அதில் நாயகன் பேர் எழுது 26

தீபனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு விவனுக்கு எதிராக என்னவாக இருக்கும் என குழம்பிக் கொண்டிருந்த ரியா, தன் மொபைலில் அந்நேரம் அறிமுகமில்லா எண்ணிலிருந்து அழைப்பு வருவதை கண்டவள், அழைப்பது தீபனாயிருக்கும் எனத்தான் எண்ணினாள்.

லேப்டாப்பில் எதையோ குடைந்து கொண்டிருந்த விவன் காதில் தன் பேச்சு சத்தம் விழக்கூடாது என எண்ணி கடகடவென குளியலறைக்கு போனவள், அங்கிருந்துதான் இணைப்பை ஏற்றாள்.

ஆனால், “நான் பூரஞ்சக ஆதவனார் பேசுறேன்” என்ற அந்த குரலிலேயே அழைப்பது யார் என புரிந்து, இவள் என்னவென்று பதில் பேச என ஒரு கணம் திகைக்க,

அதற்குள், “என்ன என்னோடத எனக்கு தர்றதுன்னு முடிவு செய்துட்ட போல” என அவரே ஒரு விதமாக கேட்டார்.

“உண்மைய சொல்றேன் தாத்தா. உங்களோடதோ மாசி அண்ணாவோடதோ என்கிட்ட” இவள் அவசர அவசரமாக விளக்க தொடங்க கர்ஜித்தார் அவர்.

“வாய மூடு, என்ன உறவு முறையெல்லாம் உளர்ற?”

ஆமாம், அவர் பூர்வியவே உறவு சொல்ல விட்டதில்லை என்பது இவளுக்கு சட்டென உறைக்க, அடுத்து அவரை எப்படி அழைக்க என தெரியாமல் இவள் திகைத்து நின்ற நேரம்,

“இங்க பார் மாசியோட குழந்த உன்கிட்ட வளருது. அது என் குல வாரிசு. அதை ஒழுங்கு மரியாதையா எனக்கு கொடுத்துடு. அது வளர வேண்டிய இடம், பிறக்க வேண்டிய இடம், எல்லாம் என் வீட்லதான்.

இதுக்கெல்லாம் அந்த மரக்கடைகாரன் குறுக்க வரக் கூடாதுன்னுதான் அவன போட்டுத்தள்ள நினச்சது. அன்னைக்கு எப்படியோ அது கொஞ்சம் லேட்டாகி, அந்நேரம் பார்த்து அவனும் கீழ இறங்கி தப்பிச்சுட்டான். இப்பவும் அவன மட்டுமா காலி செய்யத்தான் ஒவ்வொரு நொடியும் பார்த்துட்டு இருக்கேன். இப்ப நீயாவே வந்து தரேன்னு சொன்னியாமே அந்த தீபன் பயங்கிட்ட.

சொன்னபடி நாளை காலை உன் தெருவுல நிக்கிற என் காருக்கு அந்த மரக்கடைகாரனுக்கு தெரியாம வருவியோ இல்ல அவகிட்ட பேசி வெட்டிவிட்டுட்டே வருவியோ, வந்துட்டன்னா, நீயா வர்றேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக அவன உயிரோட விடுறேன். வந்து பிள்ளைய பெத்து கொடுத்துட்டு அப்பறம் எங்க வேணாலும் போ. இதுதான் நான் உனக்கு தார ஒரே சான்ஸ். நீ என் பக்கம் இருக்க வரைக்கும்தான் அந்த மரக்கடைகாரனுக்கு ஆயுசு, மறந்துடாத”

இப்படி சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

Advertisements

ரியா சர்வமும் நடுங்கிப் போயிருந்தாள். அந்த நாளின் அவளது அதிர்ச்சியின் அளவு மிக அதிகம்.

இன்னுமே குழந்தை வந்த வகைக்கும், அது தெரியாமல் அவள் விவனை மணந்து கொண்ட விதத்துக்கும் ஒரு வகையில் அவள் நிதானபட்டிருக்கவில்லை. அவளை காப்பாற்றிக் கொண்டிருப்பதும், சூழ்நிலையை தாங்க உதவிக் கொண்டிருப்பதும், விவன் மீதான இவளது உயிர்க்காதலும், அதற்கு காரணமான அவனது அடிமுடியற்ற ஆழ்ந்த காதலும்தான்.

இதில் அந்த ஆதவனாரின் பேச்சு அந்த காதல் அஸ்திவாரத்தை அல்லவா அடிக்கிறது. இதற்கு எப்படி உணர வேண்டும் என யோசிக்கக் கூட புரியாதவளாய் போய் அப்படியே படுக்கையில் சுருண்டாள்.

முன்பு போல் இப்படி ஒரு ஃபோன் கால் வரவே இல்லை, ஆதவனார்னு ஒருத்தர் பேசவே இல்லை என நினைத்துக் கொள்ள முயன்றால் அதுவும் துளியும் சாத்தியபடவில்லை.

அந்நேரம்தான் அறைக்கு வந்த விவன், “என்ன ரியு இவ்வளவு சீக்கிரம் படுத்துட்ட? டயர்டா இருக்கா?” என இவளை விசாரித்தபடி அங்கிருந்த கண்ணாடியில் தன் பின்தலையை பார்க்க முயன்றான்.

அவன் காயம் மீதிருந்த பேண்டேஜ் காணாமல் போயிருந்ததே. தலையில் காய தழும்பு காண கிடைக்க, இப்போது இவள் எழுந்து அவனிடம் சென்றுவிட்டாள்.

காயத்திற்கு காரணமான அந்த கார் ப்ளாஸ்டில் துவங்கி, அந்த ஆதவனார் பேச்சு வரை ஞாபகம் வர எப்படி எதை மறக்கவாம்? எது நடக்கவில்லை என நினைக்கவாம்?

“என்னாச்சுப்பா? வலிக்குதா?” அழாதகுறையாக இவனிடம் அக்கறைப்படத்தான் துடிக்கிறது மனம்.

அடுத்த பக்கம்

Advertisements