அதில் நாயகன் பேர் எழுது 17

ராக்கிரமரின் வார்த்தைகளில் சற்றாய் நகைத்த ருயம்மா தேவி, “மன்னர் பெருமானே! தங்களது தீர்ப்பு மிகவும் கௌரவமான முறையிலேயே பாதுகாக்கப்படும். தங்களுக்கு அது குறித்து சற்றும் ஐயம் வேண்டாம்.

வஸ்திரத்தால் மஞ்சிகையை தலை முதல் பாதம் வரை மூடி கொணர்ந்து வச்சனார் அருகில் அமர வைத்தாலும், அக்கணம் அவர் பார்ப்பது எப்படியும் அத்தை மகள் மஞ்சிகையை தானே, ஆக அம்முறையிலோ,

அல்லது வச்சனாரின் கண்களை துகிலால் கட்டி மறைத்துவிட்டாலும், மஞ்சிகைக்கு இவர் மாலை அணிவித்தல் போன்ற விவாஹ முறைகளில் ஈடுபடும் போது, அவள் எவ்விடத்தில் எவ்வளவில் எவ்வாறு நின்றிருக்கிறாள் என மனதால் உணர்ந்தே தானே அச் சடங்குகளில் ஈடுபடுவார். அது கூட மானசீகமாக அவளை காண்பதென்றாகிறதுதானே. ஆகையால் அம்முறையிலேயோ கூட இவர்களது விவாஹத்தை நான் நடத்துவதாக இல்லை.

பாண்டிய வேந்தரின் தீர்ப்பு ஒன்றும் விளையாட்டு செயல் இல்லை. அதை யார் அசட்டை செய்வதையும் என்னால் அனுமதிக்க முடியாது. இவ்வாறிருக்க நானே எவ்வாறு அசட்டையாக நடந்து கொள்வேன்? ஆக தாங்கள் இவ் விவாஹ விஷயத்தில் என்னை முழுவதுமாக நம்பும்படி வேண்டிக் கொள்கிறேன்” என விரிவாய் விவரித்து மகா பவ்யமாய் வேண்டி நின்றாள்.

இவ்விடையில் மறைந்திருந்த நையாண்டியும், அதோடு கலந்திருந்த இவனது வார்த்தைகளுக்கான கணமும் புரிய மானகவசருக்கு மனதிற்குள் சிரிப்பதே வேலையாயிற்று.

பொன்னிவச்சாருக்குமே இப்போது ருயம்மாவின் திட்டம் விளங்கிவிட, அவனோ யோசனையாக தன் வேந்தனை நோக்கினான். இத் திட்டத்தை செயல்படுத்துவது பாண்டிய வேந்தனின் அதிகாரத்தினால் மாத்திரமே சாத்தியம் என்பதால் அவரது முடிவு என்னதாய் இருக்கும் என்றறிய அவரை ஊன்றி கவனித்தான்.

மானகவசரின் வதனத்தில் எதிர்ப்பு என எதுவும் இல்லை என்பதோடு, இலகுத்தன்மையும் மலர்ச்சியுமே குடி இருக்க கண்டவனுக்கு எதுவோ புரிவது போன்று இருக்கிறது. மகிழ்வுடனே விடை பெற்றான் அவன்.

அன்றைய தினம் அவ்வாறாய் முடிய, மறுதினம் ருயம்மா தேவியை தன்னோடு குலசேகரபட்டிணத்தின் ஊரவை வாரியங்களுக்கு அழைத்து சென்றான் மானகவசன்.

ஊருக்கு நீதி வழங்கும் சம்வற் சரவாரியம், நீர் நிலை மற்றும் பாசனங்களை கவனிக்கும் ஏரிச வாரியம், நிலங்களை அளப்பது மற்றும் கண்காணிக்கும் தோட்ட வாரியம், அரசு நாணயங்களை ஊருக்கு வெளியிடுவது மற்றும் கொடுப்பது போன்றவைகளை கையாளும் பொன் வாரியம், குடி மக்களிடம் வரி வசூலித்து அரசுக்கு செலுத்தும் பஞ்ச வாரியம், இப்படி குலசேகர பட்டிண ஊரவையின் அனைத்து கழகங்களுக்கும் ருயம்மாவோடு விஜயம் செய்த பாண்டிய பராக்கிரமன்,

அங்கு பணி புரிந்த அரசு அதிகாரிகளிடமும், மற்றும் ஊரவை தலைவர்களாக பதவியாற்றிக் கொண்டிருந்த ஆளும் கணக்கர்களிடமும், இயல்பு போல் சம்பாஷணை வளர்த்து, அதன் வாயிலாகவே பலவற்றையும் விசாரித்துக் கொண்டான். அந்த அனைத்து சம்பாஷணைகளில் பொன்னிவச்சான் மற்றும் மஞ்சிகை பற்றியுமான விசாரணைகளும் தவறாமல் இடம் பெற்றிருந்தன.

ஒரு விவாஹத்திற்கு அதுவும் நிச்சயிக்கப்பட்டுவிட்ட ஒன்றிற்கு இத்தனை விசாரணையா என தோன்றினாலும், ருயம்மாவுக்கு இந்த அனைத்து செயல்களும் அதோடான பாண்டி நாட்டின் ஊர் நிர்வாகம் பற்றிய அனுபவங்களும் பராக்கிரமன் மீதும் பாண்டியத்தின் மீதும் அபிமானத்தையும் பிரமிப்பையுமே வளர்த்தெடுத்தன.

எத்தனை தெளிவான திட்டமிட்ட ஆட்சி முறை! எத்தனையாய் மக்கள் நலம் நாடும் அரசு என பிரமித்தாள் அவள்! ஆனாலும் இவர் ஏன் காதலுக்கு எதிராக இத்தனையாய் காய்கிறாராம் என்றும் இருக்கிறது அவளுக்கு!

இந்நிலையில் அடுத்ததாய் மானகவசன் இவளோடு சென்ற இடம் குலசேகர பட்டிணத்தின் ஆவணகளரி.

ஆவணகளரி என்பது பாண்டியர்களின் உள்ளாட்சி நிர்வாகங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு ஆவணகளரியிலும் அந்த குறிப்பிட்ட ஊர் பகுதியின் நில ஆவணங்கள் உட்பட பலவித ஆவணங்கள் பத்திரப்படுத்தபட்டிருக்கும்.

அவ் ஊரில் நிலத்தை வாங்கவோ இல்லை விற்கவோ சம்பந்தபட்ட விற்பனையாளரும் வாங்கும் நபரும் அங்கு சென்று அதிகாரிகளின் முன்னிலையில் தங்களது நில விற்பனை பற்றி பதிவு செய்து ஆவணபடுத்திக் கொள்ளவேண்டும்.

அந்த விற்பனை ஆவணம் இரண்டு பதிவாக எழுதப்படும். ஒன்று நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்கப்படும், மற்றொன்று இந்த ஆவணகளரியில் பத்திரப்படுத்தப்படும். அங்குதான் காகதீய இளவரசியை அழைத்துச் சென்றான் பாண்டிய வேந்தன்.

என்ன காரணமாய் இருக்கும் என விளங்கவில்லை என்றாலும் மறுப்பேதும் தெரிவிக்காமல் அவனுடன் சென்றாள் அவனோடு ஊடல் கொண்டிருப்பவளும்.

அடுத்த பக்கம்

Advertisements