ஆடுகளம் 4

அதிதி உழைத்துக் களைத்து வீடு திரும்பிய நேரம் அவளுக்கென அங்கே ஆறு ஜோடி விழிகள் துயரமானதொரு தோரணையில் காத்திருந்தன. அப்பாவின் நெருங்கிய சினேகிதனான பாலமுருகன் மாமாவும் அவரின் மனைவி மகளும் வீட்டிற்கு வந்திருந்தனர். மாமாவின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்து இருப்பது அப்பட்டமாய் அதிதிக்கு தெரிந்தது. அவரின் மனைவி மங்களம் அத்தையோ பாட்டியின் கைகளை பிடித்து ஆறுதல் சொன்ன படி அமர்ந்திருந்தார்.

 

அவர்கள் முகம் கொண்டே அகம் அறிந்துகொண்ட அதிதி, “என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றாள்.

 

அனைவரும் அமைதியாக நிற்க, சந்தியா ஒரு காகிதத்தை அதிதியிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அது ஒரு வங்கியிலிருந்து வந்திருந்த கொரியர் காகிதம்… அதை வாசித்த அதிதியின் விழிகளில் அப்பட்டமான அதிர்ச்சி.

 

அதிதி, “என்ன அங்கிள் இது?” என்றாள் விழிநீர் ததும்ப….

 

பால முருகன், “ஆமாம்மா… பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால கதிரேசன் பேங்க்ல ஒரு பெரிய தொகையை லோனா வாங்கி இருந்தான். அப்போதைக்கு அவனோட தொழில் நல்லா டெவலப்பாகிட்டு இருந்ததாலும், குடும்பம் குழந்தைனு பொறுப்பா வாழ்ந்ததாலும் அவனை நம்பி நான் கேரன்டி கையெழுத்து போட்டு கொடுத்தேன்.”

 

அதிதி, “இத ஏன் அங்கிள் எங்கிட்ட முன்னாலேயே சொல்லல…”

 

“நான் வேணும்னு மறைக்கல அதிதி, எனக்குத்தான் ஞாபக மறதி அதிகம்னு உனக்கு நல்லா தெரியுமேம்மா… கதிரேசனும் உயிரோட இருந்த வரைக்கும் ஒரு நாள் கூட லேட் பண்ணாம கடன தொகைய மாசாமாசம் திருப்பி கட்டிக்கிட்டு வந்தான். அதனால நான் கையெழுத்து போட்டு கொடுத்த விஷயத்தையே மறந்து, அத பெருசா எடுத்துக்காம விட்டுட்டேன்…”

 

அதிதி, “ஆனா பேங்க்ல இருந்து எங்க வீட்டுக்கு இதுவரைக்கும் எந்த தகவலும் வந்ததே இல்லையே அங்கிள்… இப்போ இப்டி திடீர்னு இவ்வளவு பெரிய தொகை பாக்கி இருக்கு, வட்டியோட திருப்பி கட்டனும்னு சொன்னா நாங்க என்ன செய்றது?”

 

“அந்த பேங்க் அப்டித்தான்மா, சரியான கிறுக்கனுங்க… கஸ்டமர் தகவல் கேட்டா சரியா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க, அக்கவுண்ட் ஓப்பனுக்கே அநியாயத்துக்கு இழுத்தடிப்பாங்க, நாம கஸ்டப்பட்டு கொடுத்த டாகுமெண்ட் பேப்பர இஷ்டத்துக்கு எங்கேயாவது போட்டு மிஸ் பண்ணிடுவானுங்க. இப்பல்லாம் யாரும் அதுல அக்கவுண்ட் ஓப்பன் பண்றதே இல்ல, இருந்தும் நஷ்டத்துல நடத்துறாங்களாம். நாம என்ன செய்யிறது, அவங்கள கேக்குறதுக்கு ஆள் இல்ல, அதான் அந்த பேங்க் மட்டும் அப்டி இருக்கு….”

 

“உங்களுக்கு எப்டி தெரிய வந்துச்சு?”

 

“கதிரேசன் தன்னோட வரவு செலவு கணக்கு வீட்டுக்குத் தெரியக்கூடாதுன்னு, எல்லாருக்கும் தன்னோட ஆபீஸ் அட்ரஸ் மட்டும்தான் கொடுத்திருந்தான். எங்கிட்ட கூட அவன் இந்த கடனைத் தவிர வேறு எதைப் பத்தியும் சொன்னது கிடையாதும்மா. போன வருஷம் அவன் இறந்ததும் அந்த கடன் அப்படியே நின்னு போயிருக்கு போல, அவங்க அனுப்பின லெட்டர் எல்லாம் ஆபீஸ் அட்ரஸ்க்கு போயிருக்கு. கதிரேசனோடு போன் நம்பரும் ஸ்விட் ஆப்னு இருந்ததால கடைசியா கியாரண்ட்டி கையெழுத்து போட்ட என் அட்ரஸ்க்கு லெட்டர் வந்திருக்கு.”

 

அதிதிக்கு பாலமுருகனைப் பற்றி நன்றாக தெரியும், அவளுக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு அந்த குடும்பத்திற்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து வந்தவர். ஞாபகமறதி ஒன்றைத் தவிர வேறு எந்தக் குறையும் காணமுடியாத நல்ல மனிதர்.

 

அதிதிக்கு பத்து வயது இருக்கும் பொழுது, அவளின் அம்மா அப்பாவோடு சண்டை போட்டுவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினார். குழந்தைகளாய் இருந்த சந்தியாவும் கிருஷ்ணாவும் அழுவதைக்கூட பொருட்படுத்தாமல் அவள் அம்மா வேறு ஒருவரோடு அதிதியின் கண் முன்னே கைகோர்த்துச் சென்றுவிட்டார். அந்த மாபெரும் துயரத்தில் இருந்து அப்பாவை மீட்டெடுக்க, ஒரு நல்ல நண்பனாக பாலமுருகன் செய்த செயல்கள் அத்தனையும் அதிதிக்கு பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்து இருக்கின்றது.

 

அப்படிப்பட்டவர் வந்து சொல்லும் பொழுது, நிகழ்வது அனைத்தையும் நம்புவதைத் தவிர வேறு எந்த வழியும் அதிதிக்கு இருக்கவில்லை. ஆனது ஆகிவிட்டது, இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவளின் அறிவு அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கியது.

 

விழிகளில் அரும்பிய நீரை துடைத்து தூர எறிந்தவள், “நாம அடுத்து லீகலா என்ன செய்ய முடியும் அங்கிள்?” என்றாள்.

 

“என்னோட சொந்தக்காரன் ஒருத்தன் சென்னையில லாயரா இருக்கான், அவன்கிட்ட ஏற்கனவே பேசிட்டேன். நாம இப்போதைக்கு பேங்க்ல பேசி லீகலா ஒரு மூணு மாசத்துக்கு கால அவகாசம் வாங்கலாம். அந்த டைம்ல உங்க வீட்டை வித்து கடன அடைக்கனும்….” என்றதும் அங்கே மயான அமைதி.

 

“எனக்கு வேற வழி தெரியலம்மா…” என்றார் பாலமுருகன்.

 

அதிதிக்கும் வேறு வழியே இல்லை என்று தெளிவாக புரிய, “சரிங்க அங்கிள், அப்டியே செஞ்சிடலாம்…” என்றாள் உறுதியான குரலில்.

 

பாலமுருகன், “நீ உன் வீட்டை நினைச்சு கவலைப்படாத அதிதி, முடிஞ்சவரைக்கும் இத நான் தெரிஞ்சவங்களுக்கு கொடுக்க ஏற்பாடு பண்றேன். அப்போத்தான் நல்ல ரேட் கிடைக்கும், நாளப்பின்ன ஏதாவது வாய்ப்பு இருந்தா நாம திருப்பி வாங்கிக்கவும் முடியும்….”

 

அதிதி, “சரிங்க அங்கிள்…”

 

“சரிம்மா, நாங்க கிளம்புறோம்…”

 

அடுத்த பக்கம்

Advertisements