ஆடுகளம் 18

எட்டாவது லெவலின் துவக்கத்தில் போட்டியாளர்கள் நான்கு பேரும் ஒரு சமதள வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அப்பகுதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் காய்ந்த தரையைத் தவிர ஒரு தூசு துரும்பும் இல்லை. இறுதி இலக்கைத்தேடி எந்த வழியில் செல்வது என்று துருவ் உட்பட யாருக்கும் தெரியவில்லை.

 

இருந்தும் துருவ் தன்னம்பிக்கையை கைவிடாமல், “நிக்காதீங்க, ஏதாவது ஒரு திசையில வேகமா ஓடிட்டே இருங்க” என சொல்லிக்கொண்டு ஒரு திசையில் ஓடத் துவங்கினான்.

 

அவனைப் பின்தொடர்ந்து அதிதி ஓட, அவளை கதிர் பின் தொடர்ந்தான், ஆனால் சந்துரு அவர்களுக்கு எதிர்திசையில் ஓடத் துவங்கினான். தன் பின்னால் கதிர் வருவது தெரிந்ததுமே திரும்பிப் பார்க்க தோன்றிய மனதை கட்டுப்படுத்தி ஓடுவது, அதிதிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. மூவரும் ஓடிய திசையில் திடீரென்று மண்ணுக்குள் இருந்து ராட்சத கருந்தேள் வந்து நின்றது. கன்றிச்சிவந்த கண்ணும், கலங்கடிக்க வைக்கும் கொடுக்கும், உடலெல்லாம் ஊசிபோன்ற கொம்பும் கொண்டிருந்த அதனைக்கண்டு துருவ்வும் கதிரும் இரண்டடி பின்னால் நகர்ந்தனர்.

 

துருவ் சமயோஜிதமாய், “பேபி, நீ கொஞ்ச நேரம் இந்த தேள சுத்தி ஓடிட்டே இருக்கனும், ஆனா அதோட கொடுக்குல நீ சிக்கிக்க கூடாது. உன்னால முடியுமா?”

 

“முடியும்”

 

துருவ், “கதிர், இந்த தேள கொல்றது ரொம்ப கஷ்டம், எப்டியாவது இதோட கொடுக்க வெட்டனும். அதுவும் ரெண்டே நிமிஷத்துல, முடியுமா?”

 

“முடிஞ்சிச்சுனு வச்சுக்கடா”

 

துருவ், “ரைட், கதிர் நீ தேள் பின்னால போ, பேபி நீ ஸ்டார் பண்ணு” என்றதும் இருவரும் ஓட, துருவ் தேளின் காலடியில் புகுந்து அதன் முன் பக்கமாய் ஓடத் துவங்கினான்.

 

ஒரே நேரத்தில் மூவரும் மூன்று திசையில் தன்னை சுற்றி ஓடுவதைக் கண்ட தேள், அதிதியை தொடர முயன்று தோற்று துருவ்வை தொட வந்தது. தேள் துருவ்வை நெருங்கும் முன் கதிர் தேளின் கொடுக்கை நெருங்கி இருந்தான். துருவ்வை நோக்கி உயர்ந்த தேளின் கொடுக்கு, ஒரே வாள் வீச்சில் தனியாக கழன்று விழுந்தது, அதன் ஆயுளும் முடிந்தது. இறந்த தேளின் உடல் சுருங்கச் சுருங்க அது ஒரு கருநிற கத்தியாய் உருமாறிற்று.

 

உடனே கதிர் அக்கத்தியை எடுத்து  தன் இடையில் சொருகிக்கொண்டான். தேளிடமிருந்து தப்பிய மூவரும் ஆசுவாசம் அடையும் முன்பே அவர்களை நோக்கி, வானத்தில் ராட்சத வல்லூறுகளின் கூட்டம் சடசடவென்று பறந்து வந்தது. ஒவ்வொரு வல்லூறும் போட்டியாளர்களின் உருவத்தை விட ஐந்து மடங்கு பெரியது.

 

அவை அனைத்தும் தலையைத் தட்டுவது போல நெருங்கி வந்து பறக்கத் துவங்கிட துருவ், “குனிஞ்சுகிட்டே ஓடுங்க” என்று கத்தினான்.

 

மூவரும் சற்று குனிந்தபடியே ஓடத்துவங்க, துருவ் பறவையின் வேகத்திற்கு தான் வந்ததும் எம்பிக் குதித்து ஒரு பறவையின் காலைப் பற்றிக் கொண்டான். அந்தப் பறவை மட்டும் கூட்டத்திலிருந்து விலகி தனியே பறக்கத் துவங்கியது. அடுத்த நிமிடமே கதிரும் அதிதியும் அதைச் செய்ய, மூவரும் உச்சி வானில் வல்லூறுகளுடன் பறக்கத் தொடங்கினர். அப்பறவைகள் நேராக சமதளப் பகுதியின் இறுதிக்கு சென்று தான் சுமந்து வந்த ஆட்களை தரையில் தூக்கியெறிந்தது.

 

விழுந்து எழுந்தவர்களை வல்லூறு இரையென கொத்தித் தின்ன முனைய துருவ், “பேபி இத உன்னால சமாளிக்க முடியாது, நீ இந்தப் பாறையெல்லாம் முடியிற இடத்துக்குப் போய் நில்லு. அடுத்து இருக்குற பாலத்துக்கு தனியா போகாத, நான் மூணு நிமிஷத்துல வந்திடுவேன்” என்றான்.

 

அதிதி, “இல்ல, நான் உங்கள விட்டுப் போகமாட்டேன்” என்றதும் கதிர் கோபமாய், “போனு சொன்னா புரியாதா? போ..” என்று உரக்க கத்தினான்.

 

அவன் சத்தத்தால் அதிர்ந்து அடங்கிய அதிதி கதிரின் முகத்தை பார்த்துக் கொண்டே தனது ஷூவினை ஆக்டிவேட் செய்தாள். அவளது பாதுகாப்பு உறுதியானதும் கதிரும் துருவ்வும் வல்லூறுகளிடம் தனது பராக்கிரமத்தை காட்டத் துவங்கினர். முடிவில் நம்மவரே வெற்றியடைய வல்லூறின் அலகு வில் அம்பாய் உருமாறிற்று.

 

இரண்டு நிமிடம் கழித்து வழுக்குப் பாறைகளாலான மலைப்பகுதியில் தடுக்கி விழாமல் பாறைகளின் மீது தாவி ஏறி ஓடி வந்தனர் இருவரும். அப்பாதை மிகப்பெரிய பாதாளத்தின் அருகில் வந்து முடிந்தது, ஆனால் அங்கே அதிதி இல்லை. ஆழம் மிகுந்த அந்த பாதாளத்திற்கு நடுவில், வளைந்து நெளிந்து செல்லும் ஒற்றையடி மலைப் பாதை மட்டுமே வழியாய் இருக்க, அதன் முடிவில் ஒளி வீசிக் கொண்டிருந்தது இறுதி நிலை. அதை நெருங்கும் நிலையில் ஓடிக்கொண்டிருந்தனர் சந்துருவும் அதிதியும்.

 

அதற்குள் அவர்கள் எப்படி அவ்வளவு தூரம் சென்றனர் என்று மற்ற இருவருக்கும் புரியவில்லை. இருந்தும் தற்சமயம் அதிதி ஆபத்தை நெருங்கிவிட்டாள் என்பதால் இருவரும் அப்பாதையில் ஓட ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் பாதி தூரங்கூட கடந்திருக்காத நேரத்தில், நாக்கு நீண்ட விசித்திரமான பல்லிகள் அங்கே வந்தன. அவற்றால் தாக்கப்பட்ட அதிதி, தப்பிக்க இயலாமல் அதல பாதாளத்தில் விழுந்தாள். தன் கருநிற கத்தியால் எதிர்ப்படும் பல்லிகளை கொன்று குவித்த கதிர் இறுதி நிலையை அடைந்ததும், வெடுக்கென தன் ஹெட் செட்டை கழற்றி வீசி எறிந்தான்.

 

“அறிவில்லையா அதிதி உனக்கு? பாலத்துக்கு போகாதன்னு துருவ் முதல்லையே சொன்னான்ல, அப்புறம் எதுக்கு போய் அவுட்டாகித் தொலைஞ்ச?” என ஆவேசமாய் திட்டத் தொடங்கினான்.

 

அத்தனையும் அமைதியாக வாங்கிக் கொண்டிருந்த அதிதி இறுதியில் அழுத்தம் திருத்தமாய், “நான் அவுட் ஆனா உனக்கென்ன?” என்றாள்

 

அவசரப்பட்டு தான் செய்த செயல் புரிந்த கதிர், “ஐயோ பாவம்னு..” எனும்முன்,

அடுத்த பக்கம்

Advertisements