஷின் மனதை மாற்ற முயற்சித்தனர். ஆனால் மணீஷால் அது முடியாத காரியமாக இருக்க, அவன் ஒரு நடைபிணம் போல் நடமாடிக் கொண்டிருந்தான். அவனை நினைத்து கிஷன் மிகவும் கவலையில் இருந்தார்.

இந்த நேரத்தில் தான் சோனாவை காதலித்தவன் நல்லவன் இல்லை என்பது யாஷ்க்கு தெரிய வந்தது. அதை சோனாவின் குடும்பத்திற்கு யாஷ் ஆதாரத்தோடு நிரூபித்தான். இந்த விஷயம் கேள்விப்பட்ட கிஷன் மகனுக்காக சோனாவை பெண் கேட்டார். மகள் காதலுக்கு ஒத்துக் கொண்ட சோனாவின் தந்தை, அவன் சரியில்லாத வேதனையில் இருந்தவர், கிஷன் வந்து கேட்கவும் சரியென்று சம்மதித்து விட்டார். 

அவரது முடிவை சோனாவும் அவளது அன்னையும் ஒத்துக் கொள்ள வேண்டிததாயிற்று. ஆனால் சோனாவோ தன் தன் அண்ணனுக்கு அவளை திருமணம் செய்து வைக்க தான், அவளது காதலனை திட்டமிட்டு நல்லவன் இல்லையென்று யாஷ் மற்றவர்களுக்கு காட்டியிருக்கிறான் என்ற புரிதலில் யாஷ் மீது தேவையில்லாத வன்மத்தை வளர்த்துக் கொண்டாள்.

சோனாவின் அன்னைக்கோ மகள் காதலித்தவனையும் பிடிக்கவில்லை. மணீஷையும் பிடிக்கவில்லை. அவருக்கு யாஷ்க்கு தன் மகளை கட்டிக் கொடுக்க வேண்டுமென்பது தான் விருப்பம். மணீஷிற்கு யாஷ் அளவுக்கு திறமை பத்தாது என்ற எண்ணம் எப்போதும் இருக்கும், கணவனிடம் மணீஷிற்கு தன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டாமென்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

ஆனால் தன் மகளுக்காக உயிரை கொடுக்க முடிவெடுத்தவன் அவளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று ஒரே நிலையாக நின்று மணீஷிற்கு சோனாவை மணம் முடித்தார். அவர் நினைப்பை பொய்யாக்காமல் மணீஷும் சோனாவை தன் உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக் கொண்டான்.

ஆனால் அந்த காதலை தன் ஆயுதமாக மாற்றி சோனா புகுந்த வீட்டில் பிரச்சனைகள் செய்ய ஆரம்பித்தாள். கிஷனிடம் மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்வது. எந்த ஒரு விஷயத்திற்கும் குடும்பத்திற்கு எதிராக செயல்படுவது என அவள் அப்படி நடந்துக் கொள்ளும் போது மணீஷ் அவளுக்கு எதிராக நடந்துக் கொள்ளவும் முடியாமல், அதேசமயம் அவளுக்கு ஆதரவாக பேசவும் முடியாமல் மிகவுமே தவித்துப் போவான்.

இப்படி சின்ன சின்ன பிரச்சனைகளை கிஷனும் யாஷும் மணீஷ்க்காக பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொண்டனர். அந்தநேரத்தில் சொந்த ஊரிலிருந்த பூர்விக சொத்தை விற்று தங்கைகளுக்கு சேர வேண்டிய பங்கை கொடுத்துவிட்டு தனக்கு வந்த பணத்திலும் தனக்கு கிடைத்த ரிடையர்ன்மெண்ட் பணத்திலும் கிஷன் வீடுகட்ட நிலம் வாங்கினார்.

வாங்கிய நிலத்தில் உடனே வீடுகட்ட வேண்டுமென்று மகன்கள் இருவருமே கூறினர். அவர்களிடத்திலிருந்த சேமிப்போடு இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்பட்டதால் வீட்டுக்கடன் வாங்க முடிவு செய்தனர். அந்தநேரம் மணீஷிற்கு வீட்டுக்கடன் வாங்குவது சுலபம் என்பதால் நிலத்தை அவன் பெயரிலேயே பத்திர பதிவு செய்து, கடன் வாங்கி சில மாதங்களில் வீடுகட்டி முடித்தும் விட்டனர். 

அதுவரை பொறுமையாக இருந்த சோனா, வீடு மணீஷின் பெயரில் இருந்ததால், கணவன், மனைவி இருவர் மட்டுமே அந்த வீட்டில் தனிக்குடித்தனம் செய்ய வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று நினைத்த கிஷனுக்கு அது ஒரு பெரிய இடியாக இருந்தது.

அந்தநேரத்திலும் சோனாவிற்கு எதிராக பேச முடியாமல் மணீஷ் தடுமாற, மகனது வாழ்வுக்காக தன் ஆசையை மறைத்துக் கொண்டு அவர்களை மட்டும் அந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அவரின் கவலைக் கொண்ட முகத்தைப் பார்த்த யாஷோ, 

"ஒருவிதத்தில் ரெண்டுப்பேரும் தனியா போனது தான் நல்லது பப்பா. சோனா உங்களை மரியாதை குறைவா நடத்துவது எனக்கு பிடிக்கவேயில்லை. இப்போதாவது மணீஷ் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கானான்னு பார்ப்போம், நீங்க கவலைப்படாதீங்க," என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினான்.

மணீஷ் இல்லாததால் ஒரு படுக்கயறைக் கொண்ட வீட்டிற்கு இருவரும் குடி பெயர்ந்தனர். தன் சேமிப்பு பணத்தையெல்லாம் வீடு கட்டுவதற்கு கொடுத்துவிட்டு இப்போது ஒன்றுமில்லாமல் நிற்கும் தன் இளைய மகனை நினைத்து கிஷன் கவலைக் கொள்வார் என்றால்,

தன் தந்தையை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்று யாஷ் நினைத்தான். தான் வேலை செய்த நிறுவனத்திலேயே ஆன்சைட்க்கு செல்ல கிடைத்த வாய்ப்பை கூட தந்தைக்காக விட்டுக் கொடுத்தான். தனியாக வெளிநாட்டில் வேலை செய்ய கிடைத்த வாய்ப்பையும் தந்தையை தனியாக விட்டு செல்ல முடியாது என்பதால் தட்டிக் கழித்தான். கிஷனின் பென்ஷன் பணம், அவனது மாத வருமானம் இருவருக்கும் போதுமானதாக இருக்க அவர்கள் வாழ்க்கையும் நல்லவிதமாகவே சென்றுக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் தான் கிஷனின் இரண்டாவது தங்கையின் பெண் முக்தாவை யாஷிற்கு திருமணம் செய்துக் கொடுக்க அவள் பெற்றோர் விரும்பினர். மகளை செல்லம் கொடுத்து பொத்தி பொத்தி வளர்த்ததால், அவளுக்கு திருமணம் செய்து தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் யாஷிற்கு திருமணம் செய்து வைத்து அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக ஆக்கிக் கொள்ள நினைத்தனர்.

அதை மட்டும் மறைத்து கிஷனிடம் திருமணத்தை பற்றி பேச, அவரோ யாஷிடம் அதை பகிர்ந்துக் கொண்டார். "ஏற்கனவே நம்ம வீட்டுக்கு ஒரு சோனா போதாதா பப்பா, இப்போ இன்னொரு முக்தா வேற வீட்டுக்கு வரணுமா? எனக்கு இப்போ கல்யாணத்திலேயே இன்ட்ரஸ்ட் இல்ல, அப்படியே என்றாலும் முக்தா வேண்டேவே வேண்டாம் பப்பா." என்று தீர்மானமாக கூற, கிஷனுக்குமே இந்த திருமண பேச்சில் அதிக ஆர்வம் இல்லாததால் முக்தாவின் பெற்றோரிடம் வேண்டாமென்று தெளிவாக கூறிவிட்டார்.

இப்படியே சில மாதங்கள் கடந்த சூழலில் யாஷ் அலுவலக நண்பர்களோடு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய வேலையில் அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி அதில் யாஷிற்கும் இன்னொரு நண்பணுக்கும் நல்ல அடி. அதிலும் யாஷ் இரண்டு மாதங்களுக்கு மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது.

அவன் செய்யும் வேலையிலும் சில விதிமுறைகள் இருக்க, அதனால் அவனுக்கு அந்தநேரம் வேலையும் போய்விட்டது. கிஷன் தான் உடனிருந்து அவனை நன்றாக கவனித்துக் கொண்டார். இந்த நேரத்தில் முக்தாவின் பெற்றோர் மிண்டும் கிஷனிடம் திருமணத்தை பற்றி பேசினர். வேலையில்லாமல் இருக்கும் யாஷிற்கு புதியதாக தொழில் ஆரம்பிக்க உதவுவதாக முக்தாவின் தந்தை கூறினார்.

மகனது வாழ்க்கை நல்லப்படியாக அமைய வேண்டுமென்று கிஷன் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார். மகனிடமும் பேசி அவன் மனதை மாற்ற முயற்சித்தார். முக்தாவை மணக்க விருப்பமில்லை. வேலையில்லாத இந்த நேரத்தில் எதற்கு திருமணம்? என்று முதலில் மறுப்பதற்கு யாஷும் பல காரணங்கள் கூறினான். ஆனால் கிஷன் அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதிலேயே குறியாக இருக்க, தந்தைக்காக அவன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

முக்தாவிற்கும் யாஷை திருமணம் செய்துக் கொள்வதில் பெரிதாக ஆர்வம் இல்லை. திருமணத்திற்கு பிறகு பிறந்த வீட்டிலேயே இருக்கலாம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அந்த திருமணத்திற்கு சம்மதித்தாள்.

யாஷின் திருமணம். அதுவும் தன் சிற்றன்னையின் மகளோடு நடக்கப் போகிறது என்பதை சோனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாஷ் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்பதை மனதில் ஒரு வன்மமாக அவள் வளர்த்துக் கொண்டு வந்தாள்.

அந்த திருமண பேச்சை நிறுத்த அவளும் அவள் அன்னையும் சில முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் முக்தாவின் பெற்றோரின் மனதை அவர்களால் மாற்ற முடியவில்லை. அதற்கு பதிலாக முக்தாவை மாற்ற நினைத்தனர்.

முக்தாவும் பெற்றவர்களுக்காக தான் யாஷை மணக்க சம்மதம் தெரிவித்தாள் என்பதையும், யாஷ் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கப் போவதாகவும் அவள் சோனாவிடமும் தன் பெரியன்னையிடமும் கூற, அது அவர்களுக்கு புது செய்தி என்பதால், அதைக் கொண்டே அவளின் மனதை கலைக்க முயற்சி செய்தனர்.

மணீஷ் போல் அல்ல யாஷ், அவன் தந்தையின் மீது அதிக பாசம் கொண்டவன், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க அவன் ஒருபோதும் சம்மதிக்க மாட்டான். தந்தையை விட்டுக் கொடுக்க மாட்டான். இப்போதைக்கு அவனுக்கு நல்ல வேலையும் இல்லை என்பதால், அவனுடன் அந்த ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் நீ கஷ்டப்பட வேண்டும், அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்று எத்தனையோ அவளுக்கு சொல்லிக் கொடுக்க, அதில் குழம்பியவள், தந்தையிடம் சென்று இந்த திருமணம் வேண்டாமென்று கூறினாள்.

ஆனால் அவர்கள் அவளுக்கு சமாதான வார்த்தைகள் கூறி, இந்த திருமணம் நடக்கும் என்று உறுதியாக கூறிவிட, என்ன செய்வது? என்று அவள் சோனாவிடமும் பெரியன்னையிடமும் ஆலோசனை கேட்க, திருமணத்தன்று அவள் வீட்டை விட்டு செல்ல வேண்டுமென்ற தவறான யோசனையை அவளுக்கு கூறினர்.

அதேபோல் திருமணத்தன்று அழகு நிலையத்தில் இருந்து அவள் வெளியேறுவதற்கு சோனா திட்டம் போட்டுக் கொடுக்க, அவளும் அதை சரியாக செய்தாள். இது எதுவும் தெரியாத யாஷோ மனதிற்கு பிடிக்கவில்லையென்றாலும் தந்தைக்காக மணமகனாக தயாராகி நின்றான்.

இன்னும் அரைமணி  நேரத்தில் விமானம் அந்தமானை சென்றடையும் என்று விமான ஓட்டியின் அறிவிப்பில் சிந்தனையிலிருந்து விடுபட்டு ரித்துவை பார்க்க, இந்தமுறை அவள் நன்றாக உறங்குவதை அவனால் உணர முடிந்தது. மீதி பயணத்தை அவள் முகம் பார்த்தப்படியே அவன் கழிக்க, விமானம் அந்தமானின் தலைநகரமான போர்ட் பிளேயர் விமானநிலையத்தில் தரையிறங்கியது.

தேனன்பு தித்திக்கும்..

கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

கருத்து திரி

 

 

 

 

ReplyQuote
Posted : 18/02/2020 12:48 pm
Sudhar liked
Chithra V
(@chithra-v)
Eminent Member

திகட்டாதே தேனன்பே 3

விமான நிலையத்திலிருந்து இறங்கியதும், "நீ இங்கேயே உட்காரு, நான் போய் லக்கேஜ் எடுத்துட்டு வந்துட்றேன்." என்ற யாஷ், ரித்துவை இடம் பார்த்து அமர வைத்துவிட்டு, பயணிகளின் பெட்டிகள் வந்து சேருமிடத்திற்கு சென்றான்.

அங்கிருந்து பார்த்தால் அவள் அமர்ந்திருக்கும் இடம் தெரியும், பயணிகளின் பயண பொருட்கள் வர சிறிது தாமதமாக, அவ்வப்போது அவள் பாதுகாப்பாக தானே அமர்ந்திருக்கிறாள், என்பது போல் அவளை  திரும்பிப் பார்த்தப்படியே அவன் அங்கே நின்றிருக்க, அதை அவளும் கவனித்துக் கொண்டுதானிருந்தாள்.  

யாஷ் அடிக்கடி கோபமாக பேசினாலும் இப்படி சில முறை அவனிடம் எட்டிப்பார்க்கும் இந்த அக்கறையை நினைத்து அவள் பரவசத்தை உணர்ந்தாள். இது போன்ற அக்கறையை தான் அவள் அவனிடம் முன்பே பார்த்திருக்கிறாளே, அது தானே அவன் மேல் அவளை நேசம் கொள்ள வைத்தது. அது இப்போதும் அவனிடம் மாறாமல் இருப்பதை பார்க்கும்போது வியப்பாய் இருந்தது.

அதிலும் அவன் வாழ்க்கையில் அவள் வந்து சேர்ந்த முறைக்கு வேறொருவராக இருந்தால், இந்நேரம் அவர்கள் எப்படி நடந்துக் கொண்டிருப்பார்கள். என்னதான் அவனது தந்தை சொல்லி அனுப்பியிருந்தாலும், அவனது இயல்பான குணமே அதுதான் அல்லவா? அதுதான் அவன் அவளிடம் தன்மையாக நடந்துக் கொள்வதன் காரணமும் கூட,

இரண்டு நாட்களுக்கு முன் யாஷ் நெஹ்ராவிற்கு அவள் மனைவியாக போகிறாள் என்பதை அவள் அறிந்திருந்தாளா என்ன? பிடிக்காத திருமணத்தை நினைத்து அந்த அழகு  நிலையத்தில் அவள் எப்படி அமர்ந்திருந்தாள்? அந்த கட்டாய திருமணத்தை செய்ய விரும்பாதவளுக்கு அதிலிருந்து தப்பிப்பது தான் எப்படி? என்ற வழி தெரியாமல் இருந்தாளே,

தற்கொலை செய்துக் கொள்ளலாமா? என்ற எண்ணம் கூட அப்போது அவளுக்கு தோன்றியது. ஆனால் தந்தைக்கு செய்துக் கொடுத்த சத்தியத்திற்காக அந்த அளவுக்கு முதலில் அவள் மனம்  சிந்திக்கவில்லை. ஆனால் இந்த திருமண விஷயத்தில் தந்தையாலேயே ஒன்றும் செய்ய முடியாத பட்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டால் தான் என்ன? இப்படி ஒரு திருமணம் நரகத்திற்கு சமமல்லவா? அதற்கு ஒரேடியாக உயிரை விட்டுவிடலாமே? என்ற விபரீத சிந்தனையும் அவளுக்கு தோன்றிய நேரம் தான், 

"தயார் ஹோ கயி க்யா பேட்டி?" என்றுக் கேட்டப்படி கிஷன் அங்கு வந்தார்.

அன்பாய் அழைத்த அந்த காந்தக் குரல் அவளது அந்தநேர  விபரீத எண்ணத்தை தடை செய்தது என்றுக் கூட சொல்லலாம், சுதன் லால் குடும்பத்தில் இத்தனை அன்பாக பேசும் மனிதரும் இருக்கிறாரா? அதுவும் மகள் என்று விளித்து பேசினாரே, யார் அவர்? என்று அவள் மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். அவரது முகத்தை கூட அவளால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவள் முகம் முக்காடு போட்டு மறைக்கப்பட்டு இருந்தது. 

சுதன் லாலின் உறவினர்களில் வயதில் மூத்தவர்கள் உன்னை அழைத்துச் செல்ல வரலாம், அவர்களிடம் உன் முகத்தை காட்ட வேண்டாம், சடங்கை மீறியதாக ஏதாவது நினைத்துக் கொள்ள போகிறார்கள். என்று அவள் அன்னை ஸ்வராகிணி சொல்லி அனுப்பியதால், வட இந்திய முறைப்படி மணப்பெண் அலங்காரத்தில் இருந்தவள், திருமணத்தின் போது அணியும் முக்காடை போட்டு முகத்தை மூடியிருந்தாள்.

தன் தங்கை மகள், தனக்கு மருமகளாக வரப்போகிற முக்தாவை அழைக்க வந்த கிஷன், மணப்பெண் கோலத்தில் இருக்கும் ரித்துவை முக்தா என்று நினைத்து அழைக்க, அவளோ அவள் மணக்கவிருக்கும் சுதன் லாலின் உறவினர் என நினைத்து, அவர் தயாரா? என்று கேட்டதற்கு, ஒரு தலையசைப்பை கொடுத்தவள், உடன் கொண்டு வந்த கைப்பையை எடுத்துக் கொண்டு, அவரோடு எழுந்துச் சென்றாள். பின் அழகு நிலையத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வர,

உள்ளே முக்தாவை காணாமல் பதட்டத்தோடு வரப்போகும் மாமனாரை காண காரின் அருகே ஆவலாக நின்றிருந்த சோனாவிற்கு மணப்பெண்ணாக ரிதுபர்ணா வர, முக்தாவிற்கு எடுத்திருந்த அதே மெரூன் நிற லெகங்காவில் வந்த ரித்துவை  முக்தா என்றே சோனாவும் நினைத்தாள். ரித்துவின் கையிலிருந்த கைப்பையும் முக்தாவின் கைப்பை போல கருப்பு நிறத்தில் இருக்க, அதை சரியாக அவள் கவனித்து பார்த்ததில்லை என்பதால் இப்போதும் அவளுக்கு அது முக்தாவின் கைப்பை இல்லை என்பது தெரியவில்லை.

இருவரையும் பின் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு கிஷன் கார் டிரைவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த நேரம், "என்ன முக்தா, ஃப்யூட்டி பார்லரிலிருந்து அப்படியே என்னோட ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிடுன்னு சொல்லி உன்னை விட்டுட்டு தானே நான் வீட்டுக்கு போனேன். நீ என்னடான்னா ரெடியாகி நிக்கற, இந்த கல்யாணத்தை செய்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாயா?" என்று சோனா இந்தியில் கேட்க,

"என்னது முக்தாவா? யாரோ முக்தா என நினைத்து என்னிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்களா? அப்போது வந்தவர்கள் சுதன் லாலின் உறவினர் இல்லையா? என்னை முக்தா என நினைத்து தவறுதலாக அழைத்துச் செல்கிறார்களா? என்று நடந்ததை புரிந்துக் கொண்ட ரித்துவோ, உண்மையை சொல்லிவிடலாமா? என்று அந்த நொடி நினைத்தவள்,

பின்னரோ, கடவுளாக இந்த பெரியவரை அனுப்பி இந்த திருமணத்திலிருந்து நான் தப்பிப்பதற்கு ஒரு வழி செய்திருக்கிறார். அதை தானே ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்துப் பார்த்தவள், மணப்பெண்ணான முக்தா இங்கு இல்லாத பட்சத்தில் முக்தாவாக இப்போது அவர்களுடன் செல்வது தான் சிறந்த வழி. பின் அங்குச் சென்று அடுத்து என்னவோ பார்த்துக் கொள்ளலாம், எப்படியோ இந்த பெண் சொல்வதைப் பார்த்தால், முக்தாவிற்கும் நடக்கவிருக்கும் திருமணத்தில் விருப்பமில்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டாள் போலும், அந்த உண்மை இங்கு தெரிவதற்கு பதில், அங்கே திருமணம் நடக்கவிருக்குமிடத்திலேயே தெரிந்துக் கொள்ளட்டும், அங்கு சென்றதும் உண்மையை கூறிவிட்டு, வெறெங்காவது சென்றுவிட வேண்டியது தான், என்று முடிவெடுத்த ரித்து, அவர்களோடு செல்ல தயாரானாள்.

"என்ன முக்தா அமைதியா இருக்க, இந்த கல்யாணத்தை செய்துக்கலாம்னு முடிவு செய்துட்டீயா?" என்று சோனா மீண்டும் கேட்க,

அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ரித்து விழிக்க, "ம்ம் வண்டியில் ஏறுங்க," என்று கிஷன் கூறவும், சோனாவும் அவர் முன்னிலையில் எதுவும் பேசாமல் அமைதியாக காரில் ஏறி அமர்ந்தாள். பயணத்தின் போதும் கிஷன் முன்னிருக்கையில் இருந்ததால் சோனாவால் முக்தா என நினைத்திருக்கும் ரித்துவிடம் பேச முடியாமல் போக அந்த பயணம் அமைதியாகவே கழிந்தது.

மண்டபத்தில் இருவரையும் கொண்டு போய் விட்ட கிஷன், அடுத்து மாப்பிள்ளை ஊர்வலத்திற்குச் செல்ல, சோனா அப்போது ரித்துவிடம் பேச நினைத்த போது, முக்தாவின் அன்னையும் சோனாவின் அன்னையும் அங்கு வந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டனர். சோனாவின் அன்னைக்குமே முக்தா அவர்கள் சொன்னப்படி கேட்காமல் மணப்பெண்ணாக தயாராகி வந்ததில் அதிர்ச்சியாகி, சோனாவிடம் ஜாடையில் என்ன நடந்தது என்றுக் கேட்டார். அவளும் தெரியவில்லை என்பது போல் ஜாடையில் காட்டினாள்.

"இப்பவே எதுக்கு முக்காடு போட்டிருக்க, எல்லாம் நம்ம ஆளுங்க தானே, மணமேடைக்கு போகும்போது இதை போட்டுக்கலாம்," என்று முக்தாவின் அன்னை ரித்துவின் முக்காடை எடுக்க போக,

அவள் முக்தா இல்லை என்ற உண்மை தெரியும் கட்டம் வந்தாகிவிட்டது. இவர்களிடம் உண்மையை கூறிவிட்டு பேசாமல் இங்கிருந்து சென்றுவிட வேண்டியது தான், என்று ரித்து நினைத்துக் கொண்டிருக்க, முக்தாவின் அன்னை முக்காடு மீது கை வைக்கும் நேரம், முக்தாவின் தந்தை வந்து மாப்பிள்ளை ஊர்வலம் வந்துக் கொண்டிருக்கிறது என்று தகவலை கூறியவர், சோனாவின் அன்னையையும் முக்தாவின் அன்னையையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். அதுதான் தக்க சமயம் முக்தாவிடம் பேசலாம் என்று சோனா நினைக்க, வெளியே சென்ற முக்தாவின் அன்னை  மீண்டும் வந்து சோனாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அனைவரும் மாப்பிள்ளை வரவிற்காக காத்திருக்க, இங்கே அறையில் அமர்ந்திருந்த ரிதுபர்ணாவிற்கு படப்படப்பாக இருந்தது. யாரிடம்? என்ன சொல்லிவிட்டு? எப்படி இங்கிருந்து செல்வது? என்பது புரியாமல் பதட்டத்தோடு அவள் இருக்க, வெளியில் பாட்டும் ஆட்டமுமாக பட்டாசு வெடிக்கும் சத்தங்கள் கேட்டது, மாப்பிள்ளை ஊர்வலம் வந்துக் கொண்டிருக்கிறது போலும், பாவம் திருமணத்தை குறித்து அந்த மாப்பிள்ளைக்கு எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்? அவனை ஏமாற்றிவிட்டு மணப்பெண்ணான முக்தா இந்த திருமணம் வேண்டாமென்று சென்றுவிட்டாளே, அந்த விஷயத்தை இந்த மாப்பிள்ளை அறிந்தால் எப்படி எடுத்துக் கொள்வானோ? என்று அவள் மாப்பிள்ளையின் பக்கமாக யோசிக்க,

"ரித்து நீயும் தான் உனக்கு கல்யாணம் வேண்டாம்னு ஓடி வந்திருக்க, அப்போ உன்னை கல்யாணம் செய்துக் கொள்ள காத்திருக்கும் சுதனும் பாவம் தானா?" என்று அவள் மனசாட்சி கேள்விக் கேட்கவும், 

'அய்யோ சுதன் பாவமா? எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென தெரிந்தும் என்னை வலுக்கட்டாயமாக மனைவியாக்கி கொள்ள நினைக்கிறானே, அவனுக்கு இந்த ஏமாற்றம் தேவை தான், என நினைத்து மகிழ்ந்தவளோ, அய்யோ திரும்ப சுதனிடம் நான் சிக்காமல் இருக்க வேண்டுமே, இந்நேரம் நான் அழகு நிலையத்தில் இல்லை என்பது சுதனுக்கு தெரிய வந்திருக்குமே, ஒருவேளை நான் இங்கு வந்ததை எப்படியாவது கண்டுபிடித்து அவன் வந்து விட்டால் என்ன செய்வது?' என்று நினைத்து அவள் கலக்கமடைந்தாள்.

'எப்படி இங்கிருந்து செல்வது? பேசாமல் யாரிடமும் சொல்லாமலேயே இங்கிருந்து சென்றுவிடலாமா? இந்த மணமகள் உடையை கலைந்துவிட்டு சென்றால், யாருக்கு என்ன தெரியப்போகிறது? இதுதான் சரி, இப்போது மாப்பிள்ளை ஊர்வலத்தில் அவர்கள் கவனம் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என்று நினைத்தவள், 

'மாற்றுடை இல்லாமல் எப்படி இந்த உடையை மாற்றிக் கொள்வதாம்? எப்படி இங்கிருந்து செல்வதாம்?' என்று அந்த யோசனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சோர்ந்து போய் அமர, அந்தநேரம்  ஊர்வலம் வந்துவிட்டதை ஆடல் பாடல் என அதிக உற்சாக கூச்சலில் உணர்ந்து, அங்கிருந்த ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

அத்தனை கூட்டத்திலும் அங்கே பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையோடு குதிரை மீது அமர்ந்து ஊர்வலம் வந்த மாப்பிள்ளை முகம் பூச்சரம் ஒதுங்கி இருந்ததால், அவளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது. ஆம் அது யாஷ். யாஷ் நெஹ்ரா. அவனா முக்தாவை திருமணம் செய்துக் கொள்ள போகும் மாப்பிள்ளை? ரிதுபர்ணா அவனை அதிர்ச்சியோடு பார்த்தப்படி நின்றிருந்தாள்.

"ம்ம் லக்கேஜ் எடுத்தாச்சு போகலாமா?" யாஷின் குரல் கேட்டு நடப்புக்கு வந்தவள், தன் கைப்பையை மாட்டியப்படி அவன் பின்னே சென்றாள். 

இருவரும் வெளியே வரவும் யாஷ் நெஹ்ரா என்ற பெயர் பலகையோடு கார் ஓட்டுனர் அங்கே நின்றிருந்தார். அந்தமான் சுற்றுலா துறை மூலம் சென்னையிலேயே அனைத்து தேவைக்கும் பணம் செலுத்தி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் அவர்களை அழைத்துச் செல்ல ஓட்டுனர் தயாராக இருந்தார்.

தேனிலவு பயணிகளுக்கு ஹேவ்லாக் தீவே சிறந்த இடம் என்பதால் அங்கே தான் அவர்கள் தங்குவதற்கான அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹேவ்லாக் தீவிற்கு செல்லும் கப்பல் மாலை நான்கு மணிக்கு தான் புறப்படும், இப்போது நேரம் 10.30 மணி தான் ஆகியிருந்தது. இரண்டு மணி நேர விமான பயணம், அதுவும் காலை வேளை என்பதால் இருவருக்குமே களைப்பு தெரியவில்லை.

இருந்தும் ஒரு விடுதியில் இருவரையும் இறக்கிவிட்ட அந்த ஓட்டுனர், சிறிது நேரம் இருவரையும் ஓய்வெடுக்க சொன்னான். பனிரெண்டு மணிக்கு இருவரையும் தயாராக இருக்க சொல்லி கூறியவன், மதிய உணவை முடித்துக் கொண்டு அந்தமான் சிறையை சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு சென்றான். அப்படியே அங்கிருந்து கப்பல் புறப்படும் இடத்தில் கொண்டு போய் விடுவதாக சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

விடுதி என்றாலும் அது ஒரு வீடு போல் தான் இருந்தது. அதில் மேல் மாடியில் உள்ள  ஒரு அறையில் இவர்கள் சென்று தங்களது பெட்டிகளை வைத்ததும், "நீ முதலில் ப்ரஷ் ஆகிட்டு வா, அப்புறம் நான் போறேன்." என்று யாஷ் நித்துவிடம் கூறிவிட்டு அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்து தனது கவனத்தை செலுத்தினான்.

ரித்துவோ தன் முடியை மொத்தமாக சேர்த்து ரப்பர் பேண்ட் போட்டுக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள், தன் வேலைகளை முடித்துக் கொண்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தாள். ஹேவ்லாக் சென்றதும் இரவு குளித்துக் கொள்ளலாம் என்று இப்போது முகம் மட்டும் கழுவிக் கொண்டு வந்திருந்தாள். 

பின் அவனும் சட்டை, பேன்ட்டை கலைந்தவன், வெறும் பனியன் துண்டோடு சென்று அவளை போலவே முகம் மட்டும் கழுவிக் கொண்டு அவன் வர, அதற்குள் மீண்டும் தலைவாரி அழகாக முடியை விரித்துப் போட்டிருந்தவள், நெற்றியில் பொட்டிட்டு வகிட்டில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள். 

பின் அவன் வந்து தயாராக, அவனுக்கு சங்கடமாக இருக்க வேண்டாமென்று அறைக்கு வெளியே வந்தாள்.  மாடியில் இருக்கும் அறையில் என்பதால், வெளியில் பால்கனி போலிருந்த அமைப்பில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தை சுற்றி குடியிருப்பு பகுதிகளும் கடை, உணவகம் என்றிருந்தது. இப்படி வீடுகளை சில பேர் விடுதிகளாக வாடகைக்கும் விட்டிருந்தனர். சுற்றி அந்த இடங்களை பார்வையிட்டப்படி வந்தவளுக்கு மீண்டும் ஞாபகங்கள் மாப்பிள்ளை ஊர்வலத்தில் யாஷை கண்டதில் சென்று நின்றது.

யாஷ் நெஹ்ரா. அவனை மறக்கத்தான் அவள் எத்தனை முயற்சிகள் எடுத்தாள். அப்படி ஒருவனை தன் வாழ்வில் சந்தித்ததையே தன் நினைவுப் பெட்டகத்திலிருந்து அழிக்க அவள் பெரும்பாடு பட்டாளே, அந்த முயற்சியில் அவள் வெற்றிக் கண்டதாக கூட நினைத்திருந்தாளே, 

ஆனால் சென்னைக்கு செல்ல வேண்டுமென்று அவள் பெற்றோர்கள் சொன்ன போது அவனது முகம் அந்த ஒரு நொடி கண் முன் வந்து சென்ற போது தான், அவனை மறப்பதென்பது என்றைக்குமே நடக்காத காரியம் என்று அவளுக்கு புரிய வந்தது. அப்போது கூட அவனை இப்படி நேருக்கு நேர் காண்போம் என்று அவள் நினைக்கவேயில்லை.

அதிலும் அவனை திருமண கோலத்திலேயே பார்ப்பாள் என்பது ஒரு கனவு போல் தான் தோன்றியது. அவனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்பது மனதில் ஒரு பெரும் வலியை உருவாக்கியதை நன்றாகவே உணர்ந்தாள். 

ஆனால் முக்தா தான் இங்கு இல்லையே, அப்படியிருக்க அவனது திருமணம் எப்படி நடக்கும்? அந்த செய்தி அவனுக்கு தெரிய வரும்போது அவன் எப்படி உணர்வான்? அதை நினைத்தாலும் யாஷை நினைத்து அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பது புரியாமல் அவள் குழம்பி நின்றாள்.

அந்தநேரம் கொலுசு ஓசை யாரோ வருவதை உணர்த்த, அவள் மீண்டும் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அமர, திடீரென கேட்டுக் கொண்டிருந்த கொலுசு சத்தம் நின்றுவிட, 

யார் வந்திருப்பது? என்று எழுந்து இன்னொரு ஜன்னலருகே சென்று ரித்து பார்க்க, "ஹலோ முக்தா," என்று அலைபேசியை வைத்துக் கொண்டு  சோனா மெதுவான குரலில் பேசினாள்.

"முக்தாவிடம் இந்த பெண் பேசுகிறாளா? இவள் தான் முக்தாவிற்கு வீட்டை விட்டுப் போக உதவுகிறாளா? அழகு நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது கூட இப்படித்தானே ஏதோ பேசினாள். இவள் யாராக இருக்கும்? யாஷின் உறவா? இல்லை பெண் வீட்டு உறவா? ரித்துவிற்கு ஒன்றும் புரியவில்லை. சோனா பேசுவதை கூர்ந்து கவனிக்கலானாள்.

"என்ன சொல்ற முக்தா, இப்போ நீ என்னோட ஃப்ரண்ட் வீட்ல இருக்கியா? அப்போ இங்க யார் இருப்பது?" என்று சோனா கேட்க, அதற்கு அந்தப்பக்கம் முக்தா என்ன கூறினாளோ,

"தெரியல உன்னோட வெட்டிங் ட்ரஸ்ல இன்னொரு பொண்ணு இங்க வந்து உட்காந்திருக்கு, யாருன்னு தெரியல," என்று விஷயத்தை புரிந்துக் கொண்டு முக்தாவிடம் சோனா கூறினாள்.

"இப்போ நீ எதுக்கு இங்க வரப் போற? வந்து யாஷை கல்யாணம் செஞ்சுக்கப் போறீயா?" என்று மீண்டும் முக்தா ஏதோ பேசியதற்கு சோனா இவ்வாறு கேட்டாள்.

"இங்கப்பாரு இதுவும் நல்லதுக்கு தான், இல்ல உன்னை காணும்னு இங்க தேட ஆரம்பிச்சுடுவாங்க, இங்க என்ன செய்யணுமோ நான் பார்த்துக்கிறேன். நீ அங்கேயே இரு. நான் சொல்லும்போது வந்தால் போதும்," என்று கடைசியாக முக்தாவிடம் இவ்வாறு பேசிவிட்டு அழைப்பை துண்டித்த சோனா, 

"யாஷ் நான் ஒரு ப்ளான் போட்டா, இங்க வேற ஒன்னு நடக்குது. நான் காதலிச்சவனை கெட்டவனா காட்டி உன்னோட அண்ணனுக்கு என்னை கல்யாணம் செய்து வச்சல்ல, உன்னோட கல்யாணம் நின்னு போய் அத்தனை பேர் முன்னே நீ அவமானப்படணும்னு தான் நான் முதலில் நினைத்தேன். ஆனா இப்போ முக்தாவை கல்யாணம் செய்துக்க ஆசையா வரும் உனக்கு, யாருன்னே தெரியாத ஒரு பெணணோடு கல்யாணம் நடக்கப் போகுது. எதுக்காகவோ இந்த பொண்ணு கல்யாண கோலத்தில் வந்திருக்கா? எனக்கே ஒன்னும் புரியல, ஆனா யாருன்னே தெரியாத அவளை கல்யாணம் செய்துக்கிட்டா கண்டிப்பா உனக்கு ஏதாவது பிரச்சனை வரும், இல்லன்னாலும் எவளோ ஊர் பேர் தெரியாத ஒருத்தியை நீ கல்யாணம் செய்துக்கிறதே உனக்கு ஒரு அசிங்கம் தானே, நல்லா அவஸ்தை படு." என்று வாய்விட்டு பேசிய சோனா, அறைக்குள் வராமலேயே அப்படியே திரும்பி செல்ல,

இது யார்? யாஷோட அண்ணியா? இவளுக்கு ஏன் யாஷ் மீது இத்தனை வெறுப்பு? யாஷை வெறுக்கவும் முடியுமா? அவன் முகத்தை பார்த்தால் வெறுக்கவும் தோன்றுமா? ஆனால் இவள் ஏன் யாஷை வெறுக்கிறாள்? அவனுக்கு தீங்கு செய்ய ஏன் நினைக்கிறாள்? அவனை அவமானப்படுத்த ஏன் துடிக்கிறாள்? என்று சிந்தித்த ரித்துவிற்கு ஒன்றும் புரியவில்லை.

தான் யார்? என்ற உண்மையை சொல்லிவிட்டு இங்கிருந்து சென்றால்? கண்டிப்பாக யாஷ் அத்தனை பேர் முன்னும் அவமானப்பட நேரிடும், அவள் கண் முன்னரே யாஷ் அவமானப்படுவதை அவளால் பார்க்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. 

ஆனால் அதற்காக அவனை திருமணம் செய்துக் கொள்ளவா முடியும்? முதலில் யாஷ்க்கு அவளை ஞாபகம் இருக்குமா? அப்படியே ஞாபகம் இருந்தாலும் அவன் அவளை என்னவாக நினைத்து பழகினான் என்பது தெரிந்தும் அவளை எப்படி திருமணம் செய்துக் கொள்ள முடியும்?  அதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது இங்கிருந்து சென்றுவிடுவது தான் நல்லது என்று தான் அவளுக்கு தோன்றியது.

ஆனால் யாஷ் அத்தனை பேர் முன்பு அவமானப்படுவது போல் நினைத்துப் பார்த்தால்? அவளுக்கு இங்கிருந்து செல்லவும் மனசு வரவில்லை. அதிலும் யாஷின் அண்ணி அந்த பெண் அவனுக்கு தீங்கு செய்யும் எண்ணத்தோடு இருப்பதை நினைத்துப் பார்த்த போது யாஷை விட்டு விலகவும் மனம் வரவில்லை.

ஒன்றும் புரியாமல் குழப்பத்திலேயே நேரம் கடந்துப் போக, அவளை மண மேடைக்கு அழைத்துச் செல்லவும் ஆள் வந்துவிட்டனர். இன்னும் கூட அவளால் ஒரு தீர்மானமான முடிவை எடுக்க முடியவில்லை. அவள் முக்தா இல்லை என்ற உண்மையை கூறிவிட்டு இங்கிருந்து சென்றாலும், மீண்டும் சுதன் லாலிடம் மாற்றிக் கொள்ளக் கூடுமோ என்ற அச்சம் வேறு அவளை ஒருபக்கம் வாட்டிக் கொண்டிருந்தது. இன்னொருபக்கம் யாஷ் அத்தனை பேர் முன்பு அவமானப்பட்டு நிற்பது போல் வேறு நினைத்துப் பார்த்து வேதனை அடைந்தாள்.

அதற்காக அவனை திருமணம் செய்துக் கொள்ள முடியுமா? இப்படி வேறு ஒரு பெண்ணாக முகத்தை மறைத்துக் கொண்டு அவனை திருமணம் செய்துக் கொள்வது எத்தனை கேவலமான செயல், அதை எப்படி அவளால் செய்ய முடியும்? மனதில் கேள்விப் பிறந்த போதே, 

அப்படியானால்? மீண்டும் சுதன் லாலிடம் சிக்கிக் கொண்டு அவனை திருமணம் செய்துக் கொண்டு வாழ்நாள் முழுதும் துன்பப்பட போகிறாயா? அதற்கு உன் மனம் நேசித்த யாஷை மணந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை ஏன் நீ ஏற்றுக் கொள்ள கூடாது? 

நினைத்தே பார்க்க கூடாது என்றிருந்தவனை மணக்கும் வாய்ப்போடு இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறதே விதி. அது அதற்கு மேலும் என்ன செய்ய காத்திருக்கிறதோ செய்யட்டுமே, அதன்படியே நீயும் பயணப்படு என்று மனசாட்சி அடித்து சொல்லும் நேரம் அவளை மணமேடை வரை அழைத்து வந்துவிட்டனர்.

இதற்கு மேலும் குழம்ப வேண்டாம், ஏதாவது ஒரு முடிவெடுக்க வேண்டுமென்ற பட்சத்தில் தன் மனசாட்சி சொன்ன முடிவை ஏற்று யாஷின் அருகே மணப்பெண்ணாக அமர்ந்து புரோகிதர் சொன்ன சடங்குகளை செய்து, அவனுடன் அக்னியை ஏழு முறை வலம் வந்து, அவனிட்ட குங்குமத்தை ஏற்று, அவன் தாலியை அணிவிக்கும் போது அவள் கண்கள் ஆனந்தத்தில் கண்ணீரை சிந்தியது.

தேனன்பு தித்திக்கும்..

கருத்துக்களை கீழே உள்ள திரியில் பகிரந்துக் கொள்ளுங்கள்.

கருத்து திரி

 

 

ReplyQuote
Posted : 22/02/2020 1:37 pm
Sudhar liked
Chithra V
(@chithra-v)
Eminent Member

திகட்டாதே தேனன்பே - 4

மதிய உணவை முடித்துக் கொண்ட பின் இருவரையும் ஓட்டுனர் அந்தமான் சிறைக்கு அழைத்துச் சென்றார். 3 மணிக்கெல்லாம் பார்த்து முடித்துவிட்டு வந்தால், கப்பல் புறப்படும் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்வதாக அவர் கூறிவிட்டுச் செல்ல,  இருவரும் கட்டணச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

இப்போது சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருந்த இந்த சிறையில் தானே முன்பு சுதந்திரத்திற்காக போராடியவர்களை அடைத்து வைத்திருந்தனர். அதை நினைவுகளில் கொண்டு வராமல் இருந்திட முடியுமா? இப்போது யாஷ், ரித்துவிற்கும் அதே நினைவுகள் தான், அதை நினைத்துப் பார்த்து ஒருவித கணத்த மனதோடு இருவரும் உள்ளேச் சென்றார்கள்.

நடுவில் கண்காணிப்பு கோபுரம், அதை சுற்றி ஏழு கிளைகளாக சிறை கட்டிடங்கள். ஒவ்வொரு சிறையும் ஒரே மாதிரி அமைப்பில் சிறியதாக, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியாததாக அமைக்கப்பட்டிருந்தது. வாயிலிலிருந்து உள்ளே செல்லும்போது வலது பக்கம் உள்ள கட்டிடத்தின் பின்புறம் கடல் அருகில் இருந்தது. இந்த சிறையிலிருந்து எளிதில் தப்ப முடியாது என்று சொல்வார்கள் தானே, பின்னே சுற்றிலும் கடல் சூழ்ந்த தீவில் ஒருவரால் எப்படி தப்பித்து செல்ல முடியும்? இதையெல்லாம் நினைத்தப்படி புதுமண ஜோடிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாக சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது கிஷன் நெஹ்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது. இங்கு சில நெட்வொர்க் மட்டுமே கிடைக்கும், ஆனால் அதுவும் சில சமயம் சிக்னல் கிடைக்காது. காலையில் விமான நிலையத்திலிருந்து இறங்கியதுமே இருவரும் கிஷனை தொடர்புக் கொண்டு வந்து சேர்ந்த செய்தியை சொல்ல முயற்சித்தனர். ஆனால் சிக்னல் இல்லாமல் பேச முடியவில்லை. திரும்ப காரில் வந்த போது கூட யாஷ் முயற்சித்தான். ஆனால் அழைப்பு போகவில்லை. 

இப்போது அவரே அழைக்க, அதை ஏற்றவன், "ஹலோ பப்பா," என்று பேச ஆரம்பித்தான்.

"யாஷ் நல்லப்படியா அந்தமான்க்கு போய் சேர்ந்தீங்களா ப்பா?" என்று அவர் இந்தியில் கேட்க,

"ஹான் பப்பா, சேஃபா வந்து சேர்ந்துட்டோம், வந்ததுமே உங்களுக்கு கால் செய்தேன். ஆனா சிக்னல் கிடைக்கல பப்பா," என்று அவனும் இந்தியில் பதில் கூறினான்.

"இருக்கட்டும் யாஷ், ஆமா இப்போ எங்கப்பா இருக்கீங்க?"

"ம்ம் வந்து இறங்கினதும் ஒரு காட்டேஜ்ல ப்ரஷ் ஆகிட்டு லன்ச் முடிச்சிட்டு இப்போ அந்தமான் ஜெயில் பார்க்க வந்திருக்கோம் பப்பா,”

“ஓ அப்படியா? சரி ரித்து உன்னோட தான் இருக்காளா?”

“ஆமாம் பப்பா, இங்க தான் பக்கத்தில் இருக்கா, அவக்கிட்ட பேசறீங்களா?”

“இருக்கட்டும், இப்போ சுத்தி பார்க்க போயிருக்கீங்க, அதனால அப்புறம் பேசறேன். அப்புறம் திரும்ப திரும்ப சொல்றதால என் மேல கோபப்படாத யாஷ். ரித்துக்கு இப்போ நீ மட்டும் தான் அங்க துணை. அவக்கிட்ட உன்னோட கோபத்தைக் காட்டி அவளை வருத்தப்பட வைக்காத, அவக்கிட்ட நல்லப்படியா நடந்துக்கணும் சரியா?”

“உங்க மகன் மேல உங்களுக்கு நம்பிக்கையே இல்லையா பப்பா, நான் அவ்வளவு கொடுமையானவனா?”

“அதில்ல யாஷ், உன்னை அறியாமலேயே அவக்கிட்ட கோபமா நடந்துக்கிட்டேனா? அதை தான் சொல்றேன்.”

“ம்ம் நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்கிறேன் போதுமா? அதை நீங்க நம்ப என்ன செய்யணும்?”

“ம்ம் சுத்தி பார்க்கும் இடத்திலெல்லாம் என்னோட மருமக கூட சேர்ந்து போட்டோ எடுத்து அனுப்பு, அப்போ நம்பறேன்.”

“ம்ம் இங்க போன் பேசவே சிக்னல் இல்லையாம், இதில் இவருக்கு போட்டோ எடுத்து அனுப்பணுமாம், சரி அப்படியே நீங்க கேட்டீங்கன்னு வேண்டா வெறுப்பா அனுப்பினா உங்களுக்கு நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்னு தெரிஞ்சிடுமா?"

"என்னோட பையனோட எல்லா உணர்வுகளும் எனக்கு அத்துப்படி டா. கண்டிப்பா ரித்துவோட உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு புரிஞ்சதால தான் அவளோட உன்னை ஹனிமூன்க்கு அனுப்பினேன்."

"என்ன புரிஞ்சுதோ உங்களுக்கு, எனக்கு நிஜமாவே என்னோட வாழ்க்கை எப்படி போகப் போகுதுன்னு புரியல, சரி உடனே உடனே எல்லாம் அனுப்ப முடியாது, வெயிட் செய்ங்க மெதுவா அனுப்புறேன். சரி இங்க இருந்து ஹேவ்லாக் ஐலேண்ட்க்கு போகணும், அங்க போய் பேசறேன்." என்றவன் அலைபேசி அழைப்பை அணைத்தான்.

அந்தநேரம் இருவரும் சிறைகள் அடங்கியிருக்கும் கட்டிடத்திற்கு வந்திருக்க, ஒவ்வொரு சிறையாய் சென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்துவோ, அவன் அலைபேசியில் பேசியதையெல்லாம் கவனிக்கவில்லை. ஆனால் பேசி முடித்ததை கவனித்துவிட்டு, "ஆமாம் பப்பாவா பேசினாங்க, லைன் கிடைச்சுதா?" என்றுக் கேட்டாள்.

"ஆமாம் பப்பா தான் பேசினார். உன்கிட்ட அப்புறம் பேசறேன்னு சொன்னார்." என்று அவன் சொல்ல,

"ம்ம் இருக்கட்டும், அப்புறம் அவர் வேற என்ன சொன்னார்?" என்று அவள் பதில் கேள்விக் கேட்டாள்.

"ம்ம் உன்னை வருத்தப்பட வைக்காம பார்த்துக்கணுமாம், நாம சந்தோஷமா தான் இருக்கிறோம்னு காண்பிக்க நாம ரெண்டுப்பேரும் சேர்ந்து போட்டோஸ் எடுத்து அனுப்பணுமாம், அதனால நாம இப்போ ஒரு செல்ஃபி எடுப்போம்,

கரெக்டா இப்போ நாம எந்த இடத்திலிருக்கோம் பார்த்தீயா? கல்யாணமாகி நாம முதலில் வந்திருக்க இடம் அந்தமான் ஜெயில், ஆயுள் முழுக்க என்னோட வாழ்க்கை ஜெயில் வாழ்க்கையா தான் இருக்கப் போகுதுன்னு சொல்றது போல இருக்கு இந்த தருணம், வா இந்த ஜெயில் கம்பிக்கு உள்ள நின்னு போட்டோ எடுப்போம்," என்று அவளை வெறுப்பேற்ற சொன்னவனுக்கு, இந்த சிறை வாழ்க்கை ஜென்மம் ஜென்மமாக தொடர வேண்டுமென்று அவனே அவளிடம் மகிழ்ச்சியாக கூறும் சூழலும் வருமென்பது அப்போது தெரியவில்லை.

அவனது இந்த பேச்சு அவளை வெகுவாக காயப்படுத்த, அதில் அவளது முகம் வருத்தத்தை காட்ட, "எதுக்கு அப்படி காலம் முழுவதும் இந்த ஜெயில் வாழ்க்கையை நீங்க வாழணும், அதான் நான் முன்னமே விலகிப் போயிட்றதா சொன்னேனே, இப்போதும் ஒன்னும் பிரச்சனையில்லை. அந்தமான்ல இருந்து சென்னை திரும்பினதும் நான் விலகிப் போயிட்றேன். அதை தானே நீங்களும் சொன்னீங்க, 

இல்ல இந்த ஐந்து நாள் ஏன் காத்திருக்கணும், இப்போதே ஏதாவது ஃப்ளைட் இருக்கான்னு பார்க்கிறேன். நாம ஊருக்கு கிளம்புவோம்," என்று சொல்லியப்படி அவள் அலைபேசியில் சிக்னல் இருக்கிறதா? என்று பார்க்க நினைத்தவளின் கண்களை கண்ணீர் மறைக்க, அவன் முன் அழ விரும்பாமல் அவள் அங்கிருந்து விலகிச் சென்றாள்.

"இவ வேற ஒருத்தி சும்மா வெறுப்பேத்த சொன்னா, அதை சீரியஸா எடுத்துக்கிட்டு, ஆனா ஊனா முகத்தை தூக்கி வச்சிக்கிறா, இப்போ அழறா போல," என்று வாய்விட்டு கூறியவன்,

"ரித்து நில்லு. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்." என்று அவளிடம் கடுமையாக நடந்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாலும் அதை செயலில் காட்ட முடியாதவனாக அவனை அறியாமல் அவளை சமாதானம் செய்ய அவள் பின்னோடு சென்றான்.

இப்போது தான் தந்தை சொன்னதற்கு நான் என்ன கொடுமைக்காரனா? என்றுக் கேட்டான். ஆனால் அடுத்த நிமிடமே அந்த தவறை செய்ததை நினைத்து, 'உனக்கு அறிவே இல்லை டா,' என்று தன்னை தானே திட்டியப்படி நித்துவின் அருகில் சென்றவன், அவள் அலைபேசியோடு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து, அதை அவள் கையிலிருந்து பிடுங்கினான்.

அதற்கு அவள் அவனை கோபமாக முறைக்க நினைத்தாள். ஆனால் கண்களில் வழிந்துக் கொண்டிருந்த கண்ணீர் அதை செய்ய முடியாமல் தடுக்க, அவளின் கண்ணீரை பார்த்தவனுக்கோ, இன்னுமே மனம் இளகி, "நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் ரித்து, அதை இப்படி சீரியஸா எடுத்துக்கிட்டு அழற? அழுமூஞ்சியா நீ?" என்று அவளிடம் சிரித்தப்படி கேட்க, அது அவளுக்கு பழைய யாஷை ஞாபகப்படுத்தவும், அவளது அழுகை குறைந்து முகத்தில் சிரிப்பு எட்டிப்பார்த்தது.

"ம்ம் இப்போ தான் பார்க்க அழகா இருக்க, இப்படியே இரு," என்று அவன் கூற,

"சரி செல்ஃபி எடுக்கலாம்னு சொன்னீங்களே, ஜெயில் கம்பிக்குள்ள வேண்டாம், வெளியே இருந்தே எடுப்போம் வாங்க," என்று அவள் அவனை அழைத்தாள்.

"இப்போ வேண்டாம், அழுத முகத்தோடு உன்னை போட்டோவில் பார்த்தா, பப்பா என்னைத்தான் திட்டுவாரு, அதனால அப்புறம் எடுக்கலாம்," என்று அவன் சொல்லவும்,

அப்படியானால் அவன் தந்தைக்காக தான் தன்னை சமாதானப்படுத்தினானா? அதை தாம் தான் தவறாக புரிந்துக் கொண்டோமோ? என்று நினைத்தவளின் மனம் மீண்டும் சுணங்கியது.

'ரித்து நீ அவனை திருமணம் செய்துக் கொண்ட முறைக்கு அவன் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிது, எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு தானே அவனை திருமணம் செய்ய துணிந்தாய்? இப்போது அவன் உன்னிடம் நல்லப்படியாக நடந்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பு வைப்பது தவறு தானே, அவன் மணக்கவிருந்த பெண்ணுக்கு பதிலாக நீ மணப்பெண்ணாக அமர்ந்து அவனுக்கு எத்தனை பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறாய்? அதை அவன் அவ்வளவு விரைவாக மறக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது அதிகப்படி இல்லையா?

அவன் தந்தை சொன்னதற்காக தான் அவன் உன்னோடு இணக்கமாக இருக்க முயற்சிக்கிறான் என்பது தெரிந்தும் நீ சுணக்கம் காட்டினால் எப்படி? எதுவும் உடனே சரியாகாது, அதற்கு சில காலம் காத்திருக்க வேண்டுமென்பதை நினைவில் வைத்துக் கொள்.'  என்று மனசாட்சி எடுத்துரைக்கவும் அவள் தெளிந்தாள்.

அவனோ அதற்கு எதிர்மாறாக, இப்படி ஒரு திருமணத்தை எதிர்பார்க்காத போது அவளுடனான மண வாழ்க்கை இத்தனை சுவாரசியமாக இருக்கும் என்பதே யாஷ்க்கு வியப்பாக இருந்தது. தானாகவே அந்த இடத்தில் அவன் மனம் முக்தாவை வைத்துப் பார்த்தது.

அன்று மணமேடையை ஏழு முறை வலம் வந்து நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு கருப்பு மணியால் ஆன தாலியை அணிவித்தது முக்தாவிற்கு என்று தானே அப்போது நினைத்திருந்தான். அந்தநேரம் இந்த திருமண வாழ்க்கை எப்படி இருக்குமோ? என்று ஒரு பயம் சூழ்ந்ததை இப்போதும் அவனால் மறுக்க முடியாது. தந்தைக்காக என்று முக்தாவை மணந்தாலும், இருவரும் மனமொத்த தம்பதியாக வாழ முடியுமா? என்ற சந்தேகமெல்லாம் அந்தநேரம் அவனுக்கு தோன்றியது மறுக்க முடியாத உண்மை.

அந்த வருத்தத்துடன் அவன் மணமேடையில் வீற்றிருந்த நேரம் அங்கே முக்தா சாதாரணமாக ஒரு சல்வாரில் வந்து நிற்க சோனாவை தவிர அனைவருக்குமே அதிர்ச்சி என்றாலும், அவனுக்கு அது பேரதிர்ச்சி.

அந்தநேரம் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. முக்தா இங்கிருக்கிறாள் என்றால்? அப்போது மணப்பெண்ணாக இருப்பது யார்? என்ற கேள்வியை தாங்கி நின்றார்கள். அது ஏதும் அறியாமல் ரித்து படப்படக்கும் இதயத்தோடு முக்காடினுள் தன் முகத்தை மறைத்து அமர்ந்திருக்க,

"என்னாச்சு முக்தா? கல்யாண நேரத்தில் எங்கடி போன? அப்போ இங்க மண்டபத்தில் அமர்ந்திருப்பது யாரு?" என்று முக்தாவின் அன்னை கேள்விக் கேட்கவும் தான், முக்தா இங்கு வந்துவிட்டது ரித்துவிற்கு தெரிந்தது.

சோனா தான் அவளை வேண்டுமென்றே இப்போது வரவழைத்திருந்தாள். முக்தா என்று நினைத்து யாஷ் யாரையோ மணந்துக் கொண்டதை நினைத்து அத்தனை பேர் முன்பு அவன் கூனி குறுக வேண்டுமென நினைத்தாள்.

"எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல, உங்கக்கிட்ட சொன்னா கேட்கல, அதான் இந்த கல்யாணம் வேண்டாம்னு முடிவெடுத்து நானே போயிட்டேன்." என்று முக்தா அத்தனை பேர் முன்பு சொல்லவும், அவளது தந்தை அவளை ஒரு அறை விட்டார். திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க, அவர் அறைந்ததை பார்த்து கிஷன் தடுக்க வந்தார்.

"அவளுக்கு சம்மதம் இல்லாம கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு, இப்போ அடிக்கிறதில் என்ன இருக்கு?" என்று கோபப்பட்டவர்,

"பேட்டீ, நீ என்கிட்டயாவது விஷயத்தை சொல்லியிருக்கலாம், நான் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தியிருப்பேனே, அதைவிட்டுட்டு இப்படி செய்யலாமா? ஏன்ம்மா இப்படி செய்த?" என்று அவளிடம் கோபப்படாமல் ஆதங்கப்பட்டு பேசினார்.

அதுக்கு பதில் சொல்ல முடியாமல் முக்தா தலைகுனிய, "பப்பா இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முதலில் இவளுக்கு பதிலா மணமேடையில் இருப்பது யாருன்னு தெரிஞ்சிக்கணும்," என்று கூறிய மணீஷ்,

"ஹே இவ எப்படி உனக்கு பதிலா இங்க வந்தா, நீ எப்படி வீட்டை விட்டு போன?" என்று  முக்தாவிடம் அவன் கேள்விகள் கேட்க,

"இவ எப்படி வந்தான்னு எனக்கு தெரியாது. ஆனா நான் ப்யூட்டி பார்லரில் இருந்து என்னோட ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிட்டேன்." என்று சோனாவை மாட்டிக் கொடுக்காமல் பதில் சொல்ல, முக்தாவின் தந்தை மீண்டும் அவளை அடிக்க முயற்சிக்க, 

அவரை தடுத்த கிஷன், "எதுவா இருந்தாலும் அவளை வீட்ல அழைச்சிட்டு போய் பேசுங்க, போங்க," என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

இங்கு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தன்னுடன் திருமணம் வேண்டாமென்று ஒரு பெண் ஓடிப் போயிருக்க, யாரென்றே தெரியாத பெண்ணுடன் திருமணம் நடந்தது குறித்து யாஷ் மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, நடந்ததை புரிந்துக் கொண்டு ரித்துவும் தன் முக்காடை விலக்கினாள்.

அதை உணர்ந்து அவளைப் பார்த்து யாஷ் கோபத்தோடு முறைத்தான். அங்கிருக்கும் அனைவருக்குமே அவள் யாரென்று தெரியாததால் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களுக்கெல்லாம் தெரியாது என்பது அவளுக்கும் தெரியும், அதைப்பற்றி அவளுக்கு எந்த வருத்தமுமில்லை. ஆனால் யாஷ் தன்னை யாரென்று சரியாக அடையாளம் கண்டுக் கொள்வானா? என்று மனதிற்குள் ஒரு எதிர்பார்ப்போடு தான் அவள் மணமேடைக்கு வந்தாள். ஆனால் அவனது கோப முகமே அவனுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பது அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. தான் யார் என்பதை சொல்லவே வேண்டாமென்று அந்தநேரம் முடிவெடுத்தாள்.

அவள் முகத்தை பார்த்து சோனாவும் சிறிது அதிர்ச்சியாகிவிட்டாள். ஏனென்றால் அவளையும் முக்தாவையும் விடவே ரித்து அழகாக இருந்தாள். இப்படி ஒரு பெண் யாஷிற்கு மனைவியா? என்று அந்தநேரம் அவள் மனதிற்குள் பொறாமை எழுந்தது. ஆரம்பத்திலேயே அனைவரிடமும் சொல்லாமல் தவறு செய்துவிட்டோமோ? என்று யோசித்து வருத்தம் கொண்டாள்.

"பப்பா இந்த பொண்ணு யாரு? நீங்க தானே பார்லர் போய் முக்தாவை அழைச்சிட்டு வந்தீங்க, அங்க தான் இவ மாறியிருக்கணும், நீங்க யாருன்னு முகம் பார்க்காமலா கூட்டிட்டு வந்தீங்க?" என்று மணீஷ் கிஷனிடம் கேட்டவன்,

"சோனா, நீயும் தானே பப்பாவோட போன, கூட வந்தது முக்தா இல்லன்னு உனக்கு தெரியாதா?" என்று அவளிடமும் கேட்டான்.

"இல்ல அவ முகத்தை திறந்து பார்க்க எனக்கு தோனல, அவ முக்தாவா இல்லாம இருப்பான்னு நான் எங்க கண்டேன்." என்று அவள் பதில் கூறினாள். உண்மையில் அந்தநேரம் அவளுக்கும் விஷயம் தெரியாது தானே, அதை வைத்து கூறினாள்.

"பப்பா இது யாரா இருக்கும்?" என்று மணீஷ் கிஷனிடம் கேட்க, அங்கே கூடியிருந்தவர்களின் சலசலப்பு இன்னும் அடங்காமல் இருக்கவும்,

"நீ யாஷையும் அந்த பெண்ணயும் கூட்டிட்டு ரூம்க்கு போ. அங்க பேசிக்கலாம்," என்றவர், சோனாவின் தந்தையிடம் வந்திருப்பவர்களை கவனித்து அனுப்புமாறு பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவரும் அறைக்குச் சென்றார்.

மணீஷ் மணமக்கள் இருவரையும் அழைத்துச் செல்லும்போதே சோனாவும் அங்கு நடப்பதை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அவர்களோடு சென்றாள். இதுவரை அதிர்ச்சியில் உறைந்திருந்த யாஷ் உள்ளே செல்லவும் தான் நடந்ததை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்தவன், உடன் வந்த ரித்துவை பார்த்து, "ஏய் எந்த நோக்கத்தில் என்னை கல்யாணம் செய்துக்கிட்ட? உனக்கு என்ன வேணும்? எதுக்காக வந்த? நீ யார்?" என்று கோபத்தோடு கேட்டிருந்த போது தான் கிஷன் உள்ளே வந்தார்.

யாஷ் கோபத்தோடு பேசுவதை பார்த்து, "பேட்டா எதுக்கு இப்போ கோபமா பேசற? இரு என்னன்னு கேட்போம்," என்று அவர் பொறுமையாக சொல்ல,

"என்ன பப்பா நீங்க, நடந்தது சாதாரண விஷயமா? எங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் நடந்திருக்கு, வேற ஒரு பெண்ணுக்கு பதிலா முகத்தை மறைச்சு கல்யாணம் செய்திருக்கா, பக்காவா அதுக்கேத்தது போல தயாரா வந்திருக்கா பாருங்க, இன்னைக்கு தானே முக்தா வீட்டை விட்டுப் போனா, ஆனா இவ பாருங்க கையில் மெஹந்தி அது இதுன்னு நம்மள ஏமாத்தன்னே வந்திருக்கா பாருங்க, இவளோட திட்டம் என்னன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?" என்று அவரிடமும் கோபமாக பேசினான்.

"நம்மக்கிட்ட என்ன இருக்குன்னு அந்த பொண்ணு திட்டம் போடணும் யாஷ், பப்பா பார்லரில் தான் முக்தாவுக்கு பதிலா இந்த பெண்ணை கூட்டிட்டு வந்திருக்காரு, ஏதோ தப்பு நடந்திருக்கே தவிர, திட்டமெல்லாம் எதுவும் இருக்காது." என்று மணீஷ் யாஷை பார்த்துச் சொல்ல,

"மணீஷ் சொல்றது தான் சரி யாஷ், எதுவா இருந்தாலும் பொறுமையா கேட்போம்," என்று சொன்ன கிஷன்,

"பேட்டீ நீ யாரு? எதுக்காக இங்க வந்த? எதுக்கு இந்த கல்யாணத்தை செஞ்சுக்கிட்ட, இது விளையாட்டு விஷயமா? எவ்வளவு பெரிய விஷயம் இது, இதில் துணிஞ்சு இப்படி செய்யலாமா? அதுவும் நீ யாருன்னே எங்களுக்கு தெரியல, என்ன பேட்டீ இதெல்லாம்?" என்று ரித்துவிடம் அவர் அமைதியாக பேசினார்.

அதுவரை பயத்திலும் யாஷின் கோபம் கண்டும் மிரண்டு இருந்தவள், இப்போது கிஷனின் அமைதியான பேச்சில் கொஞ்சம் தெளிந்தவளாக, "இங்கப்பாருங்க ஒரு பிரச்சனை, அதிலிருந்து தப்பிக்க தான் இங்க வந்தேன். கொஞ்ச நாளுக்கு எனக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படுது, அதுக்குத்தான் இந்த கல்யாணத்தை செய்துக்கிட்டேன். ப்ளீஸ் என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. கொஞ்ச நாளில் நானே போயிடுவேன். அதுவரைக்கும் உங்க வீட்டில் இடம் கொடுத்தா போதும், பிறகு நீங்க என்ன சொல்றீங்களோ கேட்டு அதுப்படியே விலகிடுவேன்." என்று தயக்கத்தோடு அவள் கூற,

"ஹே என்னைப் பார்த்தா உனக்கெப்படி தெரியுது? உன்னோட பாதுகாப்புக்கு என்னோட வாழ்க்கை தான் கிடைச்சுதா? அப்படியேன்னாலும் நீ சொல்றதை நாங்க எப்படி நம்பறது? நீ ஏதோ திட்டத்தோடு தான் வந்திருக்க, உன்னையெல்லாம் சும்மா விடக் கூடாது, என்ன செய்யறேன் பாரு," என்றவன்,

"பப்பா இவளை போலீஸ்ல கம்பெளியிண்ட் செய்து உள்ள தள்ளணும், அவங்க விசாரிச்சா உண்மையை சொல்லிடுவா," என்று கிஷனிடம் கூறினான்.

அவன் போலீஸ் என்றதும் வெகுவாக பயந்தவள், எங்கே சுதன் லாலிடம் மாட்டிக் கொள்வோமோ என்று கவலையில், "இங்கப் பாருங்க, இப்பவே வேணும்னாலும் நான் வெளியே போயிட்றேன். எந்தவிதத்திலும் உங்களுக்கு பிரச்சனையாவோ தொந்தரவோ இருக்க மாட்டேன். ப்ளீஸ் போலீஸெல்லாம் போக வேண்டாம்," என்று அவள் யாஷை பார்த்து கெஞ்சலாக கூற,

"போலீஸ்னா பயப்பட்றா பப்பா, இவக்கிட்ட ஏதோ தப்பிருக்கு, இவளை சும்மா விடக் கூடாது." என்று அவன் அதே பிடியில் நின்றான்.

அவளுக்கு பயத்தில் கை கால்களெல்லாம் உதறல் எடுக்க, அதை கவனித்த கிஷன், "இரு யாஷ், என்னன்னு பொறுமையா கேட்போம்," என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த நேரம், அவரது அலைபை ஒலியெழுப்ப, 

"நான் போன் பேசிட்டு வர வரைக்கும் இந்த பொண்ணுக்கிட்ட கோபப்படக் கூடாது." என்று யாஷை பார்த்துக் கூறியவர்,

"மணீஷ் பார்த்துக்க," என்று சொல்லிவிட்டு தனியாக சென்று பேசியவர், திரும்பி வந்து ரித்துவிடம் தனியாக பேச வேண்டுமென்று சொல்லி மற்ற மூவரையும் வெளியே அனுப்பினார்.

உள்ளே அவளிடம் என்ன பேசினார் என்று தெரியவில்லை. வெளியே வந்து இவள் உன் மனைவி. அவளோடு தான் நீ வாழ வேண்டுமென்று சொன்னபோது யாஷ் கோபத்தோடு மறுத்தான்.

ஆனால் தந்தையின் பேச்சை ஒருக்கட்டத்தில் மீற முடியாமல் அவளோடு வாழ ஒத்துக் கொண்டு இதோ தேனிலவிற்கும் வந்துவிட்டான். ஆனால் இதெல்லாம் சரி வருமா? அவளோடு சேர்ந்து வாழ முடியுமா? என்று மனதில் ஒரு பயம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. இரண்டே நாளில் இந்த மாற்றமா? வியப்பாக தான் இருந்தது. 

சிறிது நேரத்திற்கு முன் தந்தை சொன்ன "ரித்துவோட உன் வாழ்க்கை சந்தோஷமாக தான் இருக்கும்," என்ற வார்த்தையை நினைத்துப் பார்த்தவனது இதழ்கள் புன்னகைக்க,

"பப்பா சொல்றது நிஜம் தானா? என்னோட வாழ்க்கை ரித்துவோட நல்லா இருக்குமா?" என்று வாய்விட்டு கேட்டுக் கொண்டான்.

அவன் நடந்ததை நினைத்துக் கொண்டிருக்க, அவளோ அந்த சிறைச்சாலையை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்தப்படி வந்தாள். அப்படியே இருவரும் மாடிப் பகுதியை அடைய அங்கிருந்து கடலும் அருகில் உள்ள தீவும் தெரிய, இப்போது இருவருமே இயல்பு நிலைக்கு வந்திருக்கவே,

"இங்க செல்ஃபி எடுப்போமா?" என்று யாஷ் கேட்கவும், ரித்துவும் தலையசைக்க, இருவரும் மகிழ்ச்சியுடனே புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதை மறக்காமல் யாஷ் அவன் தந்தைக்கு அனுப்பி வைத்தான்.

தேனன்பு தித்திக்கும்..

கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பதிவிடுங்கள்

கருத்து திரி

 

ReplyQuote
Posted : 26/02/2020 2:41 pm
Sudhar liked
Chithra V
(@chithra-v)
Eminent Member

திகட்டாதே தேனன்பே 5

போர்ட் பிளேயரில் இருந்து புறப்பட்ட கப்பல் ஹேவ்லாக் தீவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. ஒருமணி நேர பயணம். விமானத்தை போலவே மூன்று பிரிவுகளாக கப்பலிலும் இருக்கைகள் இருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று இருக்கைகளாக வரிசைப்படுத்தப்பட்டிருக்க, அதில் யாஷ்க்கும் ரித்துவுக்கும் ஜன்னல்புறமாக அமைந்த இருக்கைகளே கிடைத்தது. 

முதல் போன்றே ஜன்னல் இருக்கையில் யாஷை அமரச் சொல்லிவிட்டு ரித்து அவன் அருகில் அமர நினைக்க, அதற்கு அடுத்த இருக்கையில் ஒரு நடுத்தர வயது ஆண் அமர்ந்திருந்தார். அவர் இவர்களை கவனிக்க கூட இல்லை. ஒரு புத்தகத்தில்  ஒன்றி போயிருந்தார் அவர், இருந்தாலும் ரித்துவை ஜன்னல் இருக்கையில் அமர வைத்துவிட்டு, யாஷ் அவளுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான்.

விமானத்தில் பயணித்தது போலவே இங்கும் பயணத்தின் போதான எச்சரிக்கை முறைகளை அங்கிருந்த பணிப்பெண் கூற, யாஷ் அதை கவனமாக கேட்டுக் கொண்டான். அவனுக்கு இதெல்லாம் புதுவித அனுபவம். ஒரு சுற்றுலா பயணத்தில் விமானம், கப்பல் என்றெல்லாம் பயணிப்பான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. இதெல்லாம் அவன் நண்பன் கபிலன் மற்றும் அவன் தந்தையின் ஏற்பாடு. அவர்கள் இதை சொன்னபோது எப்படி குதித்தான். ஆனால் இப்போது இந்த வாய்ப்பை இழக்க இருந்தோமே என்றே தோன்றியது.

சுற்றியும் நீல வண்ணத்தில் கடலும், ஜன்னல் வழியாக கொஞ்சம் தொலைவில் வேறொரு தீவும் தெரிய அதைப் பார்த்தப்படி இருந்தான். ரித்துவும் கடலை தான் பார்த்திருந்தாள். ஆனால் நினைவுகள் கிஷனின் வார்த்தைகளில் பதிந்திருந்தது. கப்பலில் ஏறுவதற்கு முன் தான் கிஷனிடம் அவள் பேசியிருந்தாள். யாஷ் அனுப்பியிருந்த புகைப்படத்தைப் பார்த்து அவரே அவளது அலைபேசி எண்ணுக்கு அழைத்திருந்தார்.

"யாஷ் முகம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு பேட்டீ போட்டோல, கண்டிப்பா அவனுக்கு உன்னைப் பிடிக்குது. சீக்கிரமா எல்லாம் சரியாகிடும் பாரு. ஆனா உன்னோட முகம் தான் கொஞ்சம் வாட்டமா இருந்துச்சு. யாஷ் எப்படி நடந்துப்பானோன்னு பயமா இருக்கா, சின்ன சின்னதா உன்னை காயப்படுத்துவான். ஏன்னா நடந்த கல்யாணத்தை நினைச்சு அவனுக்கு இன்னும் கோபம் போகல, அதை அவன் உன்கிட்ட தானே காட்டுவான். அதுக்காக அவனை நினைச்சு பயந்துக்காத, அவன் ரொம்பவே நல்லவன் பேட்டீ," என்று அவர் சொல்ல,

"ஹான் பப்பா, ம்ம் அப்பப்போ கோபத்தை காட்டினாலும், திரும்ப சமாதானமும் படுத்திட்றாங்க, என்ன அவங்க கோபத்தை காட்டும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு, முன்ன யாஷ் கோபமா நடந்து பார்த்தயில்லையா அதான்," என்று அவள் பதில் கூறினாள்.

"ம்ம் புரியுது பேட்டீ, நீ யாருன்னு அவனுக்கு சொல்லியிருந்தா, ஒருவேளை எல்லாம் சரியா ஆகியிருக்கும், நீதான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்ட, ஏன்னு தெரியல, இதுக்கு மேலேயாவது அவன்கிட்ட நீ யாருன்னு சொல்லு." என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்திருந்தார்.

அதை இப்போது நினைவுக்கு கொண்டு வந்தவள், அன்று கிஷனிடம் உண்மையை கூறியதையும் நினைவு கூர்ந்தாள்.

அன்று அலைபேசியில் பேசிவிட்டு வந்த கிஷன் மீண்டும் அறைக்குள்ளே வந்து அவள் மீது கோபத்தோடு இருந்த யாஷ் மற்றும் மணீஷ், சோனா மூவரையும் அனுப்பிவிட்டு அவள் அருகில் வந்தவர், "இப்போ தான் ப்யூட்டி பார்லரில் இருந்து போன் வந்துச்சு, அவங்க உண்மையெல்லாம் சொல்லிட்டாங்க, உன்னை காணும்னு உன்னை சேர்ந்தவங்க தேட்றாங்களாம்," என்று விஷயத்தை சொல்லவும்,

ஏற்கனவே யாஷ் காவல் துறையினரிடம் புகார் கொடுப்பதாக சொல்லியதில் பயத்தோடு இருந்தவளுக்கு, இப்போது எங்கே சுதன் லாலிடம் தன்னை கொண்டு போய் விட்டுவிடுவார்களோ என்ற பயம் அதிகமாகவும், "ப்ளீஸ், என்னை அவங்கக்கிட்ட கொண்டு போய் விட்றாதீங்க, இங்க அவங்க என்னை தேடி வரதுக்குள்ள நானே போயிட்றேன்." என்று அவள் அவரை பார்த்து கெஞ்சினாள்.

"பேட்டீ, நீ பயப்பட்றது போல ஒன்னுமில்ல, உன்னை காணும்னு பார்லரில் வந்து தேடியிருக்காங்க, உன்னோட போட்டோவை காட்டி கேட்ருக்காங்க, நல்லவேளை உனக்கு மேக்அப் போட்ட பொண்ணுக்கு மட்டும் தான் உன் முகம் ஞாபகமிருக்கு, வந்து கேட்டவங்க ரவுடி மாதிரி இருக்கவும் அந்த பொண்ணு உன்னைப்பத்தி எதுவும் சொல்லலையாம்,

அதுவுமில்லாம இங்க முக்தாவுக்காக நாங்க வாங்கின இந்த ட்ரஸ், நகைகளை தான் அந்த பொண்ணு உனக்கு போட்டு விட்டிருக்கு. போட்றதுக்கு முன்ன உன்கிட்ட காட்டி உன்னோடதான்னு கேட்டப்போ, நீ ஆமாம்னு தலையாட்டவே அந்த பொண்ணும் உனக்கு இதையெல்லாம் போட்டு அலங்காரம் செய்திருக்கு, பார்லருக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமரா மூலமா முக்தா முகத்தை மூடி வெளியே போனதையும், உள்ள உனக்கு வாங்கி வச்ச ட்ரஸ் அப்படியே இருக்கவும், அவங்க நீ அங்க இருந்து வெளிய போனதா நினைச்சிருக்காங்க, 

அந்த பொண்ணும் அதுக்கு மேல உன்னைப்பத்தி சொல்லல, ஆனாலும் ஒரு எச்சரிக்கைக்காக நான் பணம் கட்டும்போது என்னோட நம்பர் கொடுத்துட்டு வந்தேனே, அது மூலமா போன் செய்து விஷயத்தை சொன்னாங்க, இப்போதைக்கு நீ இங்க மாறி வந்தது உன்னை சேர்ந்தவங்களுக்கு தெரியாது." என்று அவர் விளக்கமாக கூறவும், ரித்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"ஆனா எனக்கு ஒன்னு தான் புரியல, உனக்கு ஏற்பாடு செய்த கல்யாணம் கட்டாய கல்யாணமாக இருக்கணும், நான் வந்து கூப்பிடவே அதிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பா நீ எங்கக்கூட வந்துட்ட சரி. ஆனா இங்க வந்து உண்மையை சொல்லியிருந்தா, நாங்களே உனக்கு பாதுகாப்பு கொடுத்திருப்போமே, அதைவிட்டுட்டு இங்க என்னோட மகனை கல்யாணம் செய்துக்க என்ன அவசியம்? இது ஒன்னும் விளையாட்டு விஷயமில்ல பேட்டீ, அவசரப்பட்டுட்டீயே, இதனால உங்க ரெண்டுப்பேரோட வாழ்க்கையும் கேள்விக்குறியா நிக்குதே," என்று கிஷன் வருத்தப்பட்டார்.

அது அவளை பாதிக்க, "பப்பா என்னை மன்னிச்சிடுங்க, நான் நீங்க சொன்னது போல தான் உங்க எல்லோரிடமும் உண்மையை சொல்லிட்டு இங்க இருந்து போயிடணும்னு நினைச்சேன். ஆனா அது யாஷை பார்க்கும்வரை தான், கல்யாண மாப்பிள்ளை யாஷ்னு தெரிஞ்சப்போ, என்னால முன்ன எடுத்த முடிவில் உறுதியா நிற்க முடியல," என்று அவள் கூற, கிஷனோ அதிர்ச்சியானார்.

"என்ன பேட்டீ சொல்ற? என்னோட பேட்டா யாஷை உனக்கு முன்னமே தெரியுமா? நீ சொல்றது எனக்கு புரியல, என்ன சொல்ல வர?" என்று அவர் கேட்க,

"ஆமாம் பப்பா, எனக்கு யாஷை முன்னமே தெரியும்," என்று உண்மையை உரைத்தவள், "உங்களை பப்பான்னு கூப்பிடலாமில்ல," என்றுக் கேட்க, அதுவே அவரை நெகிழ வைத்தது.

"எப்படி யாஷை உனக்கு தெரியும்?"  என்று அவர் கேட்க, அவளும் அவனை எப்படி தெரியும் என்ற விஷயத்தை கூறினாள்.

"ஆனா யாஷ்க்கு உன்னை அடையாளம் தெரியவே இல்லையே? நீயே பார்த்தல்ல? என்று அவர் கேள்வியெழுப்ப,

" அப்போ நான் குண்டா இருப்பேன். அதனால என்னை சரியா அடையாளம் தெரியலையோ என்னவோ, இல்ல கொஞ்ச நாள் தானே பழக்கம், அதனால என்னை மறந்திருக்கலாம், ஆனா யாஷை நான் பார்த்ததுமே கண்டுப்பிடிச்சிட்டேன். ஏன்னா எனக்கு யாஷை ரொம்ப பிடிக்கும், யாஷோட முகம் என்னோட மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு, ஆனா அதுக்காக யாஷை நான் கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கல, யாஷ் மத்தவங்க முன்ன அவமானப்படக் கூடாது என்பதால் தான் நான் இந்த கல்யாணத்தை செய்துக்கிட்டேன்." என்ற அவளது பதிலில், கிஷன் குழம்பினார்.

"உங்கக்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல, நமக்கு இப்போ தான் அறிமுகம். ஆனா சொல்லித்தான் ஆகணும், முக்தா வீட்டைவிட்டு போனதில் யாஷோட அண்ணிக்கும் சம்பந்தம் இருக்கு. யாஷோட கல்யாணம் நின்னு எல்லோர் முன்னும் யாஷ் அவமானப்படணும்னு அவங்க நினைச்சாங்க, நான் முக்தா இல்லன்னு முன்னமே அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சு இருந்தும் வேணும்னே யாருன்னே தெரியாத என்னை யாஷ் கல்யாணம் செய்து கஷ்டப்படணும்னு விரும்பினாங்க,

அவங்க விருப்பப்படி யாஷ் என்னை கல்யாணம் செய்ததுக்குப் பிறகு என்ன நடக்கும்னு எனக்கு தெரியல, ஆனா யாஷை கல்யாணம் செய்துக் கொள்ளும் பெண் ஓடிப் போயிட்டதால யாஷ் மத்தவங்க முன்ன அவமானப்படக் கூடாதுன்னு நினைச்சேன். அதான் துணிஞ்சு மணமேடை ஏறினேன்.

இங்கப்பாருங்க என்ன இருந்தாலும் நான் செய்தது தப்பு தான், அதுக்கு நீங்க என்ன தண்டை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். இங்க இருந்து போக சொன்னாலும் போகிறேன். ஆனா என்னை தேடிட்டு இருக்கவங்க கிட்ட மட்டும் என்னை கொண்டு போய் விட்றாதீங்க, என்னை கல்யாணம் செய்து கொடுக்க இருந்த சுதன் லாலுக்கு என்னை விட 20 வயசு அதிகம். என்னை கட்டாயப்படுத்தி தான் இந்த கல்யாணதுக்கு ஒத்துக்க வச்சாங்க," என்று அவள் கெஞ்சலாக கூற,

அவள் பொய் உரைப்பதாக கிஷனால் நினைக்க முடியவில்லை. ரித்துவை அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவள் மருமகள் சோனாவை பற்றி நன்றாக தெரியுமே, ரித்து சொன்னது போல் அவள் செய்யக் கூடியவள் தான், என்பது மறுக்க முடியாத உண்மை. யாரோ ஒருத்தி தன் மகனக்கு அவமானம் நேரிடக் கூடாது என்று நினைக்க, தன் சொந்த மருமகள் இப்படி தன் மகனுக்கும் குடும்பத்திற்கும் கெடுதல் நினைக்கிறாளே என்பதை நினைத்துப் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது.

மணீஷ் அவளை காதலித்தான். இன்னமும் காதலிக்கிறான். அதனால் அவள் என்ன செய்தாலும் அவன் பொறுத்துக் கொள்வான். ஆனால் யாஷ் ஏன் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே சேமித்து வைத்த பணத்தையெல்லாம் வீடுக்கட்ட கொடுத்துவிட்டு, இப்போது கையில் ஒரு வேலைக் கூட இல்லாமல் இருக்கும் மகனது வாழ்க்கையில் சோனா இன்னும் பிரச்சனைகள் ஏற்படுத்த நினைப்பதை கண்டு அவருக்கு கோபம் வந்தது. ஆனால் மணீஷுக்காக அதை பொறுத்துக் கொண்டார்.

ஆனால் அதேநேரம் சோனா நினைத்ததும் நடக்கக் கூடாது என்ற உறுதியில் அவர் இருந்தார். கட்டாயமாக தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை வேண்டாமென்று நிராகரித்துவிட்டு வந்தவள், இப்போது தன் மகனை திருமணம் செய்திருக்கிறாள் என்றால், தன் மகனை இந்த பெண் எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை கிஷனால் நன்றாகவே உணர முடிந்தது.

முக்தாவை திருமணம் செய்தால் வாழ்க்கை தரத்தில் உயரலாம், ஆனால் மகன் முக்தாவோடு மகிழ்ச்சியாக வாழ்வானா? என்பது சந்தேகம் தான், ஆனால் அவனைப்பற்றி எந்த விஷயமும் அறியாமலேயே அவனை துணிந்து மணம்புரிந்துக் கொண்ட இந்த பெண்ணுடன் தன் மகன் வாழ்க்கை கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருக்குமென்பதை உணர்ந்தவர், இறுதியாக ஒரு முடிவெடுத்தார்.

அவர் எந்த பதிலும் சொல்லாமல் ஏதோ யோசனையாக இருக்க, ரித்துவோ அவரையே பார்த்திருந்தாள். அவள் தன்னை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த அவரும் அவளைப் பார்த்து புன்னகைக்க அதில் முற்றிலும் அவள் உருகிப் போனாள். யாஷுடன் தன் திருமண வாழ்க்கை நிலைத்து இவர்களோடு இங்கேயே இருந்துவிட மாட்டோமா? என்ற ஆசை அவளுக்கு அதிகமானது.

அதைப் பிரதிபலிப்பது போல், "நீயேன் போகணும், முறைப்படி உங்க கல்யாணம் நடந்துச்சு, அதனால நீ என் மகனுக்கு மனைவியா வாழ்ந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். உனக்கு சம்மதமா?" என்றுக் கேட்க,

"அதைவிட ஒரு பெரிய சந்தோஷம் கிடைக்காது பப்பா," என்றவளின் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கியிருந்தது.

பின் அவரோ, "சோனா செய்தது யாஷ்க்கோ மணீஷ்க்கோ தெரிய வேண்டாம், இதனால மணீஷ் வாழ்க்கையில் பிரச்சனை தான் வரும்," என்று அவர் சொல்ல, 

மணீஷ், சோனா என்று இவர் சொல்வது, யாஷின் அண்ணன், அண்ணி போல என்பதை புரிந்துக் கொண்டவள், சரி என்பது போல் தலையசைத்தாள்.

"அப்புறம் நீங்களும் நான் யார் என்கிற விஷயத்தை யாஷிடம் சொல்ல வேண்டாம்," என்று அவரிடம் சொல்ல,

"எதுக்கு பேட்டீ? சொன்னா யாஷோட கோபம் குறையுமில்ல, அவன் உன்னை ஏத்துக்குவான்." என்று அவர் கேட்டார்.

"ப்ளீஸ் பப்பா, இப்போதைக்கு சொல்ல வேண்டாமே, நானே நேரம் பார்த்து சொல்றேன். யாஷோட கோபம் நியாயமானது தானே, அதை நான் பொறுத்துக்க தான் வேண்டும்," என்று அவள் சொல்ல,

"விஷயத்தை சொல்றதுனால என்ன பிரச்சனை ஆகும்னு எனக்கு தெரியல, சரி உனக்கு எப்போ சொல்லணுமோ சொல்லு," என்றவர், "பேட்டீ, உன்னோட பேர் என்ன?" என்று கேட்க,

"ரித்துபர்ணா, ரித்துன்னு சுருக்கி கூப்பிடுவாங்க," என்று பதில் கூறினாள்.

"ஒருவேளை உன்னோட பேர் சொன்னா யாஷ்க்கு நீ யாருன்னு ஞாபகம் வருமா?" என்று அவர் கேட்க,

"இல்ல, யாஷ்க்கு என் பேர் தெரியாது." என்றவள், அதற்கான காரணத்தை கூற,

"ஓ" என்று அவள் சொன்னதை கேட்டுக் கொண்டவர், பின் வெளியே சென்று மூவரையும் உள்ளே அழைத்து வந்தார்.

யாஷ் உள்ளே நுழைந்ததும், "என்ன பப்பா, இவளை போலீஸ்ல புடிச்சு கொடுப்போமா?" என்று ரித்துவை பார்த்து முறைத்துக் கொண்டே கிஷனிடம் கேட்க,

"யாஷ் அதுக்கு எந்த அவசியமுமில்ல, நான் சொல்றதை கோபப்படாம கேளு. உங்களுக்கு சடங்கு சம்பிரதாயத்தோடு முறைப்படி கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கு, அதை நீ மனதார ஏத்துக்கிட்டு தான் ஆகணும், இந்த பொண்ணு தான் உன் மனைவி. அவளோடு தான் உன் வாழ்க்கை. இதுதான் என்னோட முடிவு. பப்பாவோட முடிவை நீ ஏத்துப்பன்னு நினைக்கிறேன்." என்று அவர் தீர்மானமாக கூறினார்.

அவரது இந்த முடிவில் யாஷ் அவரை அதிர்ச்சியாக நோக்க, "பப்பா உங்களுக்கு என்ன ஆச்சு? யாருன்னே தெரியாத பொண்ணோட யாஷ் வாழணும்னு சொல்றீங்க? அவ என்ன பிரச்சனையோடு வந்திருக்கான்னே நமக்கே தெரியல, இந்த பொண்ணை நம்ம வீட்ல விட்டு பிரச்சனையை நம்ம விலை கொடுத்து வாங்கணுமா? இதெல்லாம் யோசிக்காம முடிவெடுக்காதீங்க பப்பா," என்று மணீஷ் தான் கேட்டான்.

"எதையும் யோசிக்காம நான் முடிவெடுப்பேனா மணீஷ். இப்போ எனக்கு ப்யூட்டி பார்லரிலிருந்து தான் போன் வந்துச்சு, நம்ம நினைக்கிற அளவுக்கு பிரச்சனை பெருசா இல்லை. அப்படியே பிரச்சனை வந்தாலும், ரித்து இனி நம்ம வீட்டு பொண்ணு. அவளுக்கு நாம தான் துணை நிக்கணும்," என்று கிஷன் கூற,

"இவளுக்காக பிரச்சனையில் மாட்டிக்க நமக்கு என்ன தலையெழுத்து. உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? யாருன்னே தெரியாத பெண்ணை என்னோட மனைவியா உங்களோட மருமகளா ஏத்துக்கணும்னு சொல்றீங்க, என்னால அதை ஒருபோதும் ஏத்துக்க முடியாது." என்று யாஷும் அவன் பிடியில் உறுதியாக நின்றான்.

சோனாவிற்கோ கிஷனின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு திருமணத்தால் கண்டிப்பாக யாஷ் வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும் என்று நினைத்திருக்க, கிஷன் இப்படி கூறவும், "யாருன்னே தெரியாத ஒருத்திய அடிச்சு துரத்தாம வீட்டு மருமகளா ஆக்கிக்கணும்னு நினைக்கிறீங்க, இதெல்லாம் நல்லாவா இருக்கு," என்று கிஷனை பார்த்து அவள் கூற, அவரோ அவளை கோபமாக முறைத்தார்.

எத்தனை அவமதித்தாலும் கிஷன் கோபம் கொண்டு அவள் பார்த்ததில்லை. அப்படியிருக்க இப்போது அவர் கோபமாக பார்க்கவும், ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ என்று அவளுக்கு சந்தேகம் எழ, அடுத்து அவள் வாயை திறக்கவேயில்லை.

"யாஷ், உன்னோட பப்பா உனக்கு நல்லது தான் நினைப்பேன்னு உனக்கு தெரியாதா? ரித்து ரொம்பவே நல்ல பொண்ணு, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அந்த பொண்ணு உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டது. அதுக்காக உன்னை கட்டாயப்படுத்தி உன்னோட இருக்க அந்த பொண்ணு நினைக்கல, அதேசமயம் நாம ஒத்துக்கிட்டா உன்னோட மனைவியா உன்கூட வாழ அந்த பொண்ணு தயாரா இருக்கு. எனக்கு அந்த பொண்ணை மருமகளா ஏத்துக்கிறதில் மனப்பூர்வமான சம்மதம், அதேபோல நீயும் அந்த பொண்ணை மனைவியா ஏத்துக்கிட்டா சந்தோஷப்படுவேன். ஆனா உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அப்புறம் உன்னோட இஷ்டம்." என்று சொன்னாலும் மகன் தன் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது அவரது பேச்சில் தெரிந்தது.

எதற்காகவும் தந்தையின் பேச்சை மீறாதவனுக்கு இப்போதும் தந்தையை எதிர்க்க முடியாமல், "என்னவோ செய்ங்க," என்றவன், கோபமாக அறையிலிருந்து வெளியேறினான்.

"பப்பா இதெல்லாம் சரி வருமா?" என்று மணீஷ் கேட்க,

"எல்லாம் சரி வரும், வாங்க வீட்டுக்கு போகலாம்," என்று அவரும் சொல்லிவிட்டு ரித்துவிடம் சென்று, "வா பேட்டீ," என்று அவளை அழைத்து கொண்டு செல்ல, சோனா அதையெல்லாம் பார்த்து கடுப்பாகி அவர்களோடு வீட்டுக்குச் சென்றாள்.

இவர்களுக்கு பக்கத்து வீட்டில் இவர்களை போலவே வட இந்திய நடுத்தர தம்பதியரும் குடி இருந்தனர். அவர்களும் திருமணத்திற்கு வந்திருந்தனர். இப்போது அவர்கள் முன்னதாகவே வீட்டுக்குச் சென்றிருக்க, அவர்களிடம் மருமகள் முதல் முறை வீட்டிற்கு வரும் போது செய்யும் கிரகபிரவேசம் சடங்கை செய்வதற்கான ஏற்பாட்டை கவனிக்கச் சொல்லி கிஷன் அலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். அதன்படி இவர்கள் வீட்டை அடைந்ததும் அந்த தம்பதியினர் தயாராக இருக்க, அந்த பெண்மணி மணமக்கள் இருவருக்கும் ஆலம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளே அனுப்ப வாசலில் வைத்திருந்த அரிசி பாத்திரத்தை காலால் உதைத்து சிவப்பு வண்ணம் அடங்கியிருந்த கலவையில் பாதம் பதித்து பின்னர் ரித்து உள்ளே சென்றாள்.

மாற்றுடை கூட இல்லாமல் அவள் இருக்கவே, அவளுக்கு தேவையான ஆடையை வாங்க நினைத்த கிஷன், அதற்கு முன்பு அவளிடம் சென்று, "உன்னோட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமாவது நீ இங்க இருக்க விஷயத்தை சொல்லிடலாமா பேட்டீ," என்றுக் கேட்க,

"அய்யோ வேண்டாம் பப்பா, என்னோட பப்பா நான் எங்கே இருக்கேனோன்னு கவலைப்படுவார் தான், ஆனால் அம்மாக்கு தெரிஞ்சா திரும்ப என்னை கூட்டிட்டு போய் சுதன் லாலுக்கே கல்யாணம் செய்து வச்சாலும் வச்சிடுவாங்க, ஏன்னா இந்த கல்யாணமே அவங்க ஏற்பாடு தான்," என்று பதட்டமாக ஆரம்பித்து வருத்தத்தோடு கூறி முடித்தாள்.

"அதான் இப்போ உனக்கும் யாஷ்க்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சே, நீ மேஜர் தானே, நீ யாரை கல்யாணம் செய்துக்கணும்னு உனக்கு உரிமை இருக்கு பேட்டீ, அப்புறம் என்ன தைரியமா உன்னோட வீட்டுக்கு போய் விஷயத்தை சொல்லலாமே," கிஷன் கூற,

"உங்களுக்கு சுதன் லால் பத்தி தெரியாது. அவன் ஏதாவது பிரச்சனை செய்தாலும் செய்வான். இப்பவே கையோடு என் மொபைலை கொண்டு வந்துட்டேன். அதை சுவிட்ச் ஆஃப் செய்து வச்சிருந்தாலும் கூட இப்போ தான் எப்படி வேணும்னாலும் மொபைல் வச்சு நம்ம இருக்கும் இடத்தை கண்டுப்பிடிக்கிறாங்களே, அப்படி கண்டுப்பிடிச்சு வந்துடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு." என்று அவள் கவலையோடு கூறினாள்.

"பிரச்சனையை கண்டு எத்தனை ஓடி ஒளிய முடியும், ஒருநாள் அதை சந்திச்சு தானே ஆகணும், இந்த மொபைலை வச்சு உன்னை கண்டுப்பிடிச்சா பிடிக்கட்டும், அப்போ அதை பார்த்துக்கலாம், வேணும்னா இப்போ உன்னோட பப்பாக்கு மட்டும் நீ இங்க இருக்கறதை சொல்லேன்."

"இல்ல பப்பா, அவருக்கு தெரிஞ்சா அவரால அம்மாக்கிட்ட சொல்லாம இருக்க முடியாது. எனக்கு இப்போதைக்கு ரெண்டுப்பேர்க்கிட்டேயும் பேச முடியாது. நீங்க எனக்கு உதவி செய்வீங்கன்னா, புதுசா ஒரு சிம் மட்டும் வாங்கிக் கொடுங்க,"

"சரி பேட்டீ, உனக்கா எப்போ தோனுதோ அப்போ உங்க வீட்டுக்கு பேசு. சரி புது சிம் மட்டுமில்ல, உனக்கு தேவையான மாத்திப் போட்டுக்க ட்ரஸ்ல்லாம் வாங்கணும், இந்த ட்ரஸ்ஸோட நீ கடைக்கு வர முடியாது. உனக்கு ஆரத்தி எடுத்த பக்கத்து வீட்டுக்காரங்களை அனுப்புறேன். உனக்கு என்ன தேவையோ சொல்லு. வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க," என்று அவர் சொல்லிவிட்டு செல்ல, அவரை அவள் நன்றியோடு பார்த்தாள்.

"ஏதாவது சாப்பிட்றீயா?" யாஷின் குரலில் நடப்புக்கு வந்தாள்.

அவள் சோர்வாகவும் ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதும் தெரியவே, "காஃபி ஏதாச்சும் வாங்கிட்டு வரட்டுமா? சாப்பிட்றீயா?" என்று அவன் கேட்க,

"இல்ல வேண்டாம், அதிலும் இங்க ஷிப்ல எல்லாமே அதிக விலை வச்சு விப்பாங்க, அதனால வேண்டாம்," என்று அவள் மறுத்தாள்.

'என்ன இவ வசதியான வீட்டு பெண்ணா இருக்கும்னு மணீஷ் சொன்னான். வெளிநாட்டில் படிச்சேன்னு இவ சொன்னதை வச்சு பார்த்தா மணீஷ் சொன்னது போல தானோன்னு நானும் நினைச்சேன். ஆனா இவ என்னடான்னா காசுக்கு பார்க்கிறா,' என்று யோசித்தவனுக்கு தெரியவில்லை. அவள் அவனுக்காக தான் பார்க்கிறாள் என்று,

அவன் சிந்தனையை அறியாதவளாக, "இந்தாங்க நீங்க ஷிப்க்கான டிக்கெட் செக் செய்ய போகும்போது நான் பிஸ்கட் வாங்கி வச்சேன். சாப்பிடலாம்," என்று தன் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுக்க,

"கூட ஒரு காஃபி குடிச்சா நல்லா இருக்கும், காசு அதிகமாக இருந்தால் என்ன? பரவாயில்லை," என்றவன், எழுந்து காஃபி வாங்க சென்றான்.

கப்பல் ஹேவ்லாக் தீவை அடைந்ததும், இருவரும் வெளியே வர, அங்கும் அவர்களுக்காக பெயர் பலகையை வைத்துக் கொண்டு ஓட்டுநர் காத்துக் கொண்டிருந்தார். அவர்கள் காரில் தன் உடமைகளை வைத்துவிட்டு ஏறி அமர்ந்ததும் கார் அவர்கள் தங்கவிருக்கும் ரெசார்ட்டை நோக்கி சென்றது.

அவர்கள் தங்கவிருந்த ரெசார்ட் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது. தனித்தனி வீடு போல் அமைந்திருந்த அந்த ரெசார்ட்டின் அறைகளில் ஒவ்வொன்றிலும் கீழிரண்டு, மேலே இரண்டு என்று நான்கு அறைகள் இருந்தது. ஒவ்வொரு அறையிலிருந்தும் கடற்கரை தெரிவது போல் கண்ணாடி பதித்த சுவர் அமைக்கப்பட்டிருந்தது.

அவர்களுக்கு மேலே இருக்கும் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டிருக்க, ஏற்கனவே அதற்கான பணமெல்லாம் செலுத்தியிருந்ததால், அதற்கு பின்னான சில விதிமுறைகளை முடித்துக் கொண்டு இருவரும் தங்களின் அறைக்குச் சென்றனர்.

நவீன வசதிகளோடு இருந்த அந்த ஆடம்பரமான அறையை பார்த்து யாஷ் வாயை பிளந்தான். சுவருக்கு பதில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியே கடற்கரை தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு கதவை திறந்துக் கொண்டு சென்றால் அங்கே பால்கனியும் இருந்தது. குளியலறையும் நவீன வசதிகளோடு இருந்தது.

அப்படிப்பட்ட இந்த அறைக்கு ஒருநாள் வாடகை எவ்வளவு இருக்கும்? என்று அவன் யோசித்த நேரம், அங்கே அவர்களது உடமைகளை கொண்டு வந்து வைத்த பணி செய்பவரிடம் அறை வாடகையை அவன் விசாரிக்க, அந்த பணி செய்பவன் ஒருநாளுக்கு எட்டாயிரம் என்று சொல்லிவிட்டு செல்லவும், யாஷ்க்கு மயக்கம் வராத குறைதான், உடனே தன் நண்பனை அலைபேசியில் அழைத்தான்.

உடனே அழைப்புச் சென்று கபிலனும் அதை எடுக்க, "கபில், இந்த ரூம்க்கு ஒருநாளைக்கு எட்டாயிரம் வாடகையாமே? எதுக்குடா இவ்வளவு செலவு செய்த?" என்று யாஷ் கேட்க, கதவைத் திறந்து பால்கனி வழியே கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்துவிற்கும் அவன் பேசுவது கேட்டது.

அலைபேசியின் மறுமுனையில், "ஹே இது என்னோட மேரேஜ் கிஃப்ட் யாஷ், அப்புறம் நீயேன் அதையெல்லாம் கேர் செய்ற? ஜாலியா எஞ்சாய் செஞ்சுட்டு வா," என்று கபிலன் கூற,

"டேய் நீயும் என்னைப் போல மிடில் கிளாஸ் பேமிலி தானடா, அப்படியிருக்க இவ்வளவு செலவு செய்து ட்ரிப் ஏற்பாடு செய்யணுமா? எதுக்குடா இதெல்லாம்," என்று யாஷ் திருப்பிக் கேட்டான்.

"யாஷ், 3 நாள் தானடா ஹேவ்லாக்ல நீங்க இருக்கப் போறீங்க, அப்புறம் 2 நாள் போர்ட் பிளேயர்க்கு வந்துடுவீங்க, அங்க ரூம்க்கு மட்டும் தான் கொஞ்சம் செலவு. மீதியெல்லாம் நார்மல் தான்,

நீ இதைவிட எனக்கு அதிகமாக செய்திருக்க, ஃப்ரண்ட்ஸ்க்குள்ள இதெல்லாம் எதுக்கு பார்த்துக்கிட்டு, இதையெல்லாம் கேட்டா ரித்து என்ன நினைப்பாங்க, நீ போயிருப்பது ஹனிமூன் டா. அதிலும் உங்க ரெண்டுப்பேருக்கும் ஒருத்தரையொருத்தர் இன்னும் தெரிஞ்சு வச்சிக்கல, அதனால ரித்துவோட நல்லா பேசி பழகப் பார். அதைவிட்டுட்டு தேவையில்லாததையெல்லாம் யோசிக்காத," என்றான்.

இவர்கள் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்துவிற்கோ யாஷ் புதியவனாக தெரிந்தான். முன்பு பார்த்தபோது இவ்வளவு பொறுப்புள்ளவனாக யாஷ் அவளுக்கு அறிமுகமில்லை. இப்போதோ இப்படி பார்த்து பார்த்து செலவு செய்பவனை பார்க்கும்போது வியப்பாக இருந்தது. அதிலும் அவன் இப்போது வேலையில்லாமல் இருப்பது வேறு தெரிந்துக் கொண்டாள். அதுவே அவனை செலவு செய்ய யோசிக்க வைக்கிறது என்பதையும் புரிந்துக் கொண்டாள். அதற்கான தான் கப்பலில் கூட எதுவும் வாங்கி தர வேண்டாமென்று சொல்லிவிட்டாள். இந்த தேனிலவு பயணத்திற்கு கிளம்புவதற்கு முன்பு கூட அவனை சம்மதிக்க வைக்க கிஷனும் கபிலனும் மிகவுமே கஷ்டப்பட்டனர். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தப்படி அவள் கடலை வெறித்துப் பார்த்தப்படி இருந்தாள்.

தேனன்பு தித்திக்கும்..

கதைப் பற்றிய கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பகிரவும்,

கருத்து திரி

ReplyQuote
Posted : 02/03/2020 2:29 pm
Sudhar liked
Chithra V
(@chithra-v)
Eminent Member

திகட்டாதே தேனன்பே - 6

திருமணம் முடிந்த மறுநாள் ரித்து அறையிலேயே முடங்கியிருக்க, அப்போதுதான் கபிலன் யாஷை பார்க்க வீட்டிற்கு வந்தான். திருமணம் நடந்த நாளன்று கபிலனுக்கு ஒரு முக்கியமான வேலை வந்துவிடவே வர முடியாததால், அன்று வந்திருந்தான். அவன் வந்த நேரம் யாஷ் வீட்டில் இல்லை. கிஷன் வீட்டு வேலையில் இருக்க, அவனை பார்த்ததும், "அடடே வா வா கபிலா, எப்படியிருக்க?" என்று வரவேற்று விசாரித்தார்.

"நல்லா இருக்கேன் ப்பா," என்று அவருக்கு பதில் கூறியவன், "யாஷ் எல்லாம் சொன்னான் ப்பா, நீங்க எல்லாம் யோசிச்சு தான் முடிவெடுப்பீங்க, எனக்கு தெரியும், இருந்தாலும் நீங்க அந்த பொண்ணு விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்களோன்னு தோனுது ப்பா." என்று சொல்ல,

"எனக்கு யாஷ் வாழ்க்கையில் அக்கறை இல்லைன்னு நினைக்கிறீயா கபிலன். ஒருவேளை அவனுக்கு முக்தாவை கல்யாணம் செய்து வச்சிருந்தா கூட அவன் சந்தோஷமா வாழ்வானான்னு சந்தேகம் இருந்திருந்திருக்கும், ஏன்னா நானே கொஞ்சம் குழப்பத்தோடு தான் அந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்தேன். ஆனா ரித்து விஷயத்தில் எனக்கு எந்த குழப்பமுமில்ல, அந்த பொண்ணோட யாஷ் வாழ்க்கை நல்லா இருக்கும்," என்று அவர் உறுதியாக கூறினார்.

"நீங்க சொன்னா சரி தான் ப்பா, ஆனால் அந்த பொண்ணோட குடும்பத்தில் யாராவது ஏதாவது பிரச்சனை செய்தா, என்ன செய்றது?"

"பிரச்சனை இந்நேரம் வந்திருக்கணுமே, இதுவரையில்லை. இனியும் வராதுன்னு நம்புவோம், வந்தாலும் அந்த பொண்ணு இப்போ யாஷோட மனைவி. அவங்களால ஒன்னும் செய்ய முடியாது."

"எல்லாம் நல்லதா நடந்தா சந்தோஷம் தான் ப்பா."

"எல்லாம் நல்லதா தான் நடக்கும் கபிலன். அதுக்கு நம்மளும் முயற்சி எடுக்கணும், யாஷ்க்கிட்ட என்னோட முடிவை சொன்னதும் சரின்னு ஏத்துக்கிட்டான். ஆனா என்கிட்டேயும் ரித்துக்கிட்டேயும் முகத்தை திருப்பிக்கிட்டு இருக்கான். ஒரு ஃப்ரண்டா நீதான் அவனுக்கு புரிய வைக்கணும்,"

"புரியுது ப்பா. நான் அவனோட பேசறேன். அதுவுமில்லாம அவன் கல்யாணத்துக்காக சர்ப்ரைஸா ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன்."

"அப்படியா? என்ன கபிலன் அது?"

"அந்தமானுக்கு ஹனிமூன் ட்ரிப் ப்பா. அவன் ஆக்ஸிடெண்ட் ஆகி வீட்ல இருந்தப்ப, ஆஃபிஸ்ல நாங்கல்லாம் அந்தமான் போனோமில்ல, அவனை விட்டு போக எனக்கு மனசேயில்லை. ஆனா அவன் தான் கேட்கல, நீ எனக்காக போகாம இருக்காத, போன்னு சொல்லி கட்டாயமா அனுப்பி விட்டான். அதான் அவன் மேரேஜ் கிஃப்ட்டா இந்த ப்ளான் போட்டு வச்சேன். ரெண்டுப்பேரும் ஹனிமூன் போனா ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்க சான்ஸ் இருக்கு ப்பா."

"நீ சொல்றது சரிதான் கபிலன். ஆனா யாஷை நம்பி அந்த பொண்ணை அனுப்ப பயமா இருக்கே, கோபத்தில் அவன் அவளை அடிச்சு வச்சிட்டா என்ன செய்றது?"

"அப்பா உங்களுக்கு யாஷை பத்தி தெரியாதா? கோபமெல்லாம் 2 நாளுக்கு மேல அவன்கிட்ட தங்குமா? அதிலும் தனியா ஒரு பெண்ணை கூட்டிட்டு போறவன் பொறுப்பில்லாம நடந்துக்க மாட்டான் ப்பா. என்ன ஹனிமூன் போக அவனை சம்மதிக்க வைக்கணும், ஏன்னா நாளை மறுநாளே ரெண்டுப்பேரும் கிளம்ப வேண்டியிருக்கும், நான் முக்தாவோட அவன் கல்யாணம் நடக்க இருந்ததால உடனே அவங்க ஹனிமூன் போனா நல்லா இருக்கும்னு ப்ளான் போட்டுட்டேன். நல்லவேளை சர்ப்ரைஸ் ப்ளான் என்பதால், ஒரு கப்பிள்னு சொல்லி மட்டும் தான் ஏற்பாடு செய்து வச்சிருக்கேன். இனிதான் அவங்களுக்கான டிக்கெட்ஸ்ல்லாம் ஏற்பாடு செய்யணும், அதனால அவனை சம்மதிக்க வைக்கணும் ப்பா,"

"ரெண்டுப்பேரும் ஹனிமூன் போனா ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிப்பாங்கன்னா, நானே அவனை சம்மதிக்க வைக்கிறேன். நீயும் பேசு." என்றவர்,

"இன்னும் யாஷோட மனைவியை நீ பார்க்கல இல்ல, இரு கூப்பிட்றேன்." என்றவர், "ரித்து பேட்டீ," என்று குரல் கொடுக்க,

"ஹான் பப்பா," என்றப்படி ரித்து தனது அறையிலிருந்து வந்தாள்.

புதிதாக ஒருவர் கிஷனுடன் அமர்ந்திருப்பதை பார்த்து தயக்கத்துடன் அவர் அருகில் வந்து அவள் நிற்கவும், "பேட்டீ, இது கபிலன். நம்ம யாஷோட பெஸ்ட் ஃப்ரண்ட். ரெண்டுப்பேரும் ஒரே கம்பெனியில் தான் வேலைப் பார்த்தாங்க," என்று கிஷன் அவனை அறிமுகப்படுத்தி வைக்க,

'வேலைப் பார்த்தாங்களா? அப்போ இப்போ ஒன்னா வேலைப் பார்க்கலையா?' என்று மனதிற்குள் நினைத்தப்படி, "நமஸ்தே பய்யா." என்று அவனை கைக்கூப்பி வணங்கினாள்.

கபிலனுக்குமே அவளைப் பார்க்கும்போது தப்பாக ஏதும் தோன்றவில்லை. யாஷிற்கு பொருத்தமான ஜோடி என்றுதான் நினைத்தான். ஆனாலும் அவளைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று யாஷ் அலைபேசியில் கூறியிருந்ததால் இவளோடு யாஷ் கொஞ்சம் கவனமாகவும் இருக்க வேண்டுமென்று மனதில் அவனுக்கு ஒரு குழப்பம் இருக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெறுமனே அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

"பேட்டீ, கபிலனுக்கு முக்கியமான ஒரு வேலை வந்ததால் அவனால நேத்து உங்க கல்யாணத்துக்கு வர முடியல, அதான் இப்போ பார்க்க வந்திருக்கான். அதுமட்டுமில்ல யாஷ்க்கு என்ன மேரேஜ் கிஃப்ட் கொடுக்கப் போறான் தெரியுமா? உங்க ரெண்டுப்பேரையும் ஹனிமூன்க்கு அந்தமான் அனுப்பப் போறான்." என்று கிஷன் மகிழ்ச்சியாக கூற,

"ஹனிமூனா?" என்று அவள் குழப்பத்தோடு கேட்டாள்.

"ஹான் பேட்டீ, அந்தமானுக்கு போகப் போறீங்க, சர்ப்ரைஸ் கிஃப்ட்னு எல்லாம் ரகசியமா திட்டம் போட்டு வச்சிருக்கான்." என்று அவர் சிரித்தப்படி சொல்ல,

'யாஷிற்கும் முக்தாவிற்குமான திருமணத்திற்காக தான் இந்த சர்ப்ரைஸ் ப்ளான் இருக்குமென்று நினைத்தவள், "பப்பா, இந்த ஹனிமூன் ப்ளான்க்கு கண்டிப்பா யாஷ் கோபப்படுவாங்க, அதனால அதெல்லாம் வேண்டாம்," என்று அதை மறுத்தாள்.

"இப்படியே அவன் கோபப்படுவான்னு நீ ஒதுங்கியே இருந்தா, அப்போ எப்போ தான் நீங்க ஒன்னா சந்தோஷமா வாழறது. எது நடந்தாலும் பார்த்துக்கலாம்னு தானே தைரியமா அவனை கல்யாணம் செய்துக்கிட்ட, இப்போ இப்படி ஒதுங்கினா எப்படி?" கிஷன் கேட்க,

"அந்த கோபம் யாஷ்க்கு இன்னுக் குறையல, அதுக்குள்ள ஹனிமூன் போகணும்னு சொன்னா யாஷ்க்கு இன்னும் கோபம் தானே வரும், அதுக்கு தான் சொல்றேன் பப்பா, இதெல்லாம் இப்போ வேண்டாம்," என்று மீண்டுமே அதை மறுத்தாள்.

"யாஷை சம்மதிக்க வைக்க வேண்டியது எங்க பொறுப்பு சிஸ்டர். அதனால நீங்க தயங்காதீங்க, அதுவுமில்லாம யாஷ் கோபமெல்லாம் ரொம்ப நாள் இருக்காது பயப்படாதீங்க, ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்க தான் இந்த ஹனிமூன் ட்ரிப், அதனால ஜாலியா ட்ரிப்பை எஞ்சாய் செய்துட்டு வாங்க," என்று கபிலன் கூற, பதிலுக்கு ரித்து சங்கடத்தோடு புன்னகைத்தாள்.

அந்தநேரம் யாஷ் வீட்டுக்கு நுழைந்தவன், "வாடா கபில்," என்றப்படியே அருகில் வர, இருவரின் நலம் விசாரிப்புக்குப் பின், 

"யாஷ், அப்புறம் முக்கியமான விஷயம் டா. உங்க மேரேஜ் கிஃப்ட்டா நீங்க ரெண்டுப்பேரும் அந்தமான்க்கு ஹனிமூன் போக ஏற்பாடு செய்திருக்கேன். ஜாலியா போய் எஞ்சாய் செய்துட்டு வரீங்க, சரியா?" என்று கபிலன் கூற,

"டேய் எதுக்குடா இதெல்லாம்? வேலைவெட்டி இல்லாம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே தப்பு. இதில் இந்த ஹனிமூன் தான் முக்கியமா? அதுவும் எனக்கு நடந்த கல்யாணத்துக்கு, இதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. இப்படி லூசுத்தனமா ஏதாவது செய்யாத," என்று யாஷ் சலிப்போடு கூறினான்.

'யாஷ்க்கு இப்போ வேலையில்லையா? அதான் அடிக்கடி சிடுசிடுக்கிறாங்களா?' ரித்து யோசித்தப்படி நின்றிருக்க,

"ஹே உனக்கு நடந்த ஆக்ஸிடெண்டால தானடா உன்னை வேலையை விட்டு எடுத்தாங்க, சொல்லப்போனா உன்னைப் போல ஒரு நல்ல ஸ்டாஃபை அந்த கம்பெனி இழந்துடுச்சு, சீக்கிரமே உனக்கு நல்ல வேலை கிடைக்கப் போகுது, அப்புறம் ஏன் நீ இப்படி பேசற?" என்று கபிலன் யாஷ்க்கு சம்மதம் கூறினான்.

'அய்யோ யாஷ்க்கு ஆக்ஸிடெண்ட் வேற நடந்துச்சா? பெரிய ஆக்ஸிடெண்ட்டா? ஒன்னும் பிரச்சனை ஆகியிருக்காதே? பப்பாக்கிட்ட அப்புறம் அதைப்பத்தி கேட்கணும்,' என்று ரித்து மனதில் பேசிக் கொண்டிருக்க,

"ஹே வேலை கண்டிப்பா கிடைக்கும் கபில், அதில் ஒன்னும் பிரச்சனையில்லை. ஆனா ஹனிமூன் போக செலவை யோசிச்சியா? எதுக்குடா இதெல்லாம்?" என்று மீண்டும் யாஷ் கபிலனைப் பார்த்துக் கேட்டான்.

"டேய், இது என்னோட கிஃப்ட்னு முன்னமே சொல்லியிருந்தேனே ஞாபகம் இல்லையா? அங்க எல்லாமே அரேஞ்ச் செய்தாச்சு, இப்போதைக்கு உங்க பேர்ல ஃப்ளைட் டிக்கெட், அப்புறம் ரூம் புக் செய்றது மட்டும் தான் பாக்கி. அதுவும் முன்னமே ரெடி தான், இது சர்ப்ரைஸ் என்பதால இப்போ உங்க பேர்ல எடுக்கணும் அவ்வளவுதான், அதனால அங்க கைச்செலவுக்கு மட்டும் பணம் கொண்டு போனா போதும், அதுக்கும் நானே கொடுத்து அனுப்புறேன். நீ வேலை கிடைச்சதும் மெதுவா கொடுத்தா போதும்," என்று கபிலன் கூற, யாஷ் அப்போதும் மௌனமாகவே இருக்க,

"யாஷ் உன்னோட கல்யாணத்துக்கு கிஃப்ட்னு கபிலன் முன்னமே இந்த ஏற்பாடு செய்திருக்கான் போல, அதை இப்போ கேன்சல் செய்தா அவனுக்கு நஷ்டம் தானே, அதனால் நீங்க போயிட்டு வாங்கடா, ஒருவிதத்தில் நீங்க ஹனிமூன்க்கு போறதும் நல்லதுக்கு தான், இப்படியே ரித்துக்கிட்ட எத்தனை நாள் முகத்தை திருப்பிக்கிட்டு போவ, நீங்க ரெண்டுப்பேரும் உங்க வாழ்க்கையை வாழ வேண்டாமா? அதனால இந்த ஹனிமூன்க்கு நீ ரித்துவை கூட்டிட்டு போகணும்," என்று கிஷன் கூறினார்.

"என்னால முடியாது பப்பா, நீங்க சொன்னீங்கன்னு தான் இவளை இங்க இருக்க வச்சிருக்கேன். மத்தப்படி இவளோட வாழ எனக்கு சுத்தமா விருப்பமேயில்லை. எல்லாத்துக்கும் என்னை நீங்க கட்டாயப்படுத்த முடியாது பப்பா." என்று அவனும் பதிலுக்கு கோபமாக பேச,

"நான் எங்கே உன்னை கட்டாயப்படுத்தினேன். இதுதான் என்னோட முடிவு. உன்னோட முடிவை நீ சொல்லுன்னு சொன்னப்போ, நீ ஒன்னும் மறுக்கலையே, அதனால தான இந்த பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். இப்போ நீ இப்படி பேசினா என்ன அர்த்தம்?

நீ இந்த பொண்ணோட வாழ முடியாதுன்னா சொல்லு அவளை அனுப்பி விட்டுட்றேன். ஆனா அப்புறம் நானும் இந்த வீட்ல இருக்க மாட்டேன். ஏன்னா நான்தானே ரித்துவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அதனால அந்த பொண்ணை என்னால தனியா விட முடியாது. எதுவா இருந்தாலும் இப்போ முடிவா சொல்லு." என்று கிஷன் ஒரு உறுதியோடு கேட்க,

அவர் சொன்னதை செய்வார் என்பது அவர் பேச்சில் புரிய, "இப்போ என்ன ஹனிமூன் போகணும் அதானே, போறேன். ஆனா நான் இவளை கூட்டிட்டு ஹனிமூன் மட்டும் தான் போக முடியும், ஆனா அவளோட வாழ வைக்க நீங்க கட்டாயப்படுத்த முடியாது. அதை நல்லா புரிஞ்சிக்கோங்க," என்றவன் கோபத்தோடு அங்கிருந்து சென்றுவிட,

"அதான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் பப்பா, இருந்தாலும் நீங்க யாஷ்க்கிட்ட இவ்வளவு கடினமா பேசியிருக்க வேண்டாம்," என்று ரித்து வருத்தமாக பேசினாள்.

"அதெல்லாம் அவனுக்கு இப்படி அதிரடி ட்ரீட்மெண்ட் தான் வேலைக்கு ஆகும் சிஸ். அப்பா சரியா தான் செஞ்சுருக்கார். நீங்க கவலைப்படாதீங்க," என்று கபிலன் அதற்கு சமாதானம் கூற,

"இருந்தாலும் கொஞ்சம் பயமா இருக்கு," என்று சொன்னவள், "பய்யா, நான் உங்களை விட சின்னவ தானே, என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க," என்றாள்.

"சரி ரித்து. அப்புறம் நான் உங்களுக்கான டிக்கெட்ஸ்க்கு ஏற்பாடு செய்திட்றேன். உன்க்கிட்ட ஆதார்கார்ட், பாஸ்போட் இப்படி ஏதாவது இருக்கா, ஐடி ப்ரூஃப்க்கு கேட்பாங்க," என்று சந்தேகத்தோடு கேட்டான். ஏனென்றால் அவளைப் பற்றி இதுவரை ஒன்றுமே தெரியாதே, அவள் வீட்டை விட்டு வரும்போது அதையெல்லாம் கொண்டு வந்தாளோ இல்லையோ? என்ற சந்தேகமும் இருக்கவே,  அவன் தயக்கத்தோடு கேட்க,

நல்லவேளை பூனாவிலிருந்து சென்னை வந்த போது இது எல்லாம் தேவைப்படும் என்று தன் கைப்பையில் வைத்திருந்தாள். பார்லரிலிருந்து வரும்போது கைப்பையை தன்னோடு எடுத்து வந்ததும் ஒருவிதத்தில் நல்லதாகிவிட, "இருங்க எடுத்துட்டு வரேன்." என்று சொல்லி, தன் கைப்பையிலிருந்து எடுத்து வந்து அவளது ஆதார்கார்டை கொடுக்க, அதில் அவள் சொன்ன பெயர் தான் இருந்தது. அதுவே இவள் தன்னைப்பற்றி ஓரளவு உண்மையை தான் கூறியிருக்கிறாள் என்பதை கபிலனுக்கு புரிய வைத்தது.

கபிலன் சென்றதும் ரித்து கிஷனை பார்க்க, "யாஷ் பேசினதுக்கு வருத்தப்படாத பேட்டீ, அவனுக்கும் கொஞ்சம் கோபம் இருக்குமில்ல, ஆனா எல்லாம் ஹனிமூன் போயிட்டு வந்தா சரியாகிடும், நான் சொல்றது நடக்கும் பாரு." என்று சொல்லிவிட்டு சென்றார்.

கபிலன் வீட்டிலிருந்து வெளியே வர யாஷ் வெளியில் தான் நின்றிருந்தான். "என்னடா அப்பாக்கிட்ட இப்படி தான் பேசுவியா?" என்று கபிலன் அவனிடம் கேட்க,

"பார்த்தல்ல யாருன்னே தெரியாத அவளுக்காக அவர் வீட்டை விட்டு போவாராம், இப்படி பேசினா கோபம் வராதா?" என்று கோபமாக பேசினான்.

"அவர் ரித்துவை யாரோவா பார்க்கல, உன்னோட மனைவியா பார்க்கிறார். ஒரு அப்பாவா உன்னோட வாழ்க்கை சரியாகணும்னு நினைக்கிறார். அது தப்பா?

இங்கப்பாரு ஹனிமூன் போனா கணவன் மனைவிக்குள்ள எல்லாம் நடக்கணும்னு அவசியமா என்ன? அப்பாக்காக ரித்துவை ஏத்துக்க முடிவு செய்துட்ட, அவளைப் பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டாமா? இந்த ஹனிமூன் ட்ரிப் அதுக்கு உதவுமில்ல,"

"ஆமாம் அவ முதலில் சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பாளா?"

"நீ கேட்டீயா? இதுவரை அவக்கிட்ட பேசவேயில்லை. அப்புறம் எப்படி தெரிஞ்சிப்ப, அப்பா அவளோட பேசியிருக்கார்னு நினைக்கிறேன். அவரை பொறுத்தவரை அவ நல்லப் பொண்ணா இருப்பான்னு தான் நம்பறார். எனக்கும் அப்படித்தான் தோனுது டா. இங்கப்பாரு ஐடி ப்ரூஃப் கேட்டதும் ஆதார்கார்டை டக்குன்னு எடுத்து கொடுத்திருக்கா, இதில் அவ சொன்ன பேர் தான் இருக்கு. அட்ரஸ் கூட இருக்குடா. தப்பான நோக்கத்தில் வந்தா தயங்காம இதை கொடுப்பாளா? 

என்னைக் கேட்டா அவக்கிட்ட பேசினாலே அவளைப்பத்தி சொல்லிடுவா. முறைப்படி நடந்த கல்யாணம் ஒன்னுமில்லாம போகக் கூடாதுன்னு அப்பா நினைக்கிறார். நீயும் அதுக்கு உன்னால ஆன முயற்சியை செய்றதில் என்ன தப்புடா. இதுவே இப்படியில்லாம நல்லவிதமா ரித்து உன்னோட வாழ்க்கையில் வந்தா அவளை உன்னால மிஸ் செய்திட முடியுமா? அப்படி யோசிச்சுப் பாரு. போ அந்தமான் டூரிசம் போய் உங்க டிக்கெட் கன்ஃபார்ம் விஷயமா பேசிட்டு வரலாம், உன்னோட ஐடி ஃப்ரூஃபை எடுத்துட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்." என்று கபிலன் சொல்ல, சின்ன தலையசைவுடன் அவன் வீட்டிற்குள் சென்றான்.

தன் ஆதார் கார்டை எடுக்க அவன் தன் அறைக்குச் செல்ல, அங்கே ரித்து அமர்ந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் எழுந்து அமர, கபிலனிடம் ஹனிமூன் செல்வதற்கு ஒத்துக் கொண்டாலும், அவளைப் பார்த்து, "கபிலனும் பப்பாவும் நம்ம ரெண்டுப்பேரும் அந்தமானுக்கு ஹனிமூன் போகணும்னு சொன்னதும், நீயும் சரி சரின்னு தலையாட்டிட்டீயா?" அவன் கோபத்தோடு கேட்க,

"நான் எங்க சரின்னு சொன்னேன். உங்களை கேட்கணும்னு தானே சொன்னேன். உங்களுக்கு விருப்பம்னா போலாம்னு சொன்னேன். இப்போதும் உங்களுக்கு வேண்டாம்னா போக வேண்டாம்," என்று அவள் பொறுமையாக பதில் கூறினாள்.

"எனக்கு விருப்பம் இருந்தா மட்டும் நீ என்னோட வந்துடுவியா? ஆமாம் எந்த தைரியத்தில் நீ என்னோட அந்தமானுக்கு ஹனிமூன் வர சம்மதிச்ச? உன்மேல எனக்கு இருக்க கோபத்தில் நான் உன்னை தனியா கூட்டிட்டு போய் கடலில் தள்ளிவிட்டு வந்தாலும் வந்துடுவேன் பார்த்துக்க," அவன் கோபத்தோடு சொல்ல,

"உங்களுக்கு என் மேல எவ்வளவு கோபம் வேணும்னாலும் இருக்கலாம் யாஷ், ஆனா எப்போதும் நீங்க அப்படி செய்ய மாட்டீங்க, உங்களால செய்யவும் முடியாது." என்று அவள் தீர்க்கமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஆனால் அவளது பதிலில் யாஷ் தான் பே என்று விழிக்க வேண்டியதாகி போனது. கொஞ்சம் பயம் காட்டலாம் என்று பார்த்தால், என்னை நன்றாக தெரியும் என்பது போல் அவளது பேச்சு இருக்கிறதே என்று வியந்தும் போனான்.

மொத்தத்தில் திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் அவர்கள் தனியாக பேசியது என்றால் இந்த சில நிமிட பேச்சுக்கள் தான், அப்படியிருக்க யாஷின் தந்தை விடாப்பிடியாக அவர்கள் இருவரையும் அந்தமானிற்கு தேனிலவுக்காக அனுப்பி வைக்க நினைத்தார்.

இப்போது ரித்துவிற்கு அடுத்த சங்கடம் என்னவென்றால், மாற்றுடையாக கிஷன் எடுத்துக் கொடுத்த இரண்டு செட் உடைகளே இருக்க, இப்போது அந்தமான் செல்வதென்றால் இன்னும் சில செட் உடைகளும் மற்ற அத்தியாவசிய பொருட்களும் தேவைப்படும், ஆனால் அதை வாங்குவதற்கு பணம் வேண்டுமே? யாஷ் இப்போது தானே தனக்கு வேலையில்லாததையும் பணப் பிரச்சனையை பற்றியும் பேசினான். அப்படியிருக்க இந்த செலவுக்காக பணம் கேட்பதற்கு அவளுக்குச் சங்கடமாக இருந்தது.

இன்னும் சொல்லப் போனால் தன் கைப்பையில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் எல்லாமே இருக்கிறது. தன் அலைபேசியில் புது சிம் மாற்றுவதற்கு முன்பு தந்தைக்கு, "நான் கொஞ்ச நாளாவது உங்களை விட்டு ஒதுங்கியிருக்க நினைக்கிறேன் பப்பா, ப்ளீஸ் என்னை தேடாதீங்க," என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு பழைய சிம்மை எடுத்துவிட்டாள்.

அவரது பதிலை கூட தெரிந்துக் கொள்ள தோன்றவில்லை. அவர் தன்னை புரிந்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தது. கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலவு செய்தாலும் அதற்கு அவர் எதுவும் சொல்லமாட்டார் என்ற புரிதலும் இருந்தது. ஆனால் அதையும் மீறி அன்னை மேல் இருக்கும் காதலில் தன்னை தேட முயற்சித்தால், அதனால் தான் உபயோகிக்கும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் தான் இருக்குமிடத்தை கண்டுப்பிடிக்க நினைத்தால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது. அதனால் அதை உபயோகப்படுத்த வேண்டாமென்று முடிவு செய்தாள்.

ஆனால் இப்போது இந்த செலவுக்கு என்ன செய்வது? என்ற குழப்பத்தோடு கையை பிசைந்த போது தான் கையில் இருந்த மோதிரம் தட்டுப்பட்டது. உடனே கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியும் ஞாபகம் வர, இது இரண்டும் அவளுக்கு அவளுடைய தாதி வாங்கிக் கொடுத்தது. அதை என்றுமே கழட்டியதில்லை. இப்போதைக்கு இதை விற்று தேவையானதை வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவள் வரும்போதே கிஷன் அறைக் கதவை தட்டினார்.

"உள்ள வாங்க பப்பா," அவள் கூறவும் உள்ளே வந்தவர்,

"ரித்து பேட்டீ, அன்னைக்கு அவசரத்துக்கு ரெண்டு ட்ரஸ் தான் எடுத்தோம், இப்போ நீங்க அந்தமான் போக இன்னும் சில ட்ரஸ் அப்புறம் வேற ஏதாச்சும் தேவையானது வாங்கணுமில்ல, இந்தா இதில் பத்தாயிரம் பணமிருக்கு. கூடவே என்னோட டெபிட் கார்டும் கொடுக்கிறேன். உனக்கு என்ன தேவையோ அதை வாங்கிக்க," என்று பணத்தையுக் கார்டையும் அவளிடம் நீட்ட,

"உங்களுக்கு நான் நிறைய செலவு வைக்கிறேன் பப்பா, இப்போ தான் இதெல்லாம் வாங்கணும், அதுக்கு பணம் வேணும்னு யோசிச்சேன். சரியா நீங்க பணம் கொண்டு வந்து கொடுக்கறீங்க, ஆனா ஏற்கனவே கல்யாணத்துக்கு நிறைய செலவு செய்திருப்பீங்க, இதில் இந்த செலவு வேறயா? பேசாம இந்த செயினை வித்து கொடுக்கறீங்களா? நான் அதில் தேவையானதை வாங்கிக்கிறேன்." என்று அவள் செயினை கழட்டப் போக,

"பேட்டீ என்ன செய்ற நீ? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நீ இந்த வீட்டுப் பொண்ணு, யாஷோட மனைவி. எனக்கு மருமகளா இருந்தாலும், எனக்கு பேட்டீ மாதிரி தான், அதனால உனக்கு செலவு செய்றது எங்க கடமையில்லையா?" என்று கேட்டார்.

"இல்ல பப்பா, யாஷ்க்கு இப்போ வேலையில்லாத நேரத்தில் இதெல்லாம் அதிகப்படியான செலவு இல்லையா? அதான்," என்று அவள் தயங்கியப்படி சொல்ல,

"ஓ யாஷ் சொன்னதை வச்சி சொல்றீயா? இப்போ கொஞ்ச நாளா தான் அவனுக்கு வேலையில்லை. ஆனா சீக்கிரமா அவனுக்கு வேலை கிடைச்சிடும், அதுக்காக வீட்ல கஷ்டமான சூழ்நிலையெல்லாம் இல்ல, எனக்கு பென்ஷன் வருது. எங்க ரெண்டுப்பேருக்கு அதிகமா எவ்வளவு செலவு இருக்கப் போகுது. சொல்லப் போனா கல்யாண வேலையில் பாதி செலவு முக்தா அப்பாவோடது, அதையே நான் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன். ஆனா அவசரமில்ல, மெதுவா கொடுத்தா போதும், இப்போ உன்னோட செலவுக்கு மட்டுமில்ல, அங்க அந்தமான்ல உங்களுக்கு ஆகற செலவுக்கும் நானே பணம் தருவேன். கபிலன் கிட்டல்லாம் கேட்க வேண்டாம், உங்களுக்கு செய்றதில் எனக்கு சந்தோஷம் தான் புரியுதா? இப்படி டக்குன்னு நகையை கழட்ற பழக்கமெல்லாம் வேண்டாம் பேட்டீ, சரியா?"

"ம்ம் பப்பா, உங்களை போல ஒரு கேரக்டரை நான் பார்த்ததேயில்லை. உங்களுக்கு மருமகளா வந்தது என்னோட அதிர்ஷ்டம்." என்று அவள் சொல்லவும், அவர் புன்னகைத்தப்படி அங்கிருந்து சென்றுவிட்டார்.

உணர்ச்சிவசப்பட்டிருந்த நிலையில் யாஷ்க்கு நடந்த விபத்தைப் பற்றியோ, இல்லை முக்தாவிற்கும் அவனுக்குமிடையே உறவு எப்படி இருந்தது? அவனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இருந்ததா? என்று அவரிடம் கேட்க நினைத்ததையெல்லாம் ரித்து மறந்து போனாள். 

மறுநாள் அவளுக்கு தேவையானதை வாங்கவே நேரம் சரியாக இருந்தது. அன்றும் பக்கத்து வீட்டு பெண்மணியை தான் கிஷன் அவளுடன் அனுப்பி வைத்திருந்தார். ரித்து பொதுவாக எல்லா உடைகளையும் அணிவாள். ஆஸ்திரேலியாவில் சிலகாலம் ஒரு தமிழ் குடும்பத்தோடு தங்கியிருந்ததால் நன்றாக புடவை அணியவும் தெரியும், அதேபோல் மாடர்ன் உடைகளும் அணிவாள். அவர்களின் பாரம்பரிய உடைகளையும் அணிய அவளுக்கு பிடிக்கும், ஆனால் யாஷ்க்கு எப்படி உடை அணிந்தால் பிடிக்குமென்பது அவளுக்கு தெரியாததால் அவளுக்கு எப்படி உடை எடுக்க என்று தெரியாமல் விழிக்க, பக்கத்து வீட்டு பெண்மணியோ தேனிலவு பயணத்திற்காக உடை எடுக்க வந்திருப்பதால், அவர் விருப்பத்துற்கு ஏற்றது போல் அவளுக்கு எடுத்துக் கொடுக்க, அதையெல்லாம் உடுத்தினால் யாஷிற்கு பிடிக்குமோ? பிடிக்காதோ? என்று தெரியாததால், மறுக்க தோன்றாமல் அதையே வாங்கி கொண்டாள்.

மணமக்கள் இருவரும் தேனிலவிற்கு செல்வதை கேள்விப்பட்டு சோனாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. தான் ஒன்று நினைத்து செய்ய, அது வேறொன்றாய் முடிந்ததில் அவளுக்கு அவளை நினைத்தே கோபம் வந்தது. "உங்க பப்பாக்கு மூளை குழம்பிடுச்சா, யாருன்னே தெரியாத பெண்ணோட யாஷ் வாழணும்னு சொல்றாரு, ரெண்டுப்பேரையும் ஹனிமூன் அனுப்புறாரு. நம்மளை இப்படி ஹனிமூன் அனுப்பி வைக்கணும்னு அவர் என்னைக்காவது நினைச்சிருப்பாரா? சொந்த தங்கை மகளிடம் இல்லாத அக்கறை, யாருன்னே தெரியாத ஒருத்திக்கிட்ட காட்றாரு." என்று மணீஷிடம் சண்டைப் பிடித்தாள்.

"இங்கப்பாரு இது யாஷோட ஃப்ரண்ட் கபிலன் செய்ற ஏற்பாடு. அதுவுமில்லாம நாம ஹனிமூன் போலாமான்னு நம்ம கல்யாணம் முடிஞ்சு கேட்டேன். நீதானே வேண்டாம்னு சொன்ன, வேணும்னா இப்போக் கூட நாம எங்கேயாவது ஊருக்கு போலாம், பப்பாவும் நம்மள சந்தோஷமா தான் அனுப்பி வைப்பாரு." என்று மணீஷ் பதில் கூற,

"நான் எதுக்காக பேசிட்டு இருக்கேன். நீங்க எதைப்பத்தி பேசறீங்க?" என்று அதற்கும் கோபம் கொண்டவள்,

"அந்தப் பொண்ணு ஒரு தீவிரவாதியா கூட இருக்கலாமில்ல, எந்த தைரியத்தில் உங்க பப்பா இதெல்லாம்.செய்றாரு." என்று கேட்டாள்.

"ஒருத்தரோட நடவடிக்கையும் பேச்சும் வச்சே அவங்க எப்படின்னு பப்பா கண்டுப்பிடிச்சிடுவார். அவருக்கு எல்லாம் தெரியும், நீ தேவையில்லாம பயப்படாத," என்று அவன் சொல்லிவிட்டு போக,

அவளின் பயமே யாஷிற்கு நல்ல வாழ்க்கை அமைந்திடக் கூடாது என்பது தானே, அதிலும் ரித்து வசதியான வீட்டு பெண்ணாக இருப்பாள் என்று வேறு மணீஷ் முன்பே சொல்லியிருக்க, அதெல்லாம் சேர்ந்து யாஷிற்கு நல்லது நடக்கிறதே என்ற அவளுக்கு எரிச்சலை கொடுப்பது தெரியாமல் அவன் பேசிவிட்டு சென்றதில் கடுப்பானவள், அதை தடுப்பதற்கு வழியேதுமில்லாததால் இன்னும் கடுப்பும் எரிச்சலோடும் சுற்றிக் கொண்டிருந்தாள்.

இப்படி மற்றவர்களின் எண்ணங்கள் எதையும் பொருட்படுத்தாமல் மகன், மருமகளை தேனிலவிற்கு அனுப்பி வைத்துவிட்டே கிஷன் ஆசுவாசமானார். இப்படி இங்கு வருவதற்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்த்தவள், அப்படியே அறையிலிருந்து வெளியே வந்து கடற்கரைக்குச் சென்றவள், கடலைப் பார்த்தப்படி அங்கு போடப்பட்டிருந்த மரப்பலகை கொண்ட இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

தேனன்பு தித்திக்கும்..

கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பதிவிடவும்

கருத்துதிரி

 

ReplyQuote
Posted : 06/03/2020 6:24 pm
Sudhar liked
Chithra V
(@chithra-v)
Eminent Member

திகட்டாதே தேனன்பே 7

கட்டிலில் அமர்ந்து நண்பனிடம் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்த யாஷ் இயல்பாக திரும்பும்போது பால்கனியை பார்க்க அங்கே ரித்துவை காணவில்லை. 'இங்கு தானே இருந்தாள்? எங்கே சென்றிருப்பாள்?' என்பது போல் அவன் யோசிக்க, அப்போது தான் கண்ணாடி சுவர் வழியே அவள் கடற்கரையை நோக்கிச் செல்வது தெரியவும், அவள் மீது பார்வையை வைத்தப்படியே அவன் கபிலனிடம் பேசினான்.

சிறிதுநேரம் பேசியவன் அலைபேசி அழைப்பை அணைத்துவிட்டு வெளியில் பார்க்க இருட்டத் தொடங்கியிருந்தது. இதற்கு மேலும் அவளை தனியாக விடக் கூடாது என்பதால் அவனும் அறையை பூட்டிக் கொண்டு கடற்கரைக்குச் சென்றான்.

காலையிலிருந்து பயணம் செய்த அலுப்பு இருக்கவே முதலில் நன்றாக குளிக்க வேண்டும், அடுத்து சாப்பிட அங்கிருக்கும் உணவகத்திற்கு செல்ல வேண்டும், இந்த ரெசார்டில் உள்ள உணவகத்தில் பஃபே முறையில் தான் உணவுகள் வைத்திருப்பார்கள். மூன்றுவேளையும் அந்த நேரத்திற்கு என்ன மெனுவோ அதை எழுதி வைத்திருப்பார்கள். அதில் இல்லாதது ஏதாவது தேவையென்றாலும் முன்னமே நாம் அங்கே தேவையானதை தெரிவித்துவிட்டால் அங்கே சென்றதும் அதையும் சேர்த்து சாப்பிடலாம், இதெல்லாம் இப்போது தான் கபிலன் அலைபேசியில் சொல்லியிருந்தான். அதையெல்லாம் நினைத்தப்படி அவள் அருகில் சென்றான்.

அவன் வந்தது கூட தெரியாமல் அவள் ஏதோ யோசனையில் இருக்க, சில நொடிகள் அவள் கவனிப்பாள் என்று பார்த்தவன், அவள் கவனிக்கவில்லை என்றதும், "க்கூம்," என்று கணைத்து தன் வருகையை தெரியப்படுத்தினான்.

அவன் குரல் கேட்டு அவள் திரும்பிப் பார்க்க, "ம்ம் இருட்டப் போகுதே, குளிச்சு ஃப்ரஷ் ஆனா போய் சாப்பிடலாமே," என்று சொல்ல,

"நீங்க போய் முதலில் குளிங்க, நான் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு வரேன்." என்று அவள் கடலை வெறித்தப்படி கூறினாள்.

அவளை தனியாக விட்டு செல்ல மனமில்லாததால் அவனும் அப்படியே அங்கேயே மணலில் அமர்ந்துவிட்டான். இது இருவர் மட்டும் வந்திருக்கும் தனியான பயணம் என்பதால் அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டார்கள் தான், ஆனாலும் சகஜமாக உரையாடிக் கொள்ள முடியவில்லை. 'வந்திருப்பது ஹனிமூன், ஆனா இப்படி அவ ஒருபக்கமும் நான் ஒருபக்கமும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை தானா? ரொம்ப கஷ்டம் டா சாமி.' என்று அவனால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

தேனிலவிற்கு வந்தது மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காக மட்டுமில்லை. ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக் கொள்வதற்கும் தான், கபிலன் கூறியது இப்போது அவனுக்கு ஞாபகம் வர, அவளிடம் பேச்சுக் கொடுக்க நினைத்தான்.

"கொஞ்ச நேரம் கடல் அலையில் கால் நனைப்போமா?" என்று அவளிடம் அவன் கேட்க, பேசியது யாஷ் நெஹ்ராவா? என்று வியப்போடு திரும்பி பார்த்தாள். 

"எனக்கெல்லாம் கடல்க்கிட்ட வந்துட்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. ஜாலியா முழுக்க நனையும் அளவுக்கு விளையாடணும். எப்படியோ இன்னும் குளிக்கல இல்ல, விளையாடலன்னாலும் கொஞ்சம் நேரம் நிக்கலாமே, வர்றியா?" என்று அவன் கேட்க,

"எனக்கு இப்படி கடற்கரையில் உட்கார்ந்து அலையை ரசிக்க தான் பிடிக்கும், அதுவுமில்லாம எனக்கு தண்ணீரில் நிற்க பயம்." என்று அவள் கூறினாள்.

அதற்கு அவனோ, "சுத்தம். தண்ணீரில் நிற்க பயமா? இந்த பயத்தோடு நீ அந்தமானுக்கு வந்திருக்க, அதுவும் ஹனிமூனுக்கு, நல்லா போகப் போகுது நம்ம பொழுது அடுத்த 5 நாளும்," என்று சத்தமாக கூறவில்லை. வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டான்.

"ஏதாவது சொன்னீங்களா?" அவள் கேட்க,

"இல்ல, நான் ஒன்னும் சொல்லல, நீதான் ஏதாவது சொல்லணும்? ஏதாவது என்ன? உன்னைப்பத்தி சொல்லு. கல்யாணம் ஆகி ஹனிமூன்க்கே வந்துட்டோம், இன்னும் உன்னைப்பத்தி சொல்லாம எப்படி?" என்றுக் கேட்டான்.

அவளுக்கும் தான், அவள் யாரென்பதை அவனிடம் சொல்லிவிட ஆசை. சொன்னால் கண்டிப்பாக அவன் மகிழ்ச்சியடைவான் என்பது தெரியும், கண்டிப்பாக மனைவியாக ஏற்றும் கொள்வான். அதில் சந்தேகம் ஒன்றுமில்லை. ஆனால் அப்படி அவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவள் நினைக்கவில்லை. ஏன் இப்போதும் தான் தந்தைக்காக தன்னை ஏற்றுக் கொண்டான். ஆனாலும் தன்னை விரும்பி காதல் மனைவியாக தன்னை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவளுக்கு இருந்தது. அதில் தவறேதும் இல்லையே, இப்போதாவது அவன் மனதில் தனக்கென ஒரு காதல் இருக்கிறது என்றால் எப்படியிருக்கும்? 

அதனால் இப்போதைக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள கூடாது என்று அவள் நினைத்தாள். அவள் யாரென்பது தெரியாமலேயே அவன் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்று அவள் விரும்பினாள். ஒருபக்கம் இப்படி ஒரு எதிர்பார்ப்பு தவறோ? என்று கூட மனம் யோசித்தது. அவன் மனைவியான பின்பு இந்த எதிர்பார்ப்பு நியாயம் தானே என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு, 

"உங்கக்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல, ஆனா இப்போ வேண்டாமே, கொஞ்ச நாள் போகட்டும், கண்டிப்பா என்னைப்பத்தி சொல்றேன்." என்று அவள் தயக்கத்தோடு சொல்ல, யாஷிற்கு பயங்கரமாக கோபம் வந்தது.

தந்தை சொன்னதற்காக என்றாலும், இருவருக்கும் நடந்தது சடங்கு சம்பிரதாயப்படி நடந்த திருமணம் என்பதால், அவனுக்குமே அது தோற்றுவிடக் கூடாது என்ற எண்ணம் இருந்தது. அப்படியிருக்க அவளோடு தன் வாழ்க்கையை ஆரம்பிப்பதில் அவனுக்கு எந்த சங்கடமும் இல்லை. அதற்கு முன் அவளைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே, ஆனால் இன்னும் தன்னிடம் எதையும் சொல்ல வேண்டாமென்று அவள் நினைப்பது அவனுக்கு எரிச்சலை வரவைக்க, 

"சரி இருட்டிடுச்சு. 3 நாள் இங்க தானே இருக்கப் போறோம், அப்போ இப்படி வந்து உட்காரலாம், இப்போ வா." என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து முன்னே போக, அவன் குரலில் கோபம் இருந்ததோ என்று யோசித்தப்படியே அவளும் அவன் பின்னால் நடந்தாள்.

முதலில் ரித்து குளித்துவிட்டு ஒரு த்ரீ ஃபோர்த் பேண்டும், தொள தொள டீ சர்ட் அணிந்தப்படி வெளியே வந்தாள். அடுத்து சென்ற யாஷ் குளித்துவிட்டு அவனும் ஒரு டீஷர்ட்டும் ஷாட்ஸும் அணிந்திருந்தான். 

"சாப்பிட போகலாமா?" என்று அவன் கேட்கவும், அவளும் தலையாட்ட, இருவரும் அறையை பூட்டிக் கொண்டு உணவகத்திற்குச் சென்றனர்.

ஐந்து நிமிட நடைபயணத்திற்கு பிறகு அந்த உணவகம் இருக்கும் கட்டிடம் வந்தது. அதன் உள்ளே நுழையும்போதே, ஒருபக்கம் ரெஸ்ட்டாரண்ட் என்றும் அதற்கு எதிர்புறம் பார் என்றும் எழுதியிருக்க, அதைப் பார்த்ததும் யாஷ்க்கு திடீரென ஒரு யோசனை தோன்ற,

"ரித்து, நீ போய் சாப்பிட்டு ரூம்க்கு போ. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்றேன். இந்தா கீயை பிடி. நம்ம ரூம் நம்பர் தெரியுமில்ல?" என்றவன், அவள் ஏதோ கேட்க வந்தும் அதை கண்டுக் கொள்ளாமல் பார் என எழுதியிருந்த இடத்தின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்துவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. 'யாஷிற்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அய்யோ நான் பார்த்த யாஷ் அப்படி கிடையாதே? இப்போ குடிக்க போயிருக்காங்களே? போய் அதெல்லாம் வேண்டாம்னு தடுக்கவா? ஆனா அங்க நான் எப்படி போவது?' என்று யோசித்து கலங்கினாள்.

ஆனால் யாஷோ அவளை இப்படி கலங்க வைக்க வேண்டுமென்று தானே உள்ளே வந்தான். மற்றப்படி அவனுக்கு மதுப்பழக்கம் அறவேயில்லை. அவனைப் பற்றி ஒன்றும் அறியாமல் திருமணம் செய்ததுமில்லாமல், அவளைப் பற்றியும் கூறமாட்டேன் என்பவளை இப்படி தான் செய்ய வேண்டுமென நினைத்து அங்கேயே சிறிது நேரத்தை கடத்தினான்.

ஆனால் மதுப்பழக்கம் இல்லாமல் எவ்வளவு நேரம் தான் அங்கே அமர்ந்திருப்பது. அங்கிருப்பவர்கள் அவன் மது அருந்தாமல் அமர்ந்திருப்பதை ஒருமாதிரி விசித்தரமாக பார்த்தனர். அதனால் அலைபேசியில் மணியை பார்த்தவன், இந்நேரம் ரிதுபர்ணா சாப்பிட்டு சென்றிருப்பாள் என்பதை கணித்து, அங்கிருந்து வெளியே வந்தவன், உணவகத்தின் உள்ளே நுழைய, ரித்துவோ கன்னத்தில் கை வைத்தப்படி அங்கு போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

உணவு மேசை காலியாக இருந்ததிலேயே அவள் இன்னும் சாப்பிடவில்லை என்று தெரிந்தது. 'அதான் சாப்பிட்டு ரூம்க்கு போன்னு சொன்னோமே, அதை கேட்காம எதுக்கு சாப்பிடாம உட்காந்திருக்கா?' என்று மனதில் எழுந்த கேள்வியோடு அவள் அருகில் செல்ல, அவளும் அவன் வருவதை உணர்ந்து அதிகம் குடித்திருக்கிறானா? என்பது போல் ஆராய்ச்சியாக பார்த்தாள்.

"உன்னை தான் சாப்பிட்டு ரூம்க்கு போகச் சொன்னேனே, இன்னும் எதுக்கு உட்கார்ந்திருக்க, அதுவும் சாப்பிட்டது போல தெரியலையே, ஏன்?" யாஷ் கொஞ்சம் கோபத்தோடு கேட்கவும்,

"நீங்க வந்ததும் உங்கக் கூட சாப்பிடலாம்னு தான் யாஷ்." என்று அவனுக்கு பதில் கூறியவள்,

"யாஷ் நீங்க குடிப்பீங்களா?" என்று தயக்கத்தோடு கேட்டாள்.

"ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்கறதுக்கு முன்ன இந்த சந்தேகம் உனக்கு வரலையா? உன்னைப் பத்தி எனக்கு தெரியாது சரி. என்னைப் பத்தி மட்டும் உனக்கு தெரியுமா? நான் குடிப்பேன். அதுவும் பயங்கரமா, நைட் அதில்லாம எனக்கு தூக்கமே வராது. இன்னைக்கு தானே ஃபர்ஸ்ட் என்னோட இருக்கப் போற, அதாவது நமக்கு இதுதான் ஃபர்ஸ்ட் நைட் இல்லையா? அதான் நீ பயந்துடக் கூடாதுன்னு கொஞ்சமா குடிச்சிட்டு வந்தேன். 

ஆனா நாளையிலிருந்து இதெல்லாம் பார்க்க மாட்டேன். ஃபுல்லா குடிச்சிட்டு ஜாலியா எஞ்சாய் பண்ணுவேன். கூடவே சிகரெட், அப்புறம் வேற லெவல் பழக்கமெல்லாம் இருக்கு, என்னைப் பத்தி தெரியாம என்னை கல்யாணம் செய்து வாழவும் தயாராகிட்ட, அதனால இதெல்லாம் சகிச்சிக்கிட்டு நீ வாழ்ந்து தான் ஆகணும்," என்று அலட்சியமாக கூறினான்.

அவன் சொல்வது போல் முன்பு அவனைப் பார்த்திருந்தாலும், இப்போது யாஷ் எப்படிப்பட்டவன்? என்பது அவளுக்கு தெரியாது தான், ஆனால் அவன் சொல்வது போல் அவன் தவறானவனாக இருக்கமாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக, "இல்ல யாஷ், நீங்க பொய் சொல்றீங்க, உங்களை ஒரு குடிகாரனா என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியல, அதுவும் பயங்கரமா குடிக்கிறவங்க முகமே அவங்களை காட்டிக் கொடுத்திடும், எனக்கு தெரியும், நீங்க இப்போ குடிச்சிட்டு வந்திருப்பது முக்தாவை மறக்க முடியாம தானே," அவள் கேட்க,

'இது என்னடா புது கதையா இருக்கு,' என்று யாஷ் நினைத்தான்.

முக்தா அவனை வேண்டாமென்று சொல்லிவிட்டாலும் யாஷ் அவளை விரும்பியிருந்திருப்பானோ? என்ற சந்தேகம் ரிதுபர்ணாவிற்கு இருந்தது. அதைப்பற்றி கிஷனிடம் கேட்க நினைத்திருந்து கேட்காமல் வந்துவிட்டாளே, அதனால் முக்தா ஞாபகமாக தான் இப்படியெல்லாம் செய்கிறானோ? என்று அவன் வரும்வரை அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். அதுவே இப்படி அவளை கேட்க வைத்தது.

"உங்களுக்கு முக்தாவை ரொம்ப பிடிச்சிருந்தது இல்ல, அவங்க உங்களை வேண்டாம்னு சொல்லிட்டு போனது மட்டுமில்லாம, அந்த இடத்தில் நான் வந்தது உங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும், அப்படித்தானே?" வருத்தத்தோடு அவள் கேட்க,

"ம்ம் முடிஞ்சு போனதை பத்தி எதுக்கு பேசணும், விட்டுத் தள்ளு." என்று அவன் அந்த பேச்சை திசை மாற்ற நினைத்தான்.

அவனுக்கே முக்தாவை பற்றி இப்போது பேசுவது பிடிக்கவில்லை. அதை உணராதவளோ, "முக்தாவை மறக்க முடியாது என்பதால இப்படி குடிக்க பழகிக்காதீங்க யாஷ். அது நல்லதுக்கு இல்ல, நான் தான் சொல்றேனே, சென்னை போனதும் உங்களை விட்டு போயிட்றேன். போறதுக்கு முன்ன முக்தாக்கிட்ட உங்களுக்காக பேசட்டுமா?" என்றுக் கேட்க,

"சென்னை போனதும் என்னை விட்டுட்டு போறதுக்கு தான் என்னை கல்யாணம் செய்துக்கிட்டீயா? நல்லா இருக்கு நீங்க செய்றது? முக்தா என்னன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை வேண்டாம்னு முடிவு செய்துட்டு போனா, அப்படியே விட்ருக்க வேண்டியது தானே, அதைவிட்டுட்டு நீ எதுக்காக கல்யாண பெண்ணா அங்க உட்கார்ந்த, இப்போ நீயும் விட்டுட்டு போகவா? போ தாராளமா போ, அதுக்காக எல்லாம் நான் வருத்தப்படுவன்னு நினைக்காத, ரொம்ப சந்தோஷம் தான் படுவேன். இன்னும் நல்லா என்னோட வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிப்பேன்." என்று கூறினான்.

உண்மையில் அவள் விட்டுவிட்டு போவதாக சொன்னதில் கோபம் கொண்டு தான் இப்படி பேசினான். இதற்கும் முன்னரே அவனே அவளிடம் அப்படி சொல்லியிருக்கிறான். ஆனாலும் இப்போதைய மனநிலையில் அவனுக்கு அவள் அப்படி பேசியது பிடிக்காததால் கோபத்தில் பேசினான்.

அவளுக்கோ அவன் வார்த்தைகள் வேதனையை கொடுத்தது. அதுவும் அவள் அவனை விலகினால் அவன் மகிழ்ச்சியாக இருப்பதாக அவன் கூறியது மிகவுமே மனதிற்கு வேதனையை கொடுக்க, அது கண்ணீர் துளிகளாக அவள் கண்களிலிருந்து வெளிப்பட்டது.

அதை கவனிக்காதவனாக அவனோ, "சரி சாப்பிட்டா ரூம்க்கு போகலாம், இங்க நாமளே தான் எடுத்து சாப்பிட்டுக்கணும், வர்றீயா?" என்றுக் கேட்டப்படி அவள் முகத்தை பார்க்கும்போது தான் அவள் அழுவது தெரிந்தது.

'என்னடா இது,' என்று அவன் நினைக்க, "எனக்கு பசிக்கல யாஷ், நான் ரூமுக்கு போறேன். நீங்க சாப்பிட்டு வாங்க," என்று அவள் எழுந்திருக்க, அவளது கைகளை பிடித்தவன்,

அவள் கண்ணீரை பொறுக்க முடியாதவனாக, "என்ன உன்னோட கண்ல டேம் வச்சிருக்கியா? எப்போ பார்த்தாலும் டேமை திறந்து விட்ற, இப்படி எதுக்கெடுத்தாலும் கோழை மாதிரி அழுதா எனக்கு பிடிக்காது.

நம்ம கல்யாணம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்ததுன்னு உனக்கு நான் சொல்லணுமா? அடுத்து என்ன நடந்தாலும் ஏத்துக்கணும்னு நினைச்சு தானே மணமேடை ஏறியிருப்ப, இப்போ எதுக்கெடுத்தாலும் அழற, ஒருவேளை என்னோட பப்பா இந்த கல்யாணத்தை ஏத்துக்கலன்னா கண்டிப்பா நான் உன்னை வேண்டாம்னு சொல்லியிருப்பேன். அப்போ என்ன செய்திருப்ப? 

நீயும் அப்போ நானே போயிடுவேன்னு தானே சொன்ன, அதை செஞ்சுருக்கலாமே? அதைவிட்டுட்டு பப்பா சொன்னதும் நீ ஏன் இந்த கல்யாண வாழ்க்கையை ஏத்துக்கிட்ட? இப்போ ஹனிமூன்க்கு வந்துட்டோம், அதுக்கப்புறமும் என்னைவிட்டு போயிடுவேன்னு சொன்னா என்ன அர்த்தம்?"

"உங்களோட விருப்பமும் அதானே யாஷ்."

"என்னோட விருப்பம் அதுதான்னா நான் இந்த ஹனிமூன் வர சம்மதிச்சிருக்க மாட்டேன். பப்பா சொன்னாருன்னு மட்டுமில்ல, முறைப்படி நடந்த நம்ம கல்யாணம் தோத்து போகக் கூடாதுன்னு நினைச்சேன். அடிக்கடி நானும் தான் உன்னை போயிடுன்னு சொல்லியிருக்கேன். அதுக்கு காரணமென்ன? உன்னைப்பத்தி எனக்கு எதுவும் தெரியல, திடீர்னு நீ என்னோட மனைவின்னா, அதை உடனே என்னால ஏத்துக்க முடியுமா? அதை நான் ஏத்துக்க கண்டிப்பா கொஞ்சம் காலம் ஆகும், ஆனா உடனே உன்னை ஏத்துக்கிட்டேன்னா என்னோட பப்பாக்காக தான்,

அதுக்காக உன்னைப்பத்தி நான் தெரிஞ்சிக்க கூடாதா? தெரிஞ்சிக்க தான் எனக்கு உரிமை இல்லையா? நீ யாருன்னே தெரியாம நாம எப்படி நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறது. வீட்ல ரெண்டு நாளா ஏதோ கோபத்தில் என்ன செய்றதுன்னு புரியாம சுத்திட்டு இருந்தேன். சரி ஹனிமூன் வந்த  இடத்திலாவது உன்னைப்பத்தி தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன். நீ சொல்லலன்னுதும் கோபம் வந்துச்சு, அதான் சும்மா ஒரு டிராமா போட்டேன்." என்று அவன் சொன்னதும்,

ரித்துவோ மகிழ்ச்சியில், "உண்மையா யாஷ். நீங்க குடிக்கலையா?" என்றுக் கேட்டாள்.

"ஆமாம் நான் குடிக்கல, அந்த பழக்கமும் எனக்கு இல்ல, உன்னை வெறுப்பேத்த தான் அப்படி செய்தேன். இனி அப்படி செய்யவே மாட்டேன் போதுமா? உனக்கா உன்னைப்பத்தி என்கிட்ட எப்போ சொல்லணும்னு தோனுதோ அப்போ சொல்லு. அதுவரைக்கும் நான் கேட்க மாட்டேன்.

ஆனா என்னைப்பத்தி உன்கிட்ட சொல்லிட்றேன். நான் இஞ்சினியரிங் முடிச்சிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தேன். ஆறு மாசம் முன்ன நடந்த ஆக்ஸிடெண்ட்ல நான் ஹாஸ்பிட்டலில் இருக்க வேண்டியதா போயிடுச்சு, அதான் இப்போ எந்த வேலை வெட்டியும் இல்லாம இருக்கேன்." என்று சொல்லிக் கொண்டிருக்க,

"பெரிய ஆக்ஸிடெண்டா யாஷ். அன்னைக்கும் உங்க ஃப்ரண்ட் கபிலன் பய்யா ஆக்ஸிடெண்ட் பத்தி ஏதோ பேசினாங்களே, அப்பவே பப்பாக்கிட்ட இதைப்பத்தி கேட்க நினைச்சேன்." என்று அவள் என்னவோ விபத்து இப்போது தான் நடந்தது என்பது போல் பதட்டத்தோடு கேட்டாள்.

"ம்ம் கொஞ்சம் பெரிய ஆக்ஸிடெண்ட் தான், கையெலும்பு ஃப்ராக்‌சர் ஆயிடுச்சு, அதனால் ரெண்டு மாசத்துக்கு பெட் ரெஸ்ட்ல இருந்தேன். பப்பா தான் என்னை பார்த்துக்கிட்டாங்க, இப்போ நார்மலாயிட்டேன். உனக்கு பார்த்தா அப்படித்தானே தெரியுது?" என்று அவன் கேட்க,

அத்தனை நேரம் அவள் கண்களில் கலவரத்தை காட்டியவள், அவன் கேட்டதில் நிம்மதியை உணர்ந்து, ஆமாம் என்பது போல் தலையசைக்க, அவளது பரிதவிப்பை அவனும் உணர்ந்துக் கொள்ள, ஏனோ அது அவனுக்கு அதீத மகிழ்ச்சியை கொடுத்தது.

பின் விட்ட இடத்திலிருந்து பேச்சை ஆரம்பித்தான். "எனக்கும் மணீஷ்க்கும் எங்க பப்பா தான் எல்லாம், அம்மா இறந்த பின்பும் கூட இரண்டாவது கல்யாணம் செய்துக்காம எங்களுக்காகவே வாழ்ந்துட்டார். அவருக்கு கடைசிவரை சந்தோஷமா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். ஆனா சோனா எப்போ எங்க வீட்டு மருமகளா வந்தாளோ, அப்பவே எங்க சந்தோஷமெல்லாம் குறைஞ்சிடுச்சு, அவ எங்க வீட்டுக்கு ஏத்தவளே இல்ல, ஆனா மணீஷ் காதலிச்சிட்டான்னு தான் பப்பா அவளை மணீஷ்க்கு கல்யாணம் செய்து வச்சார். அவனுக்காக தான் சோனாவை பொறுத்துக்கிட்டோம்,

இதுக்கும் சோனா எங்க அத்தை பொண்ணு தான், ஆனா அவ செய்றது எங்களுக்கு பிடிக்காது. இந்த நேரத்தில்  முக்தாவை கல்யாணம் செய்துக்க சொல்லி பப்பா என்கிட்ட கேட்டாங்க, ஆனா எனக்கு அதில் சுத்தமா விருப்பமில்ல, முக்தாவை அப்படி நினைச்சு பார்த்ததில்ல, அதுவுமில்லாம முக்தாவின் குணமும் கிட்டத்தட்ட சோனாவை போலத்தான், அதான் நான் வேண்டாம்னு சொன்னேன்.

ஆனா பப்பா திரும்ப திரும்ப இதைப்பத்தி பேசவும் அவர் விருப்பத்திற்காக நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். அதுக்குப்பிறகு நடந்தது தான் உனக்கே தெரியுமே, பப்பாக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேனே தவிர, எனக்கு முக்தா மேல எந்த விருப்பமுமில்ல, அதேபோல உன்னை ஏத்துக்கிட்டதும் அவருக்காக தான், என்னடா இப்படி சொல்றானேன்னு யோசிக்காத, அதுதானே உண்மை. ஆனா என் மனசும் மாறும், ஆனா அதுக்கு எத்தனை நாள் ஆகும்னு தெரியல, ஆனா மாறும். 

அதுக்கு நீயும் முயற்சி எடுக்கணும், உன்னைப்பத்த வெளிப்படையா சொல்லணும், ஆனா அது எப்போன்னு நீதான் முடிவு செய்யணும், அதுவரை நானா எதுவும் கேட்க மாட்டேன். தேவையில்லாம சின்ன சின்ன விஷயத்துக்கு அழுவாத, அப்புறம் நைட் சாப்பிடாம படுக்கறது நல்லதில்ல, கொஞ்சமா சாப்பிட்டா கூட பரவாயில்லை. அதனால நான் உனக்கும் சேர்த்து எடுத்துட்டு வரேன் சாப்பிடு." என்றவன் எழுந்து சென்றான்.

அவனுக்கு முக்தா மீது எந்த விருப்பமுமில்லை என்பதே அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதேபோல் அவள் யாரென்று சொல்லி அவன் அன்பை பெறுவதிலும் அவளுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதை சொல்லாமல் அவன் தன்னை சுலபத்தில் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான் என்பதும் உறுதி. வெறுமனே பிடிக்காத திருமணம், தப்பித்து வந்து உன்னை திருமணம் செய்தேன் என்று சொல்லவும் முடியாது. 

அப்போது என்னை ஏன் திருமணம் செய்தாய்? என்று அவன் கேட்டால் என்ன செய்வது? ஏற்கனவே பப்பாவும் இதையே தானே கேட்டார். அவரிடம் உண்மையை கூறிவிட்டோம், ஆனால் யாஷிடம் எப்படி உண்மையை கூறுவது? என்று குழப்பத்துடன் அவள் அமர்ந்திருக்க,

"ம்ம் சாப்பிடலாமா?" என்றப்படி இரண்டு தட்டில் உணவோடு வந்தான்.

அதில் சப்பாத்தியும் சப்ஜியும் இருக்க, "இன்னும் சில ஐட்டம்ஸ் இருந்துச்சு, உனக்கு எது பிடிக்கும்னு தெரியல, அதான் பொதுவா சப்பாத்தி மட்டும் எடுத்துட்டு வந்தேன். இதை சாப்பிட்டதும் வேற வேணும்ங்கறதை எடுத்துக்கோ," என்று அவன் கூற,

"அய்யோ இதுவே போதும் யாஷ்." என்று அவள் பதில் கூறினாள்.

"அதை சாப்பிட்டுட்டு சொல்லு. நீ மதியமும் சரியா சாப்பிடவேயில்லை. அந்த டிரைவர் ஒரு மொக்கை ஹோட்டலுக்கு நம்மளை மதியம் கூட்டிட்டு போயிட்டான். இது நல்லா இருக்கு சாப்பிடு." என்று கூறியப்படியே அவனும் சாப்பிட்டான்.

அவன் அக்கறையாக நடந்துக் கொண்டதிலேயே அவள் வருத்தமெல்லாம் நீங்கியிருக்க, உண்மையில் பசியெடுப்பதை உணர்ந்து நன்றாக சாப்பிட்டாள். தேவையானதை எடுத்துக் கொண்டு வந்தும் சாப்பிட்டாள். 

அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன், "இவ்வளவு பசியை வச்சிக்கிட்டு சாப்பிடமாட்டேன்னு சொன்ன இல்ல, சரி பட்னியா இருன்னு அப்படியே விட்ருக்கணும்," என்று அவன் கேலியோடு கூற,

"விட்ருந்தீங்க, எனக்கு இருந்த பசியில் நைட் உங்களை அப்படியே விழுங்கியிருப்பேன். தப்பிச்சிட்டீங்க" சொல்லிவிட்ட பின் தான் வந்திருப்பது தேனிலவிற்கு, இதற்கு வேறு அர்த்தமும் எடுத்துக் கொள்ள கூடும் என்பதை யோசித்து, நாக்கை கடித்தப்படியே தன் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை ஓரப்பார்வையில் பார்க்க, அவன் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டான் என்பது அவன் புன்னகைப்பதிலேயே தெரிய, நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

பின் அறைக்குச் சென்றதும் எங்கு படுப்பது என்பதில் அவளுக்கு குழப்பம் வந்தது. சாப்பிடும்போது அவன் இதுகுறித்து தெளிவாக பேசியிருந்தாலும், அவள் அவனை திருமணம் செய்து வந்த முறைக்கு இயல்பாக அவன் அருகில் படுப்பது அவளுக்கு தயக்கமாக இருந்தது. வீட்டிலோ அவளுக்கு அந்த ஒற்றை படுக்கை அறையை கொடுத்துவிட்டு கிஷனும், யாஷும் வரவேற்பறையில் படுத்துக் கொண்டனர். அதனால் அவளுக்கும் தனக்காக விட்டுக் கொடுக்கிறார்களே என்பதை தவிர, வேறு எந்த சங்கடமும் இருக்கவில்லை.

ஆனால் இந்த இரவை கழிப்பது அவளுக்கு பெரும் அவஸ்தையாக இருக்க, அவன் உள்ளே வந்ததும் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பார்த்துக் கொண்டிருக்க, அவளோ பால்கனியில் ஏற்கனவே அங்கு போட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தவளுக்கு சில நிமிடங்களை கடப்பதே பெரிய விஷயமாக இருந்தது.

முதலில் அவளை கவனிக்காமல்  யாஷ் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, அதன்பிறகு தான் அவளை காணவில்லையென்பதை கவனித்தவன், அவள் பால்கனியில் இருப்பதை உணர்ந்து, "என்ன இன்னும் கடலையே பார்த்துட்டு உட்கார்ந்திருக்கியா? நாம இன்னும் 5 நாள் இங்க தானே இருக்கப் போறோம், நிறைய பீச்சை தான் பார்க்கப் போறோம், அப்புறம் என்ன? உள்ள வந்து படு டயர்டா இல்லையா?" என்றுக் கேட்டான்.

இப்போதைக்கு இந்த தேனிலவு என்பது அவளைப்பற்றி தெரிந்து, புரிந்துக் கொள்ள மட்டுமே என்ற மனநிலையில் அவன் இருந்தான். அதன்பிறகு அவளுடன் தன் வாழ்க்கையை ஆரம்பிப்பதிலும் அவனுக்கு எந்த தயக்கமுமில்லை. அதனால் அவளோடு கட்டிலில் படுப்பதை பற்றி அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. அதனால் இயல்பாக அவளை அழைக்க, இதற்கு மேலும் பால்கனியில் அமர்ந்திருப்பது நல்லது இல்லை என்பதால் அவள் அறையின் உள்ளே வந்தாள்.

"கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு தூங்கறேன், உனக்கு டிஸ்டர்ப் இருக்காதே என்றுக் கேட்டப்படி கட்டிலில் ஒரு ஓரமாக அவன் தள்ளி அமரவும், அவளுக்கு இடம் கொடுக்க தான் தள்ளி அமருகிறான் என்பதை உணர்ந்தவள், இதற்கு மேலும் தயக்கம் காட்டக் கூடாது என்பதை உணர்ந்து கட்டிலின் இன்னொரு பக்கம் சென்று அமைதியாக படுத்துக் கொண்டாள். அதுவும் உறங்க முயற்சிப்பது போல் கண்களை மூடிக் கொண்டாள்.

முதலில் அவள் பால்கனியில் அமர்ந்திருந்தது கூட அவனுக்கு சாதாரணமாக தான் இருந்தது. ஆனால் இப்போது வேகமாக வந்து கட்டிலில் படுத்து உறங்க முயற்சிப்பவளை பார்த்த போது தான் அவளது தயக்கம் புரிந்தது. 'இப்படி தயக்கம் காட்டுபவள் எதற்காக என்னை திருமணம் செய்துக் கொண்டாளாம்? அதுவும் முகத்தை மூடி வேறொரு பெண் போல, உண்மையிலேயே அவள் பிரச்சனையிலிருந்து தப்பிக்க மட்டும்தானா?' என்று அவன் யோசிக்க,

அப்படி ஒரு திருமணம் செய்துக் கொண்டதால் மட்டுமே அவளுக்கு அந்த தயக்கமே தவிர, அவனை திருமணம் செய்ததால் அல்ல, இப்படி ஒரு நிகழ்வு தன் கனவில் கூட நடக்காது என்று அனைத்தையுமே மறக்க முயற்சித்திருந்தவளுக்கு இந்த திருமணம் எத்தனை பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பதை அவன் தெரிந்துக் கொள்ளும் நாள் எப்போது வரும்?

தேனன்பு தித்திக்கும்..

கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பகிரவும்,

கருத்து திரி

ReplyQuote
Posted : 10/03/2020 10:56 am
Chithra V
(@chithra-v)
Eminent Member

திகட்டாதே தேனன்பே 8

காலை பத்து மணிக்கு தயாராக இருக்கச் சொல்லி அவர்களை அழைத்துச் செல்ல இருந்த ஓட்டுநர் அலைபேசியில் முன்பே சொல்லியிருந்ததால் தம்பதியர் இருவரும் காலை கொஞ்சம் விரைவாக எழுந்து குளித்து தயாராகி கொண்டிருந்தனர். 

அவர்கள் செல்வது ஹேவ்லாக் தீவில் உள்ள கடற்கரைகளை சுற்றிப் பார்க்க தான், அதுமட்டுமில்லாமல் அங்கே கடற்கரையில் குளிக்கவும் வேண்டியிருக்கும் என்பதால் யாஷ்  சாதாரண டீஷர்ட்டும் ஷாட்ஸும் அணிந்திருந்தான்.

ரித்துவோ முட்டியை விட்டு கொஞ்சமே இறங்கியிருந்த பாவாடையும் கையை தூக்கினால் அவளின் வெண்ணிற வயிற்றுப்பகுதி நன்றாக தெரிவது போல்  ஒரு நவீன நாகரீக மேல் சட்டையும் உடுத்தியிருந்தாள். தலைமுடியை மொத்தமாக சேர்த்து குதிரைவால் கொண்டையாக போட்டிருந்தாள்.

அவள் தயாராகியதும் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று அவன் சொல்லியிருந்ததால், "நான் ரெடி போலாமா யாஷ்." என்று கேட்டவளை, அதுவரை அலைபேசியில் மூழ்கியிருந்தவன் நிமிர்ந்து பார்க்க, அவள் மீதிருந்து பார்வையை அகற்றவே மிகவும் சிரமப்பட்டான்.

சட்டைக்கும் பாவாடைக்கும் நடுவில் மெல்லிய கீற்றாக தெரிந்த அந்த வெண்ணிற வயிற்றுப் பகுதி அவனை என்னவோ செய்தது. அதற்கும் மேலாக வாழைத்தண்டு போல் இருந்த இரண்டு கால்களில் மருதாணியின் சிவப்பு போகாமல் இருக்க அதுவும் அவளுக்கு அழகாக இருந்தது.

யாஷ் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததில் அவளுக்குள்ளும் வேதியியல் மாற்றங்கள். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "யாஷ் போலாமா?" என்று மீண்டும் அழைக்க,

அதில் மீண்டு வந்து, "போலாமே," என்று சொல்லி எழுந்தவனுக்கு, அவளின் அருகில் இன்றைய நாள் எப்படி போகப் போகிறதோ என்ற பெருங்கவலை உண்டானது.

சிறிது நேரத்தில் சாப்பிட்டு விட்டு மீண்டும் வந்து அவர்கள் அறையில் இருக்க, சில நிமிடங்களிலேயே ஓட்டுநர் வந்துவிட்டதை அலைபேசி மூலம் கூறவும், இருவரும் தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்.

முதலில் இருவரையும் விஜய் நகர் கடற்கரையில் கொண்டு போய்விட்ட ஓட்டுனர், அடுத்து செல்லவிருக்கும் ராதா நகர் கடற்கரையில் குளித்து கொள்ளலாம் இங்கு சிறிது நேரம் சுற்றிப் பார்த்தால் போதுமென்று சொல்லியனுப்பவே இருவரும் கடற்கரைக்கு கொஞ்சம் தொலைவில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். நீல நிறத்தில் கடலைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

ரித்து அமைதியாக அதைப்பார்த்தப்படி அமர்ந்திருக்க, "கடலைப் பார்த்தால் போதும் உடனே இப்படி உட்கார்ந்துடுவ போல, வா அப்படியே நடந்துட்டு வரலாம்," என்று எழுந்தப்படியே யாஷ் கூறியப்படி தன் கையை நீட்டவும், அவளும் அவன் கைப்பிடித்து எழுந்துக் கொண்டது மட்டுமில்லாமல், அவன் கைக்கோர்த்து நடந்தவளுக்கு இந்த உலகையே வென்றுவிட்ட அளவுக்கு மகிழ்ச்சி உண்டானது.

அவனுக்குமே அவள் கையை விட மனம் வரவில்லை. அவனது அருகில் அவளுக்குரிய ப்ரத்யேக வாசனையோடு நெருக்கமாக நடந்து வந்தவளை கண்டு அவன் மனம் அவளிடம் கொள்ளைப் போனதை அவனால் மறுக்க முடியாது. 

அழகான பொருத்தமான ஜோடியாக பார்ப்பவர்களின் கண்ணுக்கு நிறைவாய் தெரிந்தவர்கள் கையோடு கைக்கோர்த்தப்படி கடலின் அருகில் சென்றுவிட்டனர். ஆனால் கடல் அலைகள் அவர்களது காலை தொடாத தூரத்தில் அவர்கள் நின்றிருக்க, "போய் காலை நனைப்போமா?" யாஷ் அவள் முகம் பார்த்துக் கேட்க,

"அய்யோ வேண்டாம், எனக்கு தண்ணீன்னா பயம்." என்று மிரட்சியோடு ரித்து சொல்ல, நேற்றும் அங்கே ரெசார்ட்டில் உள்ள கடற்கரையில் இந்த வாக்கியத்தை கூறினாள். ஆனால் அப்போது அவன் அவளது முகத்தை பார்க்கவில்லை. ஆனால் இப்போதோ அவள் பேசும்போது அவளது முகத்தை பார்த்தவனுக்கு, இதே பாவனையை அவன் முன்னரே ஒருவரிடம் கண்ட தோரணை இருக்க, அது யார் என்பதும் அவனுக்கு ஞாபகத்தில் இருக்க, அப்போது தான் 'இவளுக்கு என்னை முன்பே தெரியுமோ?' என்பது போல் அவனுக்கு தோன்ற ஆரம்பித்தது.

அந்த சந்தேகத்தோடு அவள் முகத்தை சில நிமிடங்கள் பார்க்கவும், அப்போது "சோட்டீ," என்று யாரோ அழைக்க, ரிதுபர்ணாவோ அந்த திசை நோக்கி  வேகமாக திரும்பினாள்.

யாஷ் நெஹ்ராவிற்கும் அந்த குரல் நன்றாக கேட்டது. அதிலும் அந்த குரலுக்கு ரித்து திரும்பியது அவனுக்கு இன்னும் அதிர்ச்சியை கூட்ட, ஏற்கனவே லேசாக துளிர்த்த சந்தேகம் இப்போது இன்னும் வலுவாக, "என்ன? யாராச்சும் உன்னை கூப்பிட்டாங்களா?" என்றுக் கேட்டான்.

"இல்லையே யாரோ சோட்டீன்னு கூப்பிட்டது போல இருந்துச்சு," என்று அவள் கூற,

"அதுக்கு நீ ஏன் திரும்பணும்? அது என்ன உன்னோட பேரா?" என்று அவன் கேட்டான்.

தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து தடுமாறியவளுக்கு முதலில் என்ன பதில் கூறுவது என்பது புரியாமல் விழிக்க, அப்போது தான் விமான நிலையத்தில் பார்த்த அந்த குழந்தை ஞாபகத்திற்கு வர, "இல்ல ஏர்போர்ட்ல பார்த்த அந்த குழந்தை, அதான் சோட்டீ இங்க இருக்கோன்னு பார்த்தேன்." என்று கூற,

"நம்ம ஏர்போர்ட்ல பார்த்த குழந்தை இங்க ஏன் வரப் போகுது?" என்று இன்னும் சந்தேகம் தீராதவனாக கேட்டவன்,

"என்னை உனக்கு முன்னமே தெரியுமா? என்னை இதுக்கு முன்ன நீ பார்த்திருக்கியா?" என்ற அவனது சந்தேகத்தை வெளிப்படையாக கேட்டான்.

'பேசாமல் சொல்லிவிடலாமா?' என்று அவள் நினைத்த நேரம், உண்மையாகவே விமான நிலையத்தில் பார்த்த குழந்தை அங்கு விளையாடிக் கொண்டிருக்க, "அங்கப் பாருங்க யாஷ். நம்ம ஏர்போர்ட்ல பார்த்த சோட்டீ. நான் நினைச்சது போல அவளை தான் கூப்பிட்டிருக்காங்க," என்று சொல்லி குழந்தை இருந்த திசையை காட்ட, 

குழந்தையை பார்த்ததில் அவனது கவனமும் இப்போது குழந்தை பக்கம் திரும்ப அதன் அருகில் சென்றான். அவளும் அவனோடு சென்றாள். அங்கே தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் இருவரும் பேச்சுக் கொடுக்க, அதுவும் மழலை மாறாமல் இருவரோடும் பேசியது. 

குழந்தையை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்த பெற்றோர்களும் இவர்கள் இருவரையும் விமான நிலையத்தில் பார்த்த ஞாபகம் வரவே அருகே வந்து பேசினர். பின் குழந்தையோடு அவர்கள் குடும்பமாக புகைப்படம் எடுக்க யாஷிடம் உதவிக் கேட்க அவன் எடுத்துக் கொடுத்து உதவினான். அவர்களும் இவர்கள் இருவரையும் நிற்கச் சொல்லி இவர்களது அலைபேசியில் உள்ள கேமரா மூலம் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொடுத்தனர்.

கடைசியாக ஒருமுறை குழந்தையை கொஞ்சிவிட்டு இருவரும் தனியாக வர, "சரி நீ நில்லு, உன்னை நான் போட்டோ எடுக்கிறேன்." என்று சொல்லி ரித்துவை யாஷ் புகைப்படம் எடுக்க, அவளும் அவனை தனியாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தாள். பின் இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

எடுத்த புகைபடங்களை இருவரும்  பார்வையிட்டப்படி இருக்க, "அவங்க எடுக்க சொல்லலைன்னா நமக்கு இப்படி போட்டோ எடுக்க தோனியிருக்காதுல்ல," என்று யாஷ் கேட்டதற்கு,

"ம்ம் ஆமாம்," என்று மட்டும் அவள் பதில் கூறினாள். அவனுக்கும் முக்தாவிற்கும் ஒருவேளை திருமணம் நடந்திருந்தால், இப்போது அவர்களது தேனிலவு பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்பது போல் ஒரு நொடி அவள் யோசித்துப் பார்த்தாள்.

பின்னரோ, 'ச்சே, அதான் முக்தாவை கல்யாணம் செய்துக்கறதில் எனக்கு விருப்பமில்ல, அப்பா சொன்னதால தான் கல்யாணம் செய்துக்க இருந்தேன்னு யாஷ் சொன்னாங்களே, முக்தாக்கும் யாஷ் வேண்டாம்னு நினைச்சதால தான போனா, அப்புறம் எதுக்கு இதையே யோசிக்கிறேன்.' என்று அவள் நினைவிற்கு தடைப் போட்டாள்.

அவளின் வெறும் ஆமாம் என்ற பதிலே இன்னும் எதையும் வெளிப்படையாக பேசும் அளவிற்கு நெருக்கம் இல்லாததை உணர்ந்த அவனும் அதைபற்றி மேலும் பேசாமல், "சரி கடலில் கால் நனைக்கலாம்னு சொன்னேனே, வா." என்று அவளை கூப்பிட,

அவள் கண்கள் மீண்டும் மிரட்சியை காட்டவும், திரும்பவும் அதே முகம் அவனுக்கு ஞாபகத்திற்கு வர, அதை ஒதுக்கி தள்ளியவன், "நான் கூட இருக்கப்போ என்ன பயம்? வா ஜாலியா இருக்கும்," என்று சொல்லி கைப்பிடித்து அவளை அழைத்துப் போக, அவளுக்குமே பழைய நினைவுகள் மனதில் வந்து போக, அவளது பயத்தை கூட மறந்து அவனோடு கடல் அலையில் நின்றாள்.

பின் இருவரும் கடைகள் இருக்கும் வீதிப் பக்கம் வந்தனர். "இளநீர் குடிக்கலாமா?" என்று யாஷ் கேட்க, அவளும் சரியென்று தலையசைத்தாள். இருவருக்கும் வாங்கியவன், அவளிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு அவன் தனதை எடுத்துக் கொள்ள இருவரும் பருகினார்கள்.

பின் அப்படியே கடை வீதிப்பக்கம் வேடிக்கைப் பார்த்தப்படி நடந்துக் கொண்டிருக்க, தொப்பி, ஆடைகளெல்லாம் விற்றுக் கொண்டிருப்பதை பார்த்து, "தொப்பி வாங்கிக்கிறீயா?" என்று கேட்டான்.

"எதுக்கு யாஷ், தொப்பியெல்லாம்? வேண்டாம்," என்று அவள் மறுக்க,

"உனக்கு போட்டா அழகா இருக்கும் வாங்கிக்க, ஏன் எதைக் கேட்டாலும் வேண்டாம்னு சொல்ற," என்று கண்டித்தவன், 

"என்ன கலர்ல வேணும்," என்றுக் கேட்டப்படியே தொப்பியை ஆராய,

"உங்களுக்கு எந்த கலர் பிடிக்குமோ, அதுவே வாங்குங்க யாஷ்." என்று அவள் பதில் கூறினாள்.

"பிங்க் உனக்கு அழகா இருக்கும்," என்று அதை வாங்கியவன், அதை அவளிடம் கொடுத்து, " போட்டுக்க," என்றான்.

அவளும் அதை அணிந்துக் கொண்டே, "நீங்களும் வாங்கிங்க யாஷ்" என்று கூற,

"எனக்கு வேண்டாம், போடப் பிடிக்காது." என்று சொல்லி மறுத்துவிட்டான்.

தொப்பிக்கான பணத்தை கொடுத்துவிட்டு தள்ளி வந்ததும், "இந்த தொப்பியோட உன்னை ஒரு போட்டோ எடுப்போமா?" என்று கேட்ட யாஷ், அவளை எங்கு நிற்க வைத்து புகைப்படம் எடுப்பது என்று இடம் தேடினான். ஏனேனில் கடற்கரையை விட்டு இருவரும் தள்ளி வந்திருந்தனர்.

"இல்ல யாஷ், அடுத்த பீச்க்கு போவோம்ல அங்க எடுத்துக்கலாம், இப்போ டிரைவர் சொன்ன டைம் ஆயிடுச்சே, அவருக்கு போன் போடுங்க," என்று சொல்ல, அவனுக்குமே அதுசரி என்று தோன்றவே, ஓட்டுனரை அலைபேசி மூலம் அழைத்தான்.

அடுத்து இருவரையும் ஓட்டுனர் ராதாநகர் கடற்கரைக்கு அழைத்து சென்றார். இங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டு சூரிய அஸ்தமனம் ஆகும்வரை இருக்கவும், ஏனெனில் இங்கு அதை நன்றாக இந்த இடத்தில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார்.

இருவரும் அங்கு வரிசையாக இருந்த உணவகங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து மதிய உணவை முடித்துக்கொண்டு, கடற்கரைக்குச் சென்றனர். அங்கேயும் இருவரும் சில செல்ஃபிகள் எடுத்திக் கொள்ள, ரித்துவை தொப்பி அணிய வைத்து தனியாக சில புகைப்படங்களை யாஷ் எடுத்தான்.

ராதாநகர் கடற்கரையில் மக்கள் குதூகலத்தோடும் ஆரவாரத்தோடும் குளித்துக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் பரப்பிலேயே சிறிது நேரம் இருவரும் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தனர். 

பின் யாஷோ, "நாமும் போய் குளிப்போமா?" என்று ரித்துவிடம் கேட்க,

"அய்யோ வேண்டாம் யாஷ், நான்தான் சொன்னேனே எனக்கு தண்ணின்னா பயம்னு, நீங்க போய் குளிங்க, நான் சும்மா உட்கார்ந்திருக்கேன். அதுவுமில்லாம நம்ம கொண்டு வந்த பையை யார் பார்த்துப்பா? அதனால நான் இங்கேயே இருக்கேன், நீங்க போய் குளிங்க," என்று அவள் கூற,

அதெல்லாம் வைக்க இங்க இடம் இருக்கும், கடல் குளிப்போம்னு யோசிச்சு தானே இன்னொரு ட்ரஸ் எடுத்துட்டு வந்த, அப்புறம் என்ன? நீ பயப்படாம வா. இங்கப்பாரு ஜாலியா எதைப்பத்தியும் கவலைப்படாம தண்ணீரில் மக்கள் எப்படி ஆட்டம் போட்றாங்க பாரு. இதெல்லாம் பார்த்தா எல்லோருக்குமே ஆசை வரும், உனக்கு வரலையா?" என்று அவன் கேட்டான்.

"எனக்குமே இப்படி ஜாலியா விளையாட ஆசையா தான் இருக்கு, ஆனா கடல் தண்ணீரில் அடிச்சிட்டு போயிட்டேனா என்ன செய்றது? அதான் பயமா இருக்கு யாஷ்." என்று அவள் கூற,

"நான் கூட இருக்கேனே அப்படி உன்னை விட்டுவிடுவேனா? பயப்படாம சும்மா வா ரித்து," என்று கைப்பிடித்து அவன் அழைக்கவும்,

"உன்னை விட்டுவிடுவேனா?" என்ற வார்த்தையிலேயே அவள் வானில் பறக்க ஆரம்பித்திருக்க, அவன் முதல் முறையாக அவளை ரித்து என்று அழைத்ததில் இந்த உலகம் முழுவதும் பறந்து பார்த்த மகிழ்ச்சி அவளுக்கு கிடைத்தது. 

அவனை இமைக்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்க, "என்னோட முகத்தில் அப்படி என்ன தெரியுதுன்னு என்னையே பார்த்துட்டு இருக்க?" என்று அவன் கேட்க,

"முதல்முறை என்னை நீங்க ரித்துன்னு கூப்பிட்றீங்க யாஷ்." என்று அவள் பதில் கூறினாள்.

"ஆமாமில்ல, என்னவோ இப்போ தான் நாம சகஜமா ஆயிட்டோமே, அதான் உன்னோட பேர் கூப்பிட தோனுச்சு போல, ஆனா நீ அப்படியில்லல்ல, ரொம்ப நாள் பழக்கம் இருப்பது போல் முதலிலிருந்தே  என்னோட பேரை நீ சொல்ற? எப்படி?" என்று அவன் கேட்க,

"ம்ம் ரொம்ப நாளான பழக்கம் தான்," என்று அவள் தன்னை மறந்து கூறவும், அவன் அவளை சந்தேகத்தோடு பார்க்க,

அதை புரிந்தவளாக, "நீங்க அப்படித்தான் என்னை உணர வைக்கிறீங்க யாஷ்." என்று பதில் கூறினாள். ஒருவிதத்தில் அது உண்மையும் கூட, ஒரு மாதம் தான் பார்த்து பழகியவன் என்றாலும், ஒரு யுகம் அவனோடு இருந்த நிறைவை அவனருகில் முன்பே  உணர்ந்திருக்கிறாள். இப்போது அப்படி அவனோடு வாழ வேண்டுமென்ற ஆசையும் அவளுக்கு தோன்றியது.

"இப்படி ஏதாவது பேசி கடலலையில் குளிக்காம நழுவலாம்னு பார்க்கிறீயா?" என்றவன் அவளை பிடிவாதமாக எழுப்பினான்.

தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வைப்பதற்கென்று இருந்த இடத்திற்கு சென்று யாஷ் அதை வைத்தவன், அவளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். 

"அய்யோ வேண்டாம் யாஷ், பயமா இருக்கு வேண்டாம்," என்று சொல்லியப்படியே ரித்து அவனோடு கடலுக்குள் சிறிது தூரம் செல்ல, ஒரு பெரிய அலை வந்து அவர்களின் உடலை தொட்டுச் செல்ல அதில் பயந்தவளாக அவனோடு ஒன்றினாள். அவனும் அவளை இறுக்கமாக பற்றிக் கொண்டான். அதுவும் அவள் இடையை, தண்ணீர் பட்டதில் அவளது மேல் சட்டை இன்னும் கொஞ்சம் தூக்கிக் கொள்ளவே அவளது வெண்ணிற மேனியை தான் அவன் பற்ற வேண்டியதாக இருந்தது. அது அப்போதைக்கு தற்செயல் தான் என்றாலும் அதன்பின் அது ஒரு சுகமான இம்சையாக இருக்க அப்படி பிடித்தவளை மீண்டும் அவன் விடவேயில்லை.

அதுபோல எவ்வளவு நேரம் கடலில் குளித்தப்படி விளையாடினார்கள் என்பதை இருவருமே அறியவில்லை. ஏனெனில் இருவருக்குமே அடுத்தவரின் அருகாமை பிடித்திருக்க, அந்த ராதாநகர் கடற்கரையில் தாங்கள் இருவர் மட்டுமே இருப்பது போல் மற்றவர்களை மறந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் கடலைப் பார்த்து பயம், அடுத்து யாஷின் அருகாமையில் வெட்கம் இதெல்லாம் ரித்துவிற்கு முதலில் சங்கடத்தை கொடுத்தது. ஆனால் அதன்பிறகு அதையெல்லாம் யாஷ் மறக்கடித்திருந்தான். அதுவும் ஒவ்வொரு முறை அலை வரும்போதெல்லாம் அவனை அவள் ஒன்ற, ஒவ்வொரு முறையும் அணைப்பில் இறுக்கத்தை கூட்டி அவள் வெற்று மேனியில் அவனது கைகள் ஊர்வலம் வந்தது. இதில் அவனை நெருங்கும்போது அவனது உதடுகள் அவள் கன்னத்தில் பதியும்போதெல்லாம் சுகமான அவஸ்தையாக இருக்க, அதில் தன்னை மறந்து ஒன்றிப் போனாள்.

இருவருக்குமே கடலை விட்டு வெளியே வர மனசேயில்லை. ஆனால் நேரமாகிக் கொண்டிருந்ததே, அதனால் மனதேயில்லாமல் இருவரும் தங்கள் விளையாட்டை முடித்துக் கொண்டு வந்தனர். பின் உடைமாற்றுவதற்கு என்று ஆண்கள், பெண்கள் என்று இருவருக்கும் தனித்தனி இடங்கள் இருக்க, அங்கே சென்று உடை மாற்றிக் கொண்டு வந்தனர். 

அதுவும் ரித்து தன் ஈர கூந்தலை காய வைப்பதற்காக விரித்து விட்டிருந்தாள். இப்போது அவள் பைஜாமா குர்தாவில் இருந்தாள். இந்த நேரம் இந்த உடை உடுத்த வேண்டுமென்று அவள் எதுவும் திட்டமிட்டெல்லாம் செய்யவில்லை. அங்கே சென்னையில் பக்கத்து வீட்டு பெண்மணி தேர்ந்தெடுத்ததில் அவளுக்குமே பிடித்திருந்து தான் இந்த உடைகளையெல்லாம் தேர்ந்தெடுத்தாள். 

ஆனால் அதை உடுத்தும்போது யாஷ் என்ன நினைப்பானோ? என்ற பயத்தோடு தான் இன்று காலை அந்த உடையை அணிந்துக் கொண்டாள். அவன் பார்வையில் ரசனை தெரியவும் அவள் மனதிலிருந்த பயமும் அகன்றிருந்தது. ஆனால் கடலில் இப்படி ஆடை நனையும் அளவிற்கு அவள் குளிப்பாள் என்றெல்லாம் அவள் அறியவில்லை.

இப்போதோ வேண்டுமென்று தான் இந்த உடையை தேர்ந்தெடுத்து தான் அணிந்து வந்ததாக யாஷ் நினைப்பானோ என்ற பயம் மனதிற்குள் வந்து போனது. ஆனால் அடுத்த நொடியே, 'ச்சே நான் ஏன் இப்படி யோசிக்கிறேன். தன்னுடனான நெருக்கம் யாஷ்க்கு பிடித்தமில்லாதது போல் தெரியவில்லையே, அதுவுமில்லாமல் இருவரும் கணவன், மனைவி எனும்போது எப்படி அது தவறாகும்?' என்றெல்லாம் அவள் மனம் யோசித்து அமைதியானது.

கடலில் அதிக நேரம் இருந்ததால் இருவருக்கும் பசியெடுத்தது. அதனால் கடைவீதிப்பக்கம் நடந்துச் சென்று தேனீரும் சிற்றுண்டியும் சாப்பிட்டவர்கள் மீண்டும் கடற்கரை மணலில் வந்து அமர்ந்தனர். அதுவும் ரித்துவின் தோளில் யாஷ் கைப்போட்டு நெருக்கமாக அமர்ந்தான். முன்பு போல் இந்த நெருக்கம் இருவருக்கும் தயக்கத்தை கொடுக்கவில்லை. அதற்கு மாறாக இந்த நெருக்கம் அதன் எல்லையை தொட்டுவிடும் உணர்வை கொடுத்தது.

அவர்கள் அமர்ந்த சிறிது நேரத்திலேயே சூரியன் அஸ்தமனம் ஆக ஆரம்பிக்க, அந்த காட்சி ஒரு நெருப்பை பந்தை கடல் விழுங்குவது போல் தோன்றியது. இருவரும் அந்த காட்சியை தங்களின் அலைபேசியில் புகைப்படம் எடுத்தது மட்டுமில்லாமல், அப்படியே செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.

அதன்பின் ஓட்டுனரை வரவழைத்து இருவரும் தாங்கள் தங்கியிருந்த ரெசார்ட் வந்து சேர்ந்தனர். அதன்பின் இரவுச் சாப்பாடுக்கு செல்லும் வரையுமே அவர்களுக்குள் பேச பொதுவான விஷயங்கள் அதிகம் இருந்தது.

பின்னரோ, "சரி டைம் ஆச்சு சாப்பிட போகலாமா?" என்று யாஷ் கேட்க,

"இன்னைக்கு ரெஸ்ட்டாரண்ட்ல என்ன மெனு இருக்கும் யாஷ். எனக்கு பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு," என்று ரித்து கூறினாள்.

"என்ன மெனு இருக்கும்னு தெரியலையே, அங்க இருக்க மெனுவோட கூட ஏதாவது நான்வெஜ் சைட்டிஷ் வேணும்னா நாம தனியா ஆர்டர் செய்துக்கலாம்னு கபில் சொன்னான். ஆனா பிரியாணி இருக்குமான்னு தெரியல, வேணும்னா ரெசார்ட் விட்டு வெளிய போய் சாப்பிடலாமா?" என்று அவன் கேட்க,

"போலாம் யாஷ், நல்லா இருக்கும்," என்று அவளும் ஆர்வம் காட்டினாள். 

பின் இருவரும் நடை பயணமாக ரெசார்ட்டை விட்டு வெளியே வந்தவர்கள் அருகில் ஏதாவது உணவகம் இருக்கிறதா? என்று பார்க்க, அப்படி ஏதுமில்லை. அங்கு ஒருவரிடம் விசாரிக்க இன்னும் சிறிது தூரம் சென்றால் வரிசையாக உணவகங்கள் இருக்குமென்று அவர் கூற, இருவரும் நடந்தனர். 

அங்கங்கே கடைகளிலும் தங்குமிடங்களிலும் மட்டுமே விளக்குகள் எரிய பாதையோ இருட்டாக இருந்தது. "என்ன யாஷ் இது ரோட்ல லைட்டே இல்லை." என்று சொல்லியப்படி சிறிது பயத்தோடு அவனது கையை தன் இரு கைகளாலும் பிடித்தப்படி ரித்து நடந்து வந்தாள்.

அந்த நெருக்கம் அவனுக்கு பிடிக்க, "இது கூட நல்லா தான் இருக்குல்ல, இப்படி இருட்டான இடத்தில் நடந்துப் போறது, அதுவும் என்னோட கையை நீ பிடிச்சிக்க, இப்படி நெருக்கமா, ஜாலியா இருக்குல்ல," என்று யாஷ் பதில் கூற, ரித்து வெட்கப்படுவது அந்த இருட்டிலும் அவனுக்கு நன்றாக தெரிந்தது.

இருவரும் உணவகங்களை தேடியப்படியே நடக்க, விசாரித்தவர் சொன்னது போல் அடுத்து வரிசையாக உணவகங்கள் தென்பட, அதில் பிரியாணி கிடைக்குமா? என்பதை விசாரித்து கிடைக்கும் என்று சொன்ன ஒரு உணவகத்திற்குள் நுழைந்து இருவருமே பிரியாணியை வரவழைத்து சாப்பிட்டனர்.

"ம்ம் கொஞ்சம் சுமாரா தான் இருக்கு," யாஷ் சொல்லியப்படியே சாப்பிட,

"ம்ம் ஆனாலும் கொஞ்சம் வேற ஏதாவது சாப்பிடலாம்னு நினைச்சதுக்கு இது நல்லா தான் இருக்கு," என்று சொல்லி ரித்து சாப்பிட்டாள்.

"உனக்கு பிரியாணின்னா ரொம்ப பிடிக்குமா?"

"பிரியாணின்னு இல்ல, காரசாரமா எந்த டிஷ் இருந்தாலும் பிடிக்கும், ஆஸ்திரிலேயாவில் என்னோட ஒரு தமிழ் ஃபேமிலி தங்கி இருந்தாங்க, அவங்க செட்டிநாடு பக்கம். அவங்க சமையலெல்லாம் காரசாரமா இருக்கும், சாப்பிட டேஸ்ட்டா இருக்கும், ரொம்ப பிடிக்கும்," 

"சூப்பர். எனக்கும் தமிழ்நாட்டு சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்கும், அப்பாக்கு சப்பாத்தி செய்ய தான் தெரியும், இட்லி, தோசைன்னா மாவு தயார் செய்யல்லாம் தெரியாது. ஸ்கூல், காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ் கொண்டு வந்த சாப்பாடு நல்லா இருந்துன்னு சொன்னா, உடனே ஹோட்டலில் வாங்கிக் கொடுப்பார்." என்று தந்தையின் நினைவுகளில் மூழ்கிவிட, ரித்துவும் அந்த பேச்சில் மகிழ்ந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் ரெசார்ட்டிற்கு திரும்பியவர்கள் மீண்டும் அறைக்குச் செல்லாமல் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு சென்றதும் தான் ஏன் வந்தோம் என்பது போல் இருவருக்குமே தோன்றியது. கடற்கரையை பார்த்ததுமே இன்று பகல் முழுவதும் கடலில் குளித்து விளையாடியது தான் ஞாபகத்திற்கு வந்தது. ஏனோ அந்த நெருக்கம் எப்போதும் வேண்டுமென்பது போல் இருவருக்கும் தோன்றியது.

அதிலும் யாஷ் நிலை தான் பாவம், தன் மனைவி தனக்கு முழுமையாக வேண்டுமென்பது போல் அவனது உடலில் ஒவ்வொரு அணுக்களும் சொல்லிக் கொண்டிருக்க, 'இல்லை அவளைப்பற்றி முழுதாக அறிந்துக் கொண்டப் பின்னரே எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும்' என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

"அடப்பாவி, இன்னைக்கு அவக்கிட்ட நீ நடந்துக்கிட்ட விதம் அப்படி ஒன்னும் தெரியலையே," என்று மனசாட்சி கேள்விக் கேட்க,

'அதுக்குன்னு புதுப் பொண்டாட்டியை பக்கத்தில் வச்சிக்கிட்டு, அதுவும் ஹனிமூன் வந்த இடத்தில் அதுக்கூட இல்லன்னா வரலாறு அப்புறம் என்னை தப்பா சொல்லாது,' என்று அவன் மனசாட்சியிடம் அவன் பதில் கூறினான்.

"அதான் சொல்றேன். ஹனிமூன் வந்தும் இப்படி இருக்கணும்னு என்ன அவசியம்? இப்போ அவளைப்பத்தி தப்பா ஏதாச்சும் தெரிஞ்சா அவளை நீ விட்டுடப் போறீயா?" என்ற மனசாட்சியின் கேள்விக்கு,

'அது எப்படி முடியும்? இனி வாழ்நாளுக்கும் அவக்கூட தான் என்னோட வாழ்க்கை. அவளை விட்டு பிரியவே மாட்டேன். அவளோட கடந்தக்காலம் எப்படியிருந்தாலும், நிகழ்காலமும் எதிர்காலமும் இனி என்னோட தான்,' என்று உறுதியாக சொல்லிக் கொண்டான்.

"அப்புறம் என்னடா இன்னும் தயக்கம், அவளை முழுசா ஏத்துக்க வேண்டியது தானே," என்று மனசாட்சி எடுத்துரைக்க,

'ம்கூம் இது பேச்சை இதுக்கும் மேலேயும் கேட்டா என் நிலைமை ரொம்ப மோசமாகிடும்' என்று சொல்லிக் கொண்டவன்,

"ம்ம் ரூம்க்கு போலாமா ரித்து, உனக்கு தூக்கம் வரல?" என்று அவளிடம் கேட்டான்.

பகல் போலவே இப்போதும் கடலில் விளையாட அழைப்பான் என்று அவள் மனம் எதிர்பார்த்து காத்திருக்க, தூங்கலாமா? என்ற கேள்வியில் அவள் மனம் ஏமாற்றமடைந்தது. ஏனோ அவன் அருகாமையில் கடல் அந்த அளவிற்கு அவளுக்கு பயத்தை அளிக்கவில்லை. அவனோடு இப்படி நேரத்தை செலவழிப்பது அவளுக்கு பிடித்திருந்தது. ஆனால் அவனே சொல்லிவிட்டதால் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவனோடு அறைக்குச் சென்றாள்.

அந்த சூழ்நிலையை மாற்றவே அவளை அறைக்கு அழைத்து வந்தவனுக்கு இன்னும் சோதனைகள் மிச்சம் உள்ளதை அவன் அறியான்.

கடற்கரையில் உப்பு தண்ணீரில் குளித்ததால், உடை மாற்றும் போதும் கூட அங்கிருந்த நீரில் அவசரமாக ஒரு குளியல் போட்டு உடை மாற்றி வந்ததால், இருவருமே தூங்குவதற்கு முன் நன்றாக குளித்துவிட்டு தூங்கலாம் என்று நினைத்தார்கள். அதனாலேயே சாப்பிட்டதும் உடனே குளிக்க முடியாது என்பதால் தான் கடற்கரையில் நேரத்தை கடத்த எண்ணினர்.

இப்போதும் சாப்பிட்டு சிறிது நேரம் ஆகியிருந்ததால் குளிக்க முடிவு செய்து, அதன்படி யாஷ் முதலில் குளித்துவிட்டு எப்போதும் அணியும் டீஷர்ட், ஷாட்ஸ் அணிந்து வந்தான் என்றால், ரித்துவோ குளித்துவிட்டு ஒரு கையில்லாத மெல்லிய நைட்டீ அணிந்து வந்தாள். அது அவளது உடலழகை நன்றாகவே எடுத்துக் காட்டியது.

இன்னும் அவர்களின் உறவு முழுமையாகததால் அவளுக்குமே அவன் முன் இப்படி உடை அணிவது தயக்கமாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது? எடுத்து வந்த உடைகளில் ஒன்றை அணிந்து தானே ஆக வேண்டும், 'அய்யோ அந்த ஆன்ட்டியோட போய் ட்ரஸ் எடுத்திருக்கவே கூடாது. அப்போ ஒன்னும் தெரியல, இப்போ சங்கடமாக இருக்கே,' என்று நினைத்தப்படி தான் அந்த உடையை அணிந்து வந்தாள்.

அதைப்பார்த்தவனுக்கோ, 'இவ காலையிலிருந்து நம்மளை இப்படி சோதிக்கிறாளே,' என்று தான் தோன்றியது.

கவர்ச்சியான உடை அணிந்து வரும் பெண்களையெல்லாம் நேரிலேயே எத்தனையோ முறை பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் இப்படி தோன்றியதில்லை. ஆனால் இவள் தன்னவள் என்ற உணர்வு அவனது உணர்ச்சிகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்க, எங்கே அவன் கட்டுப்பாட்டை மீறி விடுவானோ என்று தோன்றியதால், 

நேற்று இரவு அவளது செய்கையை பார்த்து வியந்தவனுக்கு இன்று அவளைவிட ஆயிரம் மடங்கு தவிப்பு அவனுக்குள் இருக்க, "சரி குட்நைட் தூங்கலாம்," என்று சொல்லி தொலைக்காட்சியை அணைத்தவன், போர்வையை முகம் வரை இழுத்துப் போட்டு உறங்க முயற்சிப்பது போல் அவன் நடந்துக் கொள்ள,

அவனது செய்கைகளை புரிந்துக் கொள்ள முடியாமல் ரித்து விழித்தாலும், 'நல்லவேளை உடனே தூங்கிட்டாங்க, இல்ல அவங்க பக்கத்தில் தூக்கம் வராம நேத்து போல படுக்க சங்கடமா இருக்கும்,' என்று நினைத்தப்படியே அவளும் வந்து அருகில் படுத்துக் கொள்ள, இன்றுமே காலையிலிருந்து சுற்றி திரிந்த அலுப்பில் இருவரும் சிறிது நேரத்திலேயே உறங்கினர்.

தேனன்பு தித்திக்கும்..

கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பகிரவும்

கருத்து திரி

ReplyQuote
Posted : 13/03/2020 3:45 pm
Chithra V
(@chithra-v)
Eminent Member

திகட்டாதே தேனன்பே 9

மறுநாள் காலையும் அதேபோல் கடற்கரையை சுற்றிப் பார்ப்பது தான் யாஷ், ரித்துவின் திட்டம், அதனால் அன்றும் காலையே எழுந்து குளித்து தயாராகினர். ரித்து குளித்துவிட்டு குளியறையிலிருந்து வரும்போது அவள் என்ன உடை உடுத்தியிருக்கிறாள் என்று தான் யாஷ் ஆராய்ந்தான்.

இன்று இடையை விட்டு இறங்கியிருந்த மேல் சட்டையும், பலோசா பேண்டும் அணிந்திருந்தாள். அவனது பார்வை தன் உடலை ஆராய்ந்ததில் அவளுக்கு சுகமான அவஸ்தையாக இருக்க, அவனை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் வெட்கத்தில் அவள் தலை குனிய அதை புரிந்தவனாக, "உனக்கு எந்த ட்ரஸ் போட்டாலும் அழகா இருக்கு ரித்து," என்று கூறினான். உண்மையிலேயே அந்த கணம் அவளைப் பார்த்த போது தோன்றியதும் அதுதான்,

"தேங்க்ஸ் யாஷ்," என்று அவனது பாராட்டுக் குறித்து கூறியவள், அவனது பார்வை இன்னும் தன் மீதிருந்து விலகாததில் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அதனால், "டிரைவருக்கு போன் போட்டீங்களா?" என்றுக் கேட்டு பேச்சை மாற்ற,

"ம்ம் நீ ரெடியாகிட்டா அவரை கூப்பிட வேண்டியது தான்," என்று கூறினான். 

"இதோ பத்து நிமிஷத்தில் நான் ரெடியாகிடுவேன், நீங்க போன் போடுங்க யாஷ்," என்று அவள் கூறவும்,

"இதோ போட்றேன்." என்று சொல்லி அவன் அலைபேசியை எடுக்கும்போதே, அவர்கள் அறையிலிருந்த இண்டர்காம் ஒலியெழுப்ப, யாஷ் அதை எடுத்து பேசினான்.

அவன் பேசி முடித்தபின், "என்ன யாஷ்?" என்று ரித்து கேட்கவும்,

"நாம வெளிய போறதுக்கு முன்ன ரிஸப்ஷன்க்கு வந்துட்டு போகச் சொன்னாங்க, வா அப்படியே போய்க்கிட்டே ட்ரைவர்க்கு போன் போடுவோம், அப்படியே ரிஸப்ஷன்ல என்ன விஷயம்னு கேட்போம்," என்று யாஷ் கூறவும், சில நிமிடங்களில் தயாராகி இருவரும் தங்களது அறையை பூட்டிக் கொண்டு கிளம்பினர்.

அங்கே வரவேற்பறையில் சென்று இருவரும் என்னவென்று விசாரிக்க, "சார் நீங்க ஹனிமூன் கப்பிள்ஸ் தானே, இன்னைக்கு நைட் ரெசார்ட் பீச்ல உங்களுக்கு கேண்டில் லைட் டின்னர் அரேஞ்ச் செய்திருக்கோம், அதை சொல்லத்தான் கூப்பிட்டோம், 8 மணிக்கு தயாராகி வந்துடுங்க," என்று அங்கே வரவேற்பறையில் இருப்பவர் சொல்லவும்,

என்னவோ நேற்றிலிருந்து கடற்கரைக்கும் அவர்களுக்கும் ஒரு பிணைப்பு இருப்பதாக தோன்ற, இந்த ஏற்பாடு அவர்கள் இருவருக்கும் பிடிக்காமலா போகும், எனவே சரியென்று தலையசைத்தவர்கள் அங்கிருந்து வெளியே வந்ததும், "நாளைக்கு நாம ரூமை வெக்கேட் செய்யணுமில்ல யாஷ், இன்னைக்கு இந்த கேண்டில் லைட் டின்னர் அரேஞ் செய்திருக்காங்க, ஒருவேளை இந்த ரெசார்ட்டில் இப்படி ஒரு வழக்கம் இருக்கோ," என்று ரித்து தன் சந்தேகத்தை கேட்டாள்.

"ம்ம் அப்படி தான் இருக்கும் போல, பீச்ல கேண்டில் லைட் டின்னர், சூப்பரா தான் இருக்கும், எஞ்சாய் பண்ணுவோம், இப்போ கிளம்புவோம்," என்றப்படி ஓட்டுனருக்காக இருவரும் காத்திருக்க ஆரம்பித்தனர்.

அன்றைய பொழுதும் சுற்றிப் பார்த்த இடங்களில் இருவருக்கும் மகிழ்ச்சியான சூழலே அமைய மாலையே அறைக்கு வந்துவிட்டனர். பின் அறையிலேயே பேசியப்படி நேரத்தை கடத்தியவர்கள், கேண்டில் லைட் டின்னருக்காக தயாராக ஆரம்பித்தனர்.

முதலில் யாஷ் தான் தயாராகினான். ஜீன்ஸ் பேன்டும் டீ ஷர்ட்டும் அணிந்து அவன் தயாராக கிஷனிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அப்போது தான் ரித்துவும் குளித்துவிட்டு வெளியே வந்தாள். இரண்டு நாளாக கடல் நீரில் குளித்ததால் தலை அழுக்காக இருக்கவே தலை குளித்திருந்தாள். என்ன உடை அணிவது என்ற குழப்பத்தில் நைட்டி அணிந்துக் கொண்டு வந்தவள், தனது பெட்டியை ஆராய்ந்துக் கொண்டிருக்க, அதை புரிந்தவனாக, "ரித்து, பப்பா தான் போன்ல, நான் பேசிட்டு வரேன், நீ ரெடியா இரு," என்று சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியே சென்ற நேரம், ரித்துவின் அலைபேசிக்கும் அழைப்பு வந்தது. அதுவும் பெயரில்லாமல் வெறும் எண்கள் மட்டும் மிளிரவும், இந்த புது  நம்பர்க்கு யார் அழைப்பது?' என்ற சிந்தனையோடு அவள் அலைபேசி அழைப்பை ஏற்க, பக்கத்து வீட்டு பெண்மணி தான் பேசினார்.

"ஹாய் ஆன்ட்டி நீங்களா? சொல்லுங்க," என்று அவள் கூறவும்,

"ரித்து நாம கடையில் எடுத்தோமே அந்த லாங் கவுன், அதை இப்போ டின்னர்க்கு போட்டுக்கோ," என்று அவர் இந்தியில் கூறினார்.

'இங்க நாங்க டின்னர்க்கு போகறது இவங்களுக்கு எப்படி தெரியும்?' என்று ரித்து குழம்பினாள்.

கடையில் வைத்து அந்த உடையை அவர் எடுக்கும்போதே, "அய்யோ எதுக்கு ஆன்ட்டி ஹனிமுன் போற இடத்தில் இந்த ட்ர்ஸ், இது பார்ட்டி, பங்க்‌ஷன்க்கு தான் போடணும்," என்று அவள் சொல்ல, 

"நீங்க போறது ஹனிமூன், முக்கியமா இது தேவைப்படும்," என்று அவர் சூசகமாக கூறினார்.

'அந்தமான்ல சுத்திப் பார்க்க தானே போறோம், இது எதுக்கு தேவைப்படும்' என்று அவள் நினைத்தப்படி விழிக்க,

"உங்க ஃபர்ஸ்ட் நைட் எப்படியோ அங்க ஹனிமூன் போற இடத்தில் தானே நடக்கும், அப்போ இதை போட்டுக்க," என்று அவர் சிரித்தப்படியே கூறினார்.

'அய்யோ ஆன்ட்டி என்ன இப்படியெல்லாம் பேசறாங்க?' என்று நினைத்து அவள் சங்கடத்தோடு அவர்களுக்கு மறுப்பு கூறாமல் அந்த உடையை எடுத்துக் கொண்டாள்.

ஆனால் அதை அணியும் சந்தர்ப்பம் எப்போது? என்று அவளுக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அதனால் அதை அப்படியே வைத்திருந்தாள். இப்போது அவர் அதை உடுத்த சொல்வதைப் பார்த்தால், இந்த டின்னர் ஏற்பாடு ரெசார்டில் செய்யவில்லை என்பது அவளுக்கு புரிந்தது.

இது கபிலன் மற்றும் கிஷன் நெஹ்ராவின் ஏற்பாடாக இருக்கலாம், அதுவும் வெறும் டின்னருக்கான ஏற்பாடாக  மட்டும் இது இருக்காது. பக்கத்து வீட்டு பெண்மணி அன்று சொன்னது போல் இது அதற்கான ஏற்பாடு தான், ஆணாக இருவரும் தன்னிடம் சொல்ல முடியாது என்பதால் தான் பக்கத்து வீட்டு பெண்மணியிடம் சொல்ல சொல்லியிருக்கிறார்கள். அவர் ஏற்கனவே எதை நினைத்து அந்த உடையை வாங்க வற்புறுத்தினாரோ, அதுப்பற்றிய விஷயம் என்பதால் இப்போது அந்த உடையை உடுத்த சொல்கிறார். அதன்மூலம் அவள் புரிந்துக் கொள்வாள் என்று அவர் நினைத்திருப்பார். என்பதை சரியாக யூகித்துக் கொண்டாள்.

"என்ன ரித்து அந்த ட்ரஸ் போட்டுக்கிறீயா? அப்படியே கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோ, நான் அங்க இருந்தா போட்டிருப்பேன். உன்னோட மாமனார் நீங்க ஹனிமூன்ல எடுத்த போட்டோ காட்டினார். அதில் மேக்கப் போடாத மாதிரி இருந்துச்சு, நீ நல்ல கலர் தான், ஆனாலும் கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோ, அதான் ஷாப்பிங் போன போது வாங்கினோமே, அதை சும்மா வச்சிருக்கவா எடுத்துட்டு போன, சரி மணியாகுது பாரு, சீக்கிரம் ரெடியாகி டின்னர்க்கு போ. சொன்னது புரிஞ்சுதுல்ல," என்று இந்தியில் மூச்சு விடாமல் பேசிவிட்டு அழைப்பை அணைத்தார்.

'என்கிட்ட இதெல்லாம் சொல்ல இவங்க தான் பப்பாக்கு கிடைச்சாங்களா? எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் நடப்பதில் இவங்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ,' என்று நினைத்தப்படியே தயாராகினாள்.

அவர் சொன்னது போல் இந்த உடைய அணிந்துக் கொண்டு சாதாரணமாக செல்ல முடியாது என்பதால் அந்த நீள கவுனை உடுத்திக் கொண்டு தலையை காய வைத்து வாரி புதுவிதமான கொண்டை போட்டுக் கொண்டவள், கழுத்திலும் காதிலும் கற்கள் பதித்த நெக்லஸையும் தோடையும் அணிந்துக் கொண்டாள். ஏற்கனவே கைகளில் திருமணத்தன்று அணிந்த வளையல்கள் இருந்தது. முகத்திலும் எப்போதையும் விட கொஞ்சம் அதிகம் மேக்கப் போட்டுக் கொண்டவள்,  தன்னை ஒருமுறை சரிப்பார்த்துக் கொண்டாள்.

'இன்னுமா யாஷ் போன் பேசறாங்க?' என்று அவள் நினைத்த நேரம், யாஷ் அவளை அலைபேசியில் அழைத்திருந்தான்.

" சொல்லுங்க யாஷ்,"

"ரித்து பப்பாட்ட பேசிக்கிட்டே இங்க டின்னர் அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க சொன்னாங்கன்னு நான் இங்க டின்னர் சாப்பிடும் இடத்துக்கு வந்துட்டேன். நீ தயாராகி நேரா இங்க வந்துடு, நான்  உனக்காக இங்கேயே காத்திருக்கேன். நீ வந்துடுவ இல்ல, இல்ல நான் அங்க வரட்டுமா?"

"இல்ல யாஷ் நானே வந்துடுவேன்.  நீங்க வரவேண்டாம்," என்றவள் அழைப்பை அணைத்தாள். அவன் இங்கு வராததும் ஒருவிதத்தில் நல்லதாகவே அவளுக்கு தோன்றியது அவன் வந்து தன்னைப் பார்க்கும் பார்வையை நினைத்துப் பார்த்தவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆனால் இன்னும் சில நிமிடங்களில் அவனை நேரில் சந்திக்க தானே வேண்டும், அதை நினைத்து ஒருவித பரவசத்தோடு அறையை பூட்டிக் கொண்டு கிளம்பினாள். 

சிறிது தூரம் நடந்ததுமே அவளை அழைத்துப் போக அங்கு பணி செய்யும் ஒரு பெண்மணி அவளுக்கு வழிக்காட்ட வந்தார்.  வழக்கமாக அவர்கள் செல்லும் பாதை வழியாக இல்லாமல், கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்தில் அவளை அந்த பெண்மணி அழைத்துச் சென்றார். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் இங்கு தான் போக வேண்டும் என்று அந்த பெண்மணி சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

'எவ்வளவு ரொமான்டிக்கான இடம்,' அந்தப் பகுதியை பார்த்தபோது யாஷிற்கு அப்படி தான் தோன்றியது. சுற்றிலும் இருட்டு, நிலா வெளிச்சம், நிசப்தமான சூழலில் கடலலைகளின் சத்தம் மட்டுமே,   கடற்கரை அருகில் மணல் பரப்பில் மேசை, அதில் உணவுகள் அடங்கிய பாத்திரங்கள், நடுவே மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு இருந்தது. எதிரெதிரே தம்பதிகள் அமர நாற்காலிகள். சுற்றிலும் கம்பங்கள் அமைத்து  அதில் கடல் நீல நிறத்தில் சாட்டின் துணிகளை வைத்து இணைத்திருந்தனர். அதன் அருகிலும் அங்கங்கே மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருந்தனர். அந்த அலங்காரம் அழகாக இருந்தது.

அதையெல்லாம் ரசித்தப்படி இருந்தவன், 'என்ன இன்னும் ரித்து வரல?" என்று நினைத்தப்படி அவளுக்காக காத்திருக்க, அவளின் வருகையை அவள் கையில் இருக்கும் வளையல்களின் மெல்லிய ஓசை வைத்தே தெரிந்துக் கொண்டவன், அவள் வந்த திசைப் பக்கம் திரும்பிப் பார்க்க, அசந்து தான் போனான். வைன் நிறத்தில் அந்த நீள கவுன் அணிந்து நடந்து வந்துக் கொண்டிருந்தவளை நிலா வெளிச்சத்தில் பார்க்கும்போது, தேவதையே மண்ணில் இறங்கி வந்தது போல் அவனுக்கு தோன்றியது. அவளை விட்டு கண்ணை அகற்றாமல் அப்படியே மெய்மறந்து பார்த்தப்படி நின்றிருந்தான். 

அந்த பார்வை வீச்சை தாங்க முடியாதவளாக, “என்ன யாஷ் ஏன் எப்போதும் இப்படி கண் கொட்டாம பார்க்கிறீங்க?” என்று ரித்து கேட்க,

“அவ்வளவு அழகா இருந்தா பின்ன அப்படித்தான் பார்க்கணும், வெள்ளை உடை இல்லாதது மட்டும் தான் குறை. மற்றப்படி நீ வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதையே தான்," என்று மனதில் நினைத்ததை அப்படியே கூறியவன்,

இப்படியே உன்னை பார்த்துட்டு இருந்தா சாப்பாடு கூட வேணாம்,” என்று கிறக்கத்தோடு கூறினான். அதுவும் ரசனை பார்வை மாறாமல் அவளையே பார்த்தப்படி இருந்தது.

தன்னை குறித்து அவன் பேசியதும், பார்வையும் அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், “நாம இப்போ வந்தது டின்னர் சாப்பிட யாஷ், நமக்காக இத்தனை அரேஞ்ச்மெண்ட் செய்து வச்சிருக்காங்க, நீங்க என்னடான்னா சாப்பாடு வேண்டாம்னு சொல்றீங்க, எனக்கு பசிக்குது யாஷ்.” என்று கேலியாக கூறினாள்.

"ம்ம் உனக்கு பசிக்குதுன்னா நீ சாப்பிடு, நான் உன்னை சாப்பிட்றேன்." என்று அவன் கூற,

அவனது இரட்டை அர்த்த பேச்சில் முகம் சிவந்து அவனைப் பார்க்க, "அதாவது பார்வையாலேயே சாப்பிட்றேன்னு சொன்னேன்." என்று கிறக்கத்தோடு கூறினான்.

அவனது பார்வை வீச்சை அதற்கு மேலும் தாங்க முடியாதவளாக, "போதும் யாஷ், வாங்க சாப்பிடலாம்," என்று அவனை கைப்பிடித்து அழைத்துச் சென்றவளும் அந்த இடத்தின் அழகை பார்த்து பிரமித்து போனவள்,  'இப்படி ஒரு இடத்தில் இருந்தா இதைவிட அதிகமாகவே ரொமாண்டிக்கா பேச்சு வரும்போல,' என்று யாஷின் பேச்சை நினைத்து புன்னகைத்தப்படியே அவனுக்கு அருகில் நின்றிருந்தவள், இன்னும் கொஞ்சம் முன்னேறி கடலின் அழகை பார்க்க, 

அவளது மேனியை அந்த ஆடை முழுதாக மறைத்திருந்தாலும், அவளது முதுகு பிரதேசத்தில் மட்டும் இன்றைய நாகரீகம் என்ற பெயரில் சற்று கீழிறக்கி தைத்திருந்ததில் அவளது வெண்ணிற மேனி பளிச்சென்று தெரிய, நேற்றைய பொழுதை விட  இன்றுதான் அதிக சோதனை காலம் போல என்று யாஷ் நினைத்துக் கொண்டான்.

பின் அவளிடம் பணியாட்கள் போல் தன்னை தாழ்த்தி "சாப்பிட போகலாமா ரித்து," என்றுக் கேட்டவன், அவளை கைப்பிடித்து அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்து அவனே சாப்பாடை எடுத்து அவளுக்கு பரிமாற, "அய்யோ என்ன யாஷ், நானே போட்டுக்கறேன்." என்று அவள் மறுத்ததும், 

"ஷ்ஷ்" என்று வாயில் விரல் வைத்து அவளிடம் ஒன்றும் பேசாதே என்பது போல் சைகை செய்தவன், அவளுக்கு உணவு பரிமாறியதும் சிறிது எடுத்து ஊட்டி விட, அதை சற்றும் எதிர்பார்க்காதவள், பின் வாயை திறந்து அவன் ஊட்டியதை வாங்கி சாப்பிட்டவள், எத்தனை மகிழ்ச்சியடைந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. மகிழ்ச்சியில் அவள் கண்கள் கலங்க,

"ஹே எதுக்கு இப்போ அழற, ஊட்டினது பிடிக்கலையா?" என்று யாஷ் கேட்க,

"ரொம்ப பிடிச்சிருக்கு," என்றாள்.

"இந்த ஸ்பெஷல் கேண்டில் லைட் டின்னரை இப்படியெல்லாம் ஊட்டி இன்னும் கொஞ்சம்  ஸ்பெஷலா மாத்த நினைச்சா, நீ அழுது வேற மூட்க்கு கொண்டு வந்துடுவ போல, இப்போ நான் ஊட்டினேன் இல்ல, அதேபோல நீ ஊட்டு," என்று அவன் கூற,

"அய்யோ யாஷ் போங்க நான் மாட்டேன்." என்று அவள் வெட்கப்பட,

"இதில் என்ன வெட்கம், நாம கணவன், மனைவி தானே, அதுவும் ஹனிமூன் வந்த இடத்தில் இப்படி வெட்கப்பட்டா எப்படி?" என்று அவன் கேட்கவும், அவளும் அவனுக்கு ஊட்டிவிட்டாள். இப்படியே இருவரும் பேசியப்படியே சாப்பிட்டு முடித்தனர். 

பின் சிறிது நேரம் கடலலையை இருவரும் ரசித்துக் கொண்டிருக்க, "யாஷ் கடலில் குளிப்போமா?" என்று ரித்து கேட்க,

"வேண்டாம் இப்படியே பார்த்துட்டு இருப்போம்," என்று இந்தமுறை அவன் கூறினான்.

அவனது பதிலில் அவனை வியப்போடு அவள் பார்க்க, "இந்த ட்ரஸ்ல நீ அழகா இருக்க ரித்து, கடலில் நனைஞ்சா இந்த ட்ரஸ்ஸ மாத்தணும், அதனால வேண்டாம்," என்று அவன் விளக்கத்தை கூற,

"எப்படியோ தூங்க தானே போறோம் யாஷ், அப்போ இந்த ட்ரஸ்ஸை மாத்தி தானே ஆகணும்," என்று அவள் பதில் கூறினாள்.

"இன்னைக்கும் தூங்கத் தான் வேணுமா?" என்று அவன் மனசாட்சி சுணங்கியது.

"கொஞ்ச நேரம் காலையாவது நனைக்கலாம் யாஷ்," என்று சொல்லியப்படி அவள் எழுந்து கடலுக்கு அருகில் செல்ல, அவனுமே அவள் பின்னாலேயே சென்றான்.

திடீரென அவள் ஆடை தடுக்கி விழப்போனவளை பின்னாலிருந்து யாஷ் தாங்கிப் பிடித்தான். அதுவும் அவளது வெற்று முதுகில் அவன் கைகள் இருக்க அதற்கு மேல் அவனது கட்டுப்பாடுகள் தகர்ந்துப் போக அவனது கைகள் மட்டுமல்ல, உதடுகளும் அவள் மேனியில் ஊர்வலம் வர ஆரம்பித்தது.

அவனது செய்கையில் அவளுக்குமே ஹார்மோன் மாற்றங்கள். அதனால் அதை அனுமதித்தவளாக அவள் நின்றிருக்க, ஆனாலும் யாருமே இல்லாத தனிமையான இடமாக இருந்தாலும் அவர்கள் இருப்பது வெளியே என்பதால், "யாஷ் வேண்டாம், நாம இப்போ பீச்ல இருக்கோம்," என்று கூறினாள்.

ஆனால் அவள் கூறியது அவளுக்கே கேட்டிருக்குமா? என்பதே சந்தேகம் தான், அதனால் அதை காதில் வாங்காதவனாக யாஷ் அவனது வேலையில் தீவிரமாக இருக்க,

"யாஷ் ப்ளீஸ் இங்க வேண்டாம்," என்று இந்தமுறை அவள் சத்தமாக கூறியது மட்டுமில்லாமல் கொஞ்சம் அவனை விலக்க முயற்சிக்க, அதில் அவனது மோகநிலை கலையவும், அப்போது அவன் செய்துக் கொண்டிருந்த காரியமே அவனுக்கு உரைத்தது.

'என்னடா செய்ற யாஷ். இப்போதைக்கு அவளைப்பத்தி தெரிஞ்சிக்காம எதுவும் வேண்டாம்னு தானே சொல்லிட்டு இருந்த, இப்போ கட்டுப்பாட்டை மீறி இப்படி செய்யலாமா?' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன்,

"சரி வா ரித்து, ரூம்க்கு போகலாம், தூங்கணும்னு சொன்னல்ல," என்று தனக்கு தானே சொல்லியவன் போல அங்கிருந்து செல்ல,

'இங்க வேண்டாம்னு தானே சொன்னோம், அப்புறம் எதுக்காக இப்படி சொல்றாங்க,' என்று குழம்பியப்படியே ரித்துவும் அவள் பின்னால் சென்றான்.

'இன்னும் எத்தனை சோதனைகளை கடக்க வேண்டுமோ? அவளைப்பத்தி ஏன் சொல்ல தயங்கறா? அப்படி என்கிட்ட சொல்லக் கூடாத அளவுக்கு என்ன இருக்கு? ஒருவேளை எங்க ரெண்டுப்பேருக்குள்ள எல்லாம் பேசி தெளிவாயிருந்திருந்தா இந்த ஹனிமூன் எவ்வளவு ரொமாண்டிக்கா இருந்திருக்கும்?' இப்படி பல கேள்விகள் மனதில் ஓட, ஒரு நீள பெருமூச்சை இழுத்துவிட்டவன், நேற்றுப் போலவே போர்வையில் தன்னை மறைத்து தூங்க முயற்சிக்கும் எண்ணத்தோடு சென்று அறை கதவை திறக்க, கதவை திறந்ததுமே ஒரு நல்ல நறுமணம் வீச, 'இது தங்களது அறையா?' என்ற சந்தேகத்தோடு அறைக்குள் நுழைய, அறை முழுவதும் ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இப்படி ஒரு ஏற்பாட்டை எதிர்பார்க்கதவனாக யாஷ் வியந்துப் போக, ரித்துவிற்கு முன்பே இப்படி ஒரு சந்தேகம் இருந்திருந்தாலும் தன்னவோடு இருந்த இனிமை பொழுதில் அதெல்லாம் ஞாபகத்தில் இல்லை. அதிலும் இப்படியெல்லாம் அறையை அலங்கரித்திருப்பார்கள் என்று அவள் கற்பனை செய்து பார்க்கவுமில்லை. அதனால் அவளுக்குமே இந்த ஏற்பாடை பார்த்து வியப்பில் பேச்சு வரவில்லை.

யாஷ் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதும் அவளுக்கும் தெரியவில்லை, அவளே எதிர்பார்க்காத போது அவளை நெருங்கியவன், அடுத்து ஏதோ தவறு செய்தது போல் தப்பித்து இங்கு வந்தான். இப்போது இந்த ஏற்பாடு குறித்து என்ன சொல்வான் என்பதும் தெரியவில்லை. பேசாமல் அமைதியாக சென்று படுத்துவிடலாம் என்று பார்த்தால், மெத்தையின் நடுவே இதய வடிவில் சிகப்பு ரோஜாக்கள் கொண்டு அலங்கரித்திருக்க, எப்படி படுக்க முடியுமாம்?

ஆனால் இப்படியே இரவு முழுக்க நின்றிருக்கவா முடியும்? அதனால், "யாஷ், இப்படி ஒரு ஏற்பாடு இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை, இப்போ எப்படி நாம தூங்கறதுன்னு தெரியல, இருங்க கொஞ்ச நேரத்தில் அந்த ரோஜாப்பூக்களை எடுத்துட்றேன்," என்று சொல்லியப்படி கட்டிலின் அருகில் சென்றவளை கைப்பிடித்து இழுத்து தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன், கைகளால் அவள் முதுகில் கோலம் வரைந்தப்படியே,

"என்னால முடியல ரித்து, நீதான் என்னை ரொம்ப சோதிக்கிறேன்னு பார்த்தா, கூட இந்த ரெசார்ட் ஆளுங்களும் என்னை ரொம்ப சோதனைக்கு உள்ளாக்குறாங்க, இதுக்கு மேலேயும் என்னால பொறுமையா இருக்க முடியாது, நீ எனக்கு முழுசா வேணும் ரித்து, நான் உன்னோட கணவன் என்ற உரிமையை முழுசா எடுத்துக்கணும், ப்ளீஸ்." என்று கிறக்கத்தோடு அவளிடம் அவன் கெஞ்ச,

"எப்போ யாஷ் நான் வேண்டாம்னு சொன்னேன். எனக்குமே இதில் சம்மதம் தான்," என்று அவள் தன் சம்மத்தத்தை தெரிவித்த அடுத்த நொடி, மறுவார்த்தை பேசவிடாமல் அவளின் இதழை தன் இதழ் கொண்டு மூடினான். அடுத்து நடந்தவைகள் இருவரின் விருப்பத்தோடு நடக்க, அங்கே ஒரு அழகிய தாம்பத்யம் நடந்தேறியது.

மறுநாள் காலை முன்னதாகவே எழுந்த ரித்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த யாஷை எழுப்பினாள். ஏனென்றால் இன்று காலை அறையை காலி செய்துக் கொண்டு இருவரும் நீல் தீவிற்கு செல்ல வேண்டும், பதினொரு மணிக்கு கப்பல் புறப்படுகிறது. ஒருமணி நேர பயணமாக நீல் தீவிற்கு செல்பவர்கள் அங்கு சுத்திப் பார்த்துவிட்டு, அடுத்து மாலையே கப்பல் ஏறி போர்ட்பிளேயர் தீவிற்கு செல்ல வேண்டும், அதனாலேயே அவள் யாஷை எழுப்பினாள்.

ஆனால் அவனோ அவளது குரலுக்கு கண்விழித்தாலும், இன்னும் உறக்கத்தை தொடரும் முயற்சியில் இருக்க, "அய்யோ யாஷ், நாம இன்னைக்கு ரூம் வெக்கேட் செய்யணும், ஞாபகம் இருக்கா? இல்லையா? என்று கேட்க, அவள் எதிர்பார்க்காத நேரம் பார்த்து அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன், 

"இன்னைக்கே போகணுமா ரித்து, இன்னும் 2 நாள் இங்கேயே இருக்கலாமே," என்று சொல்ல,

"இது முன்னமே ஏற்பாடு செய்து வைத்த ப்ளான் யாஷ், அதுப்படி இன்னைக்கு இங்க இருந்து நாம போகணும்," என்று அவள் கூறினாள்.

"ம்ம் ஆமாம் போய்த்தானே ஆகணும், ஆனா இங்க தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, போர்ட்பிளேயர் அவ்வளவா ரொமான்டிக் ப்ளேஸ் இல்லல்ல, ச்சே ரெண்டு நைட்டை தேவையில்லாம வேஸ்ட் செஞ்சுட்டோமே," என்று அவன் வருத்தப்பட,

"என்ன வேஸ்ட், உங்களோட கைக்கோர்த்துக்கிட்டு பீச்ல நடந்தது, குளிச்சது, பேசிக்கிட்டே சாப்பிட்டது, இது எல்லாமே எனக்கு ரொம்ப முக்கியமான நேரம் யாஷ்," என்று அவளது பதிலில்,

"எனக்குமே அப்படித்தான், அப்படியெல்லாம் சொல்லவே மாட்டேன். அப்பா மனுஷனை எப்படியெல்லாம் நீ சோதிக்கிற, முடியல என்னால, இதுல நேத்து சொன்னது போல இந்த ரெசார்ட் ஆளுங்க வேற, ஆனா இப்படி ஒரு ஏற்பாடை வந்த முதல் நாளே செய்யாம, கிளம்ப இருந்த நைட் செய்தானே, அவன் அறிவைப் பாராட்டியே ஆகணும்," என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் கபிலனிடம் அழைப்பு வர, 'ம்ம் பாராட்டுங்க பாராட்டுங்க,' என்று மனதில் நினைத்துக் கொண்டவள்,

"சரி நீங்க கபில் பய்யாக்கிட்ட பேசிட்டு குளிக்கப் போங்க, நான் துணியெல்லாம் எடுத்து வைக்கிறேன்." என்று சொல்லிவிட்டு அவள் பால்கனிக்குச் சென்றாள். அங்கே கடலில் குளித்துவிட்டு வந்து ஈரமாகியிருந்த துணிகளை காய வைத்திருந்தாள். அதை மடிப்பதற்காக சென்றவள், யாஷ் நண்பனோடு சகஜமாக உரையாடுவதற்கு ஏதுவாக பால்கனி கதவை மூடினாள்.

அவனும் படுக்கையிலிருந்து எழுந்து வெற்றுடம்போடு சாய்ந்து அமர்ந்தவன் கபிலனிடம் பேச ஆரம்பித்தான்.

"என்ன யாஷ், நேத்து எப்படி இருந்து கேண்டில் லைட் டின்னர், அப்புறம் அதுக்குப்பிறகான ஏற்பாடெல்லாம்,"

"அடப்பாவி இதெல்லாம் உன்னோட ஏற்பாடு தானா? அதான ஹோட்டல்காரனுக்கு என்னடா நம்ம மேல இத்தனை அக்கறைன்னு நினைச்சேன்."

"ஹே நமக்கு வேணும்னு சொன்னா ஏற்பாடு செய்வாங்கடா, சரி நீ சொல்லு, ஏற்பாடு பிடிச்சுதா? பிரம்மச்சாரியா இருந்தவன் குடும்பஸ்தனா மாறீனியா?"

"போடா அதை உன்கிட்ட சொல்வாங்களாக்கும்,"

"ம்ம் இந்த பதிலே எல்லாம் சுமூகமா முடிஞ்சுதுன்னு சொல்லுதே, செம டா,"

"செம தான், ஆனா ஹனிமூன் வந்த நாளை விட்டு 3 வது நாள் இதெல்லாம் ஏற்பாடு செய்திருக்கீயே உன்னோட அறிவை மியூசியம்ல தான் கொண்டு போய் வைக்கணும்,"

"ம்ம் ஆமாம், ஏன் டா சொல்ல மாட்ட, ஐயா இங்க இருந்து கிளம்பும்போது ஹனிமூன் மூடோடவா கிளம்பினீங்க, உங்களை அனுப்பி வைக்கறதுக்குள்ள தலையால தண்ணீ குடிச்சோமே, இதில் அன்னைக்கே இந்த ஏற்பாடு செய்திருந்தா, சென்னை வந்ததும் என்னை ஓட ஓட விரட்டி அடிச்சிருக்க மாட்ட, என்னை விடு, பாவம் ரித்து, உன்னோட கோபத்துக்கு அந்த பொண்ணு தானே ஆளாகணும்,"

"ம்ம் உண்மை தான், அங்க இருந்த வரைக்கும் ரொம்ப கோபமும் எரிச்சலுமா தான் இருந்தேன். ஆனா அவளோட முதல்நாள் பயணமே, என்னமோ நானா தான் கோபத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியதா இருந்துச்சு, ஆனா அதுகூட அவளோட வாட்டமான முகத்தை பார்த்தா உடனே மறைஞ்சு போகுது, அவளை சமாதானப்படுத்த தான் தோனுது, அன்னைக்கு நைட் வரைக்கும் கூட கோபத்தை காட்டணும்னு நினைச்சு கூட என்னால முடியல, இது என்ன மேஜிக்னே தெரியல கபில்,"

"ஹே இது தான் நம்ம நாட்டு கல்யாணத்தோட மேஜிக், நாங்கல்லாம் இதை மஞ்சள் கயிறு செய்யும் மேஜிக்னு சொல்வோம், உங்க ரெண்டுப்பேரும் சொல்லணும்னா கருப்பு மணி செய்த மேஜிக்னு தான் சொல்லணும், நீ இப்படி ஒருநாளிலேயே மாறுவேன்னு தெரிஞ்சிருந்தா, நான் அன்னைக்கே இந்த ஏற்பாட்டை செய்திருப்பேனே டா."

"நீ வேற, அவளைப்பத்தி முழுசா தெரிஞ்சப்பிறகு தான் எல்லாம்னு கட்டுப்பாட்டோட இருந்தேன். ஆனா ரெண்டு நாளுக்கு மேல முடியல,"

"என்னடா ரித்து இன்னுமா உன்கிட்ட வெளிப்படையா தன்னைப்பத்தி சொல்லல?"

"இல்லடா, கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறா? ஏன்னு தான் தெரியல, என்னவா இருக்கும்னு தெரியல?" என்றவன், ரித்து என்ன செய்கிறாள்? என்பது போல் அவளைப் பார்க்க, அவள் கடலைப் பார்த்தப்படி நின்றிருப்பதை பார்த்தவன், கொஞ்சம் மெதுவான குரலில்,

"எனக்கும் ரித்துக்கும் முன்னமே அறிமுகம்னு எனக்கு தோனுதுடா, அவளோட ஏற்கனவே பேசி பழகியிருக்கேன்னு நினைக்கிறேன்." என்று யாஷ் கபிலனிடம் சோட்டீயைப் பற்றி சொல்ல,

"என்னடா சொல்ற? ரித்துவை உனக்கு முன்னமே தெரியுமா? அப்புறம் உனக்கு அவளை அடையாளம் தெரியலையா?" என்று அவன் தனது சந்தேகத்தை கேட்டான்.

"அதுதான் டா குழப்பமா இருக்கு? அந்த பொண்ணு தானா இவன்னு சந்தேகமாகவே இருக்கு, சுத்தமா அடையாளமே தெரியல, இன்னமுமே அவளா இவன்னு குழப்பமாகவே இருக்கு, அதுவும் கல்யாணம் அப்போ நான் இருந்த மூடுக்கு எதையும் ஆராய்ந்து பார்க்கல, ஆனா இப்போ சோட்டீயோட சாயல் கொஞ்சமா சில சமயம் தெரியுது. ஆனாலும் ரெண்டுப்பேரும் ஒரே ஆள் தானான்னு குழப்பமாகவே இருக்கு, அவக்கிட்ட இதைப்பத்தி கேட்கலாம்னு பார்த்தா, அவ தான் சோட்டீன்னா என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்? எனக்கு அதுதான் புரியல,"

"சரி டா, எப்படி உன்னோட சந்தேகத்தை தெளிவாக்கிக்கப் போற?"

"அதுப்பத்தி பிரச்சனை இல்லடா, சுஷாந்த் இருக்கான், அவன்கிட்ட சோட்டீயை பத்தி கேட்டு தெரிஞ்சிக்கலாம், அது சென்னை போனதும் அவன்க்கிட்ட பேசிப்பேன். அதுக்குள்ள இன்னும் 3 நாள் இங்க தானே இருக்கப் போறோம், தன்னைப்பத்தி ரித்துவே சொல்றாளான்னு பார்ப்போம்,"

"சரி நீ சொல்றது போல ரித்துவும் சோட்டீயும் ஒரே ஆள்னா பெருசா பிரச்சனை இருக்காது, சரி மீதி நாளை நல்லா எஞ்சாய் பண்ணுங்க, அப்புறம் அப்பாக்கிட்ட பேசு, உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சுன்னு தெரிஞ்சா அப்பா சந்தோஷப்படுவார். ஆனா என்கிட்டயே இதைப்பத்தி பேச தயங்குற, இதுல அப்பாக்கிட்ட எப்படி சொல்வ,"

"டேய் ஒரு ஃப்ரண்டா நீயே என்னோட மனநிலையை நல்லா புரிஞ்சு வச்சிருக்க, அவர் என்னோட பப்பா டா, நான் சொல்லணும்னு இல்ல, நான் பேசறதே வச்சே தெரிஞ்சிப்பார். என்னோட உணர்வுகளை அப்படியே புரிஞ்சிப்பார்."

"உண்மை தான், இருந்தாலும் நேத்து இப்படி ஒரு ஏற்பாடு செய்ததை பத்தி அவர்க்கிட்ட சொல்லியிருந்தேன். அதனால நான் அப்பாக்கிட்ட இதைப்பத்தி சொல்வேன். நீயும் பேசு, சரி நீங்க இங்க இருந்து நீல் தீவுக்குப் போகணுமில்ல, நல்லா எஞ்சாய் செய்ங்க," என்று சொல்லி அலைபேசி அழைப்பை அணைத்தான்.

அவர்கள் பேசி முடிந்ததை உணர்ந்தது போல் ரித்து பால்கனி கதவை திறந்துக் கொண்டு வந்தவள், அங்கிருந்த மேசை மீது மடித்து வைத்த துணிகளை வைக்கவும், "ரித்து இங்க வாயேன்," என்று அவளை அருகில் அழைத்தவன்,

"நேத்து இந்த ஏற்பாடெல்லாம் கபிலன் தான் செய்தது தெரியுமா?" என்று சொல்ல,

"எனக்கு தெரியுமே," என்று சொல்லி அவனை அவள் வியப்படைய வைத்தாள்.

"எப்படி தெரியும்?"

"நேத்து பக்கத்து வீட்டு ஆன்ட்டி போன் போட்டு டின்னர்க்கு அந்த கவுனை போடச் சொன்னாங்க, அப்பவே அதெல்லாம் கபில் பய்யா ப்ளானா இருக்கும்னு யூகிச்சேன். பப்பா உங்கக்கிட்ட பேசினாரே, அவர் உங்கக்கிட்ட இதைப்பத்தி சொல்லியிருப்பார்னு நினைச்சேன்."

"அவர் என்கிட்ட சொல்லல, உண்மையிலேயே நேத்து நடந்தது எனக்கு ஒரு சர்ப்ரைஸ் தான், உனக்கு தெரிஞ்சே சொல்லாம விட்டுட்ட பார்த்தீயா?"

"ம்ம் இதெல்லாம் வெளிப்படையா சொல்வாங்களா?" என்று அவள் வெட்கப்பட,

"இதுக்கு மேல என்கிட்ட உனக்கென்ன வெட்கம்," என்றவன்,

"ரித்து நேத்து நடந்ததில் உனக்கேதும் சங்கடம் இல்லையே?" என்றுக் கேட்டான்.

காலையில் எழுந்ததும் சரசமாக பேசியவன், இப்போது இப்படி கேட்கவும், "ஏன் யாஷ்? எதுக்கு இப்படி கேட்கறீங்க? உங்கக்கூட இருக்கறதே சந்தோஷம்னு சொல்றவ, இதை விரும்பாம இருப்பேனா?" என்றுக் கேட்க,

நொடியில் அவள் முகம் வாடியதை கண்டவன், நேற்றுவரை அவனது எண்ணம் என்னவாக இருந்தது என்பதை கபிலனிடம் கூறியது போல் அவளிடமும் கூறியவன், "இனி உன்னோட கடந்தக்கால விஷயங்கள் எனக்கு ஒரு நியூஸ் போல தான், நம்ம சந்தோஷமான வாழ்க்கைக்கு அது எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.

ஆனாலும் மணீஷ் நீ வசதியான வீட்டு பொண்ணா இருப்பன்னு சொன்னான். உன்னோட பேச்சு, உன்னோட நடவடிக்கை எல்லாம் அதைத்தான் தெரியப்படுத்துது. ஒருவேளை என்னால போராட முடியாத அளவுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா என்ன செய்றது? நேத்துவரைக்கும் அப்படி எதுவும் யோசிக்கல, ஆனா இப்போ நாம வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சதும் எனக்கு இப்படியெல்லாம் தோனுது," என்று உண்மையிலேயே மனதில் தோன்றிய புதிய கவலையை அவளிடம் கூறினான்.

"நீங்க பயப்பட்ற அளவுக்கு எந்த பெரிய பிரச்சனையுமில்ல யாஷ், உங்கக்கிட்ட இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது. இப்போதைக்கு எனக்கு இருக்க நிரந்தர சொந்தம் நீங்க தான், உங்களை தான் நாம் கல்யாணம் செய்துப்பேன்னு நினைச்சே பார்க்கல தெரியுமா? கடவுள் கிருபை அது தானா நடந்திருக்கு, அதை எப்போதும் நான் இழக்க தயாரா இல்லை." என்றவள் அவனது அருகே சென்று அவனது வெற்று மார்பில் சாய்ந்துக் கொள்ள,

அவள் பேசும்போது கூறிய உங்களை தான் என்ற வார்த்தையை மனதில் குறித்துக் கொண்டவன், சென்னை சென்றதும் சுஷாந்திடம் கண்டிப்பாக பேச வேண்டுமென்பதை மீண்டும் ஒருமுறை மனதோடு சொல்லிக் கொண்டான்.

தேனன்பு தித்திக்கும்..

கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பகிரவும்,

கருத்து திரி

ReplyQuote
Posted : 20/03/2020 2:27 pm
Share:
Advertisements