அதில் நாயகன் பேர் எழுது 4

மின்மினியைப் பத்தி தெரியுமே என்ற இவன் பதிலுக்கு அவள் மிரண்ட விதத்தை கவனித்த விவன், தன் முகத்தில் தெரிந்த மலர்ச்சி வடிய, “சும்மா விளையாட்டா சொன்னேன், அதுக்கும் பயந்துக்கிட்டு” என்றபடி எழுந்தான்.

“எதாவது சாப்டு, அப்பதான் அடுத்து என்னனு யோசிக்க தெம்பு இருக்கும்” என்றபடி அறையின் வாசலை நோக்கி அவன் நடக்க,

கடகடவென எழுந்த ப்ரியாவோ, அவனிடம் ஓட்டமும் நடையுமாக சென்றவள், அவனுக்கு முன்னால் சென்று நின்று,

“இல்ல அது என்ன மின்மினி? அது என்ன விளையாட்டு? அது எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்” என படபடத்தாள். ப்ரியாவிற்கு விவன் எதையோ லாவகமாக மறைக்கிறானோ என்ற பயம் வந்திருந்தது.

வழியை மறைத்துக் கொண்டு நின்றவள் முகத்தைப் பார்த்தான் விவன். அவன் முகத்தில் இறுக்கம். சின்ன விஷயத்தை கூட இவன் வகையில் நம்பாதவளை எப்படி சமாளிக்க போகிறானாம் இவன்?

இவன் மட்டுமாய் சமாளிக்கும் விஷயமா இது? அவள் ஒத்துழைப்பு இல்லையெனில் இவன் தனியாக என்ன செய்துவிட முடியும்? வருவது வரட்டும், மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவன்,

“உன் கண்ணு ரெண்டையும்தான் மின்மினினு சொன்னேன். எந்த எமோஷன்ல நீ பேசிட்டு இருந்தாலும் அது அப்பப்ப கண்ணுல வந்து வந்து போகும் உனக்கு. அதைத்தான் சொன்னேன்” உணர்ச்சி ஏதுமற்ற குரலில் அவன் சொன்னாலும், கேட்டிருக்கும் இவள் உணர்வை அது தொடாமலா போகும்?

Advertisements

தொட்டது, கூடவே அவன் சொல்லிய விதத்தில் அவன் விளையாடவில்லை, மனதில் பட்டதை பேசுகிறான் என்பதும் புரிய, அவன் இவளை இத்தனை கவனித்திருக்கிறான் என்ற விஷயத்தை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கணம் விக்கித்தவள், அடுத்து அனைத்துக்குமாய் சேர்த்து வெடித்தாள்.

“அதான் என்னை இவ்வளவு திட்டம் போட்டு நாசமாக்கினாயா நீ? ஏன்டா இப்படில்லாம் செய்து வச்ச? மேரேஜை நிப்பாட்டுறதுன்னா கூட உனக்கு வேற வழி கிடைக்கலையா? ஃப்ராடுத்தனம் செய்து ரெஜிஸ்டர் செய்து வச்சுருக்க? அதுக்கும் மேல இந்த மெடிக்கல் ரிப்போர்ட், குழந்தை கண்றாவின்னு”

மூக்கு விடைக்க உச்சஸ்தாதியில் கத்தலாக இவள் ஆரம்பிக்க, உணர்ச்சி வேகத்தில் இவள் மூச்சு தாறுமாறாக ஏறி இறங்க,

“ஷட் அப் ரியா, ஐ சே ஷட் அப்” அவள் அரண்டு நிறுத்தும் வகையாய் கர்ஜித்தான் அவன். அதில் அவள் மிரண்டு விழித்த பார்வையில் அவன் சற்று இளகிய பாவத்திற்கு வர,

விதிர்விதிர்த்துப் போய் நின்றாள் இவள்.

அவன் கோபப்பட்டு ப்ரியாவிற்கு பார்த்த ஞாபகம் இல்லை. இவள் அந்த காஃபிடேயில் வைத்து கத்திய அன்று கூட அமைதியாக பார்த்திருந்தவன், அப்படியேதான் கிளம்பிப் போனான்.

ஆக இது இவளுக்கு புதிது என்பதாலோ, இல்லை எதிர்பாராத செயல் என்பதாலோ அடுத்து பேச வராமல் இளைக்க இளைக்க இவள் நொடி நேரம் விழிக்க, அவனோ, “காலைல இருந்து இதுக்குள்ள ரெண்டு தடவ மயங்கி விழுந்துட்டியாம். இங்க டாக்டர் வந்து உன்னைப் பார்த்துட்டுதான் போயிருக்காங்க. எழும்பவும் சாப்பாடு கொடுக்கச் சொன்னாங்க. முதல்ல ஒழுங்கா சாப்பிடு.

அடுத்த பக்கம்

Advertisements