ஆடுகளம் 18 (2)

“உங்க அனுதாபத்துக்கு ரொம்ப நன்றி, ஆனா பாருங்க, இந்த லெவல்ல அவுட் கிடையாதாம்” என்றாள் எகத்தாளமாய்.

 

கதிரின் மனதில் தான் அவமானப்பட்ட வருத்தத்தை விட, அதிதி அவுட் ஆகவில்லை எனும் சந்தோஷமே அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள, அதை தன் முகத்தில் பிரதிபலிக்காது, “நீ நம்பலன்னாலும் அதுதான் உண்மை. வயசுப் பொண்ணு, வீடு இல்லாம தெருவுல நிக்குமேன்னு பாவப்பட்டு பேசினேன். இல்லனா உனக்காக நான் ஏன் வருத்தப்பட போறேன்?” என்றான்.

 

அதிதி மீண்டும் அழுத்தமாய், “நான் தெருவுல நின்னா உனக்கு என்ன?” என்றதும் கதிர் பதில் பேச முடியாமல், முறுக்கிக்கொண்டு வீட்டின் பின் பகுதிக்குச் சென்று விட்டான்.

 

‘இத்தனை தூரம் தெளிவாய் இருந்தும் தன்னை கண்டு கொண்டாளே’ என கதிருக்கும், அவன் தன்மீது கொண்ட அக்கறையின் அளவு தெரிந்ததில் அதிதிக்கும், உள்ளம் இன்பத்தால் கூத்தாடிற்று. இருந்தும் இருவரும் வெளியில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டனர். அடுத்தநாள் மறுபடியும் பெய்டு ஹாலிடே, இன்று அனைவரும் ஓய்வையே பரிந்துரைத்து விட்டனர். நேரம் மதியத்தை நெருங்குகையில் அர்ஜூன் அதிதியைத்தேடி வந்தான்.

 

மாடியில் இருக்கும் பெண்கள் பகுதியில் அதிதி ஒரு புத்தகத்தோடு சம்மணமிட்டு அமர்ந்திருக்க, அவளருகில் துருவ் குப்புறப் படுத்தபடி தன்னுடைய செல்போனில் மூழ்கி கிடந்தான்.

 

அர்ஜூன், “ஹாய் பேபிம்மா”

 

“வா அர்ஜூன், உக்காரு”

 

“உன்கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசனும்” என்றதும் துருவ் நாகரிகமாய் அவர்களுக்கு தனிமை தந்து வெளியேறினான்.

 

முதல்நாள் அதிதியோடு பேச அனுமதி அளிக்காத துருவ் இன்று அனுமதி தந்தும், தன் மீது அவன் கொண்ட நம்பிக்கையை எண்ணி மகிழ்ந்த அர்ஜூன் அதைக் காப்பாற்றும் விதமாய் அதிதியிடம், “கேம் ரெண்டு நாள்ல முடியப்போகுது, அடுத்து என்ன செய்யப்போற?” என்றான்.

 

“கைக்கு வர்ற பணத்த வச்சு முதல்ல வீட்ட மீட்கனும். ஆதித்யா சார் அவரோட சேனல்ல வேலை தர்றதா சொன்னாரு, அது கிடைச்சா தம்பிய நல்லா படிக்க வைக்கனும். அவன் படிப்ப முடிக்கிறதுக்குள்ள தங்கச்சிக்கு கல்யாண வயசு வந்துடும், பாட்டிக்கும் ரொம்ப வயசாயிடும். எல்லாத்தையும் எந்த குறையும் இல்லாம பார்த்துக்கனும். இன்னும் நிறைய கனவிருக்கு. ஆனா என்னால முடியுமான்னு தெரியல”

 

“உனக்குனு ஒரு வாழ்க்கை உருவாக்கிக்க ஆசையில்லையா?”

 

“இருக்கு, இதுவரைக்கும் இல்லாத அந்த ஆசை இங்க வந்ததும் வந்திருக்கு. ஆனா அத அடையிற பாதை ரொம்ப நீளமா இருக்கு. எவ்ளோதூரம் நான் தாக்குப் பிடிப்பேன்னு எனக்கே தெரியல.”

 

அர்ஜூன், “இந்த சூழ்நிலையில இத நான் சொல்றது சரியா தப்பானு எனக்கு தெரியல. ஆனா இப்ப சொல்லலைன்னா இனிமே எப்பவும் சொல்லாமலே போயிடுவேன்னு தோணுது .”

 

தன் வார்த்தைகளால் அதிதியின் முகபாவம் மாறுவதைக்கண்ட அர்ஜுன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, “உன் கனவுக்கு நான் துணையா வரணும்னு நினைக்கிறேன்” என்றான்.

 

“………..”

 

“நான் உன்ன கன்ஃபியூஸ் பண்ணனும்னு நினைச்சு இத சொல்லல. உனக்கு எப்போவாச்சும் தனியா இருக்குறமாதிரி தோணுச்சுனா என்ன கூப்பிடு, எங்கிருந்தாலும் நான் வருவேன்னு உனக்கு புரிய வைக்கிறதுக்காக சொன்னேன். டேக் ரெஸ்ட், பாய்..” என்றவன் கடகடவென எழுந்து சென்றுவிட்டான்.

 

அவன் போனதும் உள்ளே வந்த துருவ், “இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு சாக்லேட் பாய் புடிக்கிறதில்ல, ரஃப்பா இருக்கிறவனத்தான் புடிக்குது. ஆனா அது கதைக்கு வேணா நல்லா இருக்கும், வாழக்கைக்கு அன்பா அக்கறையா இருக்குறவன்தான் செட் ஆவான் பேபி. யோசி..” என்றொரு திரியை கிள்ளிப் போட்டுவிட்டு சென்றான்.

 

அவர்கள் சொல்வது சரி என்று அதிதியின் அறிவிற்கும் தெரியும், ஆனால் அவள் மனந்தான் கதிர் ஒருவனைத் தவிர வேறு எவனையும் உள்ளே விட மறுக்கின்றது. அறிவுக்கும் மனதிற்கும் நடுவேயான போராட்டத்தோடே அதிதியின் அந்நாள் முடிவடைந்தது. இன்றும் அனைவரும் உறங்கியதும் வெங்கட்டும் சந்துருவும் தனி அறைக்குச் சென்றனர். அவர்கள் உள்ளே சென்ற சில மணித்துளிகளில் வெங்கட்டின் செல்போனிற்கு ஆதித்யாவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

 

ஆதித்யா சர்வ சாதாரணமாய், “சந்துரு, நாளைக்கி கேம்ல நீ அதிதி அவுட் பண்ணிடு” என்றான்

 

சந்துரு, “சார், நீங்க சொன்ன மாதிரி மத்தவங்கள ஈஸியா அவுட்டாக்கிட்டேன். ஆனா அதிதிய அவுட் பண்றது கஷ்டம் சார், துருவ் அவளவிட்டு ஒரு அடி கூட நகர மாட்டான். அவன மீறி அதிதிய தொடப்போனா அவன் சும்மா இருக்கமாட்டான். நீங்க எனக்கு ஒரு மாசமா விளையாட ட்ரெயினிங் கொடுத்து இங்க அனுப்புனீங்க, ஆனா இன்னிக்கு வரைக்கும் என்னால அவன முந்தக்கூட முடியல. அவ்ளோ டேலண்ட் இருக்குறவன நான் எப்டி ஜெயிக்க முடியும்?”

 

ஆதித்யா, “அதனாலதான் இன்னைக்கு துருவ்க்கு ஃபேன் ரேட் ஜாஸ்தியா இருக்கு. அதிதி ஃபைனலுக்கு வந்தா அவன் கண்டிப்பா அவளுக்காக விட்டுத்தருவான். எனக்கு துருவ் டைட்டில் வின் பண்ணனும், அதுதான் என் சேனல் டிஆர்பிக்கும், கோர்ட்ல நடந்துகிட்டு இருக்கிற கேஸ்க்கும் நல்லது. எனக்கு நல்லது நடந்தாத்தான் உனக்கும் நல்லது.”

 

சந்துரு இறுக்கமாய், “நான் செய்றேன் சார்” என்று கூறிவிட்டு செல்போனை வெங்கட்டிடம் திருப்பித் தந்தான்.

 

அடுத்த பக்கம்

Advertisements