அதில் நாயகன் பேர் எழுது 5

ப்ரியாவிடம் பேசிக் கொண்டிருக்கையில் அங்கு சிற்பி வந்ததைப் பார்க்கவும் விவன் அதோடு பேச்சை நிறுத்திவிட்டான் எனில், ப்ரியாவும் விவன் பிடித்திருந்த தன் கையை உருவிக் கொண்டாள். ஒருவித அமைதி நிலவியது சில நொடி.

இப்போது இடையிட்டது சிற்பி. “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் விவன் சார்” என விவனிடம் தொடங்கிவிட்டு, பின் ப்ரியாவை பார்த்தவன், “நீங்க கொஞ்ச நேரம் கார்ல இருங்களேன்” என இவளை தூர அனுப்ப முனைந்தான்.

இவளும் இரு ஆண்களையும் ஒரு முறை பார்த்துவிட்டு கடகடவென காரை நோக்கி நடந்தாள். விவனது கார் கதவு திறக்கும் சிக்னல் சவ்ண்ட் காதில் விழுகிறது. போய் திறந்து அமர்ந்து, கதவை ஓங்கி ஒரு அறை.

சிற்பியும் விவனும் கூட அவர்கள் நின்ற இடத்திலேயே நிற்காமல், கார் பார்க்கிங்கிற்கு சற்று அருகாய் வந்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது இவளுக்கு தெரிகிறது. சத்தம் தான் கேட்கவில்லை.

ப்ரியா செல்லவும் அவளுக்கு கார் கதவை ரிமோட் கீயால் திறக்க காரை நோக்கி ஓரளவு நடந்திருந்தான் விவன். அவன் அருகில் சென்றிருந்த சிற்பி மீண்டுமாய் ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்து யாரும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன்,

“எதுக்கு விவன் சார் இப்படி மேரேஜை ரெஜிஸ்டர் செய்தீங்க? அந்த செபின்கிட்ட இருந்து ப்ரியாவ காப்பாத்தவா, இல்ல இந்த ப்ரெக்ன்சி விஷயத்துல ப்ரியாவ சேஃப்கார்ட் செய்யவா?” என ஒரு ஆராய்ச்சி பார்வையுடன் கேட்டான்.

அதோடு, “ப்ரியாவோட பேபி உங்களோடது இல்லைனு மட்டும் தெளிவா புரியுது” என, ‘எனக்கு உண்மை புரியுது உன்னையும் புரியுது’ என்ற ஒரு பாவத்தில் சொல்லி முடித்தான். அவன் பார்வையிலும் குரலில் மரியாதையும் கூட எட்டிப்பார்த்தது.

இதைத்தான் ப்ரியாவை வைத்துக் கொண்டு எப்படி பேச என சிற்பிக்கு தயக்கம். அதனால்தான் அவன் ப்ரியாவை விலக்கி அனுப்புகிறான் என்பதை விவனும் கொஞ்சம் யூகித்திருந்தான்.

விவன் கடைசியாக ப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்த விஷயம் மற்றும் வகையைப் பார்க்க சிற்பிக்கு இப்படித்தான் தோன்றி இருந்தது. ‘குழந்தை விவனோடது இல்லை, ப்ரியா மேல உள்ள காதல்ல அவளுக்கு ஹெல்ப் பண்றதா நினைத்து விவன் இப்படி செய்கிறானோ?’ என ஒரு எண்ணம்.

சிற்பியை நேருக்கு நேராக தீர்க்கமாய் பார்த்த விவன், “இன்னொரு டைம் அது என் பேபி இல்லைனு சொல்லாதீங்க” என சொல்லிய குரலில் இருந்தது கட்டளையும் கட்டாயமும் கூடவே நட்பின் சின்னஞ்சிறு யாசகமும்.

“நான் ஒரு குழந்தையுள்ள விடோவரா இருந்து, ரியா என்னை மேரேஜ் செய்தா என் குழந்தை ரியாக்கு யார்? அதே வகையிலதான் இப்ப ரியாட்ட இருக்கிற குழந்தை என் குழந்தை. ஏன்னா அவ என் வைஃப்” தொடர்ந்து இதை சொல்லும் போது விவன் வார்த்தைகளில் வந்திருந்ததோ ஒரு பிடிவாதம்? அது சிற்பிக்கு பிடிக்கத்தான் செய்கிறது.

சிற்பி முகத்தில் சின்னதே சின்னதாய் ஒரு புன்னகை. அவன் குணத்திற்கு விவன் சொல்வதை, அவனால் மனதிற்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதற்காக விவனின் அப்ரோச் அனைத்தையும் சரி எனவும் அவனால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

அடுத்த பக்கம்

Advertisements