அதில் நாயகன் பேர் எழுது 10

து ஒன்றும் சாதாரண இரவில்லையே, ஆக விவனுக்கும் சாதாரணமாக தூக்கம் வரவில்லை. பிடிவாதமாய் ஏசியை ஓடவிட்டுட்டு ஓவன்ல போய் உட்காந்த ஐஸ்க்ரீம் மாதிரி குல்டுக்குள்ள குளிர்காஞ்சுட்டு இருந்த ரியாவை சுற்றியே ரிங்கா ரிங்கா ரோசஸ் ஆடியது அவன் மனம்.

அதிலும் அவள் சற்று முன் சிலிர்த்துக்கிட்ட சில்வண்டு ரேஞ்ல சண்டை போட்ட விதம் அவனை மகிழ்ச்சி என்ற நிலையிலிருந்து கிளர்ச்சி என்ற நிலை வழியாய் காதல் புரட்சி என்ற நிலையில் கொண்டு போய் நிறுத்தி இருக்க,

எங்க இருந்து வருமாம் தூக்கம்? இன்ஸ்டெண்ட் இன்சோம்னியா, இன்பமாய் இவன்.

சீக்கிரம் சாப்பிட்டு வந்தவனாயிற்றே, நேரம் போக போக சின்னதாய் பசிப்பது போல் ஒரு உணர்வு. சரி ஒரு ஆப்பிளை எடுத்து சாப்பிடலாம் என பெட் அருகில் வைக்கப்பட்டிருந்த பழத்தை எடுக்க வந்தவன் அதை வாயில் வைக்க, அப்பதான் அவனுக்கு அந்த பூச்சி தாக்குதல். அதுக்கு அடுத்த கட்டமா அவன் வைஃப்ட்ட இருந்து அப்படி ஒரு அணுகுண்டு தாக்குதல்.

அப்படி எதிர்பாரா நேரத்தில் அவன் இதழில் இறங்கியவள் அடுத்துமாய் அவன் மார்பில் புதைய, முழுமையாய் அவளை அணைத்த இவன், சின்னதாய் கூட அசையாமல் அப்படியே நின்றிருந்தான்.

என்னவள் என முழுமொத்தமும் அவன் உணர்ந்தாலும், காதல் கனிந்து கணவனாய் அவனை உரிமை கொள்ள உந்தாமல், அவள் மீது தாய்மை உணர்வைத்தான் அந்நிலையில் இவனுள் தட்டி எழுப்பியது அவன் சுயம். தன்னிலை வரவும் அவளது இந்த செயலை அவள் என்னதாய் பார்ப்பாளோ என்ற உணர்வுதான் அவனுக்குள் போர்கால நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

ரியாவுக்கு அவள் காதில் ஒலிக்கும் விவனது இதய துடிப்புதான், அவள் நின்று கொண்டிருக்கும் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உணர வைக்கிறது.

மெல்லமாய் எனினும் தன்னிலை, தான் நிற்கும் வகை, தான் செய்த செயலின் முறை அனைத்தும் அவளுக்கு மொத்தமாய் புரிய, கோடி வோல்டில் கொத்திப் பிடிங்கும் இடிகள் சில அவள் இதயத்தில் விழ, அவன் பிடியிலிருந்து ஆக்ரோஷமாய் விடுபட அவள் திமிறினாள்.

அதை எதிர்பார்த்திருந்தான் அல்லவா, விவன் அவளை அசைய கூட விடாமல் பிடித்துக் கொண்டான்.

“அலறி அடிச்சு ஆர்பாட்டம் செய்ய மாட்டேன்னு சொல்லு, அப்பதான் விடுவேன்” அழுத்தமாய் சொன்னான் அவன்.

“முதல்ல நீ கன்சீவா இருக்கன்னு ஞாபகம் வச்சுக்கோ” அவன் வார்த்தைகளில் வெறித்தனமாய் திமிறிக் கொண்டிருந்தவள் அப்படியே அமைதியாக,

“கன்னா பின்னானு இங்க எதையும் செய்யாத, இருட்ல எங்க இடிச்சுப்பியோ, எது தட்டி விழுவியோ” என இன்னுமாய் அவளை நிலைப்படுத்தினான் அவன். இப்போதும் அவள் உடல் கிடு கிடுவென அவன் கைகளுக்குள் நடுங்கிக் கொண்டிருப்பது அவனுக்கு புரிகின்றது.

“நான் எதையும் தாப்பால்லாம் நினைக்கல ரியு, ப்ளீஸ் மனச போட்டு வருத்திக்காத” மெல்லமாய் அவளை அருகிலிருந்த பெட்டில் உட்கார வைத்தான்.

இரு கைகளாலும் முகத்தை மூடியபடி சற்று நேரம் அரவமின்றி அமர்ந்திருந்தாள் அவள். அவளையே செய்கையற்று பார்த்து நின்றிருந்த விவன், அந்த மெல்லிய வெளிச்சத்தில் சற்று நேரம் கழித்துதான் கவனித்தான், அவள் வெண்ணிற புடவையில் சொட்டிக் கொண்டிருந்தது ரத்தம் அவள் முகத்திலிருந்த கைகளிலிருந்து.

“ஹேய் லூசா நீ, என்ன செய்ற?” பதறிப் போய் இவன் அவள் கைகளை பற்றி எடுத்த வேகத்தில், இவன் சட்டை வேஷ்டியிலும் ரத்த பெரும் புள்ளிகள்.

சத்தமிட்டு கத்திவிடக் கூடாதென தன் வாயை தன் கைகளால் மூடி இருந்தவள், தன்னை கட்டுபடுத்த அதை கடித்திருந்த வேகத்தில் புண்ணாகி ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது அவளது கையில்.

அதற்கும் மேலாக வெடித்தாள் அவள், “ஆமா நான் லூசுதான், லூசேதான், இப்படி என்ன செய்றேன்னே தெரியாம எதையோ எவன்கிட்டயோ செய்துதான், இப்ப இப்படி குழந்தையோட” வேகமாய் தன் வயிற்றை அடித்துக் கொள்ள போனவள், படார் படாரென தன் தலையில் இரு கைகளாலும் அடித்துக் கொண்டு கதற,

ஆடித்தான் போனான் அதை அருகிலிருந்து பார்த்திருந்தவன்.

“ஹேய் கிறுக்கு மாதிரி இதென்ன வேலை ரியு?” பாய்ந்து போய் அவள் இரு கைகளை இவன் பிடித்து நிறுத்த,

அவளோ, “ஆமா நான் கிறுக்குதான் பைத்தியம்தான் இல்லனா இப்படி செய்வனா” என உச்சஸ்தாதியில் துடித்தாள். அடுத்து அதற்கு மேல் என்ன சொல்லி தன்னை கொன்றெடுக்கும் மன வேதனையை கொட்டவென தெரியாமல், “ஐயோ அம்மா” என பெரும் குரலில் மூச்சடைக்க, தன்னை மீறி கதற தொடங்கினாள்.

எல்லாம் ஒரு கணம் தான், அதே நொடி திடும் என உணர்ந்தவளாய் கதவின் புறம் ஒரு பார்வை.

இவ அழுறது வெளிய கேட்குமோ? கண்மணி வீட்ல என்ன நினைப்பாங்க? அந்த நிலையிலும் அது நினைவு வர, தன் சத்தத்தை கட்டுப் படுத்த வழி தெரியாமல், அவளது கைகளும் இவன் கைகளுக்குள் இருந்ததால் சட்டென சரிந்து சைடிலிருந்த தலையணையில் முகம் புதைத்து கதறினாள்.

மிகவுமே பாதிக்கப்பட்டான் விவன்.

அடுத்த பக்கம்

Advertisements