ஆடுகளம் 17 (4)

கதிர், “கூடவே ஒருத்தருக்கு கண்ணையும், இன்னொருத்தருக்கு வாயையும் கட்டிருவேன்.”

 

வினோத், “ஆத்தி..”

 

கதிர் சில கற்களை கையிலெடுத்து, “உங்க டீம் பந்த எடுத்துட்டா ஒரு பாயிண்ட், எடுத்ததும் தலைக்கி பின்னால தூக்கி போட்றனும். எல்லாரும் உங்களுக்கேத்த ஜோடிய பிடிங்க. ஜேம்ஸ் சார் நீங்கதான் ஜட்ஜ், எவனாச்சும் சீட்டிங் பண்ணினா யோசிக்காம இந்தக் கல்ல மண்டையில போட்ருங்க” என்றான்.

 

ஜேம்ஸ் தனக்கு வாகான இடத்தில் அமர்ந்து கொண்டதும், வெங்கட் உட்பட அனைவரும் இருவராய் இணைந்து நின்றனர்.

 

அதிதிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டிருந்த துருவ்வை இடித்து தள்ளிய கதிர், “நீ போய் வேற பார்ட்னர் புடிச்சுக்கோ, நான் அதிதியோட விளையாடுறேன்” என்று வம்படியாய் அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.

 

அவன் குரலிலிருந்த ஏதோ ஒன்று துருவ்வை தற்சமயம் அமைதியாய் நகரவைத்தது. ஆட்டம் ஆரம்பமானதும் அனைவைரும் தத்தமது துணையோடு இடித்து பிடித்துக்கொண்டு பந்தை நோக்கி அடியெடுத்து வைத்தனர். பந்தைப் பார்க்கும் கண்களுக்கு வழி சொல்ல வாய் இல்லை, கண் தெரியாத நபருக்கோ பந்தினை நெருங்கிய பின்னும் சரியாக எடுக்கத் தெரியவில்லை.

 

அனைவரும் விளையாட்டில் மூழ்கி சந்தோஷமாய் ஆடத்தொடங்கிய நேரம், கதிர் தன் விளையாட்டைத் துவங்கினான். அதிதியை அழைத்துக் கொண்டு பள்ளம் மேடென பார்க்காமல் விருவிருவென நடந்தான். தெரிந்தே சுவற்றிலும் மரத்திலும் மோத விட்டான். ஆரம்பத்தில் இது விளையாட்டென நினைத்திருந்தவளுக்கு போகப்போக அவன் வேண்டுமென்றே செய்வதாய் தோன்றியது. காலிடறி விழுந்தவளை கணுப்பொழுதும் ஆசுவாசப்பட விடாமல், கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றான்.

 

அதிதி, “ஏன் கதிர் என்ன இந்த பாடு படுத்துற? கொஞ்சம் பொறுமையா நட..” என்று கத்தியதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

 

இறுதியாய், “அடிபட்ட கால் வலிக்குது கதிர், ப்ளீஸ் நில்லு..” என்றதும்தான் நின்றான்.

 

வலித்த காலை குனிந்து தேய்த்து விட்டுக் கொண்டிருந்தவளின் கண் கட்டை அவிழ்த்துவிட்டான் கதிர். கண் திறந்தவள்  தாங்கள் இருவரும், தமது நண்பர்களை விட்டு தொலைதூரத்தில் நின்றிருப்பதை கண்டாள். ‘எதற்காக இப்படி செய்தாய்?’ என்று குற்றஞ்சாட்டும் பார்வையில் கதிரை பார்த்தாள்.

 

கதிர், “என்ன பாக்குற? என்கூட வந்தா உன் வாழ்க்கையும் இப்டித்தான் கரடுமுரடா இருக்கும். கண்ணு இருந்தும் பாக்க முடியாது, கால் வலிச்சாலும் நிக்க முடியாது. மத்தவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது, நீ வலியிலயும் வேதனையிலயும் தவிக்க வேண்டியிருக்கும்.”

 

அதிதி விழி நீர் திரள, “கதிர் நான்” எனும்முன் அவன் முந்திக்கொண்டான்.

 

“நான் உன்ன மொட்ட மாடில காப்பாத்தினதுக்கும், சாப்பிட வச்சதுக்கு உண்மையான காரணம் காதலோ பாசமோ கிடையாது அதிதி. செத்துப் போயிடக்கூடாதுன்ற பரிதாபம். அதுக்காக இப்ப நீ பாவமா முகத்த வச்சுக்கிட்டா நான் இரக்கப்பட மாட்டேன். இன்னும் ஒரு வாரத்துல நான் திரும்பிப் போயிடுவேன். அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில என்ன பாக்கவே முடியாது. இது உனக்கும் தெரியும், தெரிஞ்சே நீ இப்டி செய்யலாமா? உதவின்ற பேர்ல கூட நீ இனிமே என் முன்னால வராத, போயிடு!”

தொடரும்…

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

ஆடுகளம் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

 

 

 

 

Advertisements