அதில் நாயகன் பேர் எழுது 25

விவன் சொன்ன விஷயத்தில் தூக்கிவாரிப் போட்டது ரியாவுக்கு. அதோடு அவளுக்கு இப்போது வேறு யாரையும் இத்தனை பிரச்சனைகளுக்கு காரணமாக நினைக்கவும் முடியவில்லை.

மாசி அண்ணாவிற்கு ஒரு தாத்தா உண்டு. ஏதோ ஆதவனார்னு பேர். அண்ணாவின் அப்பாவைப் பெற்றவர். ஜமீன்­­­­­­­­ வம்சம் என்று படு பயங்கர கர்வம் உள்ளவர் அவர் என அண்ணா சொல்லி இருக்கிறார். சகமனிதர்களை நாயளவு கூட மதிக்க மாட்டாராம்.

படு தீவிர கெமிஸ்ட்ரி ஃப்ரீக்காம். மந்திரவாதின்னு பக்கத்துல உள்ளவங்கல்லாம் அவரைப் பார்த்து பயப்படுற அளவு கெமிஸ்ட்ரில புகுந்து விளையாடுவாராம். வீட்லயே அவருக்குன்னு ஒரு லேப் உண்டாம், அதுவே கதினுதான் இருப்பாராம்.

‘அவர் அதுக்குள்ளயே இருந்துட்டா பரவாயில்லையேனு இருக்கும், வெளிய வந்துட்டா சகமனுஷங்கள உயிரோட வதைப்பார்’ என அண்ணா சொன்னதாக ஞாபகம். அண்ணா வளர்ந்தது அவரது வீட்டில்தான்.

இருந்தும் அண்ணாவின் திருமணத்தில், ‘வேண்டாம்’ என சொல்லக்கூட இவர்கள் வீட்டுக்கு அவர் வந்தது கிடையாது. அண்ணாவின் மரணத்திற்கு அவரிடம் சொல்ல கூட இவளுக்கு அவர் பற்றி எதுவும் தெரியாது. அவருக்கு விஷயம் தெரியுமா தெரியாதா என கூட தெரியவில்லை.

ஆனா இப்ப எதுக்கு அவர் இவள துரத்துறார்? அதுவும் இப்படி? விவனுக்கு வேறு ஆக்சிடெண்ட், ஏன்?

ஒரு வேளை குழந்தைக்காகவா எல்லாம்?

இந்நினைவில் திக் என்கிறது இவளுக்கு. தாத்தா என்ற வகையில் அவருக்கு இல்லாத உரிமையா இவளுக்கு?

கை அதுவாக அடிவயிறைப் பிடிக்க மனம் மிரள்கிறது.

ஆனா அப்படின்னாதான் குழந்தை பிறக்கவும் வந்து அவர்பாட்டுக்கு தூக்கிட்டு போலாமே! சரகேட்டிவ் மதரான இவளால அழுதுட்டு வேடிக்கை பார்க்கிறத தவிர என்ன செய்துட முடியும்?

அதவிட்டுட்டு இப்ப இவள பாடாபடுத்தினா இந்த குழந்தை நிலைக்கும்னு கூட சொல்ல முடியாதே!

அப்படின்னா அவர் நோக்கம் குழந்தை இல்லை போல,

அக்காவ அடுத்த ஜாதின்னு கண்ணால கூட பார்க்காத ஒருத்தரா இப்ப அவ குழந்தைக்காக இப்படி அலையுறாராம்?

இது வேற என்னமோ போல, இவள் மனம் சற்று ஆசுவாசமானது,

ஏதோ பொக்கிஷம் கொள்ளைன்னு கதை சொன்னாங்களே! ஒரு வேளை ஜமீனோட வேலியபிள் எதுவும் மாசி அண்ணாட்ட இருந்திருக்குமோ? அதை இவ எடுத்துட்டு வந்துட்டானு நினைக்காரோ? ஆனா அதுக்கு ஏன் இப்படி ட்ராமா?

அவர் திட்டம் புரிபடவில்லை எனினும், அவர் விவனை குறிவைக்கிறார் என்ற நினைவில் விதிவிதிர்த்துப் போனாள் இவள்.

‘தாத்தா பிடிச்சா பிடிவாதம்தான், அவர் மனதை யாராலும் மாத்த முடியாது, எந்த பழி பாவத்துக்கும் அஞ்சமாட்டார், பணத்த வச்சு எல்லாம் சாதிச்சுடலாம்னு நினைப்பார்’ அண்ணாவின் இந்த வார்த்தைகளும் ஞாபகம் வருகிறது.

அப்படின்னா இப்ப விவனோட கதி?

இவளுக்கு நெஞ்சில் புளியை கரைத்தது. இவள் முகத்தையே விவன் பார்த்துக் கொண்டிருப்பதை இப்போதுதான் உணர்ந்தவள் உதட்டை இழுத்து வைத்து சிரிக்க முயன்றாள்.

விவனிடம் விஷயத்தை சொல்லி அவனை நேரடியாக அந்த தாத்தாவிடம் அனுப்ப துளியும் தைரியமில்லை இவளுக்கு. குழந்தை பத்தி போலீஸுக்கோ யாருக்குமோ தெரியக் கூடாதுனு நினைக்கிறவன், எப்படியும் குழந்தை விஷயம் தெரிந்திருக்கும் இந்த தாத்தாகிட்ட அவனேதான் போய் நிப்பான்.

இந்த குழந்தை விஷயத்தில் இவள் கஷ்டப்படுவதாவது ஒரு வகையில் இவளோட சாய்ஸ். இவதானே நான் செய்றேன்னு சொல்லி வம்ப இழுத்துக்கிட்டது. ஆனா விவன் இவளோட அந்த ஒரு முடிவால இன்னைக்கு வரை எவ்வளவு இழுபட்டாச்சு, இதில் இதுவுமா?

‘என்ன இருந்தாலும் அந்த தாத்தாவ நான்தான் நேரில் சந்திக்க வேண்டும்’ என முடிவு செய்துகொண்டாள். எப்படியும் இவளை அந்த தாத்தா ஒன்னும் செய்யலையே, ஏதோ வகையில் குழந்தை விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. மாயக்குழந்தை அது இதுன்னு கதை சொன்னாங்களே. ஆக மாசி அண்ணா மேல உள்ள இரக்கத்துல இவளை டெலிவரி வரைக்குமாவது ஒன்னும் செய்ய மாட்டாங்களா இருக்கலாம்.

அடுத்த பக்கம்

புதினம் 2020 – The Contest

asswertyu

Advertisements