அதில் நாயகன் பேர் எழுது 11

கிழக்கில் சாவகம் துவங்கி வங்கக் கடல் வழியாய் இந்திய மாசமுத்திரம் நோக்கி சற்றே முரட்டடியாய் வீசிக் கொண்டிருந்தது மேலைக் காற்று. அது மரக்கலத்தின் ராட்சச பாய்மர சீலைகளை முழுவதுமாய் நிறைத்து செல்லும் ஸ், ஸ், என்ற ஒரு வித ஊதல் ஒலியையும்.

பாய்மர சீலைகளை விட அளவில் மிகவும் சிறிதாகவே இருந்தாலும், அப்பாய்மர சீலைகளை விடவும் சடசடவென பெரும் ஓசையை எழுப்பிக் கொண்டு பறந்து கொண்டிந்த மரக்கல லட்சினை கொடியின் சப்தத்தையும்,

கடல் நீரோட்டத்தின் திசையில்தான் மரக்கலம் பயணித்துக் கொண்டிருந்ததால், சற்றே குறைவாய் ஒலித்த கலம் கடல் நீரைக் கிழித்துச் செல்லும் ஓசையையும் தவிர, மரக்கல தளத்தில் நிர்சலனம் உண்டாயிற்று சற்று நேரம்.

“விந்தன் என்பது எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர், அடிமைப்பட்ட எம் மக்களுக்காக போரிட்டதால் அவர்கள் என்னை மானகவசன் என அழைப்பர். பொன்னி பெருமான் என்பது என் தந்தை அழைக்கும் முறை என முன்னமே சொல்லி இருக்கிறேன். மன்னர் பட்டத்தை பொறுத்தவரை நான் சடைய வர்மன் பராக்கிரம பாண்டியன்”

திக்பிரமித்து நின்றிருந்தாள் ருயம்மா, இதயம் கூட ஒலிக்கிறதோ இல்லையோ? அதிர்ச்சியின் ஆளுமையில் சிறையாகி சிலையென நின்றிருந்தாள் அவள்.

சில கணம் எதுவும் எண்ணவும் முடியாமல், இயல்படையவும் இயலாமல் சிந்தை சிதைந்தாள். எத்தனையாய் பிரளயமும், எதிர்ப்பதமாய் ஏகநிலை அமைதியும் என்னவெல்லாமோ அவளுள். ஒடுங்கி நடுங்குகிறது ஒரு புறம் மனமென்றால், அகமோ அர்த்த பிரஞ்சை இல்லாமல் ஆரவாரித்தது மறு புறம்.

காகதீய இளவரசிக்கு அழத்தோன்றுகிறது. அதிர்ந்தும் போகின்றது, அடங்க மறுக்கும் சினமும் கூடவே சேர்ந்தும் வருகின்றது. ஆனாலும் எதையும் காட்டாமல் இதழில் ஏந்தி நின்றாள் மௌனம்.

தன்னை மன்னர் என வெளிப்படுத்திக் கொண்ட மானகவசரிடம், தான் அவ் உண்மையை அவளிடம் இதுவரைக்குமாய் மறைத்ததை தவறென உணரும் எந்த தடுமாற்றமும் தயக்கமும் சங்கடமும் இல்லை என்பதை மட்டுமாய் கவனித்துக் கொண்டாள்.

அந்த கருநீல இரவில் கசிந்து கொண்டிருந்த மென் ஒளியில் கூட அவன் வதனத்தில் பரவிக் கிடந்த திடநம்பிக்கையின் சாயை தெளிவாகவே புலப்படுகின்றது இவள் பார்வைக்கு. அவன் ஈட்டியொத்த விழிகள் வாரி இறைக்கும் வாத்சல்யமும் தான்.

அவளது விழிகளை நேருக்கு நேராய் தன் விழியால் எதிர்கொண்டிருந்த அவன் தொடர்ந்தான்.

“மன்னர் என்ற வகையில் அந்நிய நாடு வரும்பொழுது அதில் ஆபத்துகள் மிகை. என் நாட்டில் மன்னர் இல்லை என்ற தகவல் அண்டை நாடான சேர தேசத்தை அடைந்தால் பாண்டிய நாடு அவர்களால் தாக்கப்படும் அபாயம் அதிகம். மக்களை அப்படி ஒரு ஆபத்தில் நான் நிறுத்த இயலாது.

அதோடு என்னிடத்தில் இருந்து நீர் இதைப் பார்த்தால் புரிந்து கொள்வீர். உமது நாட்டை பற்றி முழுவதும் அறியாத சூழலில் அங்கும் ஆபத்தை நான் எதிர்நோக்கலாம் அல்லவா? மன்னராக அங்கு வரும் போது நான் அங்கு ஆபத்திற்குள்ளாகலாம். என் நிமித்தம் என் படைகள் தாக்கப்படும் வாய்ப்பு ஏராளம்.

அதுவும் எங்களது பெரும் படையை என் தேசப் பாதுகாப்பிற்காக பாண்டியத்தில் விட்டு ஒரு சிறுபடையை உமது தேசம் கூட்டி வரும் சூழலில், அச்சிறு படை தாக்கப்படுமாயின் அது அவர்களை அழைத்து வந்து ஆபத்தின் கையில் ஒப்புக் கொடுப்பது போன்றதல்லவா?

இவ் விவாஹமே நாட்டின் நன்மைக்காக எனும் போது அதை நிகழ்த்த என் நாட்டு மக்களையும், என் நாட்டு படையையும் ஆபத்தில் நிறுத்தி நான் காகதீயம் பயணிப்பது உத்தமமாய் இராது என்பதால் நான் மன்னர் என வெளிப்படுத்திக் கொள்ள இயலவில்லை” தன் புறக் காரணத்தை தயக்கமின்றி விளக்கினான் அவன்.

சில கணமாய் வசித்து வந்த உணர்வு பிரளயத்தின் பிடியிலிருந்து மீண்டு வர போராடினாள் ருயம்மா. பேச்சிழந்து நின்றிருந்தவள் முயன்று வருவித்தாள் தன் ஆண்குரலை. வறண்ட தொண்டையிலிருந்து வர மறுத்தது அது.

“இதிலெல்லாம் ஒரு தவறுமில்லைதான்” ஒப்புக் கொண்டாள் ருயம்மா. மன்னர் என்பவர் நாட்டு மக்களின் நலனை பிரதானப் படுத்த வேண்டும் என அறியாதவளா அவள்?

“ஆனால் இந்த விவாஹத்தை நிச்சயிக்க பாண்டிய மன்னர் பெருமான் தனது உண்மை சேனாதிபதியையோ அல்லது அமைச்சரையோ அனுப்பி இருந்தால் போதுமே, ராஜிய விவாஹம்தானே இது, காகதீய இளவரசி எப்படிப் பட்டவளாய் இருந்தாலும் அவளை இழுத்து வந்து உமது கொட்டிலில் அடைத்துவிட்டால் போதும் என்பதுதானே தேவை” வினா அவள் விசாரிக்க விரும்பிய ஒன்றுதான் என்றாலும் நிச்சயமாய் இதை இவ்வாறாய் ருயம்மா வினவ விரும்பவில்லை.

எதிரியே ஆயினும் அரசனுக்குரிய கணத்தை அவனுக்கு கொடுத்தாக வேண்டும் என்பது அவளது பாலபாடம். ஆனால் ஏதோ இயலாமையும் ஏமாற்றமும் அதோடு இடையோடும் சீற்றமும் இப்படியாய்த்தான் அவள் இதழ்களின் வழியாய் இக்கேள்வியை அனுமதித்தது. அவளே அறியாமல் அவன் மீது வளர்த்து வைத்திருக்கும் உரிமை உணர்வும் இதற்கு காரணமாய் இருக்கலாம்.

அடுத்த பக்கம்

Advertisements