அதில் நாயகன் பேர் எழுது 3

முந்தைய அத்தியாயங்கள் இங்கே -> முந்தைய அத்தியாயங்கள்

அத்தியாயம் 3

anvy

“குழந்தையா? நானா?” என்றபடி திரும்பிய அந்த ஒடிசலான உருவம் செயலின்றி ஒன்றும் திரும்பியிருக்கவில்லை, சரேலென திரும்பிய வேகத்திலேயே தன் கைப்பற்றிய ஆடவனின் கழுத்தில் தன் வாளையும் பதித்திருந்தது அது.

ஆம், கண்ணிமைக்கும் காலம்தான் அதற்குள் தன்வாளை உடை மறைவிலிருந்து உருவியெடுத்து, பின் நிற்கும் இவன் கழுத்தில் மிகச் சரியாகவே அமிழ்த்தி இருந்தாள் அவள். அவள்தான் ருயம்மாதேவி.

அவள், அந்த கோல்கொண்டா கோட்டைக்கும், காகதீய தேசத்துக்கும் மன்னரான இரண்டாம் பிரதாபருத்ரரின் மகள் என்பதாலும், போர்க்களத்தில் வாள் சுழற்றுவதில் ஆண்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ராணி ருத்ரமாதேவியின் பேத்தி என்பதாலும், பால்ய பருவத்திலிருந்தே கிடைக்கப் பெற்ற சிறந்த வாள் பயிற்சியின் அடையாளமாய் இதை சிரமமின்றியே செய்திருந்தாள்.

காப்பாற்ற வந்தவன் என்ற காரணத்தினால் தன்னை தொடுவது ஆண் என்று தெரிந்தும் அவன் தலையை வாங்காமல் கழுத்தில் வாளை வைத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தாள்.

“எடும் உம் கையை” ஆண் வேடமிட்டிருந்த அவள் எதிரிலிருப்பவன் தன் வேஷத்தை நம்ப வேண்டும். அது அவளது பெண்மைக்கு பாதுகாப்பு என்ற நினைவில் ஆண் குரலிலேயே கர்ஜித்தாள்.

அத்தோடு நில்லாமல் தன் மீதிருந்த அவனது இரும்புக் கரத்தை தட்டிவிட்டபடியே, அந்த கரத்திற்கு சொந்தக்காரனின் உருவத்தின் மீது, சிற்றளவேனும் பயமேதுமின்றி பார்வையையும் செலுத்தினாள்.

எதிரில் நின்றவன் மலைபோல் பருத்தவனாய் இல்லாமல், போர்களத்திற்கு பொருந்தும் முறுக்கேறிய செதுக்கிய சரீரம் உடையவனாய் இருந்தான்.

முத்துக்கள் தைக்கப்பட்ட துகில் ஒன்று அவனது தோளிலிருந்து சரிந்து தொங்குகிறது என்றால், கைகள் நீங்கலாக இறுகிய அவன் உடல் அமைப்பையும், எஃகிரும்பால் வார்த்தெடுத்தது போன்ற அவனது தோள் அமைப்பையும் கட்டிக் கிடக்கிறது ஒரு மார்கவசம்.

முழுப்போருக்கு அணியும் கவசமில்லை இது. ஆனாலும் முழு பாதுகாப்பு கால உடையும் இல்லை.

இயல்பைவிடவும் சற்று நீண்டிருந்தது அவனது கைகள்.

அதன் வலிப்பும் வாலிபமும் இவள் தட்டிவிட்டதால் ஒன்றும் இவள் மீதிருந்த பிடியை விலக்கி இருக்கவில்லை அது என்பதை இவளுக்கு உணர்த்துகின்றன.

அவன் இடையிலிருந்து நீண்டு தொங்கிக் கொண்டிருந்தது வாள் ஒன்று. அவன் கரத்தைப் போலவே நீளமாய் காணப்படுகின்றது அது.

அவன் நின்று கொண்டிருக்கும் வகையில் வெளிப்படும் ஆளுகையே அதன் மற்றொரு பரிமாணமான சுயகட்டுப்பாட்டையும் தெள்ளென தெரிவிக்கின்றது.

அஃதோடு தன் கழுத்தின் மீது பிறன் வாள் வைத்த பின்னும், தன் வாளை உருவக் கூட முயற்சி செய்யாமல் நின்றிருந்த அவன் செயல், அத்தனை வேகமாய் இவள் வாளை வீசிய போதும், அது அவனை தாக்குவதற்காய் இல்லை என்ற நோக்கத்தை அவன் அதற்குள்ளாக உணர்ந்திருக்க வேண்டும் என்பதை இவளுக்கு புரிவிக்கிறது.

மேலும் இவள் செயலுக்காய் சற்றும் சீண்டப்படாத அவன் மனோபாவம், இவளே அவனிடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பாளோ?

அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கிறாள் இவள்.

இவளுக்கு எதிராய் நின்றிருந்த அவன் வெளிச்சமற்ற பகுதியை நோக்கி நின்றிருந்ததால், அரை குறையாய்த்தான் இவளுக்கு பார்க்க கிடைக்கின்றது. அவனது சிலையொத்த முகமும், சீரான கூர் நாசியும், அழுத்த அதரங்களும், சுந்தரன்தான்.

கன்னியின் கலையா மனதை கவர்வது காற்றில் கலையும் அவன் சிகை என்றால் கருத்தை கவர்கிறது சூரிய ஒளியில் பிரகாசிக்கும் போர்க்கள புது ஈட்டியொத்த அவன் விழிகள். அக்கண்களில் காணப்படும் நேர்மையும் தெளிவும்.

சந்திர ஒளியில் அவன் சரீர நிறமெல்லாம் சரியாய் தெரியவில்லைதான், ஆனால் அவனது அரசகளையையும் அதனால் மறைக்க முடியவில்லை.

அடுத்த பக்கம்

Advertisements