ஆடுகளம் 6

கதிர் நிலவன்… பெயரைப்போலவே ஒரு விழியில் வெய்யோனது வெம்மையையும், மறு விழியில் பால் நிலவின் குளிர்ச்சியையும் கொண்டிருந்தான். அவனின் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், தினவெடுத்த தோள்களும் அவனை ஆயுள் தண்டனை கைதி என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியாத படி திமிரெடுத்து இருந்தது.

 

அவன் தன் கண்ணில் இருந்து மறையும் கணம் வரையில், இமை மூடாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அதிதி. ஏனோ அவளின் இளநெஞ்சம் அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவள் அறிவினை உந்தித் தள்ளியது.

 

அதிதி பாஸ்கரனிடம், “அங்கிள்.. அவர் யாரு? என்ன தப்பு செஞ்சாரு?” என்றாள்.

 

பாஸ்கரன், “அவன் நாலுபேர கொடூரமா வெட்டி கொலை செஞ்சுட்டான்…”

 

“எப்போ?”

 

“இப்போத்தான், ஒரு மூணு நாலு மாசம் இருக்கும். கோர்ட்ல அத்தனைபேர் முன்னால தைரியமா, ‘நான் தான் கொன்னேன்… என் கையால தான் அவனுங்கள துண்டு துண்டா வெட்டி கொன்னேன்… உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோங்க’னு திமிரா வேற பேசினான். அவன் கேஸ் கோர்ட்டுல நடந்த வரைக்கும் அவன் தான் எங்களோட ஹாட் டாப்பிக்…”

 

அதிதி, “அவர பாத்தா கொலை செய்ற அளவுக்கு கொடூரமான ஆளா தெரியலியே, எதுக்காக கொலை செஞ்சாராம்?” என்றாள்.

 

பால முருகன் வெடுக்கென, “அது எதுக்கு அதிதி உனக்கு?” என்றார்.

 

அதிதி குரல் குன்ற, “சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன், சாரி அங்கிள்…” என்றாள்.

 

அவள் முகம் போன போக்கில், தன் வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்த பாலமுருகன், “தப்பா நினைக்காதம்மா, இப்பல்லாம் யாரையும் நம்ப முடியிறதில்ல. பார்க்க நல்லவங்களா இருக்கிறவங்க தான் வக்கிரபுத்தி அதிகமா வச்சிருக்காங்க. நாளைக்கி அவனே உன்கிட்ட வந்து பேசினாலும், நீ அந்தப் பையன்கிட்ட ஜாக்கிரதையாக நடந்துக்கனும். புரியுதா?…”

 

“புரியுது அங்கிள், நீங்க எனக்கு அப்பா மாதிரி, நான் உங்கள தப்பா நினைக்க மாட்டேன்.”

 

அவள் பதிலால் மனம் நெகிழ்ந்த பாலமுருகன், “இங்க பாரு அதிதி, எனக்கு உன்ன இந்த விளையாட்டுக்கு அனுப்புறதுக்கே மனசில்ல. நமக்கு வேற வழியில்லன்ற ஒரே காரணத்தாலதான் நான் இதுக்கு ஒத்துகிட்டேன். இப்போ இந்த மாதிரி ஆளுங்ககூட, ஒரே வீட்டுல நீ இருக்கணும்னு நெனச்சா எனக்கு மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்குதும்மா…”

 

“பயப்படாதீங்க அங்கிள், நான் ஒன்னும் அவன் கூட தனியா இருக்கப் போறதில்லையே. இருபது பேர் விளையாட வருவாங்கன்னு வெங்கட் சார் சொன்னார்ல. அதுவும் போக பத்துப் பதினஞ்சு நாள் தான இருக்கப் போறேன், நான் பத்திரமா இருந்துக்குவேன் அங்கிள்.”

 

“சரிம்மா, நானும் பாஸ்கரனும் போய் வெங்கட் சார பார்த்து அக்ரீமெண்ட் பத்தி பேசிட்டு வர்றோம். நீ அதுவரைக்கும் இங்கேயே இரும்மா…”

 

“சரி அங்கிள்…”

 

அவர்கள் இருவரும் எழுந்து சென்றதும் அவளின் கண்கள் ஆட்டோமேட்டிக்காக கதிர்நிலவன் சென்ற பாதையை நோக்கியது. அன்றைய நாள் ஆரம்பத்திலிருந்து விளையாட சென்றவர்கள் அனைவரும் ஐந்து நிமிடத்திலேயே விளையாடிவிட்டு திரும்பி இருந்தனர். கதிர் மட்டும் இருபது நிமிடங்களுக்கு மேலாகியும் அந்த அறையிலிருந்து வெளியே வரவே இல்லை.

 

அதிதி, ‘அவன் எங்க போனான்? ஒருவேள அப்டியே தப்பிச்சு ஓடிப் போயிட்டானோ?’ என்று தன் சிந்தனைச் சில்லறைகளை சிதற விட்டபடி அந்த அறையின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதுசரி, அவன் அந்த அறைக்குள் இருந்தால் தானே திரும்பி வருவதற்கு?!

 

கதிர்நிலவன் விளையாட்டு அறையினுள் நுழைந்ததும், தயாராக இருந்த இருக்கையில் அமராமல், அறையின் மூலையில் மாட்டப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவை பார்த்து, “நான் விளையாட முடியாது…” என்றான்.

 

அவனோடு வந்த காவலர்களில் அறுபது வயதை நெருங்கிய ஒருவர், “டேய்… என்னடா பண்ற? காலாகாலத்துல விளையாடி முடிடா…” என்றார் அன்பு கலந்த கோபக்குரலில்.

 

“இல்ல அங்கிள், நான் விளையாட மாட்டேன்…” என்று தான் பிடித்த பிடியிலேயே உறுதியாக நின்றான் கதிர்.

 

உடன் வந்திருந்த மற்றொரு இளவயது காவலர், “நான் அப்போவே சொன்னேன்ல சார், இவன் வெளியில வந்தாலே விவகாரம் பண்ணுவான்னு… நீங்கதான் ஐயோ பாவம் சின்ன வயசுனு இரக்கப்பட்டீங்க. இப்ப என்ன செய்றான் பாருங்க, பேசாம திருப்பி கூட்டிட்டு போயிடுவோம் சார், இது தேவையில்லாத வேலை நமக்கு….” என்றான் கடுப்பாக.

 

“யோவ்… என்னய்யா நீ? ஏதோ நம்ம சொல்லி இங்க எல்லாம் நடக்குற மாதிரி பேசிட்டு இருக்க? இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்யா… இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்துட்டோம், என்ன ஏதுன்னு பார்த்து முடிச்சுட்டு போயிடுவோம். இல்லன்னா வெயில் மழைனு பார்க்காம நம்மள மறுபடியும் திருப்பி அனுப்பி தொலைவானுங்க.”

 

இளவயது காவலர், “அதுக்குனு இவன் பண்ற அக்கப்போர எல்லாம் பார்த்துட்டு இருக்கணுமா சார்?”

அடுத்த பக்கம்

Advertisements