ஆடுகளம் 3

PhotoText

துதிப்போர்க்கு வல்வினை போம்;

துன்பம்போம்; நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம்

பலித்துக் – கதித்தோங்கும்

நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை.

 

அமர ரிடர்தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி.

 

எனும் செல்போன் சிணுங்கல் கேட்டு கண்விழித்து எழுந்தாள் அதிதி.

 

அதிதி… அவள் அழகை வார்த்தை கொண்டு விளக்குவதென்றால், நாம் நம் அறிவுக்கு எட்டிய ஆதித்தமிழனின் காலம் வரை சென்று வரவேண்டும்.

செதுக்கிச் செய்த பாரியின் தேர் போல உடலினள்… பாரினில் எவரும் பார்த்திராத பாண்டியனின் கொடியாளும் கயல் போன்ற விழியினள்… கவியெனும் கடலில் கரை கண்ட கம்பனும் காளிதாசனும் உவமை பாட ஏங்கிடும் அழகினள்… ஆதவன் முன்பு அகல் விளக்காய் நிலவும் ஒளிமங்கித் தோன்றிடும் நிறமினள்… பேரிரைச்சலுக்கு நடுவே சிரிக்கும் குழந்தையின் குளிர் குரலைப் போன்ற குரலினள்…

மலரினும் மெல்லிய அப்பெண் நிலவு, ஆதவனது பார்வை இப்புவியில் பதியும் முன்பே தனது அன்றாட பணிகளை துவங்கிவிட்டது. அடுப்பில் குக்கரை வைத்து அளவாய் அரிசியை போட்டு மூடி வைத்தவள், அது தயாராகிடும் முன்பே தான் தயாராகி வந்திருந்தாள். வெள்ளிக்கிழமை என்பதால் சாதத்திற்கு துணையாக சாம்பாரை ஆரம்பித்துவிட்டு, சைடில் உருளைக் கிழங்குகளை பொரியலுக்கென வேகவிட ஆரம்பித்தாள்.

ஏற்கனவே குக்கர் அடித்த விசில் சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்திருந்த அதிதியின் பாட்டி, அவளுக்கு உதவியாக வேலைகளை செய்ய அடுப்பங்கரைக்கு வந்து நின்றார். பாட்டிக்கு பொதுவாகவே ஐந்தரை மணிக்கு மேல் உறங்கி பழக்கம் கிடையாது, விடுமுறை தினம் என்றாலும் அதிகாலையிலேயே எழுந்து அமைதியாக வாசலில் அமர்ந்து இருப்பார்.

அவருடைய வளர்ப்பாகையால் ஒரு சில நல்ல பழக்கங்கள் இயல்பிலேயே அவரிடமிருந்து அதிதிக்கும் வந்திருந்தது, அதில் அதிகாலை எழுவதும் ஒன்று. பாட்டியின் வயதிற்கு தோதாக சின்ன சின்ன சமையல் வேலைகளை அவர் வசம் தந்துவிட்டு, வாசலை கூட்டி பெருக்கி கோலமிட சென்று விட்டாள் அதிதி.

அவள் முன்னோர்கள் அவளுக்கு செய்த மிகப் பெரிய உதவி அந்த வீட்டை கட்டி வைத்தது ஒன்று தான். இருபது வருடங்களைக் கடந்தும் அது இன்னமும் ஆடாமல் அசையாமல், அங்குமிங்கும் பெயர்ந்து விழாமல் அப்படியே நிற்கின்றது. இதே வீடு சென்னையில் இருந்திருந்தால் அதன் மதிப்பு சிலபல கோடிகளில் இருந்திருக்கும். ஆனால் என்ன செய்ய? நம் நாயகி வாசம் செய்வது தேவி மீனாட்சியின் ஆட்சிக்குட்பட்ட மதுரை மாநகரில், ஆதலால் அதிதிக்கு அவளுடைய வீட்டால் ஆன உபாயம் இரண்டு மட்டுமே.

ஒன்று… அவள் வாங்கும் பொறியுருண்டை அளவு சம்பளத்தில் வீட்டிற்கென ஒரு தொகையை வாடகையாய் தர தேவையில்லாமல் இது சொந்த வீடாய் இருப்பது. மற்றொன்று, அதிதியின் சகோதரி சந்தியா மாலை நேரம் அக்கம் பக்கத்து மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதற்கு பயன்படுகின்றது. வாசல் வேலைகளை முடித்துவிட்டு அவள் உள்ளே வருவதற்கும், சந்தியா அவளுக்காக காபி டம்ளரோடு கிச்சனிலிருந்து வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது.

சந்தியா, “அக்கா… இந்தா காபி எடுத்துக்கோ…”

அதிதி, “நீ ஏன்டி இதெல்லாம் பண்ற?”

“சின்ன வேலை தானக்கா…”

தங்கையிடம் இருந்து காபி டம்ளரை வாங்கிக் கொண்டே அதிதி, “ஏன் இவ்வளவு சீக்கிரத்துல எழுந்தடி? நேத்து ராத்திரி நீ தூங்குறதுக்கு ரொம்ப லேட் ஆனது மாதிரி இருந்தது…” என்றாள்.

“ஆமாக்கா, அடுத்த வாரம் வரப்போற செமினாருக்கு தேவையான தகவலெல்லாம் நேத்தே ப்ரிப்பேர் பண்ணி வச்சிட்டேன். தினமும் கொஞ்சம் கொஞ்சமா ரெடி பண்ணி வச்சுட்டா, நாலு நாள்ல செமினாருக்கு முழுசா ரெடியாகிடுவேன். இப்போ கையில இருக்கிற டைம்ம வேஸ்ட் பண்ணிட்டு, கடைசி நேரத்துல கஷ்டப்படக் கூடாது இல்லையா. அதான் நேத்து வீட்டுக்கு வரும்போதே லைப்ரரில புக் எடுத்துட்டு வந்தேன்…”

“அப்போ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்லடி… என்கிட்ட முன்னாலேயே சொல்லி இருந்தா, நான் உனக்கு வேணுங்கிறதை எல்லாம் ரெடி பண்ணி முடிச்சுட்டு, ஏழு மணி வாக்குல உன்ன எழுப்பி இருப்பேன்ல…”

சந்தியா, “பரவாயில்ல விடுக்கா, இன்னிக்கி காலேஜ்ல அந்த சொட்ட மண்டைக்கு ரெண்டு பீரியட் இருக்குது. நேத்து ராத்திரி மிஸ் ஆன மொத்த தூக்கத்தையும் அங்க போய் தூங்கிடுவேன் நான்…” என்றவளின் தலையில் செல்லமாக கொட்டினாள் அதிதி.

சந்தியா மூக்கை உறிஞ்சிக்கொண்டு கொஞ்சும் குரலில், “நான் என்னக்கா செய்யிறது? அவரு க்ளாஸ்ல பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற மாதிரி பேசினா எங்களுக்கும் கவனிக்கிற ஆர்வம் வரும். அவர் என்னடான்னா ஏதோ கச்சேரிக்கு வந்த மாதிரி ஏத்தி இறக்கி ராகம் போட்டு பேசுறாரு. அத கேட்ட அஞ்சு நிமிஷத்துல எங்களுக்கெல்லாம் தன்னால தூக்கம் வந்திடுதுக்கா…” என்று கொட்டு விழுந்த தன் தலையை தேய்த்துக் கொண்டே தன்னுடைய காபி எடுக்க அடுப்பங்கறை பக்கம் சென்றாள்.

அதிதிக்கு தன் தங்கை சந்தியாவின் மேல் அதிக அளவு நம்பிக்கை உள்ளது, வீட்டின் சூழ்நிலையை புரிந்துகொண்டு படிப்பில் சிறு குறையும் நேர விடமாட்டாள். இத்தனைக்கும் சந்தியா அருகில் இருக்கும் ஒரு சாதாரண கல்லூரியில் இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு பயிலுகின்றாள். அதற்குமேல் படிக்க வைக்க அதிதிக்கு பணபலம் இல்லை.

தனி ஒருத்தியாக வீட்டு வேலைகளையும் அலுவலக வேலையையும் சுமக்கும் தனது அக்காவிற்கு, சந்தியா தன்னாலான உதவியை செய்ய விரும்பியே வீட்டில் மாலை நேர டியூஷன் எடுக்க தொடங்கினாள்.

அடுத்த பக்கம்

Advertisements