ஆடுகளம் 18 (3)

வெங்கட், “சார் என்ன சொன்னாரு?”

 

“அதிதிய அவுட் ஆக்க சொல்றாரு”

 

வெங்கட், “பாவம் அந்த பொண்ணு, காதல் கல்யாணம்னு இருக்கவேண்டிய இந்த வயசுல குடும்பத்த காப்பாத்த எவ்வளவு கஷ்டப்படுது.”

 

“ஆச்சரியமா இருக்கு சார். எப்பவும் மத்தவங்க சூழ்நிலைய உங்களுக்கு சாதகமாக யூஸ் பண்ணிக்கிற நீங்க, அவங்களுக்காக வருத்தப்படுறீங்க!” என்றதும் வெங்கட்டுக்கு தான் தன்னை மறந்து அதிதியை நினைத்து கவலை கொண்டது புரிந்தது.

 

அவன் இன்னும் அதிகமாய் குற்ற உணர்வு கொள்ளும்படியாக அடுத்த நாள் அதிதி வழக்கத்தைவிட அன்பாக அவனோடு உறவாடினாள். அது மேலும் அவன் மனதைப்பிசைய வெங்கட் அதிதியிடம் ஒதுக்கம் காட்ட ஆரம்பித்தான். அந்த முகபாவனையின் பொருள் மற்றவர்களுக்கு விளங்காவிடினும் ஒருவனுக்கு மட்டும் நன்றாக விளங்கிற்று. ஒன்பதாம் நிலை போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக பெண்கள் இருக்கும் மாடி பகுதிக்கு வந்தான் கதிர்.

 

இதுவரை இங்கு வராதவன் இன்று வந்து, “கொஞ்சம் பெர்சனலா பேசணும்” என்றதும், ஒரு நொடிக்குள் ஏதேதோ இன்பக் கனவுகளில் அதிதியின் முகம் மலர்ந்திற்று.

 

கதிரோ இறுக்கமாய், “துருவ் அந்தபக்கம் வாடா” என்றதும் அவள் முகம் சட்டென்று வாடிவிட்டது.

 

இருவரும் கேமரா இல்லாத அறைக்குள் சென்று ஏதோ மும்மரமாய் பேசுவதை இங்கிருந்தே கவனித்த அதிதி துருவ் திரும்பி வந்ததும் ஆர்வமாய், “அவன் என்ன சொன்னான்?” என்று வினவினாள்.

 

அவள் ஆர்வம் புரிந்தாலும் அதில் அக்கறையில்லாதது போல துருவ், “இன்னிக்கு கேம் பத்தி கேட்டான்” என்றான்.

 

“அவ்ளோதானா??!!!”

 

“அவ்ளோதான், நீ இங்கேயே இரு பேபி, நான் போய் நமக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்றவன் எவரும் அறியாமல் வெங்கட்டையும் சந்துருவையும் நோட்டம் விட ஆரம்பித்தான். அவர்களின் செய்கை கதிர் சொல்வதும் உண்மையென அவனுக்கு உணர்த்தியது.

 

ஒன்பதாம் நிலை போட்டிக்கு நால்வரும் தயாராய் வந்து அமர வெங்கட், “இது ரொம்ப ரிஸ்க்கான லெவல், டென்ஷனாகாம பார்த்து விளையாடுங்க. அதிதி நீ கொஞ்சம் ஜாக்கிரதையா விளையாடு, பயந்திடாத” என்றான்.

 

அவனின் திடீர் அக்கரை புரியாமல் அதிதி, “சரிங்க சார்” என்றாள் புன்சிரிப்போடு.

 

நால்வரும் தங்களுடைய விர்ச்சுவல் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டதும் ஒன்பதாம் நிலை ஆட்டம் துவங்கியது. விண்ணும் மண்ணும் ஒரே நிறமாய் தோற்றமளிப்பது போன்ற நடுக்கடலில், எலும்புக் கூட்டின் தலை மாட்டப்பட்ட  மிகப்பெரிய கப்பலின் முன்பு சின்னஞ்சிறு படகில் நால்வரும் நின்றிருந்தனர். ஆரம்பித்த இரண்டு நொடிகளிலேயே கப்பலிலிருந்து பீரங்கி குண்டுகள் நால்வரையும் நோக்கி பாய்ந்து வரத் தொடங்கியது.

 

கதிர் துருவ்விடம், “நமக்கு ஓட்டையான போட்டு, வில்லனுக்கு பேட்டில் ஷிப் ரேஞ்சுக்கு பெரிய கப்பலாக்கும்?”

 

துருவ், “வேற வழியில்ல, பீரங்கி குண்டு விழுந்திடாம நீ உன் போட்ட பாத்து ஓட்டு. ரெண்டு நிமிஷத்துக்குள்ள நாம அந்த கப்பல்ல ஏறனும்” என உத்தரவிட்டான்.

 

பீரங்கி குண்டு தாக்காதபடி அதிதியை பாதுகாப்பாக பாறைபின்னால் நிறுத்திவிட்டு, கதிரும் துருவ்வும் விரைந்து சென்று கப்பலை அடைந்தனர். வந்தவர்களை வரவேற்கும் விதமாக ரெக்கை கொண்ட ராட்சதர்கள் ஆயுதங்களுடன் அங்கே காத்திருந்தனர்.

 

துருவ், “நீ இவனுங்கள பாத்துக்கோ நான் கண்ட்ரோல் ரூமுக்கு போறேன்” என சொல்லிக் கொண்டே ஓடினான்.

 

பறக்கும் வல்லமை கொண்ட பதினைந்து பேருக்கு நடுவில், ஒற்றை ஆளாய் வில்லேந்தி நின்றான் கதிர். விழியில் துளி பயமின்றி, ஒவ்வொரு நொடியும் தனக்கு முக்கியம் என்பதை போல எதிர்பட்டவர்களை எல்லாம் கொன்று குவித்தான். அதேநேரம் கட்டுப்பாட்டு அறையில் துருவ், பீரங்கிகளை செயலிழக்க வைத்து அதிதி கப்பலை வந்தடைய வழி செய்தான். இத்தனை நேரமாக வெளிவராத சந்துரு அவளைப்பின் தொடர்ந்து வருவது, மேலேயிருந்த துருவ்வின் கண்களுக்கு நன்றாக தெரிந்தது.

 

நால்வரும் கப்பலையடைந்ததும் கப்பல் கடலிலிருந்து மேலெழும்பி பறக்கத் தொடங்கிற்று. கப்பலின் ஆட்டத்தால் நின்று கொண்டிருந்த நமது போட்டியாளர்களின் நிலைமை இன்னமும் மோசமானது. அதிதி செய்வதறியாது தனது ஷூவினை ஆக்டிவேட் செய்து விட்டாள். நால்வரும் தடுமாறும் சூழ்நிலையை பயன்படுத்தி, பறக்கும் படை தனது ஆளுமையை காட்டத் துவங்கியது. பறக்கும் கப்பலோடு இணைந்து பறக்கும் படை வீரர்கள், மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.

 

அதன்விளைவாய் கதிர் வெகு விரைவிலேயே ஒரு ஆயுளை இழந்துவிட்டான், இன்னுமொன்றை அவன் இழக்கும் முன்பாக துருவ் அவன் முன்வந்து நின்றான். பறக்கும் படையினரை எந்த நேரத்தில் எப்படி தாக்க வேண்டும் எனும் சூட்சுமம் அறிந்தவனாதலால், வில்லும் அம்பும் இல்லாமலேயே துருவ் அவர்களை திறம்பட சமாளித்தான். இருந்தும் அத்தனை பேரையும் தனியாளாய் எதிர் கொள்வது அவனுக்குமே மிகப் பெரிய சவாலாகத்தான் இருந்தது. நெடுநேர போராட்டத்திற்கு பின்பே பறக்கும்படை முற்றிலுமாய் அழிக்கப்பட்டது.

 

துருவ், “இந்நேரம் அர்ஜுன் இருந்திருந்தா, பறக்குற பவர யூஸ் பண்ணி இந்த சண்டைய சீக்கிரமா முடிஞ்சிருப்பான். நம்ம பக்கத்துல இருந்தப்போ அவன் அருமை தெரியல, இப்போ வேணும்னு நினைக்கும்போது அவன் இல்ல” என்றான்.

 

அடுத்த பக்கம்

Advertisements