ஆடுகளம் 14 (4)

நகுல், “அழாத லக்ஷிதா, சாப்பிட்டு தூங்கு, காலையில எல்லாம் சரியாகிடும்.”

 

“இல்ல.. எப்டியாவது இந்த ஷோவுல கொஞ்சம் பணம் சம்பாரிச்சு, என் வாழ்க்கைய மாத்திக்கனுங்கிற என்னோட கனவு உடைஞ்சு போயிடுச்சு. இனிமே பழையபடி நான் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒவ்வொருத்தர் கால்லையும் விழ வேண்டி இருக்கும் நகுல்” என்று விம்மி வெடித்து அழத் தொடங்கினாள்.

 

அர்ஜூன், “அட ஏம்மா? உன் திறமைக்கு உனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சாலும் போதும், அடுத்தடுத்து வாய்ப்புகளா உன்ன தேடி வர ஆரம்பிச்சுடும். வேணும்னா பாரு, நீ சீக்கிரமே மேல வந்துடுவ.”

 

“எனக்கும் தெரியும் அர்ஜுன், ஆனா அந்த முதல் வாய்ப்பு கிடைக்காமத்தான நான் இவ்வளவு கஷ்டப் படுறேன்.”

 

வினோத், “கண்டிப்பா கிடைக்கும் லக்ஷிதா, உனக்கு இன்னும் நிறைய வயசு இருக்கு. முதல் தடவை கிடைக்கலைனா, ரெண்டாவது தடவை கண்டிப்பா கிடைக்கும். அதுக்கு நீ முதல்ல உன்னோட தன்னம்பிக்கைய கைவிடாம இருக்கணும்.”

 

“வெறும் தன்னம்பிக்கைய வச்சு எதுவும் செய்ய முடியாது வினோத். அதிர்ஷ்டம் இருக்கனும், இதோ இந்த அதிதி மாதிரி எனக்கும் அதிர்ஷ்டம் இருக்கனும். அவ எதுவுமே தெரியாம இத்தனை லெவல் வந்துட்டா பாரு, துருவ் இல்லன்னா இவ இதுவரைக்கும் வந்திருக்க முடியுமா.”

 

அந்த அறையின் ஓரத்திலிருந்த நாற்காலியில் கால்மேல் கால்போட்டு சாய்ந்து அமர்ந்திருந்த கதிர், “நூத்துல ஒரு வார்த்த சொன்ன லக்ஷிதா..” என்று எரியும் நெருப்பில் சிறிது எண்ணையை ஊற்றினான்.

 

கதிர் பேச்சினுள்ளே நுழைந்ததும் துருவ், “என்ன வெங்கட் சார், உங்க முன்னாலேயே சிலர் வாய்க்கு வந்தத பேசிக்கிட்டு போறாங்க நீங்களும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்க?” என்று குரலை உயர்த்தினான்.

 

அதிதி, ‘மறுபடியும் அதே பிரச்சனையை கிண்டி கிளற ஆரம்பித்து விட்டார்களே, இனி என்னென்ன நடக்கப் போகின்றதோ?!’ என்று அச்சத்தில் மௌனமாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

 

வெங்கட்டோ மிகச் சாதாரணமாய், “இதுக்குமேல யாரும் எதுவும் பேசக்கூடாது. எல்லாரும் கீழ போய் அமைதியா சாப்பிட்டு தூங்குங்க..” என்றான் பொத்தாம் பொதுவாய்.

 

லக்ஷிதா, “எனக்கு சாப்பாடு வேண்டாம்.”

 

வெங்கட், “சாப்பாடு சாப்பிட்டே ஆகனுங்கிறது ஷோவோட அக்ரிமெண்ட் ரூல். மீறினா பிரச்சனையாகிடும், பாத்துக்கோமா..” என்றான்.

 

“கேம்ல இருந்தே அவுட் ஆகிட்டேன், இனிமே ரூல்ஸ்ஸ ஃபாலோ பண்ணி என்ன செய்யப் போறேன். உங்களால முடிஞ்சத பாத்துங்கோங்க..”

 

வெங்கட், “ஏம்மா நீ மட்டும் தான் அவுட் ஆகி இருக்கியா? உனக்கு முன்னாலேயே ரெண்டு பேர் அவுட் ஆயிட்டாங்க, ஆனா அவங்க யாரும் உன்ன மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணல. ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டு மத்தவங்களோட சகஜமா பேசி பழகுறாங்க. நீ மட்டும் ஏன் இப்டி ஊரக்கூட்டி வச்சுக்கிட்டு இருக்குற?”

 

லக்ஷிதா, “அவங்க ஏதோ பொழுது போகாம விளையாட வந்திருப்பாங்க, அதான் என்ன நடந்தாலும் எனக்கென்னனு இருக்காங்க. நான் அப்டியா? ஒரு குறிக்கோளோட இங்க வந்தேன். என் லச்சியமே சின்னா பின்னமா உடைஞ்சதுக்கு அப்புறம் என்னால அழாம ஜடம் மாதிரி இருக்கமுடியுமா?”

 

அவள் வார்த்தைகளால் கொதித்து எழுந்த கோமல், “அப்போ நாங்க என்ன ஜடமா?” என்றாள் கோபமாய்

 

லக்ஷிதா, “அத நான் வேற என் வாயால சொல்லனுமா?”

 

அர்ஜூன், “போதும் நிறுத்து லக்ஷிதா, நீ விளையாடத் தெரியாம தோத்ததுட்டு எதுக்காக மத்தவங்கள புடிச்சு வம்பிழுக்குற?” என்று தன்னுடைய தோழிகளுக்காக குரல் கொடுத்தான்.

 

லக்ஷிதா, “சும்மா சப்பைக்கட்டு கட்டாத அர்ஜூன், அதிதிக்கி துருவ் உதவி செஞ்ச மாதிரி எனக்கும் நீங்க யாராவது உதவி செஞ்சிருந்தா நான் நிச்சயமா இந்த லெவல்ல வின் பண்ணி இருப்பேன்.”

 

கோமல், “அதுக்கு நாலு மனுஷங்க கூட நீயும் அன்பா பாசமா பேசி பழகி இருந்திருக்கனும், இல்ல அப்பப்போ அடுத்தவங்களுக்கு உன்னால முடிஞ்ச ஒரு உதவிய செஞ்சிருக்கனும். எப்போ பாரு யாரையும் மதிக்காம எனக்கென்னனு இருந்துட்ட, இப்போ உனக்கு கஷ்டம்னதும் மத்தவங்க தேடி வந்து உதவி செய்வாங்களா?”

 

கதிர், “அப்போ அடுத்த லெவல்ல ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உதவி செஞ்சுகிட்டு இருக்கலாம். விளங்கிடும் கேம்..” என்று நக்கலடித்தான்.

 

துருவ், “முதல்ல நீங்க சீட்டிங் பண்ணாம விளையாடுங்க சார், அப்புறமா அடுத்தவங்களுக்கு உதவி செய்ய போங்க.”

 

கதிர் விருட்டென தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்து, “ஏய்.. யார பாத்து சீட்டிங் பண்ணேன்னு சொல்ற?” என்றான் கோபமாய்.

 

துருவ், “உன்னத்தான், இன்னிக்கி கேம்ல நீங்க நாலு பேரும் தான முன்னால போனீங்க. அப்புறம் சிறுத்தை வரும்போது எப்படி என் பின்னால வந்தீங்க?”

 

கதிர், “அது.. அது நாங்க வழி மாறி போயிட்டு.. திரும்பி வந்து..” என்று திக்கி திணறி கொண்டிருக்கையில் இடைபுகுந்து துருவ், “உங்க மேல தப்பு இல்லன்னா ஏன் உங்க வாய் இந்த திக்கு திக்குது? சொந்தமா யோசிக்க இங்க ஒருத்தனுக்கும் வக்கில்ல. அத ஒத்துக்கோங்க முதல்ல..” என்றான் உத்தரவு போல.

அடுத்த பக்கம்

Advertisements