ஆடுகளம் 8(3)

அனைவருக்கும் வெங்கட் வரிசை வாரியாக ஒப்பந்த பத்திரங்களை தந்தான். அதிதிக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும் என்றாலும் இந்த அளவிற்கு உயர்ரக ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தியது கிடையாது. கண்களை மூடிக்கொண்டு குறிப்பிட்ட இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டவளை துருவ் பாதியிலேயே தடுத்து நிறுத்தினான்.

 

துருவ், “ஹேய் பேபி… வாசிச்சு பாக்காம கையெழுத்துப் போடக்கூடாது…” என்றான்.

 

அதிதி தயங்கிக் கொண்டே, “நான் வாசிக்க ட்ரை பண்ணேன், பட் நிறைய வார்த்தைகள் எனக்கு புரியலடா” என்றாள்.

 

துருவ் குறுநகையோடு, “அதான் உனக்கு உதவி செய்ய நான் இருக்கேன்ல, கொடு நான் வாசிச்சு பாக்குறேன்…” என்று அவள் கையிலிருந்த காகிதங்களை தன் கையில் எடுத்துக் கொண்டான்.

 

இரண்டு நிமிடங்களில் அனைத்து காகிதங்களையும் பரபரவென்று வாசித்து முடித்தவன், “இந்த ஒரு பேப்பர் தவிர மத்த எல்லாத்துலயும் நீ கையெழுத்து போடலாம் பேபி…” என்றான்

 

அதிதி, “ஏன், அதுல என்ன எழுதியிருக்கு துருவ்?” என்றாள்.

 

“இதுல ராஜ வாழ்க்கை ஷோவுக்கு தேவைப்பட்டா பார்டிசிபென்ட்ட விளம்பரத்துக்கும் யூஸ் பண்ணிக்கிவோம்னு போட்ருக்காங்க…”

 

“அது எல்லா நிகழ்ச்சிக்கும் சேனல் செய்யிறது தானடா, இதுல என்ன ஆகப்போகுது?”

 

“பேபி… ரியாலிட்டி ஷோ வேற, விளம்பரப் படம் வேற, இரண்டும் ஒரே மாதிரி கிடையாது. விளம்பரம்னா அவன் சொல்ற ட்ரஸ்ஸ போட்டு, அவன் சொல்ற டயலாக்க பேசணும். அதுக்கு நாம தனி அக்ரிமெண்ட் போடணும் இல்லன்னா நம்ம சைடு கண்டிஷன்ஸ்ஸோட கையெழுத்துப் போடணும். இப்டி எந்த தகவலும் இல்லாத பேப்பர்ல எனக்கு பரிபூரண சம்மதம்னு கையெழுத்து போடக் கூடாது. அதனால இது உனக்கு வேணாம் பேபி…”

 

அதிதி, “இதுக்குள்ள இவ்ளோ மேட்டர் இருக்கா? தேங்க்ஸ் துருவ்…” என்று மற்ற காகிதங்களில் கையெழுத்து போடத் துவங்கினாள்.

 

அதிதி கையெழுத்து போடுவதில் தன் முழு கவனத்தையும் செலுத்த தொடங்க, துருவ் ஓரக்கண்ணால் வெங்கட்டை பார்த்தான். அதேநேரம் வெங்கட்டும் அவர்கள் இருவரையும்தான் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். அதிதி எவ்வாறு இந்த விளையாட்டிற்கு தேர்வு பெற்றிருப்பாள் என்று இதுநேரம் வரை துருவ் மனதிலிருந்த கேள்விக்கு, வெங்கட்டின் பார்வை பதில் தந்து சென்றது.

Advertisements

அனைவரும் கையொப்பமிட்டு முடித்ததும் வெங்கட், “ஓகே டீம், பார்மாலிடிட்டீஸ் முடிஞ்சது. இன்னும் இருபது நிமிஷத்துல உங்களுக்கான பஸ் வந்துடும். அதுவரைக்கும் நாம ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செஞ்சுக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே தன் இருக்கையிலிருந்து எழுந்து முன்னால் வந்து நின்றான்.

 

“என்னோட பேரு வெங்கட், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சி. கடந்த நாலு வருஷமா ஆதித்யா சார்கிட்ட பிஏவா வேலை பார்க்கிறேன். இந்த ராஜ வாழ்க்கை ஷோவுக்கு முழு இன்சார்ஜ் நான்தான். அடுத்த பதினைந்து நாளும் நானும் உங்களோட ஒரே வீட்ல இருக்கப்போறேன். இதேமாதிரி நீங்களும் உங்க பேர், ஊர், ஹாபி, எதிர்கால லட்சியம்னு உங்களைப் பத்தி சுருக்கமா சொல்லுங்க…” என்றான்.

 

அனைவரும் தலையசைக்க முதல் ஆளாக அர்ஜுன் முன் சென்று நின்று, “வணக்கம் எனதருமை வாக்காளப் பெருமக்களே…” என்றதும் கதிர் உட்பட அனைவரும் சட்டென்று சிரித்து விட்டனர்.

 

“நான் உங்கள் வீட்டுப்பிள்ளை அர்ஜூன், என்னப்பத்தி ஒரு வார்த்தையில சொல்லனும்னா நான் கலியுகக் கண்ணன். என் வாழ்க்கையில ஒரே ஒரு லட்சியம் தான். தேவதை மாதிரி ஒரு பொண்ண காதலிச்சு கல்யாணம் பண்ணி, மருமகளா எங்க அம்மா அப்பாவுக்கு முன்னால கொண்டு போய் நிறுத்தி, அவங்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்து….” என நிறுத்தாமல் ரயில் பெட்டி போல் தன் வசனத்தை தொடர்ந்து கொண்டே இருந்தான்.

 

அவன் சொற்பொழிவை கன்னத்தில் கைவைத்து கேட்டுக்கொண்டிருந்த வெங்கட் இடையில் குறுக்கிட்டு, “சார் போதும்… இருக்குறது இருபது நிமிஷம்தான், மத்தவங்களுக்கும் பேச வாய்ப்பு குடுங்க…” என்றான்.

 

“என்ன சார்? என் லட்சியத்தில பாதியை கூட நான் இன்னும் சொல்லி முடிக்கல, அதுக்குள்ள இப்டி இரக்கம் இல்லாம ஃபுல் ஸ்டாப் வைக்கிறீங்களே?!…” என்றான் குறும்பு கூத்தாடும் கண்களோடு.

 

“காதல் கல்யாணம்தான் உங்க வாழ்க்கையோட முக்கிய லட்சியம்னா, அதுக்கு எதுக்கு சார் இங்க வந்தீங்க நீங்க?”

 

“குட் கொஸ்டின்… லவ் மேரேஜ்ல பசங்களோட முக்கியமான பிரச்சனை என்ன தெரியுமா? பசங்க எந்த பொண்ணுட்ட ப்ரொபோஸ் பண்ணாலும், முன்ன பின்ன தெரியாதவன லவ் பண்ண மாட்டோம்னு சொல்றாங்க. அதான் ஒரே நாள்ல உலக அளவுல ஃபேமஸ் ஆயிடலாம்னு இங்க வந்தேன்…” என்றான் அதிதியின் முகம் பார்த்து.

 

வெங்கட், “நல்ல லட்சியம்… நல்ல முயற்சி… வாழ்த்துக்கள் மிஸ்டர் அர்ஜுன். போய் உட்காருங்க, நெக்ஸ்ட்…” என்றான்.

 

கார்கூந்தல் மேகங்கள் தோள்களில் புரள, பார்த்தவுடனே அள்ளி அணைத்துக் கொள்ளத் தோன்றும் தேகவாகுடன், பட்டாம்பூச்சி போன்ற பெண் ஒருத்தி முன்னால் வந்து நின்றாள். பட்டை தீட்டிய வைரம் போல் தீர்க்கமாய் மின்னும் அவளின் வெண் பொன் விழிகளில், பற்றிக் கொள்ளும் நெருப்பைப்போல மைதீட்டி வைத்திருந்தாள்.

 

தன் முகத்தை நிமிர்ந்த தோரணையில் வைத்துக் கொண்டு, “ஹாய் நான் லக்ஷிதா ப்ரம் மும்பை, மாடலிங் என்னோட ஹாபி. இதுவரைக்கும் அஞ்சாறு விளம்பரத்துல நடிச்சிருக்கேன், ஒரு ஷார்ட் பிலிம்கூட பண்ணியிருக்கேன். என்னோட கேரியரை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போறதுக்கு இந்த வாய்ப்பையும் பணத்தையும் நான் பயன்படுத்திக்க போறேன். தேங்க்யூ…” என்றுவிட்டு தன் இடத்திற்கு சென்றாள்.

அடுத்த பக்கம்

Advertisements