ஆடுகளம் 8

அதிதியும் துருவ்வும் விளையாடி முடித்ததும் கான்ப்ரன்ஸ் ஹாலிற்கு வந்து ஒன்றாக அமர்ந்து பேச தொடங்கினர். அப்போது அதிதியின் அருகில் வந்து நின்றான் ஒருவன். அலைபுரள் கேசம், செதுக்கிய முகவெட்டு, இயல்பாக இதழில் ஒட்டிக்கொண்டிருக்கும் புன்னகை, குறும்பு கூத்தாடும் கண்கள், ஒரு வாரம் வளர்ந்த தாடி, நவநாகரீகத்தின் உச்சமாய் ஒரு காதில் வளையம் என்று மன்மதனிடம் வரம் வாங்கி வந்து மண்ணில் பிறந்தவன்.

 

“ஹாய் அதிதி, மீ அர்ஜூன்…” என்றான் சிரிக்கும் கண்களோடு.

 

நட்பு ரீதியில் அதிதியும் சிறு புன்னகையோடு, “ஹாய்…” என்றாள்.

 

“நான் உங்கள இதுக்கு முன்னாலேயே பார்த்திருக்கேன்…”

 

அதிதி ஆச்சரியமாக, “என்னையா?.. எங்க? எப்போ பாத்தீங்க?…” என்றாள்.

 

“இங்கதான், போன ஞாயித்துக் கிழமை, செலக்ஷனுக்கு வந்தப்போ பார்த்தேன்.”

 

“ஓ….”

 

“அப்பவே பேசலாம்னு பக்கத்துல வந்தேன், கரெக்டா அப்போதான் உங்க அப்பா யாருக்கிட்டயும் தேவையில்லாம பேசாதனு உங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாரு. சரி எப்படியும் பதினஞ்சு நாள் ஒரே வீட்ல தான இருக்கப் போறோம், அப்போ பேசிக்கலாம்னு வந்த வழியிலேயே யூ டர்ன் போட்டு போயிட்டேன்….”

 

“அவரு என்னோட அப்பா இல்ல, அங்கிள்…”

 

“ரியலி?!… பட் அவரு உரிமையா பேசுறத பாத்ததும் உங்க அப்பான்னு தான் எனக்கு தோணுச்சு. ஆமா நீங்க எந்த ஊரு?”

 

அதிதி அவனுக்கு பதில் சொல்வதற்கு முன்பாக துருவ், “அது எதுக்கு மிஸ்டர் உனக்கு?” என்றான்.

 

அர்ஜுன் சற்றே கடுப்பாக, “நீ யாரு? அதிதி ரிலேட்டிவா?” என்றான்.

 

துருவ், “அன்வான்ட்டு கொஸ்டின், ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் அஸ், வீ ஆர் பிஸி…” என்றான்.

Advertisements

அவனது துடுக்கு நிறைந்த பேச்சிற்கு அதிதி தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றதும் அர்ஜுன் சுதாரித்துக்கொண்டான். அவனோடு தான் பேசும் விதத்தையே மாற்றி, “டேய் தம்பி, பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது குறுக்க வர்றது தப்புடா?…” என்றான் கனிவான குரலில்.

 

“அதேமாதிரி முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்ட அவளோட சொந்த விஷயங்களை கேட்கிறது தப்புடான்னு நானும் உனக்கு புத்தி சொல்ல முடியும். ஆனா உன்ன மாதிரி எனக்கு மொக்கை போட பிடிக்காது…”

 

“மொக்கையா? டேய் நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலையேடா, அதுக்கப்புறம்தானடா அடுத்த லெவல்க்கு போகணும்…”

 

“அதனாலதான் ஆரம்பத்திலேயே கட் பண்றேன், அந்தா அங்க ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க பாரு. உன் பெர்ஃபாமன்ஸ்ஸ நீ அங்க போய் காட்டுப்பா, கண்டிப்பா விக்கெட்டு விழும்…”

 

அர்ஜூன், “அத அதிதி சொல்லட்டும்டா…”

 

துருவ், “பேபி, இவன இங்கிருந்து போகச்சொல்லு…” என்று அர்ஜூன் அறியாதபடி கண்ணடித்தான்.

 

அதிதிக்கு துருவ் தந்த சிக்னல் புரிய, “அர்ஜூன், எப்டியும் பதினஞ்சு நாள் ஒரே வீட்லதான இருக்க போறோம், அப்போ பேசிக்கலாமே…” என்று அவன் போட்ட பாலை அவனுக்கே திருப்பிவிட்டாள்.

 

அர்ஜூன், “அவன் டேரக்ட்டி இங்கிருந்து போய்த் தொலைடானு சொன்னான், அதையே நீ டீசன்ட்டா சொல்றியா அதிதி?” என்றான் தன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு.

 

துருவ், “அது இன்னுமாடா புரியல?…”

 

துருவ்வின் பதில்களால் கடுப்பான அர்ஜுன், “வெசம்… வெசம்… வெசம்… முளைக்க முன்னாலேயே வெசமா இருக்கான்…” என்று துருவ்வின் தலையை தன் கைகளால் பற்றி அடிக்கச் சென்றான்.

 

துருவ், “ஏய்… ஹேர் ஸ்டைல கலைச்ச பிச்சுடுவேன் பிச்சு…”

 

“பிஞ்சா தச்சுக்கோடா…” என்று அவன் துருவ்வை நெருங்குகையில் அதிதி கோபமாய், “அர்ஜூன் என் தம்பிய தொட்டா எனக்கு செம கோவம் வரும் பாத்துக்கோங்க. எங்களுக்கு இப்போதைக்கு உங்களோட பேச விருப்பமில்லைனு சொன்னா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க?…” என்றாள் கோபமாய்.

 

அதிதியின் கோபம் அர்ஜூனை சற்று கட்டுப்படுத்திட, “அடேய், சுண்ட கத்திரிக்கா… நான் யாருன்னு தெரியாம என்ட்ரி சீன்லயே என்ன இந்த பொண்ணு முன்னால கேவல படுத்திட்டீல. உன்ன அப்புறமா வந்து பழிவாங்குறேன், இது இந்த பேபி மேல சத்தியம்…” என்று அதிதியின் தலையில் அடித்து சத்தியம் செய்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடி போனான்.

அடுத்த பக்கம்

Advertisements