அதில் நாயகன் பேர் எழுது 9

ப்ரியாவுக்கு முதல் முறை கண்மணி அவளை வந்து பார்த்துச் சென்றதுமே விவனிடம் கேட்க ஏராளமான கேள்விகள் தோன்றிவிட்டன என்றால், நாள் செல்லச் செல்ல அவள் விவனை பார்க்கும் நேரத்தை ரொம்பவுமே எதிர்பார்க்கத் துவங்கினாள்.

அதுவும் கண்மணி வந்து இவளைப் பார்ப்பதில் முதலில் கண்மணி பக்கத்து ப்ரச்சனைகளைப் பற்றி இவளுக்கு கவலை தோன்றினால், அவள் தினமும் வர ஆரம்பிக்கவும் இவள் எங்காவது அவள் முன் மயங்கி விழுந்துவிடுவாளோ என அடுத்த பயம் ஒன்று பற்றிக் கொண்டது.

கண்மணி அவள் மாமியாருடன் வந்திருக்க, இவள் அவர்கள் முன் மயங்கி விழுந்தால்? கண்மணி கண்டிப்பாக கன்னா பின்னானு யோசிக்கப் போறதில்லதான். ஆனா அவளோட மாமியார்? அவங்க வயசுக்கும் அனுபவத்துக்கும் கண்டு பிடிச்சுட்டா?

கண்டு பிடிக்கலைனா கூட சும்மா குறை சொல்லணும்ன்றதுக்காகவே இதை தப்பா பேசினா? அதையும் விட கொடுமை, ப்ரெக்னன்ஸினா வாமிட்டிங் இருக்கும்னு சொல்லுவாங்களே, இவளுக்கு இன்னும் வாமிட்டிங் இல்லைதான், ஆனா இனி வந்தா? அதுவும் அந்த மாமியார் முன்ன வந்தா? இப்படி பல பல பீதி.

இப்படி ஒவ்வொரு முறை ஒவ்வொரு வித பய பாம் வெடிக்கும் போதும் அவளுக்கு அதன் அத்தனை கோபமும் விவனை நோக்கி அப்படியே டைவர்ட் ஆக, அவனுக்காக ரொம்பவுமே காத்திருக்கத் தொடங்கினாள் அவள்.

கண்டிப்பா அவன் ஃபோன் நம்பர் இருந்திருந்தா கூப்பிட்டு நல்லா நாலு கத்து கத்தியிருப்பா, இன்னொரு டைம் கண்மணி இங்க வரட்டும் அப்றம் இருக்குடா உனக்குன்னு. ஆனா அவட்ட அவன் நம்பர் கிடையாது.

அதை கண்மணிட்ட கேட்டு வாங்றது ரொம்பவும் தப்பா போய்டும்னு அடுத்த அஜிடேஷன், ஃபோன் நம்பர் கூட இல்லாம இவங்க எப்படி கல்யாணம் செய்றாங்கன்னு கண்மணிக்கு சந்தேகம் வந்துடக் கூடாதே. ஆக கண்மணிட்டயும் கேட்க முடியவில்லை.

இதில் புதுசா, கண்மணி எதையாவது கேட்டு இவட்ட விவன் நம்பர் இல்லைனு அவளுக்கு தெரிய வந்துடுமோன்னு அடுத்த டென்ஷன். அதையும் தாண்டி அடுத்த லெவலா, கல்யாணம் செய்யப் போறவங்க என்ன பேசிக்கவே இல்லைனு கண்மணிக்கே தோனிடுமோன்னு கழுத்தளவு ஹரார்.

இது இப்படியே ஏறிட்டே போய் விவன நேர்ல பார்த்தா விழுந்து பராண்டலாம்ன்ற அளவுக்கு வந்த அன்னைக்குத்தான் சார் கல்யாணம்ன்ற பேர்ல அதுவும் ஆல்டர்லதான் காட்சி தந்தார். அங்க வச்சு அவன நேருக்கு நேர் பார்த்து முறைக்கக் கூட முடியவில்லை.

அது ஒரு வகையில் இவளது தப்புதான். திருமணம் நடக்க இருந்த அந்த பீச் ரிசார்ட் ஹாலுக்குள் மணப் பெண்ணாய் நுழையவுமே மேடையில் நின்ற விவன் கண்ணில் பட்டான்தான். இங்க இருந்து அவனைப் பார்த்துக்கொண்டே போனா நல்லாவா இருக்கும்?

ஆக பார்வையை அவன் மீது பதியவிடாமல் இடம் மாற்றிக் கொண்டாள்.

அதுவும் இவளுக்கு முன்னால் ஃப்ளவர் கேளாய் குட்டிக் கூடையில் கொண்டு வந்திருந்த பூக்களை அள்ளிப் போட்டுக் கொண்டே சென்ற அந்த குழந்தை பார்க்க படு க்யூட் இருந்ததால், அதையே பார்த்த படி நடந்தாள்.

ஏஞ்சல் போல இருந்த அந்த குட்டிக்கு ஒரு ஒன்றரை வயது இருக்குமாயிருக்கும். வெள்ளையில் முழு நீள ஃப்ராக் அணிந்திருந்த அது முதல் எட்டில் தன் ஃப்ராக் தன் காலை தட்ட கூடாதென பிடிப்பதும், அடுத்த எட்டில் அப்போதுதான் ஞாபகம் வந்தாற் போல அவசரமாய் ஃப்ராக்கை விட்டுவிட்டு கையிலிருந்த கூடையிலிருந்த பூக்களை அள்ளி வீசுவதுமாக இவளுக்கு முன்பாக நடந்து கொண்டிருந்தது.

இதில் மேடைக்கு பக்கத்தில் வரவும், அதுவரை ரிகர்சல் செய்தபடி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த அது இப்போது, “விவி அங்கிள் இங்க பாதுங்க விவி” என்ற படி குடு குடுவென மேடையைப் பார்த்து ஓடிப் போயிற்று.

ஒரு கையில கூடையும் அடுத்த கையில் ட்ரெஸையும் பிடித்துக்கொண்டு தத்தக்கா பித்தக்கான்னு அது ஓடி மேடை படியேறியதைப் பார்க்க படுஅழகாக இருக்கிறதென்றால், ப்ரியாவுக்கு எங்க அது விழுந்துவிடப் போகுதோ என்ற கவலையும் அதிகமாய் இருந்தது.

ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் மேடையின் படிகளுக்கு அருகாக நின்றிருந்த விவன் வந்து அதை கையில் வாரி அள்ளிக் கொண்டான். அதற்குள் அவனுக்கு அடுத்து நின்றிருந்த கண்மணியின் கணவர் மஹி, “மாமாட்ட வாங்க மின்னு குட்டி” என்றபடி குழந்தையை கையில் வாங்க முனைகிறான்.

அவ்வளவுதான் வேகமாக இப்போது விவனின் சட்டை காலரை ஒரு கையால் இறுக்கிப் பிடிக்கிறது அந்த மின்னுகுட்டி. கூடை இருந்த அடுத்த கையால் அவனது கழுத்தையும் இறுக்கி சுற்றி, எதிர்பட்ட அவன் கழுத்துப் பகுதியில் முகத்தை வைத்து அழுத்தி, தலையை வேகமாய் இடவலமாய் அடமாய் அவசரமாய் அசைத்துக் கொள்கிறது. உடலெங்கும் வர மாட்டேன் என்ற பிடிவாதம் வெளிவண்ணமாய்.

“இருக்கட்டும் மஹி” தன் தங்கையின் கணவருக்கு சமாதானமாய் சொன்னபடி விவன் இப்போது குழந்தையை இன்னுமே அரவணைப்பாய் பிடித்தான். இனம் சொல்ல முடியா இளம் புன்னகையுடன் கலந்து அவன் முகத்தில் அனைத்து திக்குமாய் பரவிய அது என்ன உணர்வு? ரியாவின் பார்வையோடு மனமும் அவனின் அங்குதான் நின்று கொண்டிருக்கிறது, ‘குழந்தைங்கன்னா இவனுக்கு ரொம்ப பிடிக்கும் போல,’

அடுத்த பக்கம்

Advertisements