அதில் நாயகன் பேர் எழுது 16

ரியா ஒருவாறு சந்தோஷ மனநிலைக்கு திரும்பிவிட்டதால், பள்ளியிலிருந்து அடுத்து அவனது முதல் திட்டப்படி அவளை புத்தக கண்காட்சிக்கும் கூட்டிப் போனான் விவன். அன்று வீடு திரும்புவதற்குள் இருவருக்குள்ளும் அத்தனை அரட்டை, அத்தனை வாரல்கள், அத்தனை அத்தனையாய் சிரிப்பு என கடந்திருந்தது நேரம்.

வார்த்தைக்கு வார்த்தை அவனிடம் மல்லுக்கட்டிக்கொண்டு தன்னை மீறிய உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தாள் பெண்.

இப்போது வீட்டு போர்டிகோவில் காரைவிட்டு இறங்கினர் இருவரும். வாங்கி இருந்த புத்தக பைகளை இரு கையாலும் தூக்கிக் கொண்ட விவனோ,

“உன் கொள்கை தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன்” என்றபடி நடக்க முடியாமல் நடப்பது போல் நடிப்புடன் வாசலை நோக்கி நடந்தான்.

அவன் கேலி செய்கிறான் என இவளுக்கும் தெரியும்.

“அப்படி என்ன செய்தேனாம் நான்?” கேட்டது இவள்!

“ஹீல்ஸ் போடுறதே ஹஸ்பண்ட் கால மிதிக்கிறதுக்குத்தான்ற கொள்கையோட இருக்குது பொண்ணுன்னு தெரியாம, கூட போய் விளையாட போய்ட்டனே” இது அவன்.

ஷூ டச் கேமை சொல்லி கிண்டல் செய்து கொண்டு அவன் சாய்ந்து சாய்ந்து நடக்க,

போய் அவன் முதுகில் இரண்டு கைகளையும் வைத்து அவனை தள்ளியபடி நடக்க தோன்றுகிறது இவளுக்கு. அப்படியே அவன் கையை தோளோடு பற்றி அதில் தலை சாய்த்துக் கொள்ளவும் தான்.

அசையாமல் தான் நிற்பதே, முன்னால் சென்றுவிட்டவன், “என்னாச்சு ரியு?” எதுவும் முடியலையா?” என்று கேட்டபின்புதான் இவளுக்கு உறைக்கிறது.

தலையை மெல்ல சிலுப்பிக் கொண்டாள். ‘வர வர எங்கு போகிறதாம் இவள் சிந்தனை?’

“ஒன்னுமில்ல” என்ற ஒற்றைப் பதிலில் அந்த நினைவையும் ஒன்றுமில்லாமையாக்கிப் போட்டவள், அதற்குப் பின்னும் உற்சாகமாகவே இருந்தாள்.

வயிற்றில் இருக்கும் குழந்தைக்காகதான்னாலும் இவ சந்தோஷத்திற்காக இப்பவரை அவ்வளவு வேலை செய்துருக்கான் அவன், அதை கெடுத்துக் கொள்ள இவள் தயாராக இல்லை.

இவ்வளவு செய்ததற்கா, இல்லை அது அவனுக்காகவேயோ, ஆனால் நைட் டின்னர் அவனுக்கு ஸ்பெஷலா செய்து கொடுக்கும் எண்ணம் இவளுக்கு.

உண்மையில் சாப்பாடுன்னு இல்ல, அவனுக்கு எதாவது மனசுக்கு பிடித்த மாதிரி செய்ய ஆசை இவளுக்கு. ஆனால் அப்படி என்ன செய்தால் அவன் சந்தோஷப் படுவான் என்பதுதான் புரிபடவில்லை.

‘சே எவ்வளவு ஈசியா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டான் அவன். எனக்கு மட்டும் ஏன் ஒன்னும் தோண மாட்டேங்குது,’ என நொந்தவளுக்கு முதலில் ஞாபகம் வந்தது கண்மணிதான்.

அவட்ட ஐடியா கேட்கணும்னு இல்ல, அவளுக்கு எதாவது செய்தா விவன் சந்தோஷப்படுவான்றதுதான் அவளோட முதல் கண்டுபிடிப்பு! கண்மணி மேல் அவன் பாசத்தின் அளவு இவளுக்கு தெரியுமே!

இந்த புரிதலின் விளைவாய், ‘கண்மணிக்கும் இப்பதான கல்யாணம் முடிஞ்சிருக்கு, அவங்க வீட்ல இவளுக்கு விருந்து கொடுத்த மாதிரி, இவளும் அவளுக்கு ஒரு சூப்பர் கல்யாண விருந்து கொடுக்கணும்’ என முடிவு செய்து கொண்டவள்,

‘ஹேய் மக்கு ரியா, அது கண்மணிக்காவே செய்ய வேண்டியது! இப்ப விவனுக்காக என்ன செய்ய போற?’ என்ற மனதின் அடுத்த கேள்விக்கு, பதில் தெரியாமல் விழிக்க, அப்போதுதான் தேனிநிலவு சென்றிருக்கும் கண்மணியிடம் இருந்து கால் வந்தது.

கண்மணி இவளிடம் பேசும் போது, விவனோட பார்வையில் இருந்து, மொபைலோடு தலைமறைவான ரியா ரொம்ப ரகசியமா, “உங்க அண்ணாவுக்கு என்ன பிடிக்கும்?” என விசாரிக்க,

“ஹனிமூன் போங்க” என எக்குதப்பாய் வருகிறது பதில் கண்மணியிடமிருந்து. ‘அதுதான் அவனுக்கு பிடிக்கும்னு அர்த்தமா?!’

கண்மணி இதுவரை இவட்ட இப்படி எல்லாம் பேசுனது இல்லையே!

இதில் இவள் பேஸ்தடிச்ச, ‘பே’ வோடும், இவளை மீறி விஞ்சி ஏறும் கொஞ்ச வெட்கத்தோடும் முழிக்க,

“ஹனிமூன் போனீங்கன்னா, பேசி பழகி திரும்ப வர்றதுக்குள்ள ஒருத்தர பத்தி ஒருத்தருக்கு நல்லா தெரிஞ்சிரும் அண்ணி” என விளக்கம் வருகிறது அடுத்து.

“சீக்கிரம் அவன கூப்பிட்டுட்டு போக சொன்னேன். வீட்லயே இருந்தா எப்படியும் அவன் ஆஃபீஸபத்திதான் யோசிச்சுட்டு இருப்பான்” என தொடர்ந்த அவன் தங்கை.

“கொஞ்சம் கூட இந்த விஷயத்துல அவனுக்கு அறிவே கிடையாது. நமக்குன்னு ஒருத்தி வந்துருக்காளே, அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு யோசிச்சுருக்கவே மாட்டான்” என மாமியார் தோரணையில் காந்தலாய் பேச,

அதில் பொங்கி எழுந்த ரியா, “அதெல்லாம் இல்ல, அவங்க எல்லா நேரமும் என் கூட தான் இருக்காங்க. இன்னைக்கு கூட எங்க ஸ்கூல், புக் ஃபேர்ன்னு எனக்கு என்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்துதான்” என வீராவேசமாய் ஆரம்பித்து, சொல்ல வந்ததை சொல்லி கூட முடிக்காமல் குரல் தேய நிறுத்தினாள்.

கண்மணி போட்டு வாங்கிட்டான்னு கொஞ்சம் லேட்டானாலும் பல்ப் எறிஞ்சுட்டே ரியா பொண்ணுக்கு.

அடுத்த பக்கம்

Advertisements