அதில் நாயகன் பேர் எழுது 2 (2)

கூட்டம் கூடிவிடக் கூடாதென வரவழைத்துக் கொண்ட சிறு குரலில் பல்லை கடித்தபடி சீறிக்கொண்டிருந்தான் சிற்பி, “கேட்க ஆள் இல்லைனதும் என்ன வேணாலும் செய்வியோ?”

சிற்பி அப்படி ஒன்றும் ப்ரியாவிற்கு பழக்கம் கிடையாது. அவள் இந்த அலுவலகத்திற்கு வேலைக்கு வந்து இன்னும் முதல் மாத சம்பளம் கூட வாங்கி இருக்கவில்லை. இங்கு வந்தபின்தான் ராகா அறிமுகம். அந்த அறிமுகம் சட்டென நட்பாக மாறி துளிர்க்க, அவளை மணக்க இருப்பவன் என்ற அடிப்படையில் மட்டுமே சிற்பியை இவளுக்குத் தெரியும்.

பார்த்தால், “ஹாய் ப்ரியா” என்பதோடு கடந்துவிடும் அளவிற்குத்தான் அவன் சுபாவமும். இதில் இவளுக்காக இப்படி நடு ரோட்டில் நின்று சண்டைக்கு போவதென்றால்?

“ரோட்ல எதாவது ஆக்சிடெண்ட்னா பார்த்துட்டு சும்மா வந்துடமாட்டாங்க அவங்க, போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டுத்தான் வருவாங்க” ராகா சிற்பி பத்தி சொன்னது ஞாபகம் வருகிறது இவளுக்கு.

‘ஓ! அந்த குணம் போலும் இது”

இதற்குள் செபின் தன் காலரிலிருந்த சிற்பியின் கையை எந்த பதிலும் சொல்லாமல் மெல்ல உருவி எடுத்தான்.

“இந்த ஸ்டேஜ்ல கொண்டு வந்து கல்யாணத்த நிறுத்துறது நான் இல்ல. அங்க சர்டிஃபிகேட்ல பார்த்தீங்களே அந்த அவன், ஏதோ ஜெரோம்னு போட்ருந்துதே. கேட்கிறதுன்னா அவன போய் கேளுங்க சார். லீகலி அவ்வளவு டாகுமென்ட்லயும் ப்ரியா அவன் வைஃப்னு ரிகார்ட் ஆகி இருக்குது. இதுல எப்படி இவங்களுக்கு நான் விசா வாங்கி, யூ எஸ் கூட்டிப் போக?

நான் க்ரீன் கார்டுக்காக மூவ் பண்ணிட்டு இருக்கேன் அங்க. அதுக்காக எங்க மேரேஜ் யூஎஸ்ல இருந்து டாகுமென்ட் வெரிஃபிகேஷன் செய்றப்ப இல்லீகல் மேரேஜ்னு வேற தெரிய வர சான்ஸ் அதிகம். முக்கியமா என் வைஃப் இங்க இருக்குறதால நான் இன்டியால இருக்க ஆசைப்படுறேன்னு அவங்களுக்கு தோணும். அப்ப என் க்ரீன் கார்ட நான் மறந்துட வேண்டியதான்” செபின் எகிறி குதிக்காமல்தான் விளக்கம் சொன்னான். ஆனால் குரலில் தொனியில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

“அதுக்காக, உன் க்ரீன் கார்டுக்காக?” சிற்பியோ இன்னும் கோபத்தைக் குறைப்பதாய் இல்லை.

“புரியாம பேசாதீங்க சார், க்ரீன் கார்ட்னா சும்மாவா? அதுக்காக நான் எவ்வளவு இயர்ஸ் அண்ட் மனி ஸ்பென்ட் பண்ணியிருப்பேன். அதோட எவ்வளவு ப்ளான்ஸ் அண்ட் ட்ரீம்ஸ்” செபின் பல்லை கடித்தபடி தொடர,

இதற்குள் ப்ரியாவோ, “விடுங்க சிற்பி, ரொம்ப டயர்டா இருக்குது. ஒரு ஆட்டோ பிடிச்சு தாங்களேன் ப்ளீஸ். வீட்டுக்குப் போய்டுவேன்” குரல் முகம் எல்லாவற்றிலும் களைப்பு தெரிய கேட்டாள். அதோடு செபினுடனான இவளது திருமண ஏற்பாட்டுக்கும் அவள் முற்றுப்புள்ளி வைக்கிறாள் என்பது சிற்பிக்கும் புரிகிறதுதானே.

நடப்பதை மௌன குமுறலுடன் பார்த்துக் கொண்டிருந்த ராகாவோ. “இப்போ ப்ரியா இருக்ற நிலைமைக்கு முதல்ல ரெஸ்ட் எடுக்கட்டும் சிபி. ஷாக் சரியானதும் நாம பேசிக்கலாம்” என செய்ய வேண்டியதை துரிதப்படுத்த,

அடுத்து சிற்பி அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து அழைத்து வந்த ஆட்டோவில் ப்ரியாவும் ராகாவும் பயணிக்க தொடங்கினர்.

“அரும்பாக்கம் சிக்னல் பக்கம் போய்டுங்க” ராகா ஆட்டோ ட்ரைவரிடம் சொல்ல ப்ரியா மறுப்பேதும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்குதான் ராகாவின் வீடு.

அடுத்த பக்கம்

Advertisements