அன்பெனும் ஊஞ்சலிலே – 12 (3)

இங்க வந்தப்பிறகும் கூட ஆரம்பத்தில் உன்னோடவும் ராகாவோடவும் கூட ரொம்ப பேசமாட்டேன். இது நான் சொல்லி உனக்கு தெரியணும்னு இல்ல, அதேபோல் அத்தையும் அத்தானும் என்னை மாத்த முயற்சி செய்வாங்க, பேருக்கு அவங்களோட கொஞ்சம் பேசிட்டு அடுத்து ரூம்க்குள்ள போய் அடைஞ்சுப்பேன்.

இப்படி காலம் போயிட்டு இருந்தப்ப தான் நவிரனோட அறிமுகம் கிடைச்சது. ஃப்ரண்டா சேர்த்துக்கோங்கன்னு ஃபேஸ்புக்ல நவிரனோட போட்டோ வந்துச்சு, எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு ஆர்வத்தில் தான் நான் நவிரனுக்கு ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தேன். கொஞ்ச நாள் பேருக்கு தான் நாங்க ஃபேஸ்புக்ல ஃப்ரண்டா இருந்தோம், அப்புறம் தான் ஒருநாள் நவிரனோட பிறந்தநாளுக்கு அத்தான் வாழ்த்து பதிவு போட்டு பார்த்தேன். அப்போ தான் நவிரன் அத்தானோட ஃப்ரண்ட்னு எனக்கு தெரியும், அக்கா கல்யாணத்தில் அவங்களை பார்த்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு,

அதுக்குப்பிறகு நவிரன் என்னோட கவிதை பதிவுக்கு கமெண்ட் போட ஆரம்பிச்சாங்க, நானும் அத்தானோட ஃப்ரண்ட் தப்பா இருக்க மாட்டாங்கன்னு அவங்களோட இன்பாக்ஸ்ல பேச ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் சாதாரணமா பேச ஆரம்பிச்ச ரெண்டுப்பேரும் அப்புறம் எப்படி நெருக்கமானோம்னு எனக்கு இப்போ வரை தெரியல?

அப்போ உங்கக் கூடவும் இப்போ இருக்க அளவுக்கு க்ளோஸ் இல்ல, காலேஜ்ல பார்த்து பேசிக்கிறதோட சரி, வீட்டுக்கு வந்தா அத்தை கூட கொஞ்ச நேரம் பேசிட்டு அதுக்குப்பிறகு நவிரனோட தான் பேசுவேன்.

ஆரம்பத்தில் நவிரனும் என்னைப்பத்தி தெரிஞ்சிக்க ஆர்வம் காட்டினாங்க, ஆனா நான் இப்போதைக்கு என்னைப்பத்தி சொல்ல முடியாதுன்னு சொன்னதும், அவங்களும் பெருசா எடுத்துக்காம என்கூட பேசுனாங்க, இன்பாக்ஸ்ல நிறைய பேசிக்கிட்டோம், நிறைய விஷயங்கள் எங்களுக்குள்ள ஒத்து போச்சு, மின்மினியா நான் நவிரனோட பேசினதால அதை உங்கக்கிட்ட சொல்லவும் எனக்கு ஒருமாதிரி இருந்துச்சு. சும்மா ஃபேஸ்புக் நட்பு தானேன்னு தான் முதலில் நினைச்சேன்.

ஆனா நவிரனோட ஒருநாள் பேசலன்னாலும் எனக்கு கஷ்டமா இருக்கும், இது என்ன மாதிரி உணர்வுன்னு எனக்கு புரியல, ஆனா அதையும் நவிரன் ஒருநாள் எனக்கு புரிய வச்சாங்க,

என்னை காதலிக்கிறதா அவங்க மெசேஜ் செஞ்சப்ப, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, அது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஆனா நான் என்ன பதில் சொல்வேன். என்னோட பிரச்சனையிலிருந்து வெளிவர்றதுக்காக நவிரனின் மனசோட விளையாடிட்டேனோன்னு இருந்தது. என்னைப்பத்தி எந்த விவரமும் தெரியாமலேயே நவிரன் என்னை காதலிக்கிறாங்க, ஆனா தெரிஞ்சா என்ன செய்வாங்க? நவிரனோட பேசி பழகினாலும் அத்தான் நவிரன் பத்தி சொல்லியும் கேட்ருக்கேன். நவிரனோட எனக்கு கல்யாணம் ஆனா கண்டிப்பா நான் சந்தோஷமா இருப்பேன். ஆனா என்னோட கல்யாணம் நடந்தா நவிரன் வாழ்க்கை சந்தோஷமா இருக்குமா? எனக்கு அந்த கேள்விக்கு விடை தெரியல?

வெளி அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாதுன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். ஆனா நவிரன் என்ன நினைப்பாங்கன்னு எனக்கு தெரியாதே? பேசாம என்னைப்பத்தி நவிரன்க்கிட்ட சொல்லிடலாமான்னு கூட தோனுச்சு, ஆனா அப்புறம் நவிரன் என்ன அவாய்ட் செஞ்சா என்னால ஏத்துக்க முடியாது. அதான் அவங்க கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாம அப்படியே அவங்களோட பேசிட்டு இருந்தேன். இதுக்கு என்னத்தான் முடிவு எனக்கு தெரியல, அவங்க காதலை சொன்னப்பிறகும் அவங்களோட பேசி அவங்களுக்கு நான் பாஸுட்டிவான பதில் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்குகிறேன்னு எனக்கு தெரியுது? ஆனா என்னால அவங்களோட பேசாம இருக்கவும் முடியல, இதை உங்கக்கிட்ட பகிர்ந்துக்க மனசு துடிச்சுது, ஆனா இருட்டில் மின்மினியா உலா வருவதை யாருக்குமே சொல்லிக்க வேணாம்னு மௌனமாகவே இருந்துட்டேன்.

இது எவ்வளவு தூரம் போகும்? அப்படி ஒரு கேள்வி எனக்குள்ள அடிக்கடி தோன ஆரம்பிச்சது. அதுக்கு நவிரன் மூலமா எனக்கு சீக்கிரம் விடையும் கிடைத்தது.” என்று சொல்லி புனர்வி தவமலரின் முகத்தைப் பார்க்க,

“அது என்ன புவி?” என்று தவமலர் ஆர்வத்தோடு கேட்டாள்.

அவளிடம் புனர்வி அதை சொல்லும் வேளையில், நவிரனும் அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

அன்று இல்லத்தில் இருந்தும் திரும்பும் போது யாருக்கோ நடந்த விபத்தில் இவனைப் பற்றி புனர்வி தெள்ளத் தெளிவாக சொன்னதிலிருந்தே மனதில்  அது ஒரு உறுத்தலாகவே இருந்தது. மின்மினி அவனை எப்போது புறக்கணிக்க ஆரம்பித்தாள்.

அது ஒரே நிகழ்வாய் நடக்கவில்லை, அவள் கொஞ்சம் கொஞ்சமாக தான் அவனை புறக்கணிக்க ஆரம்பித்தாள். ஆனால் அதற்கு ஏதோ பெரிய காரணம் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு, அது என்ன என்று தான் தெரியாமல் இருந்தது. இந்த ஒருவார காலமாக அதைப்பற்றி தான் அவன் யோசித்துக் கொண்டிருந்தான். என்ன? என்ன? என்று அவன் மனது கேள்விக் கேட்டுக் கொண்டிருக்க, அதற்கான விடையை மனம் ஆராய்ந்துக் கொண்டே இருந்தது.

அவன் அவளிடம் நிறைய பேசியிருக்கிறான். குறிப்பிட்டு இது என்று ஞாபகம் வைத்துக் கொள்வது கடினம், அந்த அளவுக்கு இருவரும் பேசியிருக்கிறார்கள். அதில் அவனுக்கு எப்போதும் நினைவு வருவதென்றால், அது அவளிடம் காதலை கூறியது மட்டும் தான், மற்றவற்றை மீண்டும் நினைத்து பார்த்தது கிடையாது. அப்படி அதையெல்லாம் நினைத்து பார்த்து தான் அவளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லாமல் அவள் அவன் நினைவில் நீங்கா இடம் பெற்றிருந்தாள்.

ஆனால் இப்போது அவளை ஒதுங்க போக வைத்த நிகழ்வுகளை அவன் நினைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, அதை நினைவில் கொண்டு வர அவன் அதிகம் போராட வேண்டியிருந்தது. ஒரு வழியாக அது அவன் நினைவுக்கு வர ஒரு வார காலம் பிடித்தது.

அன்று அலுவலகத்தில் அவனுக்கு அதிக வேலை, அவனுக்கு அங்கு பகல் பொழுது அவளுக்கு இங்கு இரவு பொழுதல்லவா? அதனால் இருவருமே நேரம் பார்த்து தான் குறுஞ்செய்தி அனுப்பி பேசிக் கொள்ள முடியும், அந்த ஒரு காரணத்திற்காக தானோ என்னவோ அவள் இந்தியாவில் இருப்பதை மட்டும் அவனிடம் சொல்லியிருந்தாள்.

அவனுக்கு விடியற்காலை நேரம், அவளுக்கு அது மாலை நேரம் அப்போது தான் அதிகம் பேசிக் கொள்வார்கள். அது அப்படியே மாறி அவனுக்கு மாலை நேரம் அவளுக்கு விடியற்காலை பொழுது அப்போதும் அவர்கள் பேசிக் கொள்ள ஏற்ற நேரம், பொதுவாக அலுவலகம் முடிந்து வரும் பயணத்தின் போதே, அவளுக்கு ஒரு ஹாய் என்ற குறுஞ்செய்தியை தட்டிவிட்டு, அவள் பதிலுக்கு காத்திருப்பான். அவள் தூங்கிக் கொண்டிருந்தாலும், குறுஞ்செய்தி வந்தால் கேட்கும்படியாக வைத்திருக்கும் சத்தத்தால் அவனது ஹாய்க்கு அவள் பதில் அனுப்புவாள். இப்படியே அவர்கள் பேச்சு தொடர ஆரம்பிக்கும்,

அடுத்த பக்கம்

Advertisements