ஆடுகளம் 17(3)

“தேர் தலைகீழா சாயுதேன்னு சொன்னேன். இப்டியே நைசா ஒட்டி உறவாடி, ஏதாச்சும் காரியத்த சாதிக்கணும்னு ப்ளான் பண்றியா?”

 

“கில்லாடி ப்ரோ நீ, ஏழாவது லெவலுக்கு எனக்கு உன் உதவி வேணும்.”

 

“அதான் உங்க ஆபத்பாண்டவன் அர்ஜுன் இருக்கானே, அப்புறமென்ன?”

 

“ஆயுதம் வச்சிருக்குற நீ ஹெல்ப் பண்ணினா மட்டும்தான் அதிதி அடுத்த லெவல் போக முடியும்.”

 

“இது நல்லாயிருக்கே, அவள ஜெயிக்க வச்சுட்டு நான் வெறும் கைய நக்கவா? போய் வேலையப்பாருடா..”

 

“எனக்குத் தெரியும், நீ செய்வ” என்றவன், நிமிர்ரோடு எழுந்து சென்றான்.

 

மாலையானதும் ஏழாம்நிலை போட்டி துவங்கிற்று, தகிக்கும் நெருப்புக்குழம்பு நிறைந்த எரிமலை பிரதேசத்தில் போட்டியாளர்கள் ஐவரும் விடப்பட்டனர். பார்க்கும் திசையெல்லாம் நெருப்பு ஊற்று ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. அதன் இடையில் பயணிக்கும் பாதையை கண்டுபிடிப்பதே போட்டியாளர்களுக்கு பெரும்பாடாக இருந்தது. தப்பித் தவறி ஊற்றில் போட்டியாளர்களின் உருவம் பட்டால், உடனே அவர்களின் ஆயுளில் சிறிது குறைந்து போனது.

 

தட்டுத்தடுமாறி நடை பழகிய நேரத்தில், திடீரென்று ஊற்றுடன்  பாறைகளும் பெயர்ந்து பறக்கத் தொடங்கியது. ஒருமுறை ஒருவரின் மீது பாறை விழுந்தால் அடுத்த நொடியே ஒரு ஆயுள் போனது. கதிரும் சந்துருவும் தங்களை நோக்கி வரும் பாறைகளை தத்தமது ஆயுதத்தால் தாக்கி தப்பினர். மற்றவர்களோ அவ்விருமுனைத் தாக்குதலில் சிக்குண்டு, தப்பி பிழைக்க பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர்.

 

தலைக்கு நேராய் வந்த பாறைக்கு அஞ்சி, சிறிது சாய்ந்த அதிதி நெருப்பு ஊற்றில் விழப்போக, துருவ் அவளை பற்றிக்கொண்டான். அதே நேரம் அவர்களை நெருங்கிய பாறை சுக்குநூறாய் சிதறி விழுந்தது. அதை அடித்து நொறுக்கிய கதிர், வேண்டுமென்றே துருவ் முன் தன் காலரை தூக்கி கொள்வதாய் பாசாங்கு செய்தான். கேம் பாதி முடிந்திருக்கையில், மிகப்பெரிய ராட்சத டிராகன் ஒன்று அவர்களின் முன்வந்து நின்றிற்று.

 

செந்தனல் நெருப்பில் ரத்தச்சிவப்பு நிறத்தில், உடலெல்லாம் கூர் கொம்புகள் நிறைந்த பதினைந்தடி உருவமது, உறுமிக் கொண்டு எழுந்து நிற்க, போட்டியாளர்களின் அடி வயிற்றில் எலி ஓடத்துவங்கியது. ஏற்கனவே துருவ்வைத் தவிர ஏனையோர் ஆளுக்கொரு ஆயுளை இழந்திருக்க, டிராகன் தனது நெருப்பை உமிழ்ந்து மிகச்சுலபமாக மற்றொரு ஆயுளை காவு வாங்கிக்கொண்டது. இன்னுமொரு ஆயுள் தீர்ந்தால் அவுட்.

 

அந்த டிராகனுக்குப் பின்னால் இறுதி நிலை கதவிருக்க, எவரும் அதையடைய முடியாதபடி டிராகன் தடுத்தது. போட்டி முடிவடைய இரண்டு நிமிடமே இருக்கும் நிலையில், இப்படியே நின்றாலும் அவுட். ஆதலால் வாழ்வா சாவா எனும் போராட்டத்தில் போட்டியாளர்கள் இருந்தனர். சந்துருவும் கதிரும் டிராகனின் முன் தத்தமது ஆயுதங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நிற்க, அர்ஜூனோ அது அவர்களுடனான சண்டையில் அசரும் தருணம் பறந்திட தயாராக நின்றிருந்தான்.

 

சந்துரு தன் சுத்தியால் டிராகனின் வாலை பலமாய் தாக்கியதும் அது வலியால் அலற, அதிதி தன் ஷூவை ஆக்டிவேட் செய்து அதன் காலினூடே ஓடிவிட்டாள். அவள் இறுதிநிலைக்கு சென்றுவிடுவாள் என்று நினைத்த துருவ்வும் வேறு திசையில் இறுதி நிலையை நோக்கி ஓடத் தொடங்கினான். அவள் இறுதி நிலையை நெருங்கும் நேரத்தில் சுதாரித்த டிராகன், தனது வாலைத்தூக்கி தாக்கிட தூரசென்று விழுந்தாள் அவள். அதேநேரம் துருவ் இறுதிநிலைக்குள் நுழைந்து வெற்றி பெற்றுவிட்டான்.

 

சினம் கொண்ட டிராகன் அதிதியை நெருங்க, அதன் காலில் தன் வாளைப் பாய்ச்சினான் கதிர். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த சந்துரு விரைந்து சென்று இறுதி நிலையை அடைந்துவிட்டான். இப்போது டிராகனின் மொத்த கோபமும் தன் முன்னாலிருக்கும் மூவர் மீது திரும்பியது. அது அதிதியை நோக்கி வாயைத்திறக்க, அர்ஜுன் சடாரென்று நடுவில் பாய்ந்தான். சில நொடிகள் அங்கே புகைமண்டலம் சூழ்ந்திற்று. புகைவிலக, அங்கே உடல் கருகிய நிலையிலிருந்த அர்ஜூனின் சிறகுகளுக்கிடையே அதிதி பத்திரமாய் இருந்தாள்.

 

அதிதி, “அர்ஜூன்..” என்று அலறிட அவன் உடல் மெதுமெதுவாய் காற்றில் கரையத் தொடங்கியது.

 

கதிர், “அதிதி, நான் டிராகன டைவர்ட் பண்றேன், நீ ஷூவ ஆக்டிவேட் பண்ணிடு” என சொல்லிக்கொண்டே டிராகனின் வால் புறம் சென்றவன், அதன் முதுகிற்கு ஏறத் தொடங்கினான்.

 

அதிதியின் மீது கவனத்தை வைத்திருந்த டிராகன் கதிர்புறம் திரும்பும் முன், அவன் அதன் தலையை அடைந்து விட்டான். முன்நெற்றியில் துருத்திக்கொண்டிருந்த கொம்பினை கெட்டியாகப் பிடித்தபடி கதிர் தன் வாளால் அதன் கண்ணைக் குத்தினான். இதற்குள் அதிதி இறுதிநிலையை நெருங்கிவிட்டாள். கதிர் டிராகனின் இரண்டாவது கண்ணையும் குத்திவிட்டு விரைந்துவர, இருவரும் ஒரேநேரத்தில் இறுதி நிலையை அடைந்தார்கள்.

 

விளையாட்டு முடிந்ததும் விருட்டென விர்ச்சுவல் ஹெட்செட்டை கழற்றிய அதிதி, “ஏன்டா இப்டி செஞ்ச? நான் எப்டியாச்சும் தப்பிச்சுக்க மாட்டேனா? என்னால நீ அநியாயமா அவுட் ஆகிட்டு உக்காந்திருக்கியே?” என்று அர்ஜூனை பிடிபிடியென என பிடித்துக்கொண்டாள்.

 

அர்ஜூன், “அந்த செகண்ட்ல எனக்கு என்ன தோணுச்சோ அதத்தான் செஞ்சேன், அதுனால என்ன இப்ப? உனக்காகத்தான விட்டுக் கொடுத்தேன், பரவாயில்ல” என்று கூறிவிட்டு எழுந்து சென்றவனின் முதுகை இரு ஜோடிக் கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

வெங்கட், “ஸோ இன்னிக்கி அர்ஜூன் அவுட், நாளைக்கி எட்டாவது லெவல். எலிமினேஷன் கிடையாது, நாலுபேருக்கும் ஜாலிதான். அடுத்து சீக்கிரமே ஃபைனலும் வந்திடும்” என்றதும்தான் அதிதிக்கு ஒன்று உரைத்தது.

 

‘ஃபைனலுக்கு பக்கத்துல வந்துட்டோமா? அப்டினா நாம இங்க இருக்குற நாள் முடியப்போகுதா? அப்போ கதிர் மறுபடியும் ஜெயிலுக்கு போயிடுவானா?’ என்றவளின் எண்ண ஓட்டத்தை கதிரின் கண்கள் நன்றாக படம்பிடித்துக் கொண்டது.

 

வெங்கட், “என்ன யோசனை அதிதி? டைம் ஆச்சு, சீக்கிரமா போய் டச்சப் பண்ணிட்டு வாங்க” என்று அவசரப்படுத்த ஆரம்பித்தான்.

 

ஒளிப்பதிவு வேலைகள் முடிந்ததும் வெங்கட், “நம்ம செஃப்ககு இன்னிக்கி நைட் டின்னருக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சாம். ஒரு மணி நேரம் எல்லாரும் பொறுத்துக்கோங்க.”

 

வினோத், “அதுவரைக்கும் ஏதாவது விளையாடுவோமா?”

 

லக்ஷிதா, “சீட்டு விளையாடலாம்”

 

வினோத், “வேணாம், எங்க அண்ணன் அவுட் ஆனதில இருந்து சோகமா இருக்கான். அவன சந்தோஷப் படுத்துற மாதிரி ஜாலியா ஒரு கேம் விளையாடலாம். அப்படி ஏதாவது கேம் இருக்கா மக்களே?”

 

கதிர், “எனக்கொரு விளையாட்டு தெரியும்”

 

“என்ன? என்ன?” என்று ஆர்வமாய் ஓடி வந்தவர்களை, வீட்டின் முன்புறமிருக்கும் மணல் வெளிக்கு அழைத்துச் சென்றான்.

 

கதிர், “கேம் ரொம்ப சிம்ப்பிள், எல்லாரும் ஒரு பார்ட்னர் செலக்ட் பண்ணிக்கோங்க. ஒரு பந்து கீழ கிடக்கும், அத நீங்க எடுக்கணும். ஆனா உங்க ரெண்டு பேரோட ஒரு கையையும் ஒரு காலையும் ஒண்ணா கட்டி விட்ருவேன். ரெண்டுபேரும் சேர்ந்துதான் நடக்க வேண்டி இருக்கும். ஆளுக்கொரு கை வச்சு பால எடுக்கனும்.”

 

வினோத், “இது ஜுஜூபி கேம்”

அடுத்த பக்கம்

Advertisements