ஆடுகளம் 14(3)

முதலையிடமிருந்து தப்பித்த மகிழ்ச்சியில் கதிர் முன்னேறிச் செல்கையில் அவனை தடுத்து நிறுத்தினாள் அதிதி. இறந்த முதலையின் முதுகில் இருந்து ஒரு ரத்தினக் கல்லை எடுத்து அவள் கதிரிடம் கொடுக்க, இருவரையும் ஓரப் பார்வை பார்த்தபடி முன்னால் நகர்ந்து சென்றான் துருவ்.

 

தனது உதவிக்கு பரிசாய், கதிரிடமிருந்து ஏதாவது ஒரு உணர்ச்சியை எதிர்பார்ப்பது போல் அதிதி அப்படியே அசையாமல் நின்றிருந்தாள். கதிருக்கு அவளின் எதிர்பார்ப்பு புரிந்தாலும், உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்தோடு அவள் நீட்டிய ரத்தினக் கல்லை வாங்கிக் கொண்டு, மேலும் முன்னேறிச் செல்ல ஆரம்பித்தான்.

 

முன்னால் செல்பவனின் முதுகையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்ற அதிதியின் பின்னால், ‘டமால்…’ என்றொரு சப்தம் கேட்டது. அந்த திடீர் சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த மூவரும் சடாரென்று திரும்பி பார்க்க, அங்கே அர்ஜூன் அதிதியைக் கொல்ல வந்த முதலையை கொன்று விட்டு ரத்த குளியலோடு நின்றிருந்தான்.

 

‘என் ஒரு நிமிட விலகல் அதிதிக்கு இவ்வளவு பெரிய ஆபத்தாகி விட்டதே..’ என்று பதறிய துருவ், தன் உள்ளத்துக் குமுறல்களை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, உடனே அவள் அருகில் வந்துவிட்டான்.

 

இறந்த முதலையின் உடலை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன், “ஏன் பேபிம்மா, இந்த முதலை உடம்புல எங்க இருந்து அந்த ரத்தினக் கல்லை எடுக்கணும்?” என்றான்.

 

துருவ், “எதுக்கும் முதலையோட வயித்த அமுக்கிப்பாரு, ஒருவேள முட்டை போட்டாலும் போடும்..” என்று கிண்டல் செய்ய, அதை உண்மை என்று நம்பிய அர்ஜுன் அதன் வயிற்றை அமுக்கிப் பார்க்க தொடங்கிவிட்டான்.

 

அவன் அப்பாவி தனத்தால் மெய்மறந்து சிரித்த அதிதி, “ஐயோ அர்ஜூன், அவன் உன்னை கலாய்க்கிறான். கல்லு முதலையோட முதுகுல இருக்கும், அங்க ஓப்பன் பண்ணி பாரு” என்றாள்.

 

அர்ஜூன் துருவ்விடம், “அடேய், அரை டிக்கெட்டு, ஆழாக்கு சைஸ்ல இருந்துகிட்டு அநியாயத்துக்கு ஆடுறடா. ஒரு நாள் இல்ல ஒருநாள், உன் கொட்டத்த நான் அடக்குறேனா இல்லையான்னு பாரு” என்று சூளுரைத்துக் கொண்டே தன் ரத்தினக் கல்லை தேடி எடுத்தான்.

 

கதிர், “அது கெடக்கட்டும், நீ எப்படிடா அந்த சிறுத்தைங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்த?”

 

அர்ஜுன், “ஐயாவுக்குத்தான் ஃப்ளையிங் பவர் இருக்குதுல, அத யூஸ் பண்ணித்தான் தப்பிச்சு வந்தேன்.”

 

அதிதி, “வாவ்.. சூப்பர் அர்ஜூன்..”

 

அர்ஜூன், “தேங்க்யூ.. தேங்க்யூ..” என்று குனிந்து சலாம் போட்டான்.

 

“அடுத்ததடவ உனக்கு ஹெல்ப் வேணும்னா என்னைக் கேளு பேபிம்மா, நான் பறக்கும்போது உன்னையும் சேர்த்து தூக்கிட்டு பறக்குறேன்.”

 

துருவ், “ரொம்ப பறக்காத, அந்த பவர ஒரு லெவல்ல ஒருதடவ மட்டும்தான் உன்னால ஆக்டிவேட் பண்ண முடியும், அதுவும் முப்பது செகண்ட்ஸ்தான் வரும். அதுக்கப்புறம் பழையபடி உன் கால் தரைக்குத்தான் வரணும்.”

 

அதிதிக்கு இப்போதுதான் துருவ் ஏன் தனக்கு இந்த வேகத்தின் சக்தி கொண்ட ஷூவினை எடுக்கச் சொன்னான் என்று புரிந்தது. இந்த வேக சக்தியை அவள் விரும்பும்போது ஆரம்பிக்கவும், முடிக்கவும் முடியும். அதே போல ஒரு நொடியில் விளையாட்டின் இறுதிப் பகுதி வரைக்கும் சென்று விட முடியும். ஆகவேதான் துருவ் பயந்த சுபாவம் கொண்ட தன்னை, மற்ற சக்திகளை புறம் தள்ளி விட்டு இதை எடுக்க சொல்லி இருக்கிறான்.

 

அர்ஜூன், “ஒரு மனுஷன் ஒரு நிமிஷம் சந்தோஷமா இருந்தா உங்களுக்கு பொறுக்காதே..” என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருக்கையில் மீண்டும் நீரிலிருந்து நீர்க்குமிழிகள் வரத்தொடங்கியது.

 

இம்முறை துருவ் அதைக் கொன்றுவிட்டு, அதிதியை அழைத்து முதலையின் முதுகில் இருந்து ரத்தினக் கல்லை எடுத்துக் கொள்ளச் சொன்னான்.  அவன் சொன்னதை அவள் செய்ததும், அவர்கள் நால்வரும் இறுதி இலக்கினை நோக்கி முன்னேறத் தொடங்கினர்.

 

இறுதி இலக்கு கண்ணில் பட்டதுமே துருவ் அதிதியிடம் ஷூவை ஆக்டிவேட் செய்யச் சொல்லி குறிப்பு கொடுத்தான். அது புரிந்த உடனே அதிதி, தன் சக்தி மூலம் விர்ரென்று பாய்ந்து சென்று இறுதி இலக்கினை அடைந்துவிட்டாள்.

 

அவளை முதலிடத்தில் தக்க வைப்பதற்காகவே துருவ் அவ்வாறு செய்கிறான் என்று புரிந்த கதிரும் அர்ஜூனும், துருவ்வின் முன் சென்று தங்கள் உதடுகளை வளைத்து வக்கனைத்து காட்டினர். அதற்கெல்லாமா துருவ் அசருவான்? அவர்களின் நையாண்டி சிரிப்பினை தூசி போல் தட்டிவிட்டு, இன்றைய இரண்டாம் இடத்தை பிடிப்பதற்காக ஓடத் தொடங்கி விட்டான்.

 

ஒருவர் பின் ஒருவராக விளையாடி முடித்த அனைவரும், தங்களின் தலையில் இருந்த விர்ச்சுவல் ஹெட் செட்டை கழற்றிவிட்டு, அடுத்தகட்ட நேரடி ஒளிப்பதிவிற்காக தயாராக தொடங்கினர். இம்முறை இறுதியாக வந்த லக்ஷிதா ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டாள்.

 

லக்ஷிதாவால் தன் தோல்வியை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒளிபரப்பு வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு, தன்னுடைய படுக்கைக்குச் சென்று படுத்து அழ ஆரம்பித்து விட்டாள். அவள் மனம் சமநிலை படும் வரையில் அழுது கொள்ளட்டும் என்று காத்திருந்த நண்பர்கள் குழு, இரவு உணவு நேரம் நெருங்கியதும் அவளை சமாதானம் செய்யத் தொடங்கியது.

அடுத்த பக்கம்

Advertisements