அதில் நாயகன் பேர் எழுது 8

ப்படி ஒரு வார்த்தைகளை அந்த நேரத்தில் ப்ரியா சொல்வாளென விவன் எதிர்பார்த்தானா என்ன?

அவள் சொன்னதை கேட்கவும் அவளைப் பார்த்திருந்த அவன் கண்களில் ஒரு ஃபயர் க்ராக்கர் பட்டென தலை காட்டினாலும், அடுத்த நொடி அவனுக்கு நடந்தது புரிந்து போயிற்று.

‘கட்டையெடுத்து சாத்துவேன்’ என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு, ‘சரி, உன்ன கல்யாணம் செய்து தொலைக்கிறேன்னு சம்மதம் சொல்ற அவ மனசுக்குள்ள என் மேல சின்னதா ஒரு நல்ல ஃபீல் வந்திருக்குது போல, கனவு கண்டிருக்கிறாள்’

விஷயத்தை இவ்வாறு புரிந்து கொண்டான் அவன்.

விவனை பொறுத்தவரை அவனும் ப்ரியாவும் இருக்கும் சூழ்நிலைக்கு அவனது இந்த திருமண முடிவு நியாயமாய் பட்டாலும், அவள் கொஞ்சமும் விருப்பமில்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாள் என்பது ரொம்பவுமே மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது.

‘என்னதான் நியாயமான காரணம் இருக்கட்டுமே, பெண்ணுக்கு இஷ்டம் இல்லாமல் சூழ்நிலை கட்டாயத்துக்காக மட்டுமே செய்ற மேரேஜை எப்படி மேரேஜ்னு சொல்றதாம்? அவன் திருமணம் குறித்து வளர்த்து வைத்திருந்த நம்பிக்கைக்கு, தேவைக்குனு போடுற ட்ராமாவா கல்யாணம்?’ என கனத்துப் போகிறது மனம்.

‘ஒருவேளை ப்ரியா மேல உள்ள விருப்பத்தில் இந்த சிச்சுவேஷனை இப்படி ஹேண்டில் செய்றனோ? உண்மையில் இதைவிட பெட்டரான வழி எதுவும் இருக்குமோ?’ என ஏதேதோ வேறு அடுத்தபக்கமாக அவனுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நிலையைப் பார்க்க பார்க்க மிகவுமே தவித்துப் போகிறது இவனுக்கு.

‘ஏன், எப்படி நடந்துச்சு என பதறுவாளா? இல்லை வரப்போற குழந்தையை, அவளோட எதிர்காலத்தை நினச்சு கதறுவாளா? ஏற்கனவே அவ நார்மலுக்கும் கொஞ்சம் அதிகமாவே சாஃப்ட் நேச்சர்ட் அண்ட் சென்சிடிவ். இதுல இதையெல்லாம் எப்படி தாங்கப்போறா?

என்ன வகையான நிலை இது? எப்படி தாண்டி வரப்போறா? இதில் அவளுக்கு கொஞ்சமும் பிடிக்காத இவனோடு கல்யாணம் வேற!

இவன் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ளத் தயார்தான். ஆனால் அவளைப் பொறுத்த வரைக்கும் பிடிக்காத கல்யாணம்றது தானே நிலைமை.

கட்டாயத்துக்காக கல்யாணம் செய்துடலாம், ஆனா கட்டாயத்துக்காக பிடிக்காத ஒருத்தன் கூட தினம் தினம் எப்படி இருக்க போறா?

இவனுக்கு அவளை பிடித்திருக்கும் அளவில் ஒரு பெர்சென்ட் அவளுக்கு இவனைப் பிடித்தா கூட அவ லைஃப்ப ஸ்மூத்தாக்கிடுவானே இவன்.

இப்படி என்னவெல்லாமோ அவனை ஆகாயத்துக்கும் அடி பாதளத்துக்குமாய் இழுத்தடித்துக் கொண்டிருந்த போதுதான் காதில் விழுகிறது அவளது, “எனக்கு உங்களை ரொம்பவுமே பிடிச்சிருக்குது விவன்”

சடசடவென சத்தமின்றி மொட்டவிழ்கின்றன சில கோடி சிறு மலர்கள் ஜிலீர் குளுமையுடன் இவன் இதயத்துள். விதையின்றி செடியின்றி திடுமென ஒரு பூக்காடு உயிர் தோட்டத்தில்.

சின்ன ஆரம்பம்தானே எல்லா பெரிய விஷயத்துக்கும் தொடக்கம். அவள் மனதிற்குள் இருக்கும் இந்த சின்ன அன்பு சீக்கிரத்தில் வேர் விட்டு விருட்சமாகும். அப்போது அனைத்தும் இவர்கள் வாழ்வில் இன்பமாகும்.

‘இந்த அன்எக்‌ஸ்பெக்டட், ‘ஐ லவ் யூ’க்கு, அப்ப சொல்ல வேண்டிய விதத்தில பதில் சொல்லிக்கிறேன் ஜிலேபி கெண்ட,’ மனைவியாக போகிறவளிடம் மானசீகமாய் சொல்லிக் கொண்டவன், இப்போது இதழ்களில் ஒரு இதமான புன்னகையை மட்டும் கசியவிட்டு,

“கனவு கண்டியா ரியு? அவ்வளவு டயர்டாவ இருக்க? சட்டு சட்டுன்னு தூங்கிடுற? சீக்கிரம் கிளம்பு, வீட்ல போய் தூங்கி நல்லா ரெஸ்ட் எடு” என அவள் சொன்ன வார்த்தைகள், அவள் மனதை மீண்டும் தாக்காதவாறு அதன் அத்தனை கோணத்தையும் மாற்றிவிட்டான்.

எப்படினாலும் எம்பரஸிங்கா ஃபீல் பண்ணுவா, இதுன்னா கொஞ்சம் கம்மியா எடுத்துப்பால்ல.

ஆனால் அப்பொழுதுகூட வாங்கினது பல்ப் பார்சல் என பாய்ண்ட் புரியாத ப்ரியா, என்ன? எங்க இருக்கிறோம்? ஏன்? என்னாச்சு? என எல்லாவற்றையும் ஸ்லோமோஷனில் ஸ்டடி செய்துகொண்டே, கெஞ்சலாக, “தென்காசி கூட்டிட்டுப் போவீங்கதான?” என மானகவசனிடம் கேட்க வேண்டியதை சரியாக மாத்தி விவனிடம் கேட்டு வைத்தாள்.

முன்பு செண்பகப்பொழில் என பெயர் கொண்டிருந்த தென்காசிதான் பாண்டிய மன்னன் பராக்கிரமனின் தலைநகரம் என்பது அவளுக்கு ஞாபகம் இருந்த அளவு, எதிரில் நிற்பவனின் இன்றைய சூழல் எதுவும் அவளுக்கு இன்னும் மனதில் தோன்றி இருக்கவில்லை.

விவனை பொருத்தவரை தென்காசி அருகில் அவனது பூர்வீகம். அதை போனதடவை ப்ரியா கனவு கண்டு உளறினபோதே கேட்டிருந்தாளே. ஆக அவன் ஊரைப்பத்தி ஏதோ கேட்கிறாள் போல என நினைத்தவன், “கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன் ரியு. உனக்கு ட்ராவல் செய்ற அளவு ஹெல்த் வரவும் போய்ட்டு வரலாம்” என ஒத்துக் கொண்டவன்,

“என்னாச்சு ரியா? அடிக்கடி தென்காசி பத்தி கேட்கிற? அந்த ஊர் பிடிக்குமோ? எனக்கும் பிடிக்கும். முன்னால மே மாசம் தவிர அங்க வெதர் எப்பவுமே ரொம்பவும் ப்ளசண்டா இருக்கும். இப்ப எப்படி இருக்குதுன்னு தெரியல” என முடிந்த வரை பேச்சை மிக மிக இயல்பாக்க முயன்றான்.

ஆனால் இத்தனை நேரத்துக்குள் முக்காலுக்கும் முழுசுக்கும் இடையான அளவில் இயல்புக்கு வந்துவிட்ட ப்ரியாவுக்கு மெல்ல மெல்ல தன் உளறலின் மொத்த அளவும் புரிய,

அடுத்த பக்கம்

Advertisements