ஆடுகளம் 8 (4)

வெங்கட், “லட்சியம்னா இப்படி இருக்கணும், இதுக்கு முன்னாலயும் ஒருத்தன் வந்தானே…” என்று சற்று சத்தமாகவே முனங்கினான்.

 

அர்ஜூன், “சார்.. அவனவனுக்கு அவனவனோட லட்சியம் பெருசு.”

 

அர்ஜூன், “அத உண்மையிலேயே லட்சியம்னு ஒன்னு இருக்குறவன் சொல்லலாம், நீ சொல்லாதப்பா…”

 

“சார்… நான் தீயா விளையாடனுங்கிற நினைப்புல வந்திருக்கேன். நீங்க என்னை டிஸ்கரேஜ் பண்றீங்க… ஒரு அழகான பையன் கூப்பிட்டு வச்சு இன்ஸல்ட் பண்றீங்க… செஞ்ச தப்புக்கு முதல்ல பாவமன்னிப்புக் கேளுங்க சார்…”

 

வெங்கட் ஓய்ந்து போன குரலில், “டேய்… ஏற்கனவே மணி ஒன்பது ஆயிடுச்சு, பசி வேற வயித்தக் கிள்ளுது. இந்நேரம் ஜாலியா சிங்கிங் ப்ரோக்ராமும் டான்ஸ் ப்ரோக்ராமும் பாக்க வேண்டியவன் நான். என்னப்போய் வர்ற பதினஞ்சு நாளும் உங்க கூட கோர்த்து விட்டுட்டாங்களேன்ற கடுப்புல இருக்கேன்டா. பாவமன்னிப்பு பாதாம் மன்னிப்புனு என்ன படுத்ததாம போய் அமைதியா உக்காரு. நெக்ஸ்ட் யாருப்பா வர்றீங்க?…” என்றான்.

 

அடுத்ததாக கொடுவாமீசை, முன்பாதி வழுக்கை, கனத்த உடல், தொங்கும் தொந்தியுடன் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் முன் வந்தார். இத்தனை வயதானவர் இந்த லெவல் வரை வெற்றி பெற்று வந்திருக்கின்றாரே என்று அனைவரும் அதிசயமாய் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“குட் ஈவ்னிங் கிட்ஸ்… என் பேரு ஜேம்ஸ். நான் ஒரு ரிட்டையர்டு போலீஸ் ஆபீசர், எனக்கு அறுபது வயசாகுது. என்னை ‘என்கவுண்டர் ஜே’னு சொன்னா நிறைய பேருக்கு தெரியும். என் கேரியர்ல அத்தனை என்கவுண்டர் பண்ணியிருக்கேன். நான் கொஞ்சம் நேர்மையான பேர்வழி, அதனால தப்பு செஞ்சான்னு தெரிஞ்சா கோர்ட்டு கேஸ்னு இழுக்காம சூட்டோட சூடா என்கவுண்டர்ல போட்ருவேன்…” என்றதும்,

 

வெங்கட்டின் மனசாட்சி, ‘ஐயோ ஆண்டவா… இந்தப்பக்கம் கத்தியோட கதிரு, அந்த பக்கம் கன்னோட ஜேம்ஸூ… என்னை இப்டிப்பட்ட இடத்துல வந்து கோர்த்து விட்டிருக்கியேப்பா?…’ என்று ஆண்டவனை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.

 

ஜேம்ஸ், “என்கவுண்டரையே என்டர்டைன்மென்ட்டா வச்சிருந்தேன், அது ஒரு காலம்… இப்போ என் பேரனும் நானும் தினமும் வீடியோ கேம் விளையாடுறதுதான் எனக்கு ஒரே ஒரு என்டர்டைன்மென்ட். அந்த அனுபவத்துலதான் இந்த கேம்லயும் நான் ஜெயிச்சிருக்கேன். இனிமேலும் ஜெயிப்பேன்…” என்று தன் கொடுவா மீசையை முறுக்கி காட்டினார்.

 

ஜேம்ஸ் தன் இடத்திற்கு போனதும் மற்றொரு இளைஞன் முன்னால் வந்து நின்றான். அளவான உயரம், அமைதியான பால் முகம், அச்சு அசலாய் பழைய நடிகர் கார்த்திக்கின் சாயலில் இருந்தான் அவன்.

 

அவன் அனைவரையும் பார்த்து மெல்லிய புன்னகையோடு, “குட் ஈவ்னிங் ப்ரெண்ட்ஸ், ஐ ஏம் நகுல் ப்ரம் கேரளா. நான் ஒரு காலேஜ் லெக்சரர், ப்ரீ டைம்ல கேம்ஸ் விளையாடுறது என்னோட ஹாபி. இந்த கேம் ஷோ மூலமா பேர், புகழ், பணம் மட்டுமில்ல நல்ல நண்பர்களையும் சம்பாதிக்கணும்னு வந்திருக்கேன். போட்டியில கலந்துக்குற எல்லாத்துக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றான்.

 

வெங்கட், “வெல்செட் மிஸ்டர் நகுல், நெக்ஸ்ட் யாரு?…” என்றான்.

Advertisements

அடுத்ததாக ஒரு பெண் முன்னால் வந்து நின்றாள், அவளின் நடை உடை பாவனைகள், தொலைக்காட்சி தொடர்களில் வரும் வட இந்திய பெண்களின் சாயலை ஒத்திருந்தது. அவளைப் பார்த்தால் திருமணமான பெண் போல தெரிந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு வலியினை அவளின் இதயம் சுமந்திருப்பது, அந்த சோகமான விழி வழியே அனைவருக்கும் புரிந்தது.

 

“ஹாய், நான் கோமல், நானொரு சாதாரண ஹவுஸ் வைஃப். நான் ஒரிசால இருந்து வந்திருக்கேன். ஆல் த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்…” என்பதோடு முடித்துக் கொண்டாள்.

 

கோமலுக்கு பிறகு நடுத்தர வயதுடைய  ஒரு ஆண் வந்தான். அவன் பார்வை சற்று கூர்மையாகவே அனைவரின் மீதும் பதிந்து சென்றது.

 

“நான் சந்துரு, பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆந்திரா. என் மனைவி மகளோட இப்போ சென்னையில தங்கி இருக்கேன். ராஜ வாழ்க்கை கேம்ல எப்படியாவது ஜெயிக்கணும்னு நான் இங்க வந்திருக்கேன்…” என்றான் இறுக்கம் நிறைந்த குரலில்.

 

வெங்கட், “நெக்ஸ்ட்…” என்றதும் கல்லூரி மாணவன் போல் ஒருவன் முன்னால் வந்து நின்றான்.

 

“ஹாய் ப்ரெண்ட்ஸ், நான் வினோத். பெங்களூர்ல எம்பிஏ படிச்சுக்கிட்டு இருக்கேன். கேம்ஸ் புடிக்கும் ஆனா ஜெயிக்கணுங்கிற ஐடியால விளையாட மாட்டேன். அந்த அளவு அக்கறை எனக்கு எப்பவும் எந்த விஷயத்துலயும் வராது. உள்ள என்ன இருக்கு? எப்டி டிசைன் பண்ணி இருக்காங்கனு பார்க்கிறதுக்காக விளையாடுவேன்.”

 

வெங்கட், “அர்ஜூன்… உன்ன மாதிரியே பிஹேவ் பண்றானே, இவன் என்ன உனக்கு சொந்தக்காரனாடா?”

 

அர்ஜூன், “இந்த மூஞ்சி எனக்கு பழக்கமில்லையே சார், பாவம் யாரு பெத்த புள்ளையோ என்ன விட முத்திப் போய் கிடக்கு. பாத்து செய்யுங்க…” என்றதும் அறை முழுவதும் மெல்லிய சிரிப்பொலி படர்ந்தது.

 

வினோத், “சீரியஸ்லி… எனக்கு எந்த விஷயத்துலயும் சீரியஸ்னஸ் கிடையாது. இப்ப கூட நான் இந்த கேம் ஷோவுல ஜெயிக்கணும்னு பார்ட்டிசிபேட் பண்ணல. பத்து நாள் லீவுக்கு ஆசைப்பட்டு வந்திருக்கேன். எப்பவுமே என்னோட தாட், ‘நல்லாருப்போம்… நல்லாருப்போம்… எல்லாரும் நல்லாருப்போம்’ அப்டிங்கிறதுதான், வரட்டா…”

 

வெங்கட், “நல்லா வந்தீங்கடா… நெக்ஸ்ட்…”

 

அதிதி எழுந்து வந்து, “என் பேர் அதிதி, நான் மதுரையிலிருந்து வந்திருக்கேன். எனக்கு உங்க அளவுக்கு கேம் விளையாடத் தெரியாது, ஆனா என்னோட பெஸ்ட்ட குடுப்பேன். அடுத்து வரப்போற சில நாட்கள் நாமெல்லாம் ஒரே வீட்டில இருக்க போறோம். ஸோ வெற்றி தோல்விங்கிறத தாண்டி, நாம ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து ஒரு குடும்பம் மாதிரி இருக்கலாம். இந்த பதினஞ்சு நாளையும் நம்ம வாழ்க்கையில  மறக்க முடியாத அளவுக்கு சந்தோஷமா வாழ்ந்துட்டு போகலாம்…”

Advertisements

வெங்கட், “சரியா சொன்னீங்க அதிதி, நெக்ஸ்ட்…” என்றான்.

 

துருவ் முன் சென்று, “ஐ ஏம் துருவ்…” என்றுவிட்டு தன் இடத்திற்குத் திரும்பி நடக்கத் தொடங்கினான்.

 

வெங்கட், “சார்.. சார்.. எங்க கிளம்பிட்டீங்க? உன்னப்பத்தி வேற ஏதாவது சொல்லுப்பா.”

 

“நோ கமெண்ட்ஸ்…” என்று மொட்டையாய் முடித்து விட்டு தன் இடத்திற்கு போய் அமர்ந்து கொண்டான்.

 

இறுதியாய் வெங்கட், “மிஸ்டர் கதிர் நீங்கதான் இன்னமும் இன்ட்ரோ குடுக்காம இருக்கீங்க… ப்ளீஸ் கம்…” என்றான்.

 

கதிர் இறுக்கமான முகத்தோடு முன் வந்து, “கதிர் நிலவன் நான்… இவங்களோட பாஸ் ஆதித்யா கெஞ்சி கேட்டதால இந்த ஷோவுல பார்டிசிபேட் பண்ண வந்திருக்கேன். எனக்கொரு கெட்ட பழக்கம், நான் எவனா இருந்தாலும் எனக்கு புடிக்கலனா முதல்ல கையால பேசிட்டு, அப்புறம்தான் வாயால பேசுவேன். எங்கிட்ட வேற ஏதாவது கேள்வி கேக்கனுமா?…” என்றான் வெங்கட்டின் முகம் பார்த்து.

 

அச்சம் என்பது துளியும் இன்றி அத்தனை காவலர்களுக்கு நடுவில் நான்கு பேரை வெட்டிக் கொன்றவனிடம், கேட்க கேள்விகள் இருந்தாலுமே தொண்டைக் குழியை விட்டு வார்த்தை வெளியே வருமா? வெங்கட் கேட்பதற்கு எதுவும் இல்லை என்பதைப் போல மறுப்பாய் தலையசைத்தான்.

 

அப்போது அங்கே வந்த பணியாள், “சார் பஸ் ரெடி…” என்றதும் அனைவரும் பேருந்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

 

அனைவரும் வெளியேறியதும் வெங்கட் அவசரமாக ஆதித்யாவிற்கு போன் போட்டான்.

 

ஆதித்யா, “என்ன வெங்கட்? எப்டி போயிட்டு இருக்கு?”

 

“ஆரம்பமே ரொம்ப அமர்க்களமா போயிட்டு இருக்குது சார்.”

 

“ஏன்டா?…”

 

“ஒருத்தன் மிரட்டுறான், ஒருத்தன் உளறுறான், ஒருத்தி காரணமில்லாம அழுகுறா, ஒருத்தி பாசமா சிரிக்கிறா, இன்னொருத்தன் பாக்குற பார்வையிலேயே என் பாதி ஆயிச முழுங்கிடுவான் போல. வர்றவன் போறவனுக்கெல்லாம் ஒரு கோடி தரப் போறீங்க, அப்படியே எனக்கும் ஒரு  பெரிய தொகையை இன்சூரன்ஸ்ல போட்டு விடுங்க சார். இந்த கும்பலோட பதினஞ்சு நாள் நான் தனியா தாக்குப் பிடிப்பேனான்னு பயமா இருக்கு.”

 

“ரிலாக்ஸ் வெங்கட், நீ அங்க தனியா இல்ல. பத்துல ஒன்னு நம்ம ஆளு…”

தொடரும்…

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

ஆடுகளம் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

Advertisements