அன்பெனும் ஊஞ்சலிலே – 12 (2)

“நீ சொல்றது சரி தான், ஆனா நவிரன் இந்தியாக்கு போறேன்னு தான் ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்ருந்தாங்களே தவிர, சென்னைன்னு அதுல குறிப்பிடல, அப்படியிருக்க சென்னைன்னு எப்படி கரெக்டா தெரிஞ்சிக்க முடியும்?”

“அந்த டைம்ல எந்த ஃப்ளைட் எங்க வருதுன்னு தெரிஞ்சிக்க முடியாதா? நவிரன் அங்க இருந்து போஸ்ட் போட்டதும், மின்மினி உடனே பதிவு போட்டுட்டா, ஆனா அதுக்குப்பிறகு தான் அத்தான் எனக்கு சொன்னாங்க, நான் உங்களுக்கு சொன்னேன்.”

“நீ என்ன சொல்ல வர, நம்ம ராகா மின்மினி இல்லன்னு சொல்ல வரீயா?”

“ஆமாம், நம்ம ராகா மின்மினியா இருக்க முடியாது, ராகா கவிதை எழுதுவா தான், ஆனா அவளோட சொந்த பெயரில் தானே அவ கவிதை எழுதுறா, அப்படியிருக்க ராகா எப்படி மின்மினியா இருக்க முடியும்? அதுவுமில்லாம ராகா அவளோட பெயரிலேயே அந்த கவிதை போட்டியில் கலந்துக்கிட்டா, இதில் திரும்ப மின்மினியா வேற அவ அதில் கலந்துக்கிட்டு, அதிலும் முதல் பரிசு வாங்கியிருப்பாளா? அதனால ராகா மின்மினியா இருக்க முடியாது.

அப்புறம் ராகா தான் மின்மினின்னா அவ ஏன் நவிரன்க்கிட்ட தன்னை தெரியப்படுத்திக்காம இருக்கணும், அவ தன்னை தெரியப்படுத்திக்காம இருக்க ராகாக்கு என்ன பிரச்சனை இருக்கு? அவ என்ன அழகா இல்லையா? படிப்பு இல்லையா? இல்லை அவ காதலுக்கு தான் தடையா யாராவது இருக்கப் போறாங்களா? சொல்லு.” என்று புனர்வி கூறவும்,

“ஆமாம் நீ சொல்றதும் சரி தான் புவி, ராகாக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது தன்னை தெரியப்படுத்திக்காம இருக்க? ஒருவேளை உன்னை போல் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்தா கூட அவ தன்னை அடையாளம் காட்டிக்க விரும்பாம இருக்கான்னு சொல்லலாம், ஆனா அப்படித்தான் இல்லையே, அப்போ மின்மினி ராகாவா இருக்காது. அப்படித்தானே?” என்ற தவமலரின் கேள்வியில் புனர்வி அவளை அதிர்ச்சியாக பார்த்தாள்.

“ம்ம் நீ சொல்றது உண்மை தானே? ராகாக்கு என்ன குறை? அவ தான் மின்மினின்னா அப்போ நவிரன்க்கிட்ட அவ தன்னை வெளிப்படுத்திக்க வேற என்ன தடை இருக்கப் போகுது?”

“அப்போ உன்னோட முகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் தான், நீ உன்னை நவிரன்க்கிட்ட வெளிப்படுத்திக்க விரும்பலையா புவி?”

“என்ன உளர்ற தவா?”

“உளரல, நீ தான் மின்மினின்னு சொல்றேன். நீ ராகா மின்மினி இல்லன்னு சொன்ன விஷயங்களை நானும் யோசிச்சேன். எனக்கும் அவ மின்மினியா இருக்க முடியாதுன்னு புரிஞ்சுது. ஆனா அதே விஷயங்கள் உனக்கு பொருந்தி போகுதே? ராகா ரெஸ்ட் ரூம் போயிருக்க சமயத்தில் நீ கூட நவிரனுக்கு மெசேஜ் செஞ்சிருக்கலாமில்ல?”

“நேத்து வழக்கம் போல ஏதாச்சும் துப்பறியும் நாவல் படிச்சிட்டு  தூங்கினியா தவா? உன்னோட இன்வஸ்டிகேஷனை என்கிட்ட ஆரம்பிச்சிருக்க?”

“இது வழக்கமா நம்ம கேலியா, கிண்டலா பேசிக்கிற விஷயமில்ல புவி. நான் சீரியஸா கேட்கிறேன். நீதானே  மின்மினி. இல்லன்னு மட்டும் சொல்லாத, அது உண்மை கிடையாது.

ராகாவை எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும், உன்னை 4 வருஷமா தான் தெரியும், உன்னோட பழைய விஷயங்களை நானோ ராகாவோ தெரிஞ்சிக்க நினைச்சது கிடையாது. ஆரம்பத்தில் அதை உனக்கு ஞாபகப்படுத்த விரும்பல, அதுக்குப்பிறகும் நீ சகஜமா ஆகிட்டாலும், உன்னோட பழைய கதையை கேட்டா எங்க அது உனக்கு சங்கடத்தை கொடுக்குமோன்னு கேட்க நாங்க நினைச்சதே இல்ல,

இப்போ பூர்வி அக்காக்கு போன் போட்டு பேசினேன். நீ முன்ன எப்படின்னு தெரிஞ்சிக்க நினைச்சு கேட்டேன். அதில் அக்கா சொன்ன ஒரு விஷயம் நீ கவிதை நிறைய எழுதியிருப்பது தான், அதிலும் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டு நீ அறைக்குள்ள அடைஞ்சு கிடைக்கும் போது, உன் கையில் எப்போதும் மொபைல் தான் வச்சிருப்பன்னு சொன்னாங்க, அதாவது உன்னோட தனிமையை போக்கிக்க நீ மின்மினியா மாறியிருக்க, அப்படித்தான் நவிரனோடும் பேசியிருக்க, எந்த பாதிப்பு உன்னை நவிரனோடு பேச வச்சுதோ, அதுவே இப்போ நீ நவிரனை விட்டு விலகவும் காரணமா இருக்கு, அப்படித்தானே புவி. சொல்லு நீதானே நவிரனோட மின்மினி?” என்று தவமலர் கேட்டதும், மௌனமாக இருந்த புனர்வி,

ஒருமுறை கண்களை மூடி தன்னை சமன்படுத்தியவள், பின் கண்களை திறந்து, “ஆமாம் நீ சொன்னது உண்மை தான், நான் தான் மின்மினி. ஆனா நவிரனோட மின்மினியான்னு எனக்கு தெரியல? அது தெரியாம தான் நான் என்னை அடையாளம் காட்டிக்காம இருக்கேன்.” என்று உண்மையை கூறினாள்.

“புவி.”

“ஆமாம் தவா, நீ சொன்னது போலத்தான், எனக்கு இப்படி பிரச்சனை வந்ததும், யாரையும் எனக்கு பார்க்க பிடிக்கல, வீட்ல இருக்கவங்க கூட என்னை பரிதாபமா பார்த்தாங்க, எனக்கு காலேஜ் போய் படிக்க பிடிக்கல, ஃப்ரண்ட்ஸோட முகத்தை பார்க்க பிடிக்கல, எனக்கு அப்போ நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்க, அவங்கல்லாம் அடிக்கடி சொல்ற ஒரு வார்த்தை, நீ எப்படி புனர்வி இவ்வளவு அழகா இருக்க? முகத்தில் ஒரு மாசு மறு கூட இல்லாம க்ளியரா இருக்கு, உன்னை பார்த்து எங்களுக்கு பொறாமையா இருக்குன்னு சொல்வாங்க, அது எனக்கு ஒருவித கர்வத்தை கொடுத்தது. அவங்க என்னோட அழகைப் பத்தி பேசறது எனக்கு ஒருவித போதையை கொடுத்ததுன்னு கூட சொல்லலாம், அப்படி அவங்க முன்ன இருந்தவ, இப்போ இந்த முகத்தோட அவங்களுக்கு எப்படி காட்டுவேன். அதான் ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடந்தேன்.

ஆனா அந்த தனிமையும் எனக்கு பிடிக்கல, என்னை அப்படியே ஏத்துக்கிற சில ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்க, என்னை பார்க்க வந்தாங்க, ஆனா அவங்களை நான் பார்க்க விரும்பல, ரூம்க்குள்ள அடைஞ்சு கிடப்பது பைத்தியம் பிடிக்கிறது போல இருந்துச்சு, அப்போ தான் எனக்கு அந்த ஐடியா தோனுச்சு. அப்பப்போ கவிதை எழுதுவேன். அதனால மின்மினி என்ற பெயரில் ஃபேஸ்புக்ல ஒரு அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கவிதையெல்லாம் பதிவிட்டேன். அப்படியே அதில் கமெண்ட் செய்றவங்க கூட இன்பாக்ஸில் பேசுவேன்.

ஆனா சில பேர் நான் என்னைப்பத்தி தகவல் சொல்லாததால ஒருக்கட்டத்துக்கு மேல பேச மாட்டாங்க, சில ஆண்கள் நான் ஒரு பெண்னுன்னு தெரிஞ்சு ஓவரா வழிஞ்சு பேசுவாங்க, சிலர் ஃபேக் ஐடின்னு பேச தயங்குவாங்க, இப்படி அதுவுமே எனக்கு சலிச்சு போச்சுன்னு கூட சொல்லலாம், அதனால நானும் அதிகமா யாரோடவும் பேசறதில்ல,

அடுத்த பக்கம்

Advertisements