ஆடுகளம் 17

துருவ், “உங்க பக்கத்துல ஏதாவது ஒரு மிருகம் வந்தா, இதுக்கு முந்தின லெவல்ல நீங்க எடுத்த ரத்தினக் கல்ல அதுமேல தூக்கி எறிங்க. தப்பி தவறிகூட உங்க சக்திய யூஸ் பண்ணாதிங்க” என்றான்.

 

அவன் சொன்னபடியே கைவசமிருந்த ரத்தினகல்லை வீசி உலவும் பூச்சி, ஓடும் மிருகம், பறக்கும் பறவை என ஒவ்வொன்றிடமிருந்தும் வளைந்து நெளிந்து தப்பி ஓடினர். கதிரை பின்பக்கமாய் நெருங்கிய பறவை ஒன்றை அதிதி தன் ரத்தினக்கல் கொண்டு தாக்கிட, அதைக்கண்டவனோ அவளை கோபமாய் முறைத்து விட்டுச் சென்றான்.

 

நீல வண்ணத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த அப்பாலத்தை அனைவரும் அடைந்ததும், தங்கச் சிலையை அப்பாலத்தில் வைக்கச்சொல்லி துருவ் அதிதியிடம் குறிப்பால் சொன்னான். உடனே அது ஒரு சாதாரண தொங்குபாலமாய் உருமாறிற்றி. கீழே ஓடும் நீல நதியில் விழுந்துவிடாமல் ஒருவர் பின் ஒருவராய் அதில் நடக்கத் தொடங்கினர்.

 

நடுவில் லேசாய் கால் இடறியதும் அர்ஜூன், “ஆத்தாடி, ஜஸ்ட் மிஸ், விழுந்தா எத்தன அடி ஆழம்னு கூடத்தெரியாது” என்றான்.

 

கதிர், “எரும, உனக்குத்தான் ஃப்ளையிங் பவர் இருக்குல, விழுந்தா பறந்து போ.”

 

அர்ஜூன் வாயில் விரல் வைத்தபடி, “ஆமால்ல, அதுசரி நான் எதுக்கு இப்போ மாஞ்சு மாஞ்சு நடக்கணும்? ஸ்ட்ரெயிட்டா பறந்து அக்கரைக்கு போயிடலாமே. பேபிம்மா வர்றியா?”

 

துருவ், “அப்டி போனா ஆபத்து உனக்கு மட்டுமில்ல எங்களுக்கும். நாம இந்த லெவல சேர்ந்துதான் விளையாடியாகணும்.”

 

அர்ஜூன், “அப்டி உள்ள என்ன இருக்கு முருகேசா?”

 

துருவ், “ஹான், நீயே போய்ப்பாரு”

 

அனைவரும் அக்கரையினை அடைந்ததும், அங்கே பார்வை தொடும் தூரம் வரையில் பச்சைப் புல்வெளியே நீண்டு கிடந்தது. பேருக்குகூட ஒரு மரமோ மிருகமோ இல்லாமல், அவ்வளவு அழகாய் இருந்த தரையினை ஏதோ ஒன்று பெயர்த்துக் கொண்டு வெளிவரத் தொடங்கியது.

 

பூச்சியும் புழுக்களும் ஊறும்படியான பாதி சிதைந்த மனித உடல். அதைப் பார்த்த உடனே அதிதி அருவருப்பாய் முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொண்டாள். அடுத்து ஆங்காங்கே தரை பெயர்ந்தெழ, போட்டியாளர்கள் ரத்தினக் கற்களை கையில் பிடித்துக் கொண்டனர்.

 

துருவ் அவசரமாய், “யாரும் எதையும் அட்டாக் பண்ணாதீங்க. இத வேறமாதிரி விளையாடணும். ஒவ்வொரு பிசாசும் ஒருத்தர மட்டும்தான் விரட்டும், அது தொட்டா நாம அவுட். பவர யூஸ் பண்ணினா எல்லா பிசாசும் ஒருத்தரையே மொய்க்க ஆரம்பிச்சிடும்.”

 

கதிர், “அப்புறம் எப்படித்தான் ஜெயிக்கிறது?”

 

துருவ், “உனக்கான பிசாசு உன்ன தேர்ந்தெடுக்குற வரைக்கும் வெயிட் பண்ணு, அது விரட்ட ஆரம்பிச்சதும் நாம ஓட ஆரம்பிக்கனும். அது கையில சிக்கவும் கூடாது, அதவிட்டு தூரமா ஓடவும் கூடாது. தூரமா போனா மத்த பிசாசு உன்ன ஈசியா சுத்தி வளைச்சிடும். ஒரு பிசாசுக்கு ஒரு நிமிஷம்தான் வேலிடிட்டி, அது முடிஞ்சதும் அடுத்தது உன்ன சூஸ் பண்ணும். இந்த லெவல் முடியிற வரைக்கும் இப்டித்தான்.”

 

அர்ஜீன், “என் மைண்ட்ல ஏன் திடீர்னு ஆயிரத்தில் ஒருவன் தீம் மியூசிக் ஒடுது” என்று புலம்பையில், நீளமான தலைமுடி கொண்ட ஒரு பெண் பிசாசு அவனை நெருங்கிற்று.

 

“யக்கா! தம்பி பாவம், கொஞ்சம் பார்த்து பதமா செய்” என்று சொல்லிக்கொண்டே ஓட ஆரம்பித்தான். அதனைத் தொடர்ந்து மற்ற அனைவரையும் பிசாசுகள் தேர்ந்தெடுத்து விரட்டத் தொடங்கியது. பயமும் படபடப்பும் போட்டி போட, அனைவரும் கண்ணுமண்ணு தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தபோது சந்துரு ஜேம்ஸை இடித்துவிட்டான். அடுத்த நொடியே ஜேம்ஸ்க்கு ஒரு லைஃப் காலி.

 

துருவ், “பேபி, பயந்து வேகமா ஓடாத.. இப்டி ஓடு.. அப்டி போ..” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே, தனக்கும் அவளுக்கும் சேர்த்து விளையாடினான். முழுதாய் மூன்று நிமிடங்கள் தொடர்ந்து அந்த ஆட்டம் இறுதியாய் முடிவுக்கு வந்தது.

 

புல்வெளியின் நட்ட நடுவில் வெள்ளை நிற ஒளி உருவாகத் தொடங்கியதும் துருவ், “பேபி ஷூவ ஆக்டிவேட் பண்ணிடு” என்றான். அடுத்த நொடியே அதிதி அதனுள் சென்றிருந்தாள். வெற்றி உறுதியானதும் விர்ச்சுவல் ஹெட்செட்டை கழற்றி எரிந்து விட்டு தலையை பிடித்துக்கொண்டாள்.

 

வெங்கட், “என்னாச்சு?”

 

“கேம்ல வந்த பிசாசு ரொம்ப பயங்கரமா இருந்துச்சு சார், உடம்பெல்லாம் புழு ஊறிட்டு, ரத்தம் சதையெல்லாம் கிழிஞ்சு தொங்கிட்டு, அதுலயும் கண்ணுக்குள்ள இருந்து புழு வர்றெதெல்லாம், உவ்வே..”

 

வெங்கட், “இதுக்கே பயந்தா எப்டி? அடுத்த லெவல் இன்னும் பயங்கரமா இருக்கும்.”

 

“அட ஏன் சார் இப்பவே பயமுறுத்துறீங்க?” என்றவள் அடுத்தகட்ட ஒளிப்பதிவுக்கு தயாராக எழுந்து சென்றாள்.

 

வெங்கட், “இன்னிக்கி ஜேம்ஸ் சார் அவுட், மத்தவங்க சீக்கிரமா ரெடியாகி வாங்க” என்றதும் அர்ஜுனும் ஜேம்ஸும் எழுந்து சென்றனர்.

 

வெங்கட் தன் இஷ்டமான சுவற்றில் சாய்ந்து நின்றபடி, ‘இன்னிக்கி என்ன செய்ய காத்திருக்கானுங்களோ?’ என்றபடி கதிரையும் துருவ்வையும் வேடிக்கை பார்த்திருந்தான். வழக்கத்திற்கு மாறாய் இன்று இருவரும் ஏதோ ஒரு தீவிர சிந்தனையில் மூழ்கிக் கிடந்தனர். அது என்னவென்று கேட்டால் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கதையாகிடும் எனத் தெரிந்த வெங்கட் அமைதியாய் இருந்து கொண்டான்.

 

ஒளிப்பதிவு வேலைகள் எல்லாம் முடிந்ததும் இரவு உணவு துவங்க, அதிதி வெங்கட்டிடம், “எனக்கு சாப்பாடு வேணாம் சார், அந்த பிசாச பாத்ததுல இருந்து உமட்டிட்டு வருது” என்றாள்.

அடுத்த பக்கம்

Advertisements