அதில் நாயகன் பேர் எழுது 19

ரியாவிற்கு ராகாவிடம் சற்று மனம் திறந்து பேசியபின் மிகவுமே உற்சாகமாக இருந்தது. அதிலும் ராகா சொன்னது போல் விவனிடம் திடுதிப்பென இவள் போய் நின்ற நிலைக்கு இவள் பணத்திற்காக நாடகம் போடுறானு சொல்ல அவனுக்கு எவ்வளவு நேரமாகி இருக்கும்?

ஆனால் அதுக்கு முன்னால் இவள் அவனை வேண்டாம் என சொன்னதை வைத்து, இவள் சூழ்நிலை, நோக்கம், மன நிலை என எல்லாவற்றையும் மிக சரியாகவே புரிந்து இவளிடம் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறான் அவன்.

அப்படினாலே அவன் இவள நம்புறான். இவள பெண் கேட்டு வந்தப்ப அவனுக்கு இருந்த விருப்பம் இன்னும் இருக்குது அப்படின்னுதானே அர்த்தம்?

ஆனா இவதான் அவன்கிட்ட தீயா காஞ்சு வச்சுருக்காளே! அவன் எப்படி எதை நம்பி இப்ப இவகிட்ட தன் விருப்பத்தை வெளியிடுவானாம்?

இவளுக்கு விருப்பம் இல்லைனு புரிஞ்சு வச்சுருக்கவன் விலகிப் போகத்தானே செய்வான்! இப்படியாய் ஒரு புரிதல் அவளுக்கு. அதன் பின் வெகு தெளிவாகவே உணர்ந்தாள் அவள்.

‘நானாதான் மனசுவிட்டு பேசியாகணும்!’ முடிவு செய்து கொண்டாள் ரியா.

முடிவெடுப்பது கூட கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும் போலும். ஆனால் அவனிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்ற நினைவு அவளை சந்தன புயலாய் சாக்லெட் வெள்ளமாய் தாக்கியது! எப்படி சொல்வாளாம் இவள்?

ராகா கிளம்பும் முன்னே இந்த முடிவுக்கு வந்துவிட்ட ரியா, அடுத்து ராகா சிற்பியை வழி அனுப்ப வாசல் வரை செல்லும் போது கூட விவனை நேருக்கு நேராய் பார்க்கத் தடுமாறினாள்.

அவன் இருக்கும் ஹாலுக்குள் வர மறுத்தன இவள் கால்கள்! அவன் எதிரில் செல்ல பயங்கர ஹார்மோன் யுத்தம்! அவன் பார்வைக்குள் விழவும் சரவெடியாய் இவள் தேகம்! அவள் அவயமெங்கும் அதி தித்திப்பாய் அப்படி ஒரு அவஸ்தை! அவன் அருகில் நிற்கவோ ஆயிரம் வோல்ட்ஸ் மின்சாரத்தில் நிற்பதாய் உணர்வு! அவனை தப்பித்தவறி கூட அடுத்து நேருக்கு நேராய் பார்த்துவிடவில்லை இவள்!

இப்போது வீட்டு வாசலில் சிற்பியோடு ராகாவை வழி அனுப்ப என விவனுக்கு அடுத்து இவள் நின்றிருக்கிறாள்.

பைக்கில் பில்லியனில் ஏறிய ராகாவையே இவள் வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள். அடுத்து நிக்கிற விவன் தப்பித்தவறி கூட இவ கண்ல பட்டுடக் கூடாதே!

இதில் இவள் முடிவை அறிந்திருந்த ராகா கண் ஜாடையில், ‘கண்டிப்பா சொல்லிடு, ஆல் த பெஸ்ட்’ என சொல்கிறாள்.

அதைப் பார்த்திருந்த விவனுக்கு ஏதோ அவங்க ரெண்டு பேரும் இவன் சம்பந்தமா பேசிக்கிறாங்கன்னு புரியாம இருக்குமா என்ன?

இப்போது அவன் என்னவென்று இவளைப் பார்த்தான். அவன் பார்வை தன் மீது விழுகிறது என்பதே இவளை ஆயிரம் விறகிட்ட அடுப்பாய் எரிய வைக்கிறதே!

அதையும் விட அவன் கேட்கிற கேள்விக்கு பதில், ‘ஐ லவ் யூ’ என்பதின் ஏதோ ஒரு வெர்ஷன் அல்லவா?!

வெட்க நோயோடு குடம் குடமாய் ஆனந்த ஆசிட் வாஷ் அனுபவித்தாள் பெண்.

இதில்  சிற்பியும் ராகாவும் கூட இவர்கள் வீட்டு கேட்டை தாண்டி பார்வைக்கு மறைய,

இப்போது இவளும் விவனும் மட்டுமே வீட்டில்.

முதலிரவு அறைக்குள் செல்லும் பெண்ணின் மொத்த படபடப்பை உணர்ந்தாள் இவள்.

“என்ன விஷயம் ரியு? ராகா என்ன சொல்றாங்க?” பார்வையால் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்பதால் வார்த்தையால் கேட்டான் விவன்.

என்ன சொல்வாளாம்?! எப்படி சொல்வாளாம்?!

அடுத்து நிற்கும் அவனை இன்னும் திரும்பிப் பார்க்க கூட முடியவில்லை இவளுக்கு! ஆனாலும் எப்படியும் அவனிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டும் என்ற உணர்ச்சி வெள்ளம் அவளை உந்தி தள்ளியது.

“அது” என்றவள், அடுத்து எப்படி விஷயத்தை துவங்க என தெரியாமல் தவிக்க, அவள் அணிந்திருந்த சல்வார் துப்பட்டாவின் ஓரம் இப்போது அவள் கையில் படாதபாடு பட்டது.

“உ, உள்ள போய் பேசலாம் விவன்” என நேரம் வாங்கினாள்.

அவன் பின்னாலும் அவனுக்கு முன்னால் இவளுமாக வீட்டின் ஹாலை நோக்கி நடக்க, அந்த நொடிகளில் இவர்களது திருமண சம்பந்தமாகவும் அடுத்து வந்த இந்நாட்களிலும் விவன் நடந்து கொண்ட ஒவ்வொன்றாய் இவள் மனதில் ஓடுகிறது.

இவளுக்குள் ஏதோ வகையில் தந்தி அடித்துக் கொண்டிருந்த பயத்தையும் பதற்றத்தையும் கூட இப்போது ஓவர் டேக் செய்தது இவளது காதல் ஸ்பீடா மீட்டர்.

அடுத்த பக்கம்

Advertisements