ஆடுகளம் 17(2)

வெங்கட், “அதெப்டி? சாப்பிட்டே ஆகணுங்கிறது அக்ரிமெண்ட் ரூல், மாட்டேனெல்லாம் சொல்லக்கூடாது. ஏற்கனவே உனக்கு கால்ல அடிபட்டு இப்பதான் சரியாயிருக்கு, இந்த நேரத்துல பசி மயக்கம் வந்தா என்ன செய்றது?”

 

“சார், ப்ளீஸ்..”

 

“நோ எக்ஸ்யூஸஸ்மா, ரூல்ஸ மீறினா டிஸ்குவாலிஃபை பண்ணிடுவாங்க, பாத்துக்க” என்றிட, அதிதி மீண்டும் தலையை தாங்கியபடி குனிந்து கொண்டாள்.

 

அர்ஜூன், “அடம்புடிக்காத அதிதி, கொஞ்சமா சாப்பிடு ”

 

இதற்குமேல் மறுத்தால் நன்றாக இருக்காதென்று அளவாய் உணவை எடுத்துக்கொண்டாள். ஆனால் ஆரம்பித்த இரண்டு நிமிடத்திலேயே அவளுக்கு குமட்டிக்கொண்டு வந்துவிட்டது. அரைமணிநேரம் கழித்து துருவ் ஜூஸ் தர அதற்கும் பழைய நிலைதான்.

 

ஒருமணி நேரத்துக்குப்பின் வெங்கட், “அதிதி ஸ்டூடியோல இருந்து பேசுனாங்க. நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது, எதையாவது சாப்பிட்டே ஆகணும். இல்லனா டிஸ்குவாலிஃபைதான்” என்றான் உத்தரவாய்.

 

அதுவரையில் மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கதிர், சடாரென்று எழுந்து வந்தான். ஒரு தட்டில் கொஞ்சம் உணவினை போட்டு எடுத்துக்கொண்டு வந்து அதிதியின் எதிரில் அமர, அத்தனை கண்களும் ஆச்சரியத்தில் விரியத் தொடங்கின.

 

கதிர், “அதிதி, நான் ஏன் கொலை செஞ்சேன்னு நீ ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருக்கேல?”

 

“ம்..”

 

“என் தங்கச்சி பேரு வெண்ணிலா. உன்ன மாதிரிதான் அவளும் ரொம்ப பயந்த சுபாவம், பாசமான பொண்ணு. ராத்திரியானா வீட்டவிட்டு வெளியில போகவே பயப்படுவா. அவள இப்படியே பயந்தாங்கொள்ளியா வளக்காதீங்கமான்னு நான் சொன்னா, ‘ஆம்பளப் புள்ள பயந்த சுபாவமா இருந்தாத்தான் தப்பு பொம்பள புள்ள பயந்தா தப்பில்ல’னு என் வாய அடச்சுடுவாங்க.”

 

“நிலாவ ஒருநாள் அவளோட சீனியர் பொண்ணு பிறந்த நாளுக்காக வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தா. நிறைய உதவி செஞ்ச அக்கா, பகல்லதான கூப்பிடுறாங்கனு சொல்லிட்டு நிலாவும் அவங்க வீட்டுக்கு போனா, ஆனா சொன்ன நேரத்துக்கு திரும்பி வரல. நாங்களும் எங்கெல்லாமோ தேடுனோம், யாரையெல்லாமோ போய் பார்த்தோம், எந்தப் பிரயோஜனமும் இல்லை.”

 

“ஒரு வாரங்களிச்சு ஊருக்கு வெளியில அவ டெட்பாடி கிடைச்சது. ஊசிபோட பயந்து டேப்ளட் கேக்குற என் தங்கச்சிய கருவேலங்காட்டு புதருக்குள்ள கண்டெடுத்தோம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுல காதால கேட்க முடியாத அளவுக்கு என்னென்னவோ கொடுமையெல்லாம் என் தங்கச்சிக்கி நடந்ததா சொன்னாங்க. அப்பாவும் அம்மாவும் அப்பவே பாதி செத்துட்டாங்க” என்றவனது கடைவிழியில் கண்ணீர் துளிர்த்தது.

 

கதிர் சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபின், “எவ்ளோ ட்ரை பண்ணாலும் கேஸ் அடுத்த ஸ்டெப்புக்கு நகரவே இல்ல. அங்க இங்கனு லஞ்சம் கொடுத்து, அசிங்கப்பட்டு கடைசியில அவனுங்கள கண்டுபுடிச்சோம். அது யாருன்னு எங்களுக்கு தெரிய முன்னாலேயே, அவனுங்களுக்கு தெரிஞ்சு முன்ஜாமீன் எடுத்துட்டாங்க. அதுக்குமேல என்னால பொறுமையா இருக்க முடியல, அவங்க இருக்குற இடம் தெரிஞ்ச அடுத்த நிமிஷமே அத்தனபேர் தலையையும் சீவி எடுத்துட்டேன்.”

 

“என் தங்கச்சி சாவ ஒரு செய்தியா கூட மதிக்காத மீடியா, நான் செஞ்ச கொலைய சென்சேஷனல் நியூஸாக்குச்சு. என்னச் சுத்தி இருக்குற அத்தன பேரும் தப்பா இருக்கும்போது, நான் செஞ்சது தப்புன்னு எனக்கு தோணல, ஆமான்னு கர்வமா ஒத்துக்கிட்டேன். ஆயுள் தண்டனை தந்தாங்க, சரிதான்னு சந்தோஷமா வாங்கிக்கிட்டேன்.”

 

அர்ஜூன், “நீங்க ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்தான? அதைச் சொல்லி உங்களால தண்டனைய குறைக்க முடியலியா?”

 

“நான் கொலை செஞ்சது ஒரு பெரிய லாயர் பையன், எங்கள விட அவருக்கு சட்டத்துல எத்தனை ஓட்டை உடைசல் இருக்குதுன்னு நல்லா தெரியும். இந்த சமுதாயத்துக்கு அவரோட பையனவிட நான் ஆபத்தானவன்னு சொல்லித்தான் வாதாடவே செஞ்சாரு. இப்போ அவரு எனக்கு ஆயுள் தண்டனை கம்மி, தூக்கு தண்டனை கொடுக்கணும்னு சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போட்டுருக்கிறாராம்.”

 

“இன்னிக்கி என் தங்கச்சியோட பிறந்தநாள். போனவருஷம் சந்தோஷமா இருந்த எங்க குடும்பத்துகிட்ட, இந்த வருஷம் நீங்க இப்படி இருப்பீங்கன்னு யாராவது சொல்லியிருந்தா நாங்க நம்பி இருக்கவே மாட்டோம் தெரியுமா. என் வாழ்க்கையே கனவு மாதிரி முடிஞ்சு போயிடுச்சு, அவ்ளோதான் கதையும் முடிஞ்சது, போய் தண்ணியக் குடி அதிதி..” என்றதும்தான் அதிதி தன் முன்னிருந்த தட்டு காலியாகி இருப்பதைக் கண்டாள்.

 

கதிர், “தெரிஞ்சோ தெரியாமலோ இன்னிக்கி உனக்கு நான் மிகப்பெரிய உதவி செஞ்சிருக்கேன், அதுனால போட்டி முடிஞ்சதும் உனக்கு வர்ற பணத்துல எனக்கு ஒரு ஷேர் ஒதுக்கிடு” என்றபடி தன் படுக்கைக்கு போய் படுத்துவிட்டான்.

 

அவனைத்தொடர்ந்து அத்தனை பேரும் கனத்த இதயத்தோடு உறங்கச் சென்றனர். அனைவரும் உறங்கியது உறுதியானதும் வெங்கட்டும் சந்துருவும் ரகசியமாக ஒரு அறைக்குள் சென்றனர். அடுத்தநாள் காலை லேசான தூறலுடன் ரம்மியமாக ஆரம்பித்தது. அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டதனால், ஒரு குடும்பம் போல் பேசிச் சிரித்தபடி இருந்தனர். துருவ்வும் கூட அன்று கதிரோடு சற்றே சுமூகமாகவே இருந்தான்.

 

இரு காபி கப்போடு கதிரின் அருகில் வந்தமர்ந்த துருவ், “இன்னிக்கி கேம்ல கொஞ்சம் ஜாக்கிரதையா விளையாடு” என்றபடி ஒரு கப்பினை கதிருக்கு தந்தான்.

 

கதிர், “என்னடா சப்பரம் குப்புற சாயுது?”

 

துருவ், “என்ன?”

அடுத்த பக்கம்

Advertisements