அன்பெனும் ஊஞ்சலிலே 12

கௌசல்யாவின் திருமணம் முடிந்து ஒரு வார காலம் முடிந்திருந்தது. அன்று ராகமயாவிற்கு கொஞ்சம் உடல்நலம் சரியில்லாததால் கல்லூரிக்கு வரவில்லை, பொதுவாக மூவரில் ஒருவர் விடுப்பு எடுக்கும் சூழ்நிலை வந்தாலும் மூவரும் சேர்த்தே விடுப்பு எடுத்துக் கொள்வர். ஆனால் செம்ஸ்டர் தேர்வு நெருங்கிவிட்டதால், கல்லூரிக்கு வர வேண்டிய கட்டாயம், அதுவுமில்லாமல் ராகமயா இல்லாத நேரமாக பார்த்து புனர்வியிடம் பேச வேண்டுமென்று தவமலர் நினைத்திருந்தாள். அதற்கு இதுதான் தக்க சமயம் என்பதால், மற்ற இருவருமே கல்லூரிக்கு வந்தனர்.

வழக்கமாக அமரும் மரத்தடிக்கு இருவரும் சென்றுக் கொண்டிருக்க, “ஹே புவி, கௌசல்யா மேம் இன்னைக்கு காலேஜூக்கு வந்தாங்களான்னு தெரியலையே, அவங்களுக்கு போன் போட்டு பேசலாம்னு பார்த்தாலும், அவங்க ஹஸ்பண்ட் என்ன சொல்வாரோ, மேம் எப்படி இருக்காங்க? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க? நாம செஞ்ச காரியத்தால ஏதாவது பிரச்சனை ஆச்சா? இப்படி எதுவுமே தெரிஞ்சிக்க முடியலையே? மேம் எப்போ காலேஜ் வருவாங்கன்னு தெரியலையே, காலேஜில் யாரைக் கேட்டா தெரியும்?” என்று தவமலர் கேட்க,

“நேத்து தான் யோகன்க்கு போன் போட்டு கேட்டேன். மேம்க்கு ஒன்னும் பிரச்சனையில்லை, நல்லா தான் இருக்காங்களாம், அவங்க ஹனிமூன் போயிருக்காங்க, அதனால அவங்க காலேஜூக்கு வர இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்.” என்று புனர்வி பதில் கூறினாள்.

“ஆமாம் யோகன் நம்பர் உனக்கு எப்படி தெரியும்?

” அன்னைக்கு இல்லத்துக்கு போனோமே? அப்போ தான் வாங்கினேன்.”

“மேம் அப்பா, அம்மா என்ன சொன்னாங்களாம்?”

“ம்ம் என்ன சொல்லியிருப்பாங்க, சாபத்தை அள்ளி வழங்கினாங்களாம், மேம் அழுதுக்கிட்டே போயிட்டாங்களாம்,”

“மேம் பாவமில்ல புவி, நாம வேற நம்ம பங்குக்கு மேமை வருத்தப்பட வச்சு அனுப்பினோம், அவங்க அம்மா, அப்பாவும் அழ வச்சு அனுப்பியிருக்காங்க, கல்யாணம் நடந்த அன்னைக்கே இவ்வளவு மனக்கஷ்டம், இதில் அவங்க ஹஸ்பண்ட் என்ன செஞ்சாரோ தெரியலையே,”

“சாம்பவி அத்தை சொன்னது போலத்தான், அவர் எதிர்பார்த்தது போல அழகான மனைவி கிடைச்சிருக்காங்க, அதனால இந்த விஷயங்களை பெருசு படுத்தாம மேமை அன்பா தான் கவனிச்சிக்கிறார். ஒன்னும் பிரச்சனையில்லைன்னு தான் யோகன் சொன்னாங்க, அதேபோல மேமோட அப்பா, அம்மாவும் இப்பவே இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டா எங்க ஏதாவது செலவு வந்துடுமோன்னு கொஞ்ச நாளுக்கு சீன் போடுவாங்க, அப்புறம் சரியாகிடுவாங்கன்னு யோகன் சொன்னாங்க, இப்போதைக்கு மேம்க்கு பெருசா எந்த பிரச்சனையும் கிடையாது.”

“அது எப்போதுமே தொடர்ந்தா நல்லா இருக்கும்.”

“ம்ம் உண்மை தான், சரி அதைவிடு. உன்கிட்ட கொஞ்சம் பேசணும், அதனால நீ கண்டிப்பா காலேஜூக்கு வந்தாகணும்னு நேத்து நைட் சொன்ன, என்னடீ?”

“ம்ம் அதை சொல்லாம எப்படி? முதலில் உட்காரு சொல்றேன்.” என்று அவர்கள் அமரும் மரத்தடி வரவும், அங்கே புனர்வியை அமரச் சொல்லியவள், தானும் அருகில் அமர்ந்து,

“நவிரன் விஷயமா பேசணும், அதுக்கு தான் கண்டிப்பா காலேஜூக்கு வான்னு சொன்னேன்.” என்று தவமலர் சொல்லவும்,

“அடிப்பாவி, இன்னும் இந்த விஷயத்தை விடலையா? நீ அந்த மின்மினிக்கிட்ட உதை வாங்கினா தான் இந்த விஷயத்தை விடப் போறேன்னு நினைக்கிறேன்.” என்று புனர்வி கூறினாள்.

“அப்படியாவது மின்மினி நேரில் வந்தா சந்தோஷம் தான், அப்படியே நேரில் மின்மினியை பார்த்தாலும், அவ என்னை அடிக்க மாட்டா, ஏன்னா எனக்கு மின்மினி யாருன்னு தெரியும், மின்மினிக்கு நான் ரொம்ப நெருக்கம்.” என்று சுடிதாரில் இல்லாத காலரை அவள் தூக்கிவிட்டு சொல்ல,

“ஹே ஏதாவது கனவு கினவு கண்டீயா? உளர்ற,” என்று புனர்வி கேலியாக கேட்டாள்.

“உளரல்லாம் இல்லை, உண்மையை தான் சொல்றேன். நான் மின்மினி யாருன்னு கண்டுப்பிடிச்சிட்டேன். அது யாருன்னா? மின்மினி நம்ம ராகா தான்,”

” என்னடீ புதுசா இப்படி ஒரு ட்விஸ்ட்,”

“புதுசு இல்ல, பழசு தான். ராகமயா தான் மின்மினி. இப்படி தான் நிறைய பேர் சொல்லிக்கிறாங்க,”

“விளையாடாத தவா, சீரியஸா கேட்கிறேன். எதை வச்சு இப்படி சொல்ற?”

“எனக்கு கிடைச்ச தகவல்களை வச்சு தான் சொல்றேன். நீதானே ராகா அடிக்கடி போனை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கான்னு சொன்ன, அவ ஏன் நவிரன்க்கு மெசேஜ் செஞ்சிருக்க கூடாது, அதுவுமில்லாம ராகா கவிதை எழுதுவாளே, மின்மினியோட கவிதையை படிச்சு தானே நவிரன் அவளோட ஃப்ரண்ட் ஆனாங்க?

அப்புறம் கவிதை போட்டில முதல் பரிசு வாங்கினவங்க பேர் மின்மினின்னு நம்ம கௌசல்யா மேம் தான் விசாரிச்சு சொன்னாங்க, அதுவும் அவங்க நம்ம டிபார்ட்மெண்ட், அவங்க பரிசா கிடைச்ச பணத்தை நம்ம சாம்பவி அத்தைக்கிட்ட கொடுத்து நம்ம இல்லத்தில் இருக்க பிள்ளைங்களோட ட்ரீட்மெண்ட்க்கு கொடுக்க சொல்லியிருக்காங்க,

நீயே யோசி, நம்ம டிபார்ட்மெண்ட்ல இந்த அளவுக்கு உதவும் மனப்பான்மையோடு யாராவது இருக்காங்களா? அப்படியே இருந்தாலும் கௌசல்யா மேம் ஹஸ்பண்ட் தனா சார் சொன்னது போல, ஏதாவது அனாதை இல்லம், முதியோர் இல்லம், இல்ல கேன்சர் பேஷண்ட்ஸ்னு உதவாம நம்ம இல்லத்து பிள்ளைங்களுக்கு ஏன் உதவணும்? இதெல்லாம் தான் எனக்கு மின்மினி ராகாவா இருக்குமோன்னு சந்தேகம் வருது.”

“நீ மின்மினியைப் பத்தி இந்த அளவுக்கு கண்டுப்பிடிச்சிருக்கீயா? ஆனா நான் கேட்டப்போ இதுவரை எந்த தகவலும் தெரியலன்னு ஏன் சொன்ன? சரி இதெல்லாம் வச்சு நீ நம்ம ராகா தான் மின்மினின்னு முடிவே செஞ்சுட்டீயா?”

“அதுமட்டுமில்ல, நவிரன் இந்தியா வருவதா சொன்ன அந்த நாள் ராகா ஏதோ யோசனையாகவே இருந்தா பார்த்தீயா? அவ ஏர்போர்ட்க்கு வரவே போறதில்லன்னு சொன்னா? அது ஏன்?

நவிரன் ஃபேஸ்புக்ல போட்ட போஸ்டுக்கு மின்மினியோட ரிப்ளை வந்தது கூட அவ போஸ்ட் பார்த்து ரிப்ளை செஞ்சுருக்கான்னு சொல்லலாம், ஆனா நவிரன் ஏர்போர்ட்க்கு வந்ததும் வந்த மெசேஜூக்கு என்ன அர்த்தம்? கரெக்டா அந்த நேரத்துக்கு மெசேஜ் அனுப்பினது கொஞ்சம் இடிக்கல, நான் ராகாக்கிட்ட ஏர்ப்போர்ட்ல நடந்ததை கேஷுவலா விசாரிக்கறது போல விசாரிச்சேன். நவிரன் வந்த ஃப்ளைட் லேண்ட் ஆனப்போ, ரெஸ்ட் ரூம் போறதா உன்கிட்ட ராகா சொல்லிட்டு போயிருக்கா, அந்த கேப்ல அவ மெசேஜ் செஞ்சிருக்கலாமில்ல?

சரி அது கூட கோ இன்ஸிடெண்ட்னு வச்சிக்கலாம், ஆனா தேடி வந்தது கிடைச்சும், அதை தொலைச்சீட்டீங்கன்னு சம்திங் ஏதோ போஸ்ட் போட்டது கன்ஃபார்மா நவிரனோட விஷயத்தை மின்மினி கவனிக்கிறான்னு புரிஞ்சிக்க முடியலையா? மயூ அத்தான் உன்கிட்ட தான் நவிரன் வர ஃப்ளைட்டோட டீடெயிஸ் சொன்னாங்க, நீ எங்க ரெண்டுப்பேர்க்கிட்ட தான் அதுப்பத்தி சொன்ன, அப்படியிருக்க மின்மினி யாரோன்னா? அவளுக்கு நவிரன் வந்து இறங்கின டீடெயில்ஸ் எப்படி தெரியும்?”

“இது இன்ட்டர்நெட் உலகம் தவா, எல்லாமே இந்த ஸ்மார்ட் போன்க்குள்ள அடங்கியிருக்கு, எதையும் தெரிஞ்சிக்க இது உதவியா இருக்கு, அப்புறம் மின்மினியால நவிரன் வந்ததை தெரிஞ்சிக்க முடியாதா?”

அடுத்த பக்கம்

Advertisements