ஆடுகளம் 2

சென்னையின் மதிய நேரத்து அனல் காற்றை விட, அக்கினி பிழம்பான உருவத்தில் தன் அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தான் ஆதித்யா. ஆனால் அவன் முகத்தின் தோரணையோ உள் இருக்கும் உள்ளத்திற்கு நேர் மாறாக சின்ன புன்னகையோடு இருந்தது. அதன் தீவிரத்தை அறிந்து அஞ்சி நடுங்கி அவன் பின்னால் நின்றிருந்தனர் அவனுடைய பிஏவும், இன்ன பிற முக்கிய அலுவலக உறுப்பினர்கள் சிலரும்.

பஞ்சுப்பொதியல் போன்ற அடர் சிவப்பு நிற சோபாவினுள், ஆதித்யாவிற்கு எதிராக அமர்ந்திருந்த அவனது முதன்மை வழக்கறிஞர் மல்கோத்ரா, “சார் நீங்க எங்க மேல கோபப்பட்டு எந்த ப்ரயோஜனமும் இல்ல… அந்த பத்து பேரும் செத்ததுக்கு முழுக்க முழுக்க காரணம் உங்க கம்பெனி உருவாக்கின ட்ரஷர் ஹண்ட் கேம் தான்னு உலகத்துக்கே தெரியும். நம்மளோட நல்ல நேரம் முதல் எட்டு பேர் சாகுற வரைக்கும், யாரும் இந்த விஷயத்தை பெருசாக்கல. அதனால செத்தவங்களோட உடம்பையும் செக் பண்ண முடியாம போயிடுச்சு…”

ஆதித்யா தன் முத்துப்பல் வரிசை சிரிப்பினை பெரிதாக்கி, “ஒருவேளை செக் பண்ணி இருந்தா, நான் மாட்டி இருப்பேன்றீங்களா லாயர் சார்?” என்றான்.

“நிச்சயமா சார்… உங்க பணத்துக்கு மயங்காத ஒரு டாக்டர், முதல் எட்டு பேரோட உடம்ப செக் பண்ணி இருந்தாருன்னா ரொம்ப சுலபமா விஷயம் வெளியில வந்து இருக்கும். ஒரே ஒரு ஃபாரன்ஸ்டிக் ரிப்போர்ட் போதும். அது மூலமா உங்க கேம் விளையாட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் அந்த பத்து பேருக்கும் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு வந்திருக்குன்னு கண்டுபுடிச்சி இருப்பாங்க…” என்றதும் ஆதித்யா தன் இருக்கையை விட்டு எழுந்து ஜன்னலை நோக்கி மெதுவாய் நடக்கத் தொடங்கினான்.

மல்கோத்ரா, “இந்த விஷயத்துக்காக நீங்க இவ்வளவு தூரம் மெனக்கெட்டு போராடவே தேவையில்ல மிஸ்டர் ஆதித்யா. அப்படியே இந்த கேஸ்ல நீங்க ஜெயிச்சாலும் அதனால உங்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது… நாளைக்கி நீங்க ரீ ரிலீஸ் பண்ணின கேம்ல எவனாவது செத்தா, உங்களுக்குத்தான் பிரச்சனை இன்னும் பெருசாகும்….” என்றதும் ஆதித்யாவின் சிரிப்பு சற்று சத்தமாகவே வந்தது.

 

மல்கோத்ரா, “ஏன் சார் சிரிக்கிறீங்க? நான் உண்மையைத்தான் சொல்றேன். உங்க டெவலப்பர்ஸ் உருவாக்கி வச்சிருக்கிற கேம் அப்படித்தான் இருக்கு… ட்ரஸர் ஹண்ட் கேம்ம டவுன்லோட் செஞ்சது பத்து கோடி பேருன்னு எல்லாருக்கும் தெரியும், ஆனா அதுல முறையா ஜெயிச்சது வெறும் நூறு பேர்தான். உங்க டெக்னாலஜிய யூஸ் பண்ணி கோர்ட்டுக்கு பொய்யான லிஸ்ட்ட நாம கொடுத்திருக்கோம்.

அத்தன கோடி பேர்ல வெறும் நூறுபேர்தான் பைனல் ஸ்டேஜ் வரைக்கும் வந்திருக்காங்க அப்டின்னா, அது எந்த அளவுக்கு பயங்கரமா இருக்கும்னு எனக்கு அத விளையாடாமலேயே உணர முடியுது. என் அனுபவத்தில் உங்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்றேன்… எப்பவும் வெற்றி மட்டும்தான் வேணும்னு நினைக்காதீங்க சார், தோல்வியையும் ஒரு மனுஷன் ஏத்துக்க பழகணும். அதுலயும் நீங்க உலகமே அன்னாந்து பார்க்கிற உயர்ந்த இடத்தில் இருக்கிறவரு, நீங்க அனுசரிச்சு போகலைன்னா அது தெள்ளத் தெளிவா உங்களுக்கு கீழ இருக்குறவங்க கண்ணுக்குத் தெரியும்.”

 

அவர் வார்த்தையில் எதையோ பிடித்துக்கொண்ட ஆதித்யா, தனது நடையை நிறுத்தி விட்டு யோசனையோடு ஓரிடத்தில் சிலையென நின்றான்.

மல்கோத்ரா, “இவ்வளவு செலவு செஞ்சு நீங்க இந்த கேஸ ஜெயிக்குறதுக்கு பதிலா, பேசாம தோல்விய ஒத்துகிட்டு அந்த பத்து குடும்பத்துக்கும் இழப்பீடு தந்துட்டு போயிடலாம். நாளைக்கி வேற யாராவது செத்துப்போய் இந்த கேஸ் மறுபடியும் கோர்ட்டுக்கு வந்துச்சுன்னா, உங்களுக்கு ஆதரவா பேசுறதுக்கு அன்னிக்கி எந்த ஒரு பாயிண்ட்டுமே இருக்காது. இன்னும் சொல்லப்போனா, இதுவரைக்கும் நீங்க இன்னும் அரெஸ்ட் ஆகாம இருக்குறதுக்கு காரணமே உங்களோட அரசியல் நட்புக்களும், அதிகார பலமும்தான்னு எனக்கு நல்லா தெரியும். ஒருவேள அடுத்த தடவை கேஸ் கோர்ட்டுக்கு வந்து, அதுல நீங்க தோக்குற நிலைமை வந்தா அந்த ரெண்டு பலமுமே ஆட்டம் கண்டிடும்…”

ஆதித்யா தன் திமிறில் சற்றும் குறையாதபடி நடந்து சென்று, கண்ணாடி ஜன்னலின் வழியே வெளியே பரந்து கிடக்கும் உலகத்தை பார்த்தபடி, “அப்படியா?….” என்றான் அசிரத்தையாய்.

ஆதித்யாவின் மாற்றத்தை புரிந்து கொண்ட அவனது பிஏவான வெங்கட், மல்கோத்ராவிடம் ஓடிவந்து ரகசிய குரலில், “சார், நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன்… எங்க ஆதித்யா சாருக்கு எதை, எப்போ, எப்படி செய்யணும்னு உங்களவிட நல்லா தெரியும்… அவரு ஏற்கனவே செம கோவத்துல இருக்காரு. இந்த நேரத்தில நீங்க நிலமை தெரியாம எதையாவது பேசிட்டு இருக்காதீங்க, அப்புறம் உருப்படியான உங்களால ஊர் போய் சேர முடியாம போயிடும்.”

மல்கோத்ரா, “என்ன மிஸ்டர் வெங்கட் மிரட்டுறீங்களா? உங்கள மாதிரி எத்தன பெரிய ஆளுங்கள பார்த்துட்டு வந்திருப்பேன் நான். நீங்க குடுக்குற பணத்துக்கு வந்து வாதாடுறது மட்டும் தான் என்னோட வேலை. உங்களுக்கு பயந்து நடுங்கி கூழைக் கும்பிடு போடணும்னா, அதுக்கு நான் ஆள் இல்ல.”

 

வெங்கட், “மிரட்டல் இல்ல சார்… உங்க நல்லதுக்காக என்னாலான ஒரு சின்ன எச்சரிக்கை….”

“அது எதுவோ, ஆனா எனக்கு உங்க மேல பயமில்லைனு நீங்க முதல்ல புரிஞ்சுக்கோங்க. கம்மிங் டூ த பாயிண்ட், நீங்க கேட்டீங்கன்றதுக்காக உங்களுக்கு ரெண்டு மாச அவகாசமும், உங்க கேம்க்காக தடை நீக்கமும் நான் வாங்கி கொடுத்துட்டேன். இந்த ரெண்டு மாசத்துல நீங்க என்ன செய்வீங்களோ செஞ்சுக்கோங்க. அடுத்த ஹியரிங்கல உங்களோட ஆதாரத்தை மட்டும் என் கையில குடுங்க, அதைக் காட்டி ஒரே நாள்ல ஒட்டு மொத்த கேஸையும் முடிச்சி கொடுத்துட்டு நான் கிளம்பி டெல்லிக்கு போயிடுவேன்.

ஆனா இன்னோர் தடவ எவனாவது கேம் விளையாடி செத்துட்டான்னு கேஸ் வந்தா கண்டிப்பா சுப்ரீம் கோர்ட் போனாலும் உங்க சைடு கேஸ் நிக்காது பாத்துக்கோங்க. என் கடமைக்கு நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்…. நாங்க கிளம்புறேன் மிஸ்டர் ஆதித்யா…” என்றவர் விறுவிறுவென தன் ஜூனியர்களுடன் அந்த அறையை விட்டு வெளியேறி சென்றுவிட்டார்.

அடுத்த பக்கம்

Advertisements