ஆடுகளம் 14 (5)

கதிர், “என்னது? எங்களுக்கு வக்கில்லையா..” என்று கைகளை முறுக்கிக் கொண்டு முன்னால் வர,

 

இருவருக்கும் இடையில் புகுந்த அர்ஜூன், “துருவ் சொன்னதுல தப்பில்ல கதிர். இந்த லெவல்ல நாம எல்லாருமே அவனை பார்த்து தான் விளையாடினோம். அது ஊருக்கே தெரியும்..”

 

லக்ஷிதா, “பிரச்சனை அவனுக்குத் தெரியுமா தெரியாதான்றது இல்ல, அவன் உதவி செஞ்சதுதான்.”

 

கோமல், “அதான் ஆரம்பத்துலயே மேனேஜ்மென்ட்ல இருந்து உதவி செய்யிறது தப்பில்லனு சொல்லிட்டாங்கள்ல. அப்புறம் ஏன் உனக்கு எரியுது?”

 

கதிர், “திறமை இல்லாதவங்க எல்லாம் ஜெயிக்கும் போது, திறமை இருக்கிறவங்க தோத்துப்போனா உள்ளுக்குள்ள எரியத்தான் செய்யும்.”

 

துருவ், “போதும் நிறுத்துங்க, உங்க எல்லாருக்கும் ஒரே ஒரு பிரச்சனைதான். அதிதிக்கு நான் உதவி செய்யக்கூடாது, அதான? இனிமே நீங்க எல்லாரும் ஏத்துக்குற வரைக்கும் நான் அதிதிக்கு உதவி செய்ய மாட்டேன்” என்றவனது இதழ்கள் ஏகத்திற்கும் குரூரமாய் வளைந்து நின்றது.

 

அவனது பதில் அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியைத் தர, அனைவரும் சிலையாய் உறைந்து நின்றனர். அதன் பின் அங்கே பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லாமல் போனதால் அனைவரும் அமைதியாய் கலைந்து அவரவர் வேலையை செய்யத் தொடங்கினர்.

 

அடுத்த நாள் போட்டி ஆரம்பிக்கும் வரையில் இதே நிலையில்தான் அவ்வீடு இருந்தது. அனைவரது எதிர்பார்ப்பிற்கும் உரிய நான்காம் நிலை போட்டி ஆரம்பமானது. இன்றைய போட்டிக்கு ஏழு பேர் விளையாட வேண்டும் என்பதாலும், ஏற்கனவே பிரச்சனை நடக்கும் நேரம் என்பதாலும், இந்த நிலையை மட்டும் அனைவரும் ஒரே குழுவாய் விளையாட வேண்டுமென்ற உத்தரவினை ஆதித்யா அனுப்பியிருந்தான்.

 

பலவித தடைகளையும் குழப்பங்களையும் தாண்டி, நான்காம் நிலை போட்டி ஆரம்பமானது.

 

போட்டியாளர்கள் காட்டுக்குள் இருக்கும் பழங்கால அரண்மனைக்குள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு தங்க சிலையினை எடுக்க வேண்டும். சிலையை அடையும் வழியில் எதிர்ப்படும் ஆபத்துக்களை, சாதுரியமாக எதிர்கொள்ள வேண்டும் எனும் விதிமுறைகளுடன் விளையாட்டு துவங்கியது. போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டிற்குள் நுழைந்ததும், அவர்களின் முன்னால் பாழடைந்த நிலையில் மாபெரும் அரண்மனை ஒன்று பூமிக்குள் இருந்து வெளியே வந்தது.

 

அர்ஜூன், “அடா.. அடா.. அடா.. எவ்வளவு அழகான அரண்மனை! கொஞ்சம் பெயிண்டிங் மட்டும் பண்ணினா போதும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி சும்மா பளபளன்னு மின்னும்.”

 

வினோத், “கரெக்ட்டுண்ணா, சந்திரமுகி பங்களா எக்ஸ்பெர்ட் கோபால கூட்டிட்டு வந்து பெயிண்டிங் பண்ணுவோமா அண்ணா?”

 

அர்ஜூன், “பாவி.. பாவி.. என்ன பயமுறுத்துறதுக்குனே வரம் வாங்கிட்டு வந்து பொறந்து தொலைச்சியாடா நீ?”

 

வினோத், “சாரிண்ணா, நான் வேணும்னா இது பாக்குறதுக்கு பாகுபலி பங்களா மாதிரி இருக்குனு மாத்தி சொல்லட்டுமா?”

 

அர்ஜூன் தலைக்குமேல் கைகளைத் தூக்கி ஒரு பெரிய கும்பிடு போட்டு, “நீ புண்ணியத்துக்கு எதுவும் சொல்லாம இரு ராசா. அது போதும் எனக்கு..”

 

“ஓகேண்ணா” என்ற வினோத் தன் வலது கையால் வாயை மூடிக் கொள்வதைப் போல பாசாங்கு செய்தான்.

 

இதற்குள் மற்றவர்கள் அனைவரும் அரண்மனைக்குள் நுழைந்து இருந்தனர். அவர்கள் உள்ளே போகும் வரை காத்திருந்த துருவ், அனைவரும் சென்றதை உறுதி செய்துவிட்டு கடைசியாக உள்ளே சென்றான். அது பார்ப்பதற்கு பாழடைந்த கட்டிடமாய் இருந்தாலும், அதன் சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களின் கலைநயம் காண்போரின் கண்கள் வியக்கும் வகையில் மிக அற்புதமாய் அமைக்கப் பட்டு  இருந்திருந்தது.

 

வரிசை கட்டி நிற்கும் கற்தூண்களில் கண்கவரும் படியான எழில்மிகு சிலைகளும், கரை படிந்திருந்தாலும் கருத்தை கவரும் படி ஆங்காங்கே சிதறிக் கிடந்த அலங்காரப் பொருட்களுமென அவ்விடமே ஆராதிக்கப்பட மறந்த அழகோவியமாய் காட்சி தந்தது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் முதல் அறையிலிருந்து அடுத்த அறைக்கு போகும் வழி தான் எவருக்கும் தெரியவில்லை.

 

போட்டியாளர்கள் உள்ளே நுழைந்து முழுதாய் மூன்று நிமிடங்கள் கழிந்த பிறகும், அடுத்த அறைக்குச் செல்வதற்கான வழி ஒருவருக்கும் தெரியவில்லை. முதல் நாளே துருவ் கோபத்தோடு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வரையில் அதிதிக்கு உதவி செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டதனால், வெட்கம் விட்டு அவனிடம் உதவி கேட்கவும் எவருக்கும் மனம் வரவில்லை.

 

இதற்கெனவே காத்திருந்த துருவ் திமிராய், அறையின் நட்ட நடுவில் இருந்த இருக்கையில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான். மற்றவர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் அடுத்த அறைக்கான வழியைத் தேடி அங்கே இருக்கும் பொருட்களை எல்லாம் குத்தி குடைந்து கொண்டிருந்தனர்.

 

நேரம் வீணாய்ப் போவதை உணர்ந்த போட்டியாளர்கள் சிலர் துருவ்விடம் சமாதானம் பேசச் சொல்லி அதிதியை அனுப்பி வைத்தனர்.

 

துருவ்வோ தன் கண் ஜாடை மூலம் அதிதியிடம், ‘நிகழப் போவது அனைத்தையும் அமைதியாய் நின்று வேடிக்கை பார்’ எனச் சொல்லி தன் அருகிலேயே நிறுத்தி வைத்து விட்டான்.

அடுத்த பக்கம்

Advertisements