அதில் நாயகன் பேர் எழுது 18 (9)

இறைவனே! கண்ணிமைக்கும் நேரத்தில் எதையெல்லாம் இவளை கண்டுவர செய்திட்டார் இம்மானகவசர்?

இவள் திகைப்பாய் தகிக்க, தித்திப்பாய் ஸ்தம்பிக்க,

“என்ன ருயமரே” என இப்போது விளித்த பராக்கிரமரது குரலில் தலைகாட்டுவது விஷமமா நையாண்டியா? “எங்கு சென்றுவிட்டீர், மகளின் விவாஹத்திற்கா? முதலில் மகளுக்கு வழி செய்வோம், பின் அவளின் விவாஹத்தை சிந்திப்போம்” என அதே தொனியில் அவர் தொடர,

‘எது? மகளுக்கு வழி செய்வதாமா? என்ன பேசுகிறார் இவர்?!’ என்ற அதிர்ச்சியில் விக்கல் வந்து நிற்கிறது இவளுக்கு, ஹக், விக்கினாள் பெண். பூதம் கண்ட பாவையென விழிக்கவும் செய்தாள்.

“விவாஹம் முடிந்தால்தானே உமக்கு மகள் வர இயலும்? ருயம்மாவிற்கு மணமானால்தானே தமையனான நீர் மணமுடித்துக் கொள்வீர்? ஆக முதலில் ருயம்மாவுக்கும் எனக்குமான விவாஹத்திற்கு வழி செய்வோம் என்பதைதான் அவ்வாறு குறிப்பிட்டேன். நீர் என்ன நினைத்தீர்?” என தன் வார்த்தைகளுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுத்தவண்ணம்,

அருகிலிருந்த குடுவையிலிருந்து குவளையில் கனிரசம் சாய்த்து இவளுக்கு பருக கொடுத்தான் மானகவசன்.

இவர் தான் யார் என தெரிந்திருப்பதால்தான் இத்தனையாய் தன்னை சீண்டும் படியே சம்பாஷிக்கிறாரா? அல்லது இவளை தன் வரும்கால மனைவியின் சகோதரன் என நினைத்து சற்று விளையாட்டுத்தனமாய் மானகவசர் பேசுவது இவளுக்கு இப்படியாய் தோன்றுகிறதாமா?

எது எப்படியாயினும் அவராய் இதைப் பற்றி சொல்லாத வரை இவள் அவர் மனதிலிருப்பதை அறிந்து கொள்ள வழியே இல்லை. இவ்வாறாய் மனதிற்குள் அலையாடினாள் காகதீய கன்னி.

இவள் வதனத்தையே கண்டிருந்த மானகவசர் இப்போது ஒருவிதமாய் முறுவல் பூக்க,

“ம், ஹ்ம்” செருமிக் கொண்ட ருயம்மா தேவியோ,

“அந்த ஏறுதழுவல், அதில், ஒரு பெண் மனம் என்ன பாடுபடும்? எவனோ ஒருவன் வந்து தன் வீட்டு காளையை அடக்கிய காரணத்திற்காக அவனை மணப்பதாமா? பெற்றோர் ஒரு மணமகனின் குணம், குடும்பம், தொழில் என அதைக் கண்டு மகளை மணமுடித்து கொடுப்பதென்பது வேறு. இங்கு எருதை அடக்கிவிட்ட காரணத்திற்காகவே கொடுப்பதென்றால் சரியில்லையே” என சுட்டிக் காட்டினாள். அதன் மூலம் தங்கள் இருவரின் கவனத்தையும் தன் மீதிருந்து ஏறுதழுவல் புறம் திருப்பினாள்.

பராக்கிரமன் வதனத்தில் இப்போது ஒரு பாந்த புன்னகை.

“எப்போதும் பெண்கள் மனம் பற்றிய அதீத அக்கறை ருயமரே உமக்கு. நிச்சயமாய் அக்குணம் என்னை மிகவும் கவர்கிறது. ஆணுக்கு அடங்கிப் போகத்தானே பெண் என்று நினையாமல் அவளும் மனம் உடையவள்தானே என்ற உமது பார்வை பாராட்டுக்குரியது” என பாராட்டிவிட்டே தன் விளக்கத்தை தொடர்ந்தான் பாண்டிய வேந்தன்.

“உண்மையில் ஏறுதழுவல் காதலும் வீரமும் கலந்த விளையாட்டு. இதோ இப்போது என்னை ருயம்மாவுக்காக ஏறுதழுவ நீர் தூண்டியது போல, ஏறுதழுவல் நடைபெறுவதற்கு முந்திய தினம், தன் மனம் கவர்ந்த ஆண்மகனை ஏறுதழுவும் படி தூண்டுவதே அவன் மீது காதலுற்றிருக்கும் பெண்பிள்ளைதான்.

எங்கள் பெண்களுக்கு கல்வி உண்டு. நிலமும் பொருளும் உண்டு. உடல் வலுவிலும் சளைத்தவர்கள் அல்லர். அவர்கள் தொழில் துவங்கவும் அதை நடத்தவும் இங்கு முறையுண்டு. அவ்வாறான பெண்கள் தங்கள் மண காரியங்களில் வெறும் கைபாவையாக செயல்பட இயல்பே அனுமதிப்பதில்லை ருயமரே.

உமக்கு தெரியுமே இங்குள்ள தாய்மாமன் மகனை மணக்கும் முறை பற்றி, அவ்வகையில் மணவினைக்கு உட்படாமல் தன் குடும்பம் சாராத அந்நிய ஆடவனை ஒரு பெண் விரும்பும் போதுதான் இந்த ஏறுதழுவல் செயலுக்கு வருகிறது.

தன் காதலை வேண்டி நிற்கும், தன் மனதை ஈர்க்க துவங்கியுள்ள ஆடவனை இடக்கான சம்பாஷணைகள் மூலமோ அல்லது பாடல்கள் மூலமோ ஏறுதழுவ தூண்டுவாள் பெண். உன்னால் ஏறுதழுவி என் பெற்றோரை சம்மதிக்க செய்ய முடியுமெனில் எனக்கும் இவ் விவாஹத்தில் விருப்பமிருக்கிறது என அவனுக்கு அப்பெண் கொடுக்கும் மறைமுக செய்தி அது.

அதை ஆயர்குரவை என்போம். ஆதியில் இது ஆயர்குல பெண்களிடம் தோன்றிய பழக்கமென்பதால் அப்படி ஒரு பெயர். பின் நாளில் இது அனைத்து சமூகத்தவரிடமும் பரவிவிட்ட ஒரு பாரம்பரியமும் கூட.

அவ்வாறு அவள் விருப்பமறிந்து வந்து ஏறுதழுவி தன்னை நிரூபிப்பவன், அடுத்து அப்பெண்ணிற்கு பரிசமிட வரும்போது அவனது தகுதி அறிந்த அவளது பெற்றோர் அதை எளிதாய் ஏற்றுக்கொள்ள, விவாஹம் நிறைவேறும். இதில் அப்பெண் மனம் மகிழத்தானே செய்யுமே ஒழிய துன்புற ஏதுமில்லை.

இவ்வளவு ஏன்? ஏறுதழுவுதல் முடியவும், தன் தலைமகனை சந்தித்து அப்பெண் காதலுற புகழ்ந்துபாடும் வழமையும் கூட இங்குண்டு. நியாயப்படி ஏறுதழுவல் முடியவும் ருயம்மா தேவி எனக்காக அப்பாடல் பாட வேண்டும்” என திட விளக்கமாய் துவங்கி விஷமமாய் தன் விடையை முடித்தான் பாண்டிய வேந்தன்.

சம்பாஷணையை எங்கு சுற்றினாலும் என்னிடமே வந்து நிறுத்துகிறார் இவர் என மனதிற்குள் குறைபட்டுக் கொண்ட இளவரசியோ சாமர்த்தியமாய்,

“பெண்ணுக்கு விருப்பமில்லா ஒருவன் காளையை அடக்கிவிட்டால்?” என மீண்டும் ஏறுதழுவலின் பால் சம்பாஷணையை திருப்பினாள்.

“விவாஹம் செய்ய வேண்டும் என எக்கட்டாயமும் இல்லை. பெண்ணின் பெற்றோர் பரிசத்தை தாரளமாய் மறுக்கலாம். நீர் பரிசத்தை ஏற்க வேண்டும் என நான் குறிப்பிட்டது நம் இருவருக்குமான உடன்பாடே தவிர, ஏறுதழுவலின் பொது சட்டமில்லை அது”

“பெண்ணிற்கு விருப்பமென்பதெல்லாம் கூட சரிதான். ஆனாலும் காளையை அடக்கியதற்காக விவாஹம் என்பது ஏனோ மனம் ஒவ்வவில்லை வேந்தே, காளைக்கும் விவாஹ வாழ்விற்கும் என்ன தொடர்பிருக்கிறது?” என மீண்டுமாய் தன் மறுப்பையே வெளியிட்டாள் ருயம்மா தேவி.

“அது அப்படியல்ல ருயம்மரே, இங்கு காளைகளையும் பசுக்களையும் மாத்திரமே தங்கள் தொழிலாக வைத்து வாழ்க்கை நடத்தும் ஆயர் குலமும் உண்டு. அது தவிர, எங்கள் நகரங்களை நீர் கண்டால் புரிந்து கொள்வீர். இங்கு பயிர்தொழில் என்பது கிராமம் மாத்திரம் சார்ந்த காரியம் அல்ல, உண்மையில் அது நகரம் சார்ந்த தொழில். ஆற்றங்கரைகளில் குடியேறி, நகர் நிர்மாணித்து அங்கு பயிர் செய்வோம் நாங்கள்.

அடுத்த பக்கம்

Advertisements