ஆடுகளம் 5

அதிதி பணிபுரியும் சிவா எக்ஸ்போர்ட்ஸ் எனும் கட்டிடத்தின் பின்புறம் அமைந்திருந்தது அந்த மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட். இந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட எஃகோ எனப்படும் ஆதித்யாவின் சூப்பர் மார்க்கெட்டிற்குத் தான் அதிதியின் நண்பிகள் குழு தற்சமயம் படை எடுத்திருந்தது.

 

அசிரத்தையோடு அதிதி, “இங்க வர்றதுக்கா ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டீங்க?”

 

“நாம எல்லாரும் விளையாடி முடிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் ஆகிடும்டி…”

 

அதிதி, “அப்டி என்ன விளையாட்டுதான் உள்ள இருக்கோ?!…” என்று அலுத்துக்கொண்டாள்.

 

வினிதா, “ரொம்ப சலிச்சுக்காதடி, இந்த ராஜ வாழ்க்கைங்கிற கேம் ஷோல பார்ட்டிசிபேட் பண்றதுக்கு வந்திருக்கோம். அவங்க தன்னோட ஷோவுக்கு ப்ளேயர்ஸ்ஸா பொது மக்கள செலக்ட் பண்றாங்களாம். யார் வேணும்னாலும் நூறு ரூபா கட்டி கேம் விளையாடலாம்.”

 

“ஏய்… சொன்னா கேளு வினி, கேம் விளையாட மூடுல நான் இல்லை… நான் அப்படி ஓரமா உட்கார்ந்து இருக்கேன் நீங்க போய் விளையாண்டுட்டு வாங்க…” என்று தாஜா செய்ய முயன்றாள்.

 

“சின்னப்புள்ள மாதிரி படுத்தாதடி… மொத்தமே மூணு லெவல்தானாம், ஒருத்தருக்கு பத்து நிமிஷத்துல கேம் முடிஞ்சிடும்.”

 

“இதுல ஜெயிச்சு நமக்கு என்னடி கிடைக்கப் போகுது?”

 

“நல்லா ஸ்கோர் பண்ற நூறு பேர, சென்னைல நடக்குற மெயின் கேம்ல பார்டிசிபேட் பண்ண வைப்பாங்களாம். கேம்கூட ஈசியா இருக்குனு எங்க பக்கத்துவீட்டு லட்சுமி அக்கா சொல்லுச்சு. நண்டு சுண்டு எல்லாம் விளையாடிட்டு வந்து செமையா இருக்குனு உசுப்பேத்தினா எனக்கும் ஆசை வராதா?”

 

“உனக்கு ஆசையா இருக்குன்னு என்னோட நூறு ரூபாவையும் சேர்த்து காவு குடுக்க பாக்குறியேடி…”

 

“அபசகுணமாவே பேசிட்டு இருக்காத.. நம்ம அதிர்ஷ்டத்துக்கு செலக்ட் ஆகிட்டோம்னு வை லட்சக்கணக்குல பரிசு கிடைக்கும்டி, தோத்தா வெறும் நூறு ரூபாதான் போகும்… வாடி..” என்று நச்சரித்து உள்ளே இழுத்துச்சென்றாள்.

 

சூப்பர் மார்க்கெட்டின் ஒரு சிறிய அறையை, இதற்கெனவே சுத்தம் செய்து வைத்திருந்தனர். அதனுள் முட்டை வடிவிலான நான்கு இருக்கை கொண்ட விசித்திரமான ஒரு மெஷின் வைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு இருக்கையிலும் கண்களில் மாட்டிக்கொள்ளும் கருவியும், விளையாடுவதெற்கென வீடியோ கேம் போல ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது.

 

தன் நண்பிகளோடு வரிசையில் நின்ற அதிதி தனக்கு அருகிலிருந்த ஒரு போஸ்டரில், போட்டி நடைபெறும் இடங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே போடப்பட்டு இருந்ததைக் கண்டாள். ஆதித்யா சூப்பர் மார்க்கெட், ஆதித்யா டிவி சேனல், ஆதித்யா செல் போன் நிலையங்கள், ஆதித்யா ஆடையகம், ஆதித்யா நகைக்கடை என்று நீண்டு கொண்டே சென்றது அந்த பட்டியல்.

 

தனது கயல்விழியை இன்னும் பெரிதாக விரித்த அதிதி, ‘அடப்பாவிகளா, முப்பது முப்பத்தஞ்சு கம்பெனி பேர் இருக்குது, ஹாஸ்பிட்டல கூட விட்டு வைக்கலயாடா நீங்க?… தலைக்கி நூறு ரூபாய் வாங்கியே பல கோடி சம்பாதிச்சிருப்பானுங்க போலயே. எப்டி எல்லாம் டிசைன் டிசைனா ஏமாத்துறாங்க? எல்லாம் வினி மாதிரி அதிர்ஷடத்த நம்புற ஆளுங்கள சொல்லனும்…’ என்று மனதிற்குள் புலம்பியபடி அறையினுள் வந்தாள்.

 

அங்கே போட்டியாளர்களின் தகவல்களை பதிவு செய்வதெற்கென ஒரு கணிணி, அறையின் முன் சுவற்றினிலிருந்த முதல் டிவியில் முன்னிலையில் இருக்கும் போட்டியாளர்கள், இரண்டாவது டிவியில் விளையாடும் முறை, அதற்கு மேல் கண்காணிப்பு கேமரா என்று அந்த இடமே பணச்செழுப்பில் அதகளமாய் காணப்பட்டது.

 

அங்கே ஷாப்பிங் செய்ய வந்திருந்த வசதி படைத்த ஆட்களே, லட்சத்தின் மேல் ஆசைகொண்டு கேம் விளையாடுவதைக் காணும் பொழுது, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் வினிதாவை திட்டி எந்த பிரயோஜனமும் இல்லை என்று அதிதிக்கு விளங்கியது.

 

பெயரையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்துவிட்டு தோழிகளோடு உள்ளே சென்று தனக்கான இருக்கையில் அமர்ந்தாள் அதிதி. விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை எடுத்து தலையில் மாட்டியதும் அவளுக்கான முதல் கேம் தயாரானது.

 

முதல் விளையாட்டு, கிட்டத்தட்ட டெம்ப்பிள் ரன் போல காட்டுப்பாதையில் நிற்காமல் ஓடுகின்ற கேம். இடையில் எந்த தடங்கல் வந்தாலும் அதைக்கண்டு அஞ்சாமல் ஓடி, மூன்று நிமிடங்களில் எல்லையைத் தொட வேண்டும்.

 

அதிதிக்கு அது, தற்போதிருக்கும் தன் மனநிலையையே கண் எதிரில் காட்டுவது போல் தோன்றியது. திரையில் விதி முறைகளும், விளையாடும் முறைகளும் தோன்றி முடிந்ததும், இயல்பாகவே உள்ளிருந்து வந்த உத்வேகத்தோடு ஓடத் துவங்கினாள்.

 

அதிதி தன் பாதையில் இருந்த பாறைகளையும் பள்ளங்களையும் பக்குவமாய் தாண்டி ஓடிட, அடுத்து அவள் பாதையில் பேய்களும் பிசாசுகளும் குறுக்கிட துவங்கியது. எது வந்தாலும் இலக்கை அடையாமல் விட மாட்டேன் என்ற உறுதியோடு ஓடியவளை ‘வெற்றி பெற்றுவிட்டீர்கள்…’ எனும் போஸ்டர் ஒட்டியிருந்த சுவரே தடுத்து நிறுத்தியது.

அடுத்த பக்கம்

Advertisements