அதில் நாயகன் பேர் எழுது 12

வாஷ் பேசினிக்கு மேலாய் தன் கழுத்திலிருந்து ஊஞ்சல் ஆடும் தாலியைப் பார்த்து ரியா, “ஓ மை காட்” என அலறிக் கொண்டிருந்த அதே நொடி, அதிலிருந்து ரத்த துளிகள் வடிய ஆரம்பித்து விவன் அதைப் பார்க்கும் போது அங்கு மோதிரமே இல்லை.

வாஷ் பேசினில் மட்டும் புள்ளிப் புள்ளியாய் வெறும் ரத்த துளிகள்.

இன்னுமாய் பெரும் குரலெடுத்து அலறினாள் ரியா, “ஐயோ பார்த்தேன் விவன் கண்டிப்பா பார்த்தேன், அது ஒரு மோதிரம், அந்த கிங், அவர் கைல இருக்கும் அது” அரண்டு போய் இருந்தவள் அத்தனை படபடப்பு பயம் டென்ஷன் அத்தனையும் மீறி துள்ளலும் துடிப்புமாய் கத்தினாள்.

விவனோ அவசரமாய் பார்த்தது அவளது முகத்தைத்தான், அவள் தவிப்பில் ஒரு விதமாய் அலை பாய்ந்து கொண்டு தன் தாலியையும் வாஷ் பேசினையும் மீண்டும் மீண்டுமாய் குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டிருக்க,

சட்டென அவள் தாடையை தன் வலக்கையால் பற்றியவன் ஆராய்தலாய் பார்த்தது அவளது உதடுகளைத்தான்.

ஃப்ரெஷ் செய்றப்ப வாயில் எங்கயும் இடிச்சு ரத்தம் வருதான்றதுதான் அவன் முதல் சிந்தனை.

அவன் அவள் முகவாயைப் பற்றவுமே ஒரு விதமாய் அசையாமல் நின்ற ரியாவுக்கோ இப்போது நேருக்கு நேராய் அவன் கண்கள்தான் காணக் கிடைக்கின்றன.

இந்த சூழ்நிலையில் அவளுக்கு ஒரு துணை இருக்கின்றது என்ற நினைவில் அவளையும் மீறி ஒரு அமைதி ஒரு புறம் உருவாகிறதென்றால், இன்னொரு புறமோ அவன் இந்த மோதிர விஷயத்தை நம்பவில்லை என்பது பெரிதாய் உறுத்துகிறது.

அவன் எதுக்காக இவளோட வாயப் பார்க்கிறான்னு இவளுக்கு புரியாமலா இருக்குது?

“நிஜமா சொல்றேன் விவன், இங்க ஒரு ரிங்க் இருந்துச்சு, அது கரஞ்சு இப்படி ரத்தமா மாறிட்டு” தன் வயிறு வரை நீண்டிருந்த அவளது தாலி செயினை கையால் எடுத்து அவனிடம் காட்டினாள்.

அவள் காதில் விழும் அவள் வார்த்தைகளின் அபத்தம் அவளுக்கே உறைக்கின்றது.

“நான் கனவிலெல்லாம் இல்ல, நான் விழிச்சு டைம் ஆச்சு விவன், இது நிஜம், ப்ளீஸ் நம்புங்க என்ன” இவள் இன்னுமாய் பதறி கெஞ்சினாள்.

அவனோ வார்த்தையென்று எதுவும் சொல்லவில்லை எனினும், அந்த அறையை வேக வேகமாய் ஆராய தொடங்கினான். அதுவே அவளுக்கு அவன் தன் வார்த்தைகளை நம்புகிறான் என்ற புரிதலைக் கொண்டு வர சற்றாய் ஆசுவாசப் பட்டாள் ரியா.

வாஷ் பேசின் அருகில், படுக்கை, ஜன்னல் புறங்கள், மொத்த அறை என எல்லாவற்றையும் டொர்னடோ வேகத்தில் சுற்றி சுற்றி அலசியவன்,

அடுத்து, “வா என் கூட” என்றபடி இவளது கையைப் பற்றிக் கொள்ள, ரூமில் இன்னும் எதாவது ப்ரச்சனையோ ஆபத்தோ இருந்தால் அதனிடம் இவளை விட்டுவிட்டுப் போய்விடக் கூடாதென நினைக்கிறான் என புரிய, மறுக்காமல் அவனோடு ஓடாத குறையாக ஓடினாள் இவள், அந்த ரூமை விட்டு வெளியில் வந்து, வீட்டை சுற்றிலுமே கூட ஒரு முறை அவன் ஆராய.

விவன் வீடு இருந்த அந்த பெரிய கம்பவ்ண்டில் வீடு ஒரு ஓரமாக இருந்தாலும், மற்ற இடங்களில் அங்கங்கு மரத்தடிகள், சில பெரிய ஷெட்ஸ், அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப் பலகைகள், என அவனது சா மில் சம்மந்தமான இத்யாதிகள்.

அதில் என்ன தேட என்றே தெரியாமல் இவளும் தேடினாள்.

அங்கு எதுவும் வித்தியாசமாய் கிடைக்கவே இல்லை.

பின் இவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தவன், அவளை வீட்டின் வரவேற்பறை சோஃபாவில் அமர செய்து அவளுக்கு எதிரான சோஃபாவில் தானும் அமர்ந்து கொண்டான்.

செக்யூரிட்டியை இன்டர்காமில் அழைத்து வீட்டிற்கு யாரும் வந்தார்களா என விசாரித்தான். அப்படி யாரும் வந்ததாக எதுவும் தகவல் இல்லை.

யார் வந்து அப்படி என்ன செய்திருக்க முடியும் என்ற கேள்விக்கு ரியாவிடம் விடையும் இல்லை, படபடப்பு தவிப்பு பதற்றம் எதுவும் இன்னும் அடங்கவும் இல்லை.

அழைப்பை முடித்த விவன் இப்போது இவளிடமாக திரும்பி இவள் கழுத்திலிருந்த தாலியை கூர்ந்து பார்த்தவன்,

“இதைத் தர்றியா ரியு, லேப்க்கு அனுப்பி டெஸ்ட் செய்து பார்க்கலாம்” என ஒரு தீர்வை சொன்னான்.

என்ன டெஸ்ட் செய்து, என்ன வகையான ரிசல்ட் வந்து, என்ன மாதிரி இந்த குழப்பத்தை அது தீர்த்து வைக்க முடியுமென்றே இவளுக்கு புரியவில்லை என்றாலும் மெல்ல தலையாட்டி வைத்தாள் இவள்.

மனமோ கடும் குழப்பத்திலும் கன்னா பின்னாவென ஒரு வேதனையிலுமாயும் இழுபட்டது. ஏற்கனவே கனவில் ருயம்மா அழுதது போல ஒரு வலி இவள் மனதில் இன்னுமே இருக்க, அதோடு இதுவும் சேர, ஓய்ந்து போய் இருந்தாள் ரியா.

“எதையும் போட்டு குழப்பிக்காம இப்ப ப்ரெஷ் செய்துட்டு வா ரியு, சாப்டலாம்” அவன் சொல்ல அதுக்கும் ஒரு சம்மத தலையாட்டு இவளிடம்.

“இங்க நீ தனியா மேனேஜ் செய்துபியா, இல்ல நான் கூட வரவா?” அடுத்து அவன் கேட்க,

இருக்கும் மன நிலையில் ரியாவுக்கு அவளுக்கு துணையாக யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அதோடு கனவில் இருந்த அழு மூஞ்சி மூடு வேற சேர்ந்து விவன் பக்கத்தில் இருந்தால் பெட்டரா இருக்குமேன்னு ஒரு ஃபீல் இருக்குதுதான். ஆனாலும் இதற்கு எப்படி சரி என சொல்லவாம்?

என்னதான் அங்க தனியா ட்ரெஸிங் ரூம் இருந்தாலும், இப்பதான் தனியா ரூம் வேணும் என கேட்டு தனி ரூம் வந்திருக்கிறாள். இதில் அவன இங்க எப்படி வர சொல்லவாம்?முறைத்தாள்,

“வேண்டாம்னு வாய திறந்து சொன்னா கூட புரிஞ்சுப்போம்” என்றபடி எழுந்து போனான் அவன்.

அடுத்த பக்கம்

Advertisements