அதில் நாயகன் பேர் எழுது 15

ற்றவர் வெளியேறவும் தனது அறைக்குள் சென்றுவிட யத்தனித்த ருயம்மாவை, “சற்று உம்முடன் பேச வேண்டும் ருயமரே” என நிறுத்திய மானகவசன், இவளிடம் வரதுங்கரின் முன்னிலையில் சம்பாஷணையை துவங்கியதே ஏதோ விசாரணை கூடத்தில் நிற்பது போன்ற ஒரு உணர்வை எழுப்ப,

இரு சகோதரர்களும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருக்க எதிர் இருக்கையில் இவள் அமர்ந்தே இருந்தாலும், “இளவரசி ருயம்மா தேவியை பற்றி எங்களுக்கு தெரிய வேண்டும்” என்ற அவனின் அடுத்த வார்த்தைகள்.

ருயம்மாவுக்கு இது சம்பாஷணையா அல்லது தன்னைப்பற்றி தன்னிடமே விசாரணையா என்ற எண்ணத்தையே எழுப்பியது. அது சினமா வேதனையா என இனம் பிரிக்க இயலாத ஒன்று அவளுக்குள் உண்டாக்கியது.

அதன் பொருட்டு, “ருயம்மாவைப் பற்றி விசாரிக்க என்ன இருக்கின்றது?” என்று விருப்பமின்மை விரவிய ஒரு விடையே அவளிடமிருந்து வெளிப்பட்டது. தனக்கு இத்தகைய விசாரணையில் உடன்பாடில்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினாள் ருயம்மா.

அப்பதிலின் முடிவில் சடுதியாய் வருகிறது மானகவசனிடமிருந்து விளக்கம்.

“இளவரசியாரின் விருப்பங்களை அறிந்து கொள்ளவே கேட்கிறேன் ருயமரே. விசாரணை என்று ஏதுமில்லை” இதை அவன் சொல்லும் இக் கணம் இவளை விழியோடு விழிநோக்கிய அவனது பார்வையை சந்திக்க நேரிட்டது ருயம்மாவிற்கு. அதில் தாங்கொணா உணர்வு அலைகள் இவளுக்குள் சுழன்று பிறண்டு எழும்ப, வெகு பலவீனமாய் உணரத் துவங்கினாள் ருயம்மா தேவி.

ஆனால் பாண்டிய வேந்தனோ அதை கண்டு கொண்டாதாக தெரியவில்லை. “இனி வெகு விரைவில் பாண்டியம் சென்றடைந்து விடுவோம் ருயமரே, அடுத்து விவாஹ காரியங்களை துரிதமாய் கவனிக்க வேண்டும். ருயம்மாவின் விருப்பங்கள் தெரிந்தால் அதற்கேற்றார் போல் முறைமைகளை அமைத்துக் கொள்ள ஏதுவாயிருக்கும்” என தனது இவ் விசாரிப்புகளின் நோக்கத்தை விளக்கி அத்திக்கிலேயே சம்பாஷணையை நீட்டினான் அவன்.

முன்பு ஒரு நாள் இத்தகைய வார்த்தைகளை கேட்டிருந்தாளேயானால் ருயம்மா என்ற கன்னியின் உள்ளம் குதுகலித்திருக்கும். கொண்டாடி மகிழ்ந்திருக்கும். ஆனால் இன்றோ இப்பதங்களும் பாவையின் இதயத்தை அழுந்த பிழிகின்றது.

புதினம் 2020 – The Contest

ருயமரே என அழைக்கும் வழக்கமுள்ள பாண்டிய மானகவசன் எப்பொழுது இளவரசியாய் இவளை குறித்து குறிப்பிட்டாலும் காகதீய இளவரசியார், வரும்கால பாண்டிய மகராணியார் என மரியாதை பதங்களில் சொல்வதே வழக்கம்.

ஆனால் முதன் முறையாக இன்று ருயம்மா என வெகு இயல்பாய், தனக்கு உறவாய் இவளை பாவித்து குறிப்பிட்ட விதத்திலேயே இவள் மனம் வெகுவாய் நைந்து போகிறதென்றால்,

எல்லாம் இவளது விருப்பத்தின் படியே விவாஹ முறை இருக்க வேண்டும் என அவன் அபிலாஷிப்பது, பசியால் அழும் பிள்ளைக்கு பாலூட்ட முடியாத தாயின் நிலையை இவளுக்குள் ஏற்படுத்துகிறது. பச்சிளம் குழந்தையாய் இவள் காதல் கதறி அழ, அதை மனதால் தீண்டவோ திருப்தி செய்யவோ எதுவுமற்ற இழப்பின் எல்லையில் இவள், சித்ரவதைப் பட்டாள் காகதீய இளவரசி.

எதை இழந்துவிட்டாள் இவள்?

இவ்வாறு எத்தனையோ வித எண்ணங்களின் மூலம் விடையேதும் பகர முடியா பெரும் உணர்வு சுழலுக்குள் இவள் அமிழ்ந்து கிடக்க,

அவள் வதனத்தையே பார்த்திருந்த மானகவசனோ அவள் மௌனத்தை வினாபோல் பாவித்து விடை கொடுக்க முற்பட்டான்.

“பொதுவாக எங்கள் விவாஹங்களில் பெரிய சடங்காச்சாரங்கள் இல்லை எனினும் ஒரு சில முறைகள் தவிர்க்க முடியாதவை. பாண்டிய மரபை பொறுத்தவரை ஒரு பெண்ணை மணக்கும் முதல் உரிமையும் கடமையும் அவளது தாய்மாமன் மகனுக்கே உரித்தானது. அப்படி அல்லாமல் வேறு பெண்ணை விவாஹம் புரிய வேண்டுமெனில் மணமகனானவன் தன் தாய்மாமனிடம் அனுமதி பெற வேண்டும். அதே போல அந்த மாமன் மகள் அல்லாத மணமகளை இந்த வரனுக்கு விவாஹம் செய்து கொடுக்க அப்பெண்ணின் தாய்மாமனும் சம்மதம் கொடுக்க வேண்டும். இந்த அனுமதி வாங்கல், சம்மதம் கொடுத்தல் எல்லாம் சிறு சிறு சடங்காகவே விழா ஸ்தலத்தில் நடத்தப்படும். என் பக்க உறவினர்களின் நிமித்தம் அவைகளை என்னால் தவிர்க்க இயலாது.

ஆனால் வேறு எவ்வகை சடங்கு முறைமைகளையும் மாற்றிக் கொள்வதில் எனக்கு எவ்வித மறுப்பும் இல்லை. அவ்வாறே ருயம்மாவுக்கும் சில முறைமகள் அவசியமாய் தோன்றலாம். சிலவற்றை தவிர்க்கத் தோன்றலாம். அதை தெரிந்து ஏற்பாடுகளை செய்விக்க வேண்டும் என்பதாலேயே கேட்கிறேன் ருயமரே”

வேந்தன் பகர்வதை ஒரு விதமாய் விழி அசைக்காமல் கேட்டிருந்த ருயம்மா தேவி, முறையை மாற்றுவதா? என் கதையை கேள்வியுற்றால் தாங்கள் இந்த விவாஹ எண்ணத்தையே மாற்றிக் கொள்வீரே என மிக்க வேதனையுடன் சிந்தித்தவள்,

“இதிலெல்லாம் மணமகளின் விருப்பம் எங்கு வருகிறது? பெரியவர்கள் எதை முடிவு செய்தாலும் அதன்படி நடக்க வேண்டியதுதானே அவளது கடமை” என இச் சம்பாஷணைக்கே முற்று புள்ளி வைத்தாள்.

மேற்கொண்டு பாண்டிய மன்னனும் எதையும் வினவாததால் ரணமான இதயத்துடன் தன் அறைக்கு திரும்பிவிட்டாள் காகதீய இளவரசி.

அடுத்த பக்கம்

Advertisements