அதில் நாயகன் பேர் எழுது 2

யக்கம் தெளிந்து விழித்த ப்ரியாவை, “வா ப்ரியா, வீட்டுக்கு கிளம்பலாம்” என்ற செபினின் உணர்ச்சி துடைத்த குரலே முதலில் தொட்டது. அவன் முகத்தில் பெரிதாக எந்த உணர்ச்சியும் காட்டப்படாத போதும் அவன் அந்த சூழ்நிலையில் நிற்பதை சுத்தமாக விரும்பவில்லை என்பது மாத்திரம் அவளுக்கு புரிந்தது. மெல்ல சுற்றிலும் பார்த்தாள்.

மயங்கி விழவும் அந்த அலுவலகத்தில் கிடந்த ஒரு பெஞ்சில் இவள் கிடத்தப்பட்டிருப்பாள் போலும். அதில்தான் படுத்திருக்கிறாள் இப்போதும். வேக வேகமாக இவள் எழுந்து கொள்ள முனைய, மீண்டுமாய் சின்னதாய் தள்ளாடுகிறது இவளுக்கு. எழுந்து உட்கார்ந்தவள் தலையை பிடித்துக் கொண்டாள்.

இவளுக்கு அந்த விவனுடன் கல்யாணம் பதிவாகியிருக்கிறது என விளக்கமாக விளக்கிக் கொண்டிருந்தாரே அந்த அலுவலர், அவர் இப்போது முகத்தில் சற்று அக்கறையும் சின்ன குற்ற உணர்ச்சியோடும் நின்றிருந்தார்.

“இப்பவும் ஒன்னும் இல்லம்மா, நீங்க இவ்வளவு பயந்துக்க வேண்டாம். ஏற்கனவே பொண்ணுக்கோ மாப்பிளைக்கோ மேரேஜ் பதிஞ்சிருக்கா இல்லையான்னு பார்க்கிறதெல்லாம் எங்க வேலை கிடையாதும்மா. ஒரே ஃபோட்டோ ஒரே அட்ரஸ்னதும் உங்களுக்கு அனௌன்ஸ்மென்ட் போட வேண்டியவர் குழம்பிப் போய் போடாம வச்சுருப்பாரா இருக்கும். இதுதான் உண்மை கல்யாணம்ன்றப்ப இப்ப அனௌன்ஸ்மென்ட்டுக்கு கொடுத்துட்டு போங்க. இன்னும் முப்பது நாள் கழிச்சு ரிஜிஸ்டர் செய்துடலாம்” என இவள் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன அவர்.

புதினம் 2020 – The Contest ரூ50,000 பரிசு வெல்ல வாய்ப்பு. நாவலாசிரியர்களும் வாசகர்களும் கலந்து கொள்ளலாம்.

“என் பொண்ணுக்கு இப்பதான்மா கல்யாணம் கூடி இருக்கு. உன் கல்யாணத்த நான் கலச்சேன்னு இருக்க வேண்டாம்மா. உனக்கு சொந்தம், குடும்பம்னு யாரும் இல்லன்னு வேற உன் ஃப்ரெண்ட்ஸ் சொல்லிக்கிட்டாங்க” அவர் ஏன் தீர்வு சொல்கிறார் என்ற காரணத்தையும் இப்படி வெளியிட்டார்.

இவள் இப்போது செபினின் முகத்தைப் பார்த்தாள்.

“கிளம்பலாம் ப்ரியா” இது மட்டும்தான் அவனிடம் இருந்தது, வாசலை நோக்கி நடக்க தொடங்கினான் அவன்.

அவனை பின் தொடர்ந்த ப்ரியாவினால் எதையும் தொடர்ச்சியாக நினைக்கக் கூட முடியவில்லை. இந்த செபின் என்ன செய்ய போகிறான்? ‘நேரம் இல்ல, எல்லாத்தையும் சீக்கிரம் செய்யணும்’ என பறந்து கொண்டிருந்தானே அவன். அதற்கு மேல் அந்த திசையில் ஓடவில்லை அவள் மனம்.

இந்த விவன் ஏன் இப்படி செய்து வச்சான்? காதலா? காதலிக்கிறவன் செய்ற வேலையா இது? இல்ல அவன் பொண்ணு கேட்டு வந்தான்ல, இவ மாட்டேன்னு சொன்னதும் பழி வாங்கி இருக்கானா? அதை தாண்டியும் நினைக்க பிடிக்கவில்லை இவளுக்கு.

இதற்குள் இவர்கள் கார் அருகில் வந்திருக்க, இவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சிற்பியைப் பார்த்த செபின், “ப்ரியாக்கு ஒரு ஆட்டோ அரேஞ்ச் செய்து அனுப்பிடுவீங்களா? எனக்கு இங்க ஆட்டோ எடுக்க தெரியாது” என்றான் வெகுசாதாரணமாக.

அவ்வளவுதான் சட்டென செபினின் சட்டையை பிடித்துவிட்டான் சிற்பி, “என்னடா பேசுற நீ? ஒரு பொண்ணுகூட கல்யாணம்னு இந்த அளவுக்கு கொண்டு வந்துட்டு இப்ப விட்டுட்டு ஓடுறேன்னு சொல்லிட்டு இருக்க?”

அடுத்த பக்கம்

Advertisements