அன்பெனும் ஊஞ்சலிலே – 12 (4)

அன்று அப்படி கூட குறுஞ்செய்தி அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட, அவன் வீடு வந்து சேர்வதற்கு இரவாகிவிட்டது. அவனிடமிருந்து செய்தி வராமல் போகவே தானாகவே தூக்கம் கலைந்தவள், அவளாக ஒரு ஹாய் குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் வருகிறதா? என்று பார்த்தப்படி இருந்தாள்.

எப்போதும் போல வெறும் துண்டை மட்டும் உடலில் சுற்றிக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தவள், அவனது செய்திக்காக குளிக்காமல் தவமிருக்க,

அப்போது தான் வீட்டுக்குள் வந்தவனோ, உயிரற்றுக் கிடந்த அலைபேசிக்கு மின்சாரம் மூலம் உயிர்க் கொடுத்தவன், அவளது செய்தியை பார்த்துவிட்டு, “சாரி மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு,” என்ற பதிலை அனுப்பிவிட்டு குடிப்பதற்கு காபி தயாரிக்க சென்றான்.

அவன் பதில் கிடைத்ததும், “ஓ இப்போ தான் வீட்டுக்கு வந்தீங்களா? ஏன் லேட்? என்று அவன் சொல்லாத விஷயத்தையும் தானாக புரிந்துக் கொண்டவள், கேள்வியைக் கேட்டுவிட்டு குளிக்கச் சென்றாள்.

காபியோடு வந்தவன், சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த அலைபேசியின் அருகே அமர்ந்து அதில் அவளது செய்தியை படித்தான்.

“ஆமாம் எப்போதும் போல ஆஃபிஸ்ல இருந்து கிளம்பிட்டேன். ஆனா வழியில் செம ட்ராஃபிக். சரி உன்னோட பேசலாம்னு பார்த்தா மொபைலில் சுத்தமா சார்ஜ் இல்ல, ட்ராஃபிக் கிளியர் ஆகி வீட்டுக்கு வர இவ்வளவு நேரம்,” என்று காபியை பருகியபடியே குறுஞ்செய்தியை அனுப்பிவிட,

அதற்குள் அவளும் குளித்துவிட்டு வெறும் துண்டை மட்டும் சுற்றிக் கொண்டு வந்திருந்தவள், அவனது செய்தியை படித்தாள்.

பின், “ட்ராஃபிக் கிளியராக இவ்வளவு நேரமா? ஏன் ஏதாவது பிரச்சனையா?” என்று அவள் கேட்க,

“ஆமாம் ஒரு ஆக்ஸிடெண்ட், அதனால பின்னாடி வந்த எல்லா வண்டியும் அப்படியே நின்னுடுச்சு, அதை சரி செஞ்சு ட்ராஃபிக்க்கை கிளியர் செய்ய இவ்வளவு நேரமாகிடுச்சு.” என்று பதில் அனுப்பினான்.

“அய்யோ பாவம், அவங்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லையே?”

“இல்ல ஸ்பாட்லயே உயிர் போயிடுச்சு. ரொம்ப ரத்தம போயிடுச்சுன்னு எல்லாம் பேசிக்கிட்டாங்க, முதலில் ட்ராஃபிக்ல மாட்டினப்போ விஷயம் தெரியல, ஆளாளுக்கு ஒன்னு சொன்னாங்க, கிட்ட போகவும் தான் விஷயமே தெரிஞ்சுது, ஆக்ஸிடெண்ட் நடந்த இடத்தில் ஒரே ரத்தமா இருந்துச்சுன்னு சொன்னாங்க காரும் ரொம்ப டேமேஜா இருந்துச்சாம்,”

“ஏன் நீங்க பார்க்கலையா?”

“இல்ல ஆக்ஸிடெண்ட், ரத்தம் இதெல்லாம் பார்த்தா எனக்கு அலர்ஜி, ஒரு வாரத்துக்கு தூக்கம் வராது, அதான் அதெல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். முன்னல்லாம் சாவு ஊர்வலம்னு போனாலே அந்தப்பக்கம் பார்க்காம திரும்பிப்பேன். இப்போ அப்பா, அம்மா இறந்ததுக்கு பிறகு தான், அது அந்த அளவுக்கு பாதிப்பில்ல,

சின்ன வயசில் ரொம்ப மோசம், ரிலேடிவ் ஒருத்தருக்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு இருந்துச்சு, அவரை பார்க்க அப்பா என்னை கூட்டிட்டு போனப்போ, நான் அவரை முகத்தை பார்த்துட்டு ஒரே அழுகை, வெளிய கூட்டிட்டு போகச் சொல்லி, அப்பா அவர் முகம் என்ன கோரமா இருந்துச்சு, இப்போ நினைச்சாக் கூட ஒருமாதிரி இருக்கும், அடுத்து இப்போ வரைக்கும் கூட அவரை நான் நேரில் பார்க்கவே இல்லை. என்னவோ அவரை பார்க்க மனசுக்கு ஒருமாதிரி இருந்துச்சு, இது அருவருப்பா? இல்ல ஒருமாதிரி பயமா? என்னன்னு தெரியல, அப்படிப்பட்டவங்களை நேருக்கு நேரா பார்த்து பேசவே யோசனையா இருக்கும், இன்னும் சொல்லப் போனா, சினிமா, டிவில இப்படி கோரமான சீன்ஸ் வந்தா, அதுவும் கிராஃபிக்ஸ்னு தெரியும், தெரிஞ்சும் பார்க்க பிடிக்காது.” என்று சாதாரணமாக அவனது மனநிலையை அவளுக்கு சொல்லிக் கொண்டே போக,

மின்மினிக்கு அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? அவளுக்குமே அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவன் அறிந்தா வைத்திருக்கிறான். ஆனால் சிறிது காலமாகவே மின்மினியின் மனதில் தோன்றிய கேள்விக்கு அவன் பதில் உரைத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவன் அறியவில்லை.

“சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அப்புறம் பேசலாம்,” என்று சொல்லிவிட்டு அப்போது அவர்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த மின்மினி அதன்பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு குறுஞ்செய்தி அனுப்பி பேசுவதை நிறுத்திக் கொண்டாள் என்பது நவிரனுக்கு இப்போது புரிந்தது.

அப்போது நடந்ததை கூறி முடித்த புனர்வியும், “இப்போ சொல்லு தவா, நவிரன் இப்படி ஒரு மனநிலையில் இருக்கும்போது அவங்களோட தொடர்ந்து பேசி அவங்களோட காதலை நான் ஏத்துப்பேன்னு நம்பிக்கை கொடுக்கணுமா? அதான் பிஸியா இருப்பதா காண்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா நவிரனோட பேசறதை குறைச்சிக்கிட்டு, சுத்தமா நிறுத்திட்டேன். அதுக்கேத்த போல ராகாவும் ஆன்ட்டி இறந்ததும் என்னோட வந்து தங்கினா, அவளோட பேசி, சிரிச்சுன்னு இருக்கவே நவிரனை விட்டு விலகறது எனக்கும் ஈஸியா இருந்துச்சு, அதாவது அப்படி நினைச்சுக்கணும்னு இப்போ வரை மனசை தேத்திக்கிட்டு இருக்கேன். அதுபோல நவிரனும் என்னை மறந்துடணும்னு நான் வேண்டிட்டு இருந்தேன்.

அப்போ தான் நம்ம காலேஜ் ஸ்டூடண்ட் அந்த கவிதையை ஷேர் செய்றதை நானும் பார்த்தேன். மின்மனியா இல்ல, புனர்வியா நம்ம காலேஜ் என்பதால் அவளோட ஃப்ரண்ட் லிஸ்ட்ல இருந்தேன். அவளோட பதிவை பார்த்து நவிரன் கண்டிப்பா அது என்னோட கவிதைன்னு கண்டுப்பிடிச்சிருப்பாங்கன்னு தெரியும், அதுக்குப்பிறகு அவங்க என்ன செய்வாங்கன்னு என் மனம் எதிர்பார்த்துட்டு தான் இருந்தது. ஆனா அவங்க என்னைத்தேடி இங்க வருவாங்கன்னு எதிர்பார்க்கல, என்னன்னு தெரியல, நவிரன் என்னைத் தேடி வராங்கன்னு தெரிஞ்சதுமே நான் அவங்களுக்கு எத்தனை முக்கியம்னு உணர்ந்த சந்தோஷத்தில் இருந்தேன். அதில் தான் லூசு மாதிரி பதிவு போட்டுட்டேன். மெசேஜ் அனுப்பினேன்.

நவிரனோ என்னைத் தேட ஆரம்பிச்சிட்டாங்க, திரும்பவும் ஏதாவது தப்பு செஞ்சுடக் கூடாதுன்னு மின்மினி அக்கவுண்ட் பக்கமே நான் போறதில்ல, நவிரன் என்னை கண்டுப்பிடிக்கவே கூடாது, நான் தான் மின்மினின்னு தெரிஞ்சு நவிரன் என்ன முடிவெடுப்பதுன்னு தவிக்க கூடாது.

அதனால ப்ளீஸ் தவா, நான் தான் மின்மினின்னு நீ தெரிஞ்சிக்கிட்டத நவிரனுக்கு சொல்லாத,” என்று புனர்வி கெஞ்ச,

“ஹே லூசு, நீ தான் மின்மினின்னு சந்தேகம் வந்ததே நவிரனுக்கு தான்,” என்று கூற புனர்வி அவளை வியப்பாக பார்த்தாள்.

ஊஞ்சல் ஆடும்..

தொடரைப் பற்றிய் கருத்துக்களை கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

அன்பெனும் ஊஞ்சலிலே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

 

 

 

 

Advertisements