அதில் நாயகன் பேர் எழுது 1 (2)

திருமண பதிவு அலுவலகத்தில் அடுத்து வரப் போவதை அறியாமல், அவளை ஆட்டுவிக்கும் படபடப்பை மறைத்தபடி ரெஜிஸ்ட்ராரின் அழைப்பிற்காய் காத்திருந்தாள் ப்ரியா.

மெல்ல பார்வை திருப்பி தான் மணக்க இருப்பவனை சற்றாய் பார்த்தாள். கொஞ்சமாய் உதடு கடித்து எங்கோ பார்த்தபடி ஏதோ நினைவில் நின்றிருந்தான் அவன். இவளை சட்டை செய்ததாகவே தெரியவில்லை.

இவளையும் மீறி ஒரு சின்ன பெருமூச்சு வருகிறது இவளுக்கு. செபின் அப்படித்தான். எப்போதும் ஒரு வகை மௌனத்தில் இருப்பான். அவன் இவளுக்கு அறிமுகமாகி இன்றோடு நாற்பது நாள் இருக்குமா என்று கூட தெரியவில்லை. அதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டது.

அதற்கு மேல் எதையும் நினைக்க பிடிக்காமல் இவள் மனதை கலைக்க, இப்போது இவளுக்கு அடுத்து வந்து அமர்கிறது ஒரு ஜோடி.

இவளைப் போல தங்கள் திருமணத்தை பதிந்து கொள்ள வந்திருப்பார்கள் போலும்.

“செம க்யூட்டா இருக்கடி செல்ல பொண்டாட்டி” வந்த ஜோடியில் ஆண் சின்னகுரலில் தன்னவளிடம் சொன்னாலும் இவள் காதுக்கு கேட்கத்தான் செய்கிறது.

“அச்சோ என்ன நீங்க, எங்க வச்சு ?” அந்த கல்யாணப்பெண் இப்போது மறுப்பாய் சிணுங்க,

Advertisements

“எங்க வச்சுனாலும் நீ எனக்கு பொண்டாட்டிதான்டி” என அதற்கு பதில் சொன்ன அந்த பெண்ணின் அவன், பக்கத்தில் ஆட்கள் இருப்பதை உணர்ந்தவனாக இப்போது இயல்பான பேச்சிற்கு திரும்பினான்.

“ஏன் நித்து இவ்வளவு டென்ஷனா இருக்க?”

“ம், இப்படி பட்டு சேரி கட்டி, தலை நிறைய பூ வச்சு பப்ளிக் ப்ளேஸ்ல வந்து உட்கார எப்படி இருக்காம்? அதான் மூணு நாள்ல எப்படியும் கல்யாணம் இருக்குதுல்ல அப்ப செய்யத்தான போறேன். இப்பயும் எதுக்கு? எல்லாரும் என்னையவே பார்க்கிற மாதிரி இருக்குது?”

“ஹேய், என்ன நீ? செம அழகா இருக்கு இது. யார் என்ன நினச்சா என்ன? எப்படி பார்த்தாலும் இது கல்யாணம். அதுவும் முத முதல்ல செய்றோம். இன்னையில் இருந்தே நீயும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் தெரியுமா?”

“ஹ்ம்” அந்த பெண் குரலில் மறுப்பு சும்மா பொய்யாய் இடம் பிடித்திருந்தது.

இப்போதுதான் ப்ரியாவிற்கு உறைக்கிறது தன் கவனம் முழுவதுமே அவர்கள் மேலேயே இருப்பது!

‘அச்சோ என்ன இது? இப்படி போய் அவங்களையே பார்த்துகிட்டு இருக்கேன் நான்?’ அவசர அவசரமாக இவள் பார்வையை திருப்ப, மனதிலோ, ‘இப்படி புடவை கட்டி இவ்வளவு அதிகமா இல்லனாலும் கொஞ்சமாவது பூ வச்சு நடந்திருக்கலாம்  இவளோட கல்யாணமும்’ என்று ஓடுகிறது ஒரு நினைவு.

அது அவளுக்குப் பிடிக்கும். முழு அலங்காரத்தில் மொத்த முறையும் செய்து சர்ச்சில் நடக்கும் ஒரு ட்ரெடிஷனல் திருமணம்தான் இவளது ஆசை. அதோடு தன் நினைவை நிறுத்தியவள், செபினை மெல்ல பார்வையால் தேடினாள்.

தூரத்தில் யாரிடமோ விவாதித்துக் கொண்டிருந்தான் அவன். ‘ஓ! இவன் வாய திறந்து பேசக் கூட செய்வானாமா?’ இவள் எழுந்து அவனிடமாக போனாள்.

அடுத்த பக்கம்

Advertisements