அதில் நாயகன் பேர் எழுது 1

அத்தியாயம் 1

anvy

ன்று ஒரு புரட்டாசி திங்கள் ஏழாம் நாள், ஏக்க பெருமூச்சொன்றை இழுத்து விட்டுக்கொண்ட அந்த முதியவர் தன் கண் முன் விரிந்திருந்த அந்த குதிரை லாயத்தின் மீது மீண்டுமாய் ஒரு பார்வையை ஆழ்ந்து செலுத்தினார்.

உயரமாய், இன்னுமே உடற்கட்டு முழுதுமாய் தளராமலும் இருந்த அவர், தென்னாட்டுப் பட்டுவஸ்திரத்தை பாண்டி நாட்டு முறையில் இடையிலிருந்து கணுக்கால் வரை மடிப்போடும் இடைக்கச்சையோடும் உடுத்தி இருந்த பாங்கும், அந்நாட்டுக்கு வழக்கமில்லா முறையில் மேல் சட்டை சீனத்துப்பட்டில் சீனர்களை போலவே அணிந்திருந்த முறையும்,

அவர் மகா செல்வந்தர் என்பதோடு ஒரு வகையில் புதுமை விரும்பி, வாழ்வின் மீது இன்னுமே பற்றுடையவர் மற்றும் தான் நினைத்ததை செய்ய தயங்காதவர் என்பதையும் பறைசாற்ற, அவர் முக பாவமோ அதற்கு நேர் எதிராய் அமைந்திருந்தது இவ்வேளை.

இப்பொழுது நிமிர்ந்து ஆகாயத்தை ஒரு பார்வை பார்த்தவர், ஜாமம் ஏறத்தொடங்கி எத்தனை நாழிகையோ கடந்திருந்ததை உணர்ந்தவராய் தன் வீட்டிற்குள் செல்லும் நோக்குடன் வாயிலை நோக்கி நடந்தார்.

வாயிலின் முன்னிருந்த அந்த பரந்த முற்றத்தை அடையவும் ஏதோ ஒரு வெறுமை உணர்வு அவர் உள்ளிருந்து உள்ளமெல்லாம் நிறைய, எதிரிலிருந்த தனது மாளிகையின் மீது முழு அளவுமாய் ஆராய்தலாய் ஒரு பார்வையை வீசினார் அவர்.

வானோடு போட்டியிட்டு மிஞ்சிவிடும் திராணியுடன், அகல உயரமாய் அத்தனை கம்பீரமாய், எதிரியை அவமதிக்கும் மாவீரன் போல் மார் நிமிர்த்தி நின்று கொண்டிருக்கிறது அது. ஏனோ கர்வமாய், அழிவுக்குத்தக்க மமதையாய், அது அகங்கார ரூபமாய் நிற்பதாய் படுகிறது இக்கணம் இவருக்கு.

அதுதானோ? அந்நினைவுதானோ? ஏது காரணம் என உணரும் முன்னம் இவர் மார் பகுதியில் ஒரு வகை அழுத்தம். பிராண வாயுக்கு இவர் நாசி தவிக்கிறதோ? இடக் கையோடு ஏற்படும் வலிதான் இப்போது இவருக்கு முதல் கவனமாய் உடன் கவலையாய் இருக்கிறது.

‘அவ்வளவேதானா? முடிந்தேனா நான்?’ யாருமற்ற முற்றத்தில் அப்படியே சரிந்தார் அவர்.

மெல்ல மெல்லமாய் அவர் துடிப்படங்கும் நேரத்தில் இதோ இவள். இளங்கன்னிகை அவளோடு கவசமாய் அவனும். ஒரு இளைஞன்.

எங்கிருந்து வந்தார்கள் என யாரும் உணரும் முன்னும் தவிப்பாய் வந்தவர்கள், இப்பெரியவரை கரங்களால் அள்ளி எடுத்து அவரது பஞ்சணைக்கு கொண்டு செல்ல, கிடத்திவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தால்,

அவரோ மரணித்து மணித் துளிகள் கடந்திருந்தன. கலங்கிப் போய் பார்க்கிறாள் அவள். ஆனால் அந்த இளைஞனின் பார்வையில் அத்தனை ஆறுதல். இவளைப் பார்த்துச் சொன்னான்,

“உன்னால் முடியும்…  மன்னித்துவிடு”

மெல்ல மெல்ல தூக்கம் கலைய எழுந்து உட்கார்ந்தாள் அவள்.

ப்ரியா.

வாயில் சற்றாய் ஒரு கரிப்புச் சுவை. என்ன கனவு இது? யார் அந்த தாத்தா? இவ எதுக்கு அவரை பார்க்கப் போறா? அது போதாதுன்னு இந்த விவன் வேற எதுக்கு வந்தான்? என்னது இவளால மன்னிக்க முடியுமாம்?

மனம் இன்னும் கனவிலிருந்து முழுதாய் வெளி வந்திராத நிலையில் சட்டென ஞாபகம் வருகிறது இவளுக்கு.

‘ஹேய், இன்னைக்கு உனக்கு கல்யாணம்டி’ பட்டென மாறிப் போகிறது இவளது மனநிலை.

பாய்ந்து வந்து ஒட்டிக் கொள்கிறது படபடப்பு.

‘அச்சோ நேரமாகிட்டோ?’ அவசர அவசரமாய் நேரத்தைப் பார்த்தவள்,

‘கடவுளே இன்னைக்குன்னு பார்த்து எப்படி அலார்ம் அடிச்சது கூட தெரியாம தூங்கி இருக்கேன். செபின் என்ன சொல்வாரோ?’ புலம்பியபடியே எழுந்து குளியலறை பார்த்து பறந்தாள்.

திரும்பி வந்தவள், அவள் வழக்கப்படி அங்கிருந்த காலண்டரில் தேதி கிழித்துவிட்டு மீண்டுமாய் தன் ஓட்டத்தை தொடர எத்தனிக்க, ஏதோ கண்ணில் படுகிறது.

இப்போது நிதானமாய் மீண்டுமாய் அந்த காலண்டரைப் பார்த்தாள். இன்று தேதி புரட்டாசி ஏழு என்றது அது.

‘கனவில் இந்த தேதிதானே வந்துச்சு,’

அப்படின்னா?!

அடுத்த பக்கம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements