அதில் நாயகன் பேர் எழுது 24

ட்டென விரிகிறது ரியாவின் மனக்கண்ணில் அந்தக்காட்சி. அவளது அக்கா ஏன் அழுதாள் என்ற கேள்விக்கும் விடை அதுவே.

ஹாஸ்பிட்டல்ல நின்னு அப்படி ஒரு அழுகை அழுது கொண்டிருந்தாள் பூர்விக்கா. அதைக் கண்டதும், கண் முன் தன் மனதுக்கு பிடித்தவர் துடிக்கும் நேரம் அவர்களுக்காக எந்த எல்லைக்கும் போகககூடிய இவளது உணர்ச்சி வசப்படும் மனதினால் ரியாதான் அப்படி ஒரு தப்பை செய்து வைத்தாள். தப்பா அது? இல்லை குற்றம், ஆம், நிச்சய நிச்சயமாய் அது மாபெரும் குற்றந்தான்!

திருமணமானதிலிருந்தே குழந்தைக்காக ஏங்கி இருப்பவள் பூர்விக்கா. ஆனால் ஏனோ எல்லாம் நார்மல் என டாக்டர்ஸ் சொல்லியும் அவள் குழந்தை உண்டாகவே மூன்று வருடமானது. அதுவும் ஆறாம் மாதம் இறந்தே பிறந்துவிட்டது.

அதன் பின்னர்தான் சொன்னார்கள் அவளுக்கு பிறப்பிலேயே ஏதோ ஒரு எலும்பு சற்று வித்தியாசமாய் அமைந்திருக்கிறதாம். அது குழந்தை வளர தேவையான அளவு கருப்பையை விரியவிடாமல் தடுக்கிறதாம். ஆறு மாத அளவை விட குழந்தை பெரிதாகவும் இப்படி ஆகிவிட்டதாம். அடுத்த முறை ஏதோ ஸ்டிச் போட்டு எப்படியோ காப்பாற்றிவிடலாம் என்றார்கள்.

ஆனால் எது என்ன செய்தும், அடுத்து நான்கு வருடத்தில் இன்னும் இரண்டு குழந்தைகள் ஆறாம் அல்லது ஏழாம் மாதம் இறந்தது மட்டுமே நிகழ்ந்தேற, இன்னும் இன்னும் உண்டாக்கி என் பிள்ளைகளை நானே சாவுக்கு அனுப்ப எனக்கு முடியாது என்ற மனநிலைக்குத்தான் அக்கா வர வேண்டியதாகியது.

புதினம் 2020 – போட்டியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த இணைப்பை தேர்ந்தெடுங்கள். 

புதினம் 2020 – The Contest

ஆனால் மாசி அண்ணா தன் கல்யாணத்தின் நிமித்தம் தன் குடும்பத்தை துறந்து கொண்டு வந்தவர். பூர்விக்கும் குடும்பம் என்று ரியாவைத் தவிர யாருமில்லை. தங்களுக்கு வாரிசும் இல்லாமல் போவதா என்ற அக்காவின் தவிப்பு அடங்கவே இல்லை.

அதன் பின்தான் வேறுவழி இன்றி சரோகேட் மதர் எனப்படும் அடுத்த பெண்ணின் கருப்பையை வாடகைக்கு எடுக்கும் வாடகை தாய் முறையில் தன் குழந்தையை பெற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தாள் பூர்விக்கா.

அதாவது அக்கா மற்றும் மாசி அண்ணாவின் உயிரணுக்கள் டெஸ்ட் ட்யூபில் இணைய செய்யப்பட்டு கருவாகி, அக்கருவை வாடகைத்தாயின் கருப்பையில் வைத்து வளர்த்தெடுக்க வேண்டும் என ஏற்பாடு. குழந்தை முழுக்கவும் அக்கா மற்றும் அண்ணாவுடையதே, சுமக்க மட்டுமே அந்த வாடகை தாய் எனும் கருவி.

எத்தனையோ டெஸ்ட் அக்காவுக்கும் மாசி அண்ணாவுக்கும். வாடகை தாயாக ஒரு இளம் பெண்ணையும் மருத்துவமனையே ஏற்பாடு செய்து கொடுத்தது. அக்காவின் வயது காரணமாகவும் இன்னும் ஏதேதோ காரணங்களாலும் அவளிடமிருந்து சினை முட்டைகளை சேகரிக்கவே திண்டாட்டமாக இருந்தது போலும்.

ஆனாலும் ஒரு வழியாய் எத்தனையோ இடையூறுகளுக்குப் பின் டெஸ்ட் ட்யூபில் கரு உண்டாகி விட்டது. அதுவும் ஒன்றே ஒன்று. பொதுவாக சில கருக்கள் உண்டாகும் போலும்.

அந்த ஒற்றைக்கருவை வாடகை தாய் கருப்பைக்குள் செலுத்த வேண்டிய நேரம் அந்தப் பெண் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டாள். பயந்துவிட்டாளா பிடிக்கவில்லையா என தெரியவில்லை.

அது தெரியவும்தான் அக்கா அப்படி அழுததே. கருவை உடனடியாக கருப்பைக்குள் வைக்க வேண்டும் அல்லது, ‘க்ரையோ ப்ரசர்வேஷன்’ என்ற முறையில் பதப்படுத்தி மீண்டும் வேறு ஒரு வாடகை தாயை ஏற்பாடு செய்து, அதன் பின் இக்கருவை கருப்பைக்குள் செலுத்த வேண்டும்.

ஆனால் அப்படி பாதுகாக்கப்படும் கரு கருப்பைக்குள் செலுத்தப்படும் முன் இறந்து போகும் வாய்ப்பு அதிகமாம். அக்காவுக்கு, ‘தனக்கு குழந்தைப்பேறே இனி இல்லை’ என்ற உணர்வு உறுதியாக தோன்றிவிட அப்போதுதான் அப்படி துடிதுடித்து அழுதாள் அவள்.

அந்த உணர்ச்சிமயமான நேரத்தில் தான், இன்று வரை குழந்தைக்காக அக்காபடும் அனைத்தையும் பார்த்திருந்தவள் அல்லவா. ரியா இப்படி ஒரு முடிவுக்கு வந்தாள். தானே அக்குழந்தையை சுமந்து பெற்று தருவதாக முன் வந்தாள். ஒரு நிமிட நேரத்தில் எடுத்த முடிவு.

இவள் சொல்லவும் மாசி அண்ணா பூர்வி இருவரும் முதலில் திகைத்து நிமிட நேரம் தயங்கினாலும் குழந்தைப் பேறு என்ற ஏக்கம் ரியாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற நினைவை ஏப்பமிட, அடுத்து இவளை யோசிக்கவெல்லாம் விடவில்லை அவர்கள்.

‘எப்படியும் இதுல பாவமா என்ன இருக்கு? கற்பு ஒழுக்க விதிகளை எங்கயும் மீறலையே. இன்னொரு பொண்ணுக்கு இதை செய்யுறதாத்தானே இருந்தோம்!’ என எதேதோ அவர்களுக்கும் இவளுக்குமாய் சொல்லிக் கொள்ள,

டாக்டரை சந்தித்து அதற்குள் இவள் மீது சரகோட் மதர் பதம் ஸ்டாம்ப் ஆகியது.

அடுத்து வரிசையாய் டெஸ்ட்கள். எதையும் யோசிக்காமல் இவள்.

அடிப்படை டெஸ்ட்கள் முடிய முதலில் அவளுக்கு சோனோஹிஸ்டெரோக்ராஃபி ஆரம்பிக்கவும்தான் தன் நிலையை ரியா உணர துவங்கியதே.

“ரொம்ப சிம்பிள் ப்ரொசீசர். பயப்பட ஒன்னுமே இல்ல ரியாம்மா. சேஃபானதும் கூட! ஸ்பெக்குலம் போடுறப்ப மட்டும் கொஞ்சமே கொஞ்சம் வலிக்கும். நீதான் எப்பவுமே இஞ்செக்ஷனுக்கு கவலப்படமாட்டியே, ஈசியாதான் இருக்கும்” என சொல்லித்தான் அக்கா அந்த அறைக்குள் அனுப்பி இருந்தாள். ஆக, இவள் இஞ்செக்ஷன் போல் ஏதோ என்ற நினைவில் படுத்திருந்தாள்.

திருமணமாகி சில வருடமாவது கணவனுடன் வாழ்ந்து குழந்தைக்கும் பெரிதாய் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கே இந்த ஸ்கேன் எப்படி இருக்குமோ? குழந்தைக்காக என தாங்க முடியுமாய் இருக்கலாம்!

இவளோ கன்னியல்லவா? உடை மாற்றும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை ஜன்னல் திரைகள் ஒழுங்காக இழுத்துவிட்டிருக்கிறதா என சோதித்துவிட்டு, தன்னைத்தானே கூட பார்க்காது செயல்படும் ஒழுக்க முறை மனது வேறு.

அடுத்த பக்கம்

Advertisements